Shared posts

23 Apr 00:16

ஜோ டி’க்ரூஸ், ஜெயமோகன், பாஜக, மோதி, தீரா விட அறிவுமயக்கம், கருத்துச் சுதந்திரம், அரிப்புஜீவிகள், ப்ரொடெஸ்ட்வாலாக்கள், போங்கடா!

by வெ. ராமசாமி

என்னுடைய மதிப்புக்குரிய செல்லங்களில் ஒருவரும் ஓத்திசைவின் தொழில்முறை பின்னூட்டக்காரருமான சரவணன் அவர்கள் அண்மையில் நான் எழுதிய பதிவுக்குப் பின்னூட்டம் இடுகையில் இப்படிச் சொல்கிறார்:

ஒன்றைக் கவனித்தீர்களா? பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களைவிட திராவிட இயக்கத்திடம் நிச்சயம் சிந்தனை, அறிவியக்க செயல்பாடுகள் அதிகம். பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ் பற்றி, ஜெயமோகன் சொல்வதைப் பார்ப்போமா?

**** இந்தியாவின் வலதுசாரி அமைப்பான பாரதியஜனதாக் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அடிப்படையில் அறிவார்ந்த அடித்தளம் அற்றவை. வெறும் தொண்டர் அரசியல் கொண்டவை. அறிவார்ந்த செயல்பாடுகள் மேல் ஈடுபாடோ அறிவுஜீவிகள் மேல் மரியாதையோ அறிவியக்கம் பற்றிய நவீன நோக்கோ , கருத்துக்களில் விரிந்த பார்வையோ, அடிப்படைச் சமநிலையோ அவர்களுக்கு இல்லை. தங்கள் கோஷங்களை எதிரொலிப்பவர்களை மட்டுமே அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியும்.

அத்துடன் அவர்களிடமிருக்கும் அறிவுப்புலம் என்பது மிகமிகப் பழைமையானது. பெரும்பாலும் பிராமண மேட்டிமைவாதம்தான் அது. அவர்கள் நாளை அதிகாரத்துக்கு வந்தால்கூட மிகப்பழைமையான நோக்குள்ள சில பிராமணர்களை கல்வியமைப்புகளில் கொண்டுசென்று நிறுவி அவர்களை உளறவிட்டு தங்களை கேலிக்குரியவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். இன்றையநிலையில் அதற்கப்பால் செல்ல அவர்களால் இயலாது *********

இந்தக் கேவலத்துக்கு திராவிட இயக்கத்தினரின் அறிவியக்க செயல்பாடுகள் ஆயிரம் பங்கு மேல்!! பிராமண மேட்டிமைவாதத்தை முன்வைப்பதை விட பிறப்பால் அனைவரும் சமம் என்பதைக் கருத்தளவிலாவது ஒப்புக்கொண்டு, அதை நோக்கி சிறிய முயற்சிகளையாவது செய்தவர்கள் மேலானவர்கள் அல்லவா?

… ஹ்ம்ம்… முக்கால்வாசி, நீங்கள் எந்தக் குறிக்கோளுடன் இந்தப் பின்னூட்டத்தை எழுத முற்பட்டீர்கள் என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லைதான் என நினைக்கிறேன்; ஆனால், நான் புரிந்துகொண்டவகையில் இதற்கு பதில் அளிக்கிறேன்.

ஆனால், நன்றி சரவணன் அவர்களே – ஜெயமோகனின்  – நான் ஒரு வழியாக இன்றுகாலையில் இருமுறை படித்த (மெச்சத் தகுந்த) அக்கட்டுரையில் – ஒன்றை அல்ல,  பலவற்றைக் கவனித்தேன்; அது தொடர்பாகவும், உங்கள் மேற்கோளை முன்வைத்தும் என் எண்ணங்கள் கீழே: (ஏன் இப்படியொரு தனிப் பதிவென்றால், மறுபடியும் மறுபடியும் இப்படிக் கேள்விகளைக் கேட்டு (=அவர் அப்படிச்  சொல்கிறாரே, நீ இப்படிச்  சொல்கிறாயே (அல்லது) அவர் அப்படிச் சொல்கிறார், உன் கருத்தென்ன வகையறா)  என்னை மிகவும் துன்புறுத்துகிறார்கள், அதனால்தான், அவ்வளவுதான்!)

-0-0-0-0-0-0-0-0-0-0-

  1. முதலில், இது தெளிவுபடுத்தப் படவேண்டும் – ஜெயமோகன் உட்பட அனைவருக்கும் அவரவர் கருத்துகளை சமைத்துக் கொள்வதும், கட்டியெழுப்புவதற்கும் உரிமையிருக்கிறது. உங்களுக்கும் இருக்கிறது. ஏன், வெறும் ராமசாமியான எனக்கும் அப்படித்தான்.  இது ஒரு மிக அடிப்படையான விஷயம் – இதை நீங்கள் ஒப்புக் கொள்ளமுடியாதென்றால் விவாதமோ, உரையாடலோ சாத்திமேயல்ல, சரியா??
  2. அவர் எழுதிய முழுக்கட்டுரையுடன் அவருடைய பொதுவான கருத்துகளைப் பொருத்திப் பார்க்கவேண்டும். பின்னர் நீங்கள் மேற்கோள் காட்டியதை அவர் கட்டுரையின் பின்னணியில் பார்க்கவேண்டும். அவருடைய எண்ணங்களை அவர் சமன நிலையுடன் வெளியிட முயல்கிறார் – எல்லா திசைகளிலிருந்தும் பாடுபொருளைப் பார்க்க முயற்சிக்கிறார். ஆகவே, அவர் கட்டுரையில் சில வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவர் பார்வையை விரிக்க முடியாது. நிச்சயம் அவர் சொன்னதை, நீங்கள் சொல்லியுள்ளபடி, திரா விட இயக்கத்துடன் முடிச்சுப் போடவே முடியாது.
  3. மேலும் -   ஆர்எஸ்எஸ் அமைப்பென்பது முட்டியடி எதிர்வினையாக இடக்கையால் புறம் ஒதுக்கப்படவேண்டியதொன்றல்ல. நேரிடையாக இவ்வமைப்பு சார்ந்த பல மாணிக்கங்களை அறிந்துள்ளேன் – இதில் ஒரு மாணிக்கம், ஒரு முஸ்லீம் குழந்தையை தத்து எடுத்து, அதனை ஒரு முஸ்லீமாகவே வளர்த்துக்கொண்டிருக்கிறது. முதலில் உங்கள் மஞ்சள்கண்ணாடியைக் கழற்றிவிட்டால் பிரச்சினைகளைச் சரி செய்து விடலாம்.
  4. ஜெயமோகன் எழுத வருவதன் பின்புலம் – கலாச்சாரத்தின் அதிகாரமையங்களின் செயல்பாடுகள் – அவை முழுவதும் அரைகுறை (மெக்காலே+மார்க்ஸ்)/2 தர கூலிக்கு மாரடிக்கும் அறிவுஜீவிகளால் ஆட்கொண்டுள்ளமை பற்றி – அதுவும் ஜோ டி’க்ருஸ் அவர்களின் புத்தகப் பிரச்சினையை மையமாக வைத்து.
  5. பின்னர் வினவு-தரக் குளுவான்கள் போன்றவர்களின் புரட்சிகரமைதுன மொண்ணைத்தனங்கள் பற்றி, அவர்களின் முகமூடி வசீகரத் தலைமை பற்றி விமர்சனம் வைக்கிறார். அவருடைய இன்னொரு கருத்து என்னவென்றால் – பாஜக அரசமைத்தாலும் இந்த இடதுசாரி அறிவுஜீவிய மாஃபியாவை மீறிச் செயல்படுவதற்கு, பாஜகவிடம் போதிய நிபுணத்துவமோ, அறிவுஜீவிகளோ இல்லை, குண்டுசட்டியில் கழுதை ஓட்டுபவர்கள் மட்டுமே உள்ளனர் என்பதைக் குறித்தது. இது தொடர்பாக, சில கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். நீங்கள், அவர் கருத்துகளை, உங்கள் செல்லங்களான கவைக்குதவாத  மொட்டைத் தலையர்களுடன் முடிச்சுப் போடுகிறீர்கள், அவ்வளவுதான்.
  6. கடைசியில் அறிவுஜீவிகளின் தார்மீக உரிமைகள் பற்றிச் சில கருத்துகளைக் கொடுக்கிறார். ஆக எனக்கு, நீங்கள் அவருடைய முழுக் கட்டுரையின் சாராம்சத்தையும் புரிந்து கொண்டீர்களா என்றும் தெரியவில்லை. (சரியாகச் சொல்லவேண்டுமென்றால் – நீங்கள் ஒரு புத்திசாலி ஆசாமி; ஆனாலும் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாததைப் போல செயல்படுகிறீர்கள்!)
  7. என் கருத்து என்னவென்றால் – நிச்சயம் பாஜக-விடம் தரமான நிபுணர்கள் இருக்கிறார்கள் – ஆனால் அவர்களைப் பரவலாகக் கொண்டுசேர்க்கவேண்டிய வேலைகள் செய்யப்படவில்லை; ஆனாலும் – அப்படிச் செய்வதற்கு – இந்த இடதுசாரி, ஸெக்யூலர்-தட்டச்சு_அறிவுஜீவி, மனிதவுரிமைக்காரக் கூட்டணியின் விஷ நாளங்களை, பாரம்பரியங்களுக்கெதிரான பொய்மைப் பிரச்சாரத்தை, அவர்கள் சிருஷ்டித்துள்ள பொதுப்புத்தியில் உள்ள அரசியல்ஹிந்துத்துவா போன்ற பொய்ப்பிம்பங்களை உடைத்து இன்னொரு பொருட்படுத்தத் தக்க பிம்பச்சட்டகங்களை உருவாக்கவேண்டும்; இதற்குப் பல நாட்களாகும்தான். மேலும், ஜெயமோகன்  — அவர் அனுபவத்தை வைத்து, பாஜக தலைமையில்/கட்சியில் பல விஷயங்கள் இல்லை எனச் சொல்கிறார். ஆனால் என்னைப் பொறுத்தவரை அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிடமுடியாது என்று தோன்றுகிறது – ஏனெனில் என் அனுபவங்களும் தொடர்புகளும் அப்படி. பல அறிவாளிகள் அங்கேயும் இருக்கிறார்கள்தான். அவர்கள் வெறும் கோஷ்டம் போட்டுக்கொண்டு எதிரொலிகளுக்காகக் காத்திருப்பவர்கள் அல்லர்.  சம நிலையுடன் பார்த்தால், பல விஷயங்கள் (எனக்குமேகூட!) புலப் படலாம்.
  8. ஜெயமோகன், முரளிமனோஹர் ஜோஷி போன்றவர்களைப் பற்றி வந்த/வரும் செய்திகளை வைத்து, அவர்களுடைய செயல்பாடுகளை வைத்து, தன்னுடைய அனுபவங்களை முன்னிறுத்தி ‘மிகப்பழைமையான நோக்குள்ள சில பிராமணர்களை கல்வியமைப்புகளில் கொண்டுசென்று நிறுவி…’ என்று எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்.  ஆனால்,  நான் என் அனுபவத்தில் அறிந்தவரை, இப்படி வெறும் பழமைவாத விஷயங்கள் நடக்க சந்தர்ப்பங்கள் குறைவுதான் என நினைக்கிறேன். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
  9. இருந்தாலும், பொதுவாக பாஜக போன்ற ‘வலதுசாரி’ இயக்கங்களில் அறிவுசார் சிந்தனைப் போக்குகள் குறைவு என்ற எண்ணம், உலகளாவிய அளவில் பல  நூற்றாண்டுகளாகக் கட்டமைக்கப் பட்டுவருகிறது. கன்ஸர்வேடிவ் – லிபரெல் என இருமை ideal type கருத்தாக்கங்கள் வழியாக மட்டுமே பார்ப்பது வழியாக தரிசிக்கப்படும் உலகம் இப்படித்தான் பிடிபடும். மேலும் அறிவுஜீவிகள் என்கிற பதமே, ‘இடது சாரி’களால் கடத்தப் பட்டுவிட்டது! ஆக, வலதுசாரியென்றால் மூளையை உபயோகிக்காமல் குண்டாந்தடியைச் சுற்றுபவன், அவ்வளவுதான் என்கிற பிம்பம் வெகு திடமாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை – இந்த இடதுசாரி வலதுசாரி பகுப்புகளில்/சிமிழ்களில் மட்டுமே மானுடத் திரள் செயல்பாடுகளைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.  ஒவ்வொரு அரசியல் படுத்தப்பட்ட மக்கள் திரளிலும், இந்த இருவகைப் பகுப்புகளும் சேர்ந்தேதான் இருக்கும். நம்மால் சாம்பல் நிறத்தின் விசிறிகள் ஆக முடிந்தால் விஷயங்கள் ஓரளவு சரியாகப் புரிந்துகொள்ளப் படலாம்.
  10. ஜெயமோகன் அவர்கள், நான் மதிக்கும் ஒரு எழுத்தாளர். ஆனால், என்னுடைய கருத்துகளுடன் முழுவதும் ஒத்துப் போனால்தான் ஒருவரை மதிப்பேன் என்றில்லை. ஜெயமோகனுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக – அவருடைய நண்பருடைய எழுத்துகளை – அதாவது எஸ்ராமகிருஷ்ண ராவல்களைக் கிண்டல் செய்து நான் தொடர்ந்து எழுதுவது,  அவருக்கு ஒரு ஒவ்வாத, அருவருப்பான விஷயமாகத்தான் இருக்கும். அதே போல, திராவிட இயக்கத்தை தீரா விட முயக்கம் என்று, தொடர்ந்து நான் எழுதுவதும் கூட. ஆக, அவருக்கு நேரமிருந்தாலும் நான் எழுதுவதையெல்லாம் படிக்கவேண்டுமென்றோ, ஓப்புக் கொள்ளவேண்டுமென்றோ அவசியமேயில்லை. எனக்கும் அப்படியேதான்; அவர் எழுதுவதையெல்லாம், ஏன்,  சமயத்தில்நான் எழுதுவதையெல்லாம் கூட என்னால் ஒப்புக் கொள்ள முடியாதுதான்,  உங்களுக்குக் கூட அப்படித்தான் இருக்கும்; திரா விடக் கலாச்சாரத்தால்(!) மழுங்கடிக்கப் பட்ட படிப்பறிவால் ஏற்பட்டுள்ள ஒரு மகாமகோ சிதைவு — இந்த ‘அதிமனித வழிபாட்டுக் கலாச்சாரம்’ – ஒருவர் செய்வதை/சொல்வதை அவருடனும், தம் வாழ்வனுபவங்களுடன், படிப்பறிவுடன் பொருத்திப் பார்க்காத தன்மை;  சொல்வதையெல்லாம் ஒரு கேள்விகூடக் கேட்காத உபாசகத் தன்மை. உரையாடல்களுக்கு அப்பாற்பட்டமை. அதற்கு நான் உடன்படுவதில்லை. என்னுடைய அனுபவத்தின் படி,  அனுமானத்தின் படி – இம்மாதிரிச் செயல்பாடுகள், வழிபாட்டுக் கலாச்சாரத்தின் மொண்ணைத்தனங்களானவைகள் – ஜெயமோகன் அவர்களுக்கும் ஒத்துவர மாட்டா என்றுதான் நினைக்கிறேன்.
  11. இன்னொன்று:  ஆனால், நான் ஒரு எழுத்தாளனோ அல்லது அறிவுஜீவியோ அல்லன். உலகப் பிரச்சினைகள் அனைத்திற்கும் என்னிடம் திடீரெக்ஸ் தீர்வுகளோ. ஸில்வர் புல்லெட்களோ இல்லை. எல்லாவற்றைப் பற்றியும் எனக்கு கருத்தென்பது இல்லை, பல விஷயங்களில் எனக்கு முனைப்போ, கரிசனமோ இல்லை; மேலும்,  மிகப்பல விஷயங்களில் நான் ஒரு அஞ்ஞானி மட்டுமே என்பதைப் புரிந்துள்ளேன்.  சர்வ நிச்சயமாக, எனக்குச் சமன நிலையுமில்லை; ஊக்கபோனஸாக, பொறுப்புணர்ச்சியும் இல்லை. என் எழுத்துகளைப் பற்றிய பிரமை என ஒரு எழவும்  இல்லை. ஆகவே என் எழுத்துகளைப்(!) போற்றும்(??!) மக்களோ வாசகர்களோ இல்லை – ஆகவே அவர்களை வழி நடத்தும்(!) அவசியமும், மன அழுத்தமும் எனக்கில்லை. நான் என் எழுத்துகளை(!) மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கும் சொற்ப நபர்களுக்குச் சொல்வதெல்லாம் – உங்கள் மூளைகளை உபயோகியுங்கள், அவ்வளவுதான். ஏனெனில், என் மூளையின் கொள்ளளவு பற்றியும், எனக்கு அபரிமிதமான பிரமைகள் இல்லை. ஆகவே எனக்கு எந்த ஒரு அரசியல்ரீதியான நடுநிலைமையும், கயமைக் கரிசனமும் அவசியமில்லை.
  12. எடுத்துக்காட்டாக: கைகால்களின் திறம் சரியாக இல்லாத மனிதர்களை எனக்கு – அவர்களுடைய எந்தத் திறனைப் பற்றியும் ஒரு குசுவையும் அறியாமல் ‘மாற்றுத் திறனாளர்’ என்று பொத்தாம்பொதுவாகப் பொய்பொய்யாகவெல்லாம் மேட்டிமைத்தனத்துடன், கயமைக் கரிசனத்துடன் (=condescension) குறிப்பிட முடியாது. நான்  நடைமுறை அரசியல்ரீதியாகச் சரியான பக்கத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்வதை (=political correctness) வெறுக்கிறேன்.
  13. அதேபோல,  மோதி விஷயத்தில், எனக்கு இருப்பது, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை. அவருடைய களச் செயல்பாடுகள், அவர் இதுவரை இதுவரை செய்துள்ள பணிகள், ஒழுக்கம், நிர்வாகத் திறமை போன்றவற்றின் மீது வளர்த்தெடுக்கப்பட்ட விழைவு. ஆக எனக்கு மனதில் பட்டதை, எனக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் எழுதுகிறேன். நாளை மாற்றிக் கொள்ளவேண்டுமென்றால் அவற்றை மாற்றிக் கொள்வேன். எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை;  பிற்காலத்தில் அனுகூலமாக இருக்கலாம் என்று ‘safe harbour ஷரத்துகளை’ என்னால் வைத்துக் கொள்ள முடியாது. இப்படி எழுதினால் அப்படியாகுமோ, அப்படியெழுதினால் இப்படியாகுமோ  எனக் கும்மியடித்து என் கருத்துகளை எழுப்பிக் கொள்ள முடியாது. என் அளவை, கருத்துகளின் ஆழத்தை நான் அறிந்திருக்கிறேன் -  என் கருத்துப்படி விஷயங்கள் நடக்காவிட்டால், நான் தான் அன்றைக்கே சொன்னேனே எனச் சாக்குபோக்குச் சொல்ல ஏதுவாக என் கருத்துகளை இப்போதே ஜாக்கிரதையாகக் கட்டமைத்துக் கொள்ளவேண்டிய அவசியமும் எனக்கில்லை.
  14. வென்டி டோனிகர் அவர்களின் அனைத்துப் புத்தகங்களையும் அவருடைய குளுவான் ஆய்வாளர்களின் சில ஆய்வுகளையும் ஊன்றிப் படித்துள்ளவன் என்கிற முறையில் நான் சொல்வது – வென்டி அவர்களுக்கு அடிப்படையில் குதர்க்க உணர்வும், மேலைய மேட்டிமையும் அதிகம் என்பது. அவர் தன்னுடைய கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகளை வேண்டுமென்றே உணராமல் அவமதிப்பது என்பது. இதைத் தவிர அவரால் மேற்கத்திய சிந்தனை முறைமைகளை உபயோகப்படுத்தி மட்டுமே கீழைய பண்பாடுகளை அணுகமுடியும் என்பது. ஆனாலும், அவருடைய இந்த மாதிரி ‘உன்மேல் மூச்சு விடுவேன்’ சுதந்திரத்துக்கும் நாம் தலையில் அடித்துக் கொண்டு ஒத்துப் போகவேண்டும்தான். வென்டி அம்மணி போன்ற அற்பர்களுக்கே இப்படியென்றால், ஜோ டி’க்ரூஸ் அவர்களுக்கு பலமடங்கு அதிகச் சுதந்திரம் இருக்கவேண்டும்.  இத்தனைக்கும் அவருடைய அரசியல் சார்பில் தற்போதைய சிந்தனையை மிக நாகரீகமாக, நேர்மையுடன் வெளிப்படுத்தியதற்கே இத்தனை ஊடக அற்பத்தனங்கள். ஆனால் கொடிது கொடிது இடதுசாரி-அறிவுஜீவிய மாஃபியா கொடிது. இந்த மாஃபியா வைக்கும் கயமைத் ‘தீட்டு’ என்பது பப்பரப்பா பரபரப்பாக்களினால் ஆனது.
  15. அதே சமயம், வ கீதா போன்ற தொழில்முறை தகரடப்பா அரிப்புஜீவி  ப்ரொடெஸ்ட்வாலாக்களுக்கும் தன் மொழிபெயர்ப்பை வெளியிடக் கூடாது என்று அவருடைய பதிப்பகத்திடம் சட்டரீதியாக மறுக்க முடியக் கூடும் தான்; கீதா – பதிப்பகம் – ஜோ தொடர்பான ஒருவருடன் மற்றவருக்கான ஒப்பந்தங்கள், பிணையங்கள் போன்றவற்றின் தன்மை எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்த விஷயம் அது. (விடுதலைச் சிறுத்தையான பா ரவிக்குமார் அவர்கள் (இவர் நான் மதிக்கும் அரசியல்வாதிகளில் ஒருவர்) இந்த நவாயனா பதிப்பகத்தின் பங்குதாரர் / தொடங்கிகளில் ஒருவர் என ஒரு மங்கலான நினைவு; இது தவறாக இல்லாத பட்சத்தில், அவர் இந்த விஷயத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பது ஒரு சுவாரசியமான விஷயம்!)
  16. இருந்தாலும், தார்மீக உரிமை என்பது இந்தியச் சூழலில். தொழில்முறை இடதுசாரி சார்பு மனிதவுரிமையர்களின் உரிமை மட்டுமேதான், மற்றவர்களுக்கு இம்மாதிரி உரிமைகள் இருக்கக்கூடாது என்பதில் இவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள் – அதே சமயம், இவர்களுக்கும் தார்மீகக் கடமைகளுக்கும் சம்பந்தமேயில்லை! ஆனால் – இந்த இடதுசாரிகள் பார்வையில், வலதுசாரிகளுக்குக் கடமைகள் மட்டுமே இருக்கின்றன; உரிமைகள் சொற்பம்; மூளையும் இல்லை; இவர்கள் வெறும் குண்டாந்தடிகள்தான்!  ஆகவே இவர்களைப் பொருட்படுத்தவேண்டிய அவசியமேயில்லை! (வேறு வழியில்லாமல் இந்த மிகவும் நைந்துபோன வடது-இடது  அரைகுறைசாரிப் பதங்களை உபயோகித்திருக்கிறேன், மன்னிக்கவும்)
  17. அண்மையில் ஒரு நண்பர், ஜோ டி’க்ரூஸ் அவர்களுக்கு ஆதரவாக ஒரு திரளைத் திரட்டுவதற்காக, ஒரு அறிக்கை வரைவைத் தயாரித்து இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்:  “இந்த அறிக்கை ஜோவின் கருத்து சுதந்திரம் மதிக்கப் பட வேண்டும் என்று மட்டுமே கோருகிறது. இதற்கு இசைவு தெரிவிப்பவர்கள்  ஜோவின் கருத்துடன் உடன்பட வேண்டும் என்ற அவசியமில்லை.”  நான் அவருக்கு பதிலுக்கு  இப்படி – ‘நிச்சயமாக ஒப்புதல் – சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, கருத்துக்கும்தான்’ – அனுப்பினேன்.

அய்யா சரவணன் – ‘திராவிட இயக்கத்தினரின் அறிவியக்க செயல்பாடுகள்’ என்று எழுதுகிறீர்கள் – ஆனாலும் உங்களுக்குக் குறும்புணர்ச்சி அதிகம்தான்! அல்லது oxymoron என்பதற்கு மேற்கண்ட பதத்தை எடுத்துக் காட்டுகிறீர்களோ?

ஆகவே, தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத சரவணன் அவர்களே, வழக்கம்போல என் பதிலில் திருப்தி அடையாமல்,  மௌனமாக இருப்பீராக. ;-)

இப்போதைக்கு இவ்வளவு போதும்.

நரேந்த்ர மோதி!

அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…

 


23 Apr 00:14

2014 – கணிப்பும் கனவும் : 6

by Tamilpaper Editorial

indian-civilizationsஇந்தித் தேர்தல்களில் மோசடி செய்து இந்தியாவைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள அமெரிக்கா முயற்சி செய்வதாகச் சொன்னீர்கள். இந்தியாவின் அறிவு ஜீவி, அரசியல், வணிக சக்திகள் அதாவது நவ பிராமண, சத்ரிய, வைசிய சக்திகள்கூட நவ காலனிய சக்திகளுக்கு விசுவாசமாகவே நடந்துகொள்வதாகச் சொன்னீர்கள். இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?

நிச்சயமாக. கண் பார்வை மங்கியவனின் கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவைதானே. இந்திய அறிவுஜீவி வர்க்கத்தை எடுத்துக்கொண்டால், அவர்கள், செமி கோலன் வைக்க வேண்டிய இடங்களில் ஃபுல்ஸ்டாப் வைத்துவிடுவார்கள்.

இதற்கு நீங்கள் முன்னால் சொன்னதே புரிவதுபோல் இருந்தது.

(லேசாகச் சிரித்தபடியே) அறிவிஜீவிகள் பேசுவது உண்மையாக இருக்கும்; ஆனால், எல்லா உண்மைகளையும் பேசமாட்டார்கள். அதாவது, தொடர் வாக்கியத்தின் ஒரு பகுதியை மட்டும் பேசுவார்கள். அடுத்த பகுதியைப் பேசமாட்டார்கள். அப்படியே பேசினாலும் ஒரே ஒரு வாக்கியத்துக்கு மட்டுமே அதிக அழுத்தம் தருவார்கள். உதாரணமாக, இந்தியர்களுக்கு அறிவியல் அறிவு கிடையாது என்ற ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். பெரும்பாலான அறிவுஜீவிகள் இதை உற்சாகமாக முன்வைப்பார்கள். ஆனால், தெளிவான, முழுமையான அறிவியல் புரிதல் இல்லாமலேயே இந்தியாவில் கடந்த காலத்தில் மருத்துவம், வானியல், உலோகச் சிற்பம், கட்டடக்கலை, விவசாயம், இசை என பல துறைகளில் மிகப் பெரிய சாதனைகள் செய்யப்பட்டிருப்பதைச் சொல்லாமல் விட்டுவிடுவார்கள். அல்லது அந்த சாதனைகளை லேசாக அங்கீகரித்துவிட்டு அதன் அறிவியல் சாரா அணுகுமுறையை அழுத்தமாக விமர்சிப்பார்கள். கடந்த கால பாரம்பரிய அணுகுமுறையில் தெய்வீகத்துக்கு அதிக இடம் தரப்பட்டிருப்பதை எள்ளி நகையாடுவார்கள்.

இன்றைய அறிவியல் சார்ந்த அணுகுமுறையானது இந்த உலகுக்கு தந்திருக்கும் நன்மைகளைவிட தீமையே அதிகம் என்பதைப் பற்றிப் பேசமாட்டார்கள். அது எந்த அளவுக்கு வணிகமயமாகியிருக்கிறது என்பது பற்றிப் பேசமாட்டார்கள். தெய்வ நம்பிக்கையை மையமாகக் கொண்ட சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் ஒரு காலத்திலும் அப்படியான வணிக நோக்கில் இயங்கியதே இல்லை என்பதைச் சொல்லமாட்டார்கள். கேட்டால், அலோபதி மருத்துவம் என்ற மருத்துவ அறிவியல் பற்றித்தான் நாங்கள் பேசுகிறோம். ஒரு அலோபதி மருத்துவரோ, நிறுவனமோ செய்யும் தவறை இதனுடன் சேர்க்க முடியாது என்பார்கள்.

இது ஒருவகையில் சரிதானே?

தூய அறிவுசார் விவாதத்தில் இப்படிச் செய்யலாம்தான். ஆனால், அலோபதி மருத்துவத்தின் வணிகமயமாக்கலை விமர்சிக்கவிடாமல் எது அவர்களைத் தடுக்கிறது என்றும் பார்க்கவேண்டும் அல்லவா? மேலும் அலோபதி மருத்துவம் நோயை குணப்படுத்துவதில்லை. நோயின் காரணத்தை மட்டுமே குணப்படுத்துகிறது. ஒவ்வொரு மனிதரின் உடலுக்கும் நோயை எதிர்க்கும் சக்தியை அது தருவதில்லை. ஆங்கில மருந்துகள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையைத்தான் உருவாக்குகிறது. இப்படியான மருத்துவ ரீதியான விமர்சனங்களைக் கூட முன்வைப்பது கிடையாது. இந்தியர்களுக்கு வரலாற்றுப் பிரக்ஞையோ அதன் மீது மதிப்போ கிடையாது என்று சொல்பவர்கள், மேற்கத்திய வரலாற்றாளர்கள் பிற இன, கலாசாரங்கள் பற்றி குயுக்தியாக எழுதி வைத்திருக்கும் அவதூறு வரலாறு பற்றியும் பேசியாகவேண்டுமல்லவா? முதல் வாக்கியமானது பெரும் நிதியூட்டத்தால் இந்தியாவில் ஆழமாக வேரூன்ற வைக்கப்படும் ஒன்று. இரண்டாவது வாக்கியம் நிதி வழங்கும் புரவலர்களுக்கு உவப்பில்லாதது. ஒருவர் எதை மட்டும் பேசுகிறார்… எதைப் பேசாமல் இருக்கிறார் என்பதை இதுவே தீர்மானிக்கிறது.

இந்திய பாரம்பரியத்தை விமர்சிக்கும் எல்லாரும் பணத்துக்காகத்தான் அப்படிச் செய்கிறார்கள் என்று சொல்லிவிடமுடியுமா?

நிச்சயம் முடியாதுதான். காசு வாங்காமலேயே கூவுபவர்களும் உண்டு. அத்தகைய நல்ல இதயங்களைப் பார்த்து நான் சொல்ல விரும்புவதெல்லாம், காசு வாங்கிக்கோங்க. தேவையில்லாமல் தியாகியாக வேண்டாம். இந்திய, இந்து பாரம்பரியத்தை சகட்டு மேனிக்குத் திட்ட பெரும் நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதைப் பெறுவது உங்கள் உரிமை. தராமல் இருந்தால் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வாங்கிக் கொள்ளவில்லையென்றால், உங்கள் பெயரைச் சொல்லி யாரோ வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். விடாதீர்கள்.

ஒருவர் சுய சிந்தனையுடன் ஒரு விஷயத்தைச் சொல்வதானால், அதன் பல கோணங்களையும் பேசத்தான் செய்வார். அரை உண்மைகளைப் பேசும் எவருமே மலினப்பட்ட சிந்தையுடையவரே. இந்த இடத்தில் அப்பாவிகள் யாரும் இருக்க முடியாது. அரசியல்வாதிகள்தான் இருக்க முடியும். இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் அறிவியல் அணுகுமுறை இல்லை என்ற ஒற்றை வாக்கியத்தை மட்டுமே அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் ஒருவர் அலோபதி மருத்துவத்தை நோக்கித்தானே ஒரு நோயாளியை ஆற்றுப்படுத்துகிறார். அப்போது அந்த மருத்துவத்தின் வணிகமயமாக்கல் பற்றியும் அவர் பேசித்தானே ஆகவேண்டும். அணு உலைகளின் நன்மைகள் பற்றி விலாவாரியாகப் பேசுபவர், இந்தியாவுக்கு அதனால் வரும் தீமைகள் பற்றியும் சூரிய சக்தி போன்ற மாற்று சக்திகள் பற்றியும் பேசித்தானே ஆகவேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் செய் நேர்த்தி பற்றிப் பேசும் ஒருவர் அவற்றினால் பாதிக்கப்படும் உள்நாட்டுத் தொழில்கள் பற்றிப் பேசித்தானே ஆகவேண்டும். இந்து சாதி அமைப்பின் குறைகளை மட்டுமே பட்டியலிடும் ஒருவர் அதைவிட ஆயிரம் மடங்கு கொடிய கிறிஸ்தவ மத வரலாற்றைப் பற்றிப் பேசாமல் இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

இதுபோல் எந்தவொரு துறையை எடுத்தாலும் பாரம்பரிய அணுகுமுறையின் போதாமையை மட்டுமே பேசும் ஒருவர் மறைமுகமாக நவ காலனியத்தின் மதிப்பீடுகளையே உயர்த்திப் பிடிக்கிறார். இத்தனைக்கும் எத்தனையோ மேற்கத்திய அறிஞர்கள் இந்திய பாரம்பரிய அம்சங்களின் சாதகங்கள் பற்றி மிகவும் விரிவாகவே விஞ்ஞானபூர்வ அணுகுமுறையில் எடுத்துக்காட்டியும் இருக்கிறார்கள். ஆனால், நமது இந்திய அறிவுஜீவி வர்க்கத்தின் மேற்கத்திய மோகமானது நம் பாரம்பரியப் பெருமையை முன்வைக்கும் நபர்களை நோக்கி ஒருபோதும் குவிவதில்லை. சொந்தத்தினரின் காலை வாரி விடுவதில் அத்தனை ஆர்வம்.

இதில் பல ஷேடுகள் வேறு உண்டு. ஒரு இந்திய பாரம்பரிய அம்சத்தை இவர்கள் புதிய காரணத்தைச் சொல்லி ஆதரிப்பார்கள். அதன் பிரதான அம்சத்தை மட்டம் தட்டுவார்கள். கோவில்களையே எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள்லாம் சாமி கும்புட மாட்டோம். சிலையை மட்டுமே ரசிப்போம் என்று ஒரு கூட்டம் திரிவதைப் பார்த்திருப்பீர்கள்.

கலையை மட்டும் ரசிக்கும் மனநிலை ஒருவருக்கு இருக்கலாம்தானே…

இருக்கலாம்தான். ஆனால், இந்திய சிற்பக் கலையை ரசிக்கும் ஒருவர் உண்மையிலேயே கலை சார்ந்துதான் அதைச் செய்கிறார் என்றால் அவருக்கு மூல விக்ரஹம் மீது மிகப் பெரிய வியப்பும் மதிப்பும் இருந்தாகவேண்டுமே. எந்தவொரு கோயிலிலும் ஆகச் சிறந்த சிலை அந்த மூல விக்ரஹம்தானே… அதிலும் அந்தக் கரிய திருமேனியில் வழிந்தோடியபடி பாலும், சந்தனமும் வரையும் உயிரோட்டமான ஓவியம், இருண்ட கர்ப்ப கிரஹத்தில் மஞ்சள் நிற தீபங்களால் சிலையானது முகம், உடல், கால் என உயிர் பெறும் விதம், பூக்களால் அது அலங்கரிக்கப்படுவது விதம் என ஒரு மிகப் பெரிய கலை அனுபவம் தெய்வச் சிலையின் முன் நிற்கும்போதுதானே நிகழும். அதை என்றாவது இந்த கலா ரசிக மண்டலிகள் ரசித்துப் பார்த்ததுண்டா..? உறைந்து நிற்கும் சிற்பம் உயிர் பெறும் தருணம் அல்லவா வழிபாட்டு நேரம். சர்வ வல்லமை படைத்த கடவுளின் உருவமாக அதைப் பார்க்கவேண்டாம். கலையின் பேரெழில் வடிவமாகப் பார்க்கலாமே. அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள். ஏனென்றால், பாரம்பரிய விஷயம் எதையும் deHinduise செய்துதான் இவர்களால் ஏற்க முடியும். ஏனென்றால், எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த விஷயம் அது. இப்படியாக, அமெரிக்க நாயனத்துக்கு ஒத்து ஊதுவதில் இத்தனை உற்சாகத்துடன் இருக்கும் இவர்கள் பிரதான, சுதந்தர இசைக்கலைஞர்கள் போல் பாவனை காட்டுகிறார்கள். அதைத்தான் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. தங்கள் இடத்தை முதலில் நன்கு புரிந்துகொண்டு தங்கள் சுய அடையாளத்தை வெளிப்படையாக முன்வைத்துவிட்டால் அந்தக் குறைந்தபட்ச நேர்மைக்காவது அவர்களை நாம் பாராட்டலாம்.

பொருளாதார முதலைகளை எடுத்துக்கொண்டால், அவர்களுடைய இலக்குகள் எல்லாமே இந்திய வளங்களை அமெரிக்க முதலாளித்துவ சக்திகளுக்கு எப்படி பட்டா போட்டுக்கொடுப்பது, அதில் நமக்கான கமிஷன் தொகையை எப்படிக் கேட்டுப் பெறுவது என்பதில் மட்டுமே இருக்கிறது. இந்தியாவின் கனிம வளங்கள் அனைத்தும் அடி மாடு விலையில் தோண்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த இடங்களுக்குச் சொந்தக்காரர்கள் அல்லது அருகில் இருப்பவர்கள் நடுத்தெருவுக்குத் துரத்தப்படுகின்றனர். அரசுத்துறைகள் அனைத்தும் நஷ்டத்தை நோக்கி விரட்டப்பட்டு ஒருசில பன்னாட்டு நிறுவனங்களின் சூறையாடலுக்கு வழி வகுத்துத் தரப்படுகின்றன.

அமெரிக்க மேற்கத்திய அம்சங்களே இங்கு வரக்கூடாது என்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. இந்திய தாகத்துக்கு கோக் தேவையில்லை. இளநீரும், மோரும், பழச்சாறுகளும் போதும். அது உள் நாட்டுப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய வலிமையையும் தரும். இந்தியர்களுக்கு நன்மையைத் தரும். அமெரிக்காவில் வேதி உரங்களைப் பயன்படுத்தாமல் பயிர் செய்தல், 100 கி.மீக்குள் விளையும் பொருட்களை வாங்கிக் கொள்ளுதல் என பல நல்ல விஷயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதுதான் நமக்கு வேண்டும். இதுநாள்வரை நாம் செய்து வந்த நல்ல விஷயங்களை அவர்கள் எடுத்துக்கொண்டுவிட்டார்கள். ஆனால், நாம் அவர்கள் சொல்லும் பிழையான விஷயங்களை அதி வேகமாகப் பின்பற்றிவருகிறோம்.

இந்தியா வேதி உரங்களுக்கும் பூச்சிக் கொல்லிக்குமான மிகப் பெரிய சந்தை என்று இங்கு வந்து தொழிற்சாலையை நிறுவும் ஒரு பன்னாட்டு நிறுவனம் அதிக லாபத்தைக் கணக்கில் கொண்டு அதி அபாயமான வேதிப் பொருளை அளவுக்கு அதிகமாக ஒரே இடத்தில் குவித்து வைக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் லட்சக்கணக்கில் உயிர் போகும் என்பது தெரிந்தும் இப்படிச் செய்யப்படுகிறது. ஊழலில் திளைத்த நபர்களை ஆட்சியில் அமர்த்திக் கொள்வதால் அவர்கள் எதையும் கண்டுகொள்வதுமில்லை. போபால் போல் பெரும் விபத்து நடந்த பிறகும் பெருந் தொழில் மீதான மோகம் மறையவே இல்லை. பன்னாட்டு நிறுவனங்களின் இயல்பே அதுதான். எதையுமே ராட்சஸ அளவில்தான் அதனால் சிந்திக்கவே முடியும். இந்தியா போன்ற ஒரு தேசத்துக்கு சிறியதுதான் எப்போதுமே சிறந்தது.

40-60 கி.மீ வேகத்துக்கு மேல் போக முடியாத, போகத் தேவையில்லாத இந்தியத் தெருக்களுக்கு 100 கி.மீ வேகத்தில் சீறிப் பறக்கும் வாகனங்கள் தேவையே இல்லையே. ஆனால், நமது ஆட்டொமொபைல் துறை அதைத்தான் மாங்குமாங்கென்று உற்பத்தி செய்துவருகிறது. அமெரிக்காவில் சாலைகள் அகலமாக இருக்கும்… ஒவ்வொருவருடைய வீடும் பணியிடத்தில் இருந்து தொலைவில் இருக்கும். அவர்களுக்கு 80, 100, 120 என தனித்தனி வேகச் சாலைகள் ஒரே திசையில் அமைக்க முடியும். நமது நகரங்களின் நிலைமையைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கும் எவருக்காவது அதிவேக வாகனங்களை உற்பத்தி செய்யத்தோணுமா..? கதர் வேட்டியும் சட்டையும் இந்திய தட்பவெப்பநிலைக்கு மிகவும் ஏற்றது… எந்தவொரு நிறுவனத்திலாவது இன்று வேட்டி கட்ட அனுமதி உண்டா? கோட், சூட், ஷூ, சாக்ஸ் என மேற்கத்திய உடையை அணிவதுதான் வளர்ச்சி என்று நம்பப்படுகிறது.

ஒரு கிராமத்தான் வயல் வேலையில் இருந்து வெளியேறுவதுதான் அவருடைய வளர்ச்சி என்று சொல்லப்படுகிறது. வெயிலுக்கும் குளிருக்கும் இதமாக இருக்கும் அவருடைய ஓலைக் குடிசையை இடித்து, தகிக்கும் சுண்ணாம்புக் காளவாய் போன்ற சிமெண்ட் கட்டடத்தைக் கட்டிக் கொள்வதுதான் அவருக்கான வளர்ச்சி எனப்படுகிறது. நோய் நாடி நோய்க்கு முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி சிகிச்சை அளிக்கும் நாட்டுப்புற வைத்தியத்தில் இருந்து விலகி, நோய்க் கிருமிகளோடு நல்ல செல்களையும் சேர்த்து அழிக்கும் அலோபதி மருந்துக்கு க்யூவில் நிற்பதுதான் அவருடைய வளர்ச்சி என்று சொல்லப்படுகிறது. கரகம், தெருக்கூத்து, தோல் பாவைக்கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகளில் இருந்து விலகி சினிமா அதுவும் ஹாலிவுட் சினிமாக்களைப் பார்த்து காப்பியடிக்கும் படங்களைப் பார்ப்பதுதான் உயர்வு என்று சொல்லப்படுகிறது. கூழும் கஞ்சியும் இழிவானதாகவும் ஹார்லிக்ஸும், பிரெட்டும் உயர்வானதாகவும் சொல்லப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், இந்திய உள்நாட்டு பொருளாதாரத்தின் பிடியில் இருந்து ஒருவனைப் பிய்த்து அமெரிக்க பன்னாட்டு பொருளாதார அமைப்பின் வாடிக்கையாளனாக மாற்றுவதுதான் வளர்ச்சி என்ற பெயரால் இங்கு நடந்துகொண்டிருக்கிறது.

அரசியல் வர்க்கத்தின் அடிமை மோகம் என்பது இன்னும் அதிகம். கோடிக்கணக்கில் லஞ்ச ஊழலில் திளைத்துவிட்டு அகப்பட்டுவிடக்கூடாதென்று அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருக்கின்றன. அரசு இயந்திரமானது மக்கள் நலனைவிட்டுவிட்டு அமெரிக்க கார்ப்பரேட் நலனை முன்வைத்துச் செயல்படுகின்றன. மொழி என்ற ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு எடுபிடி வேலை செய்ய ஆங்கில அறிவு தேவை என்பதால் தேசம்  முழுவதும் அரை குறை ஆங்கிலத்தில் பள்ளிகள் புற்றீசல் போல் முளைத்துவிட்டிருக்கின்றன. ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால், பயிற்று மொழி தாய் மொழியாகத்தான் இருக்கவேண்டும். இந்த எளிய விஷயத்தைக்கூட நம் அரசியல்வாதிகளால் செய்ய முடியவில்லையே. இந்தியாவில் 2000 வருடங்களாக பிராமண, சத்ரிய, வைசிய பிரிவினர் அல்லாதாருக்கு கல்வியே இருந்திருக்கவில்லையென்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் வந்த பிறகுதான் அனைவருக்கும் கல்வி கிடைத்தது என்றும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையும் பிழையானது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அந்த கிறிஸ்தவ மிஷனரிகள் என்ன கல்வியைக் கொண்டுவந்தார்கள்… பிராந்திய தாய் மொழிக் கல்வியையா… கான்வெண்ட் ஆங்கிலத்தைத்தானே… அமெரிக்க, கிறிஸ்தவ, முதலாளித்துவ நலனைத்தானே அவர்கள் வெகு உற்சாகத்துடன் முன்னெடுத்திருக்கிறார்கள். அதைத்தானே இன்றைய அரசியல் வர்க்கமும் ஆதரித்து ஊக்குவித்து வருகிறது. அப்படியாக, இந்து/இந்தியப் பாரம்பரியத்துக்கு எதிராகத்தான் அமெரிக்க நவீன சக்திகள் இயங்குகின்றன. உலகின் பல இடங்களிலும் இதே போராட்டம்தான் நடக்கவும் செய்கிறது. அமெரிக்காவில் பழங்குடிகளை ஒரேயடியாக அழித்துமுடித்துவிட்டார்கள். உலகின் பிற பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக முழுங்கிக் கொண்டுவருகிறார்கள்.

அதாவது இன்று உலகில் பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்கும் இடையிலான போர் நடப்பதாகச் சொல்கிறீர்கள்.

ஆமாம். அமெரிக்காவுக்கு 500 வருடத்துக்கு முந்தைய எதைக் கண்டாலும், அது கல்லாக இருந்தாலும் சரி மண்ணாக இருந்தாலும் சரி உள்ளூர நடுக்கமே. அவர்கள் தங்கள் நாட்டையே நியூ வேர்ல்ட் என்றுதானே சொல்லிக் கொள்கிறார்கள். எனவே, ஓல்ட் வேர்ல்ட் மதிப்பீடுகள் அனைத்துமே இழிவானவை என்பதுதான் அவர்களுடைய பார்வை. அந்தப் பழைய மதிப்பீடுகள் எல்லாம் மாற்றப்பட்டாகவேண்டும் என்பதுதான் அவர்களுடைய லட்சியம். இதை அவர்களால் தவிர்க்கவும் முடியாது. தாவர, விலங்கு உலகின் மரபணுக்களில் இருந்துதானே மனித உயிர் கிளைத்துப் பிரிந்திருக்கிறது. உலகம் முழுவதும் தனது இனமே இருக்கவேண்டும் என்ற தாவர புத்தியும் வாழ்வதற்காக பிற உயிர்களைக் கொன்று சாப்பிடலாம் என்ற விலங்குலக தர்மமும் மனித மரபணுவில் பொதிந்துதானே இருக்கிறது. எனவே, அந்த நவகாலனிய சக்திகளின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாதே தவிர நம்மால் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். என்ன, நாம் அழிந்துபடும் உயிரினமாக ஆகிவிடக்கூடாது என்ற புரிதல் ஒவ்வொரு பாரம்பரிய பெருமை கொண்ட இனத்துக்கும் இருக்கவேண்டும். அதுவும் இந்தியா போன்ற நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட ஒரு இனம் தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக்கூடாது. அமெரிக்க அபாயத்தை அதிகம் புரிந்துகொண்டவர்கள் கம்யூனிஸ்ட்கள். அதனால்தான் அவர்கள், இந்திய இந்து பாரம்பரியத்தைப் பற்றிய தங்கள் பார்வையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்கிறேன். அவர்களுடைய சொந்த வேர் என்ற அளவில்கூட ஆதரிக்கவேண்டாம். ஏனென்றால் அவர்கள்தான் உலகப் பிரதிநிதிகள் ஆயிற்றே. தேசம், இனம், மொழி கடந்தவர்கள் அல்லவா… ஆனால், நவ காலனிய ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்படுபவர்கள் என்ற வகையிலாவது அவர்கள் இந்திய இந்து பாரம்பரியத்தை வலுப்படுத்தவேண்டும்.

நம் பாரம்பரியம் உயர்ந்தது என்று எப்படிச் சொல்கிறீர்கள். அதில் பல பிழைகள் உண்டு அல்லவா? சாதி அமைப்பையே எடுத்துக்கொள்ளுங்கள். என் தாத்தா வெட்டி கிணறு என்பதற்காக உப்புத் தண்ணியை நான் குடித்தாக வேண்டுமா என்ன?

இவ்வளவு நேரம் நீங்கள் கேள்விகேட்ட பிறகும் சாதி பற்றிப் பேசவே இல்லையே என்று பார்த்தேன். கரெக்டாக வந்து சேர்ந்துவிட்டீர்கள். இது பற்றி விரிவாகப் பேசுவோம்.

0

Share/Bookmark

22 Apr 08:21

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 58

by jeyamohan

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 5 ]

விதுரன் வெளியே சென்றபோது யக்ஞசர்மர் அவன் பின்னால் வந்தார். “சூதரே, நீங்கள் ஆடவிருப்பது ஆபத்தான விளையாட்டு” என்றார். “அரசரை நான் ஒருமாதமாக ஒவ்வொருநாளும் கூர்ந்துநோக்கிக்கொண்டிருக்கிறேன். அவர் இருக்கும் நிலை காதல்கொண்டவன்போல. பித்தேறியவன் போல. மதம் கொண்டபின் யானை எவர் சொல்லையும் கேட்பதில்லை…”

விதுரன் தலையசைத்து “ஆம், நான் அறிவேன். யானை மதமிளகுவது. குரூரம் கொண்டது. அக்குரூரத்தை எளிய விளையாட்டாகச் செய்யும் வல்லமையும் கொண்டது. ஆனால் விலங்குகளில் யானைக்குநிகராக வழிபடப்படுவது வேறில்லை அமைச்சரே” என்றான்.

யக்ஞசர்மர் “தாங்கள் முதலில் பேசவேண்டியது காந்தார இளவரசியிடம். அவரால் மூத்தவரிடம் உரையாடமுடியலாம்” என்றார். “இல்லை, நான் அதைப்பற்றி முதலில் பேசவிருப்பது என் தமையனிடம்தான். வேறு எவரையும்விட இப்புவியில் எனக்கு அண்மையானவர் அவரே” என்றான் விதுரன். யக்ஞசர்மர் திகைத்து நோக்கி நிற்க புன்னகைசெய்தபின் அவன் அணியறையின் மறுபக்கத்துக்குச் சென்றான்.

வெளியே மகாமண்டபத்தில் வைதிகர் வேதமோதும் ஒலி கேட்கத்தொடங்கியது. அவையின் ஓசைகள் மெல்லமெல்ல அடங்கி அனைவரும் வேதமந்திரங்களை கேட்கத் தொடங்கியதை உணரமுடிந்தது. இன்னமும்கூட என்ன இக்கட்டு என்பது அவையினருக்குப் புரிந்திருக்காது, அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அவ்வளவு எளிதில் அது முடிந்துவிடாதென அவர்கள் அறிவார்கள். சகுனி உள்ளே வந்ததுமே அவர்களுக்கு இக்கட்டு எங்குள்ளது என புரிந்திருக்கும். அவர்களை இப்போது பார்த்தால் ஒவ்வொரு விழியிலும் எரியும் ஆவலைக் காணமுடியும்.

விதுரன் கசப்பான புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். சாமானியர் தங்களுக்கே பேரழிவைக் கொண்டுவருவதானாலும்கூட தீவிரமாக ஏதாவது நிகழவேண்டுமென விரும்புகிறார்கள். அவர்களின் வாழ்க்கை எளியது, மீளமீள ஒன்றே நிகழ்வது, சலிப்பையே மாறாஉணர்வாகக் கொண்டு முன்னகர்வது. அவர்கள் வரலாறற்றவர்கள். அதை அவர்கள் அறிவார்கள். ஆகவே அவர்களின் அகம் கூவுகிறது, இடியட்டும், நொறுங்கட்டும், பற்றி எரியட்டும், புழுதியாகட்டும், குருதிஓடட்டும்… அது அவர்களின் இல்லங்களாக இருக்கலாம். அவர்களின் கனவுகளாக இருக்கலாம். அவர்களின் உடற்குருதியாக இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று நிகழவேண்டும். மகத்தானதாக. பயங்கரமானதாக. வரலாற்றில் நீடிப்பதாக… அந்தத்தருணத்தில் அவர்கள் இருந்தாகவேண்டும், அவ்வளவுதான்.

சாமானியர்களின் உள்ளிருந்து இயக்கும் அந்தக் கொடுந்தெய்வம்தான் வரலாற்றை சமைத்துக்கொண்டிருக்கிறதா என்ன? வாளுடன் களம்புகும் ஷத்ரியனும் நூலுடன் எழும் அறிஞனும் யாழுடன் அமரும் சூதனும் அந்தச் சாமானியனுக்கான நாடகமேடையின் வெற்றுநடிகர்கள் மட்டும்தானா? இங்கே நிகழ்வதெல்லாம் யாருமற்றவனின் அகத்தை நிறைத்திருக்கும் அந்தக் கொலைப்பெருந்தெய்வத்துக்கான பலிச்சடங்குகளா என்ன?

அளவைநெறியற்ற எண்ணங்கள். இத்தருணத்தில் ஒருவனை வல்லமையற்றவனாக, குழப்பங்கள் மிக்கவனாக ஆக்குவதே அவைதான். இங்கே ஒன்றைமட்டும் நோக்குபவனே வெல்கிறான். அனைத்துமறிந்தவன் வரலாற்றின் இளிவரலாக எஞ்சுகிறான். மிதித்து ஏறிச்செல்லும் அடுத்த படியை மட்டுமே பார்ப்பவன்தான் மலையுச்சியை அடைகிறான். சிகரங்களை நோக்குபவனின் திகைப்பு அவனுக்கில்லை. அவனை சிகரங்கள் புன்னகையுடன் குனிந்துநோக்கி தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கின்றன.

அறைக்குள் திருதராஷ்டிரன் நிலையழிந்து அமர்ந்திருப்பதை விதுரன் கண்டான். அவனுக்கு நிலைமை புரிந்துவிட்டதென்று உணர்ந்துகொண்டான். அவன் கண்களைக் காட்டியதும் சஞ்சயன் தலைவணங்கி வெளியே சென்று வாயிலுக்கு அப்பால் நின்றுகொண்டான். அவனுடைய அந்த அகக்கூர்மையை அத்தருணத்திலும் விதுரன் வியந்துகொண்டான். இளமையிலேயே அனைத்தையும் நோக்கக்கூடியவனாக இருக்கிறான். அதனாலேயே தன் காலடியில் உள்ள படியை தவறவிடுகிறானா என்ன? அவனுக்கு தொலைதூரநோக்குகள் மட்டுமே வசப்படுமா? காலதூரங்களைத் தாண்டி நோக்கக்கூடியவனாக, அண்மைச்சூழலை அறியாத அயலவனாகவே அவன் எப்போதுமிருப்பான் போலும்!

அவ்வாறு விலகியலைந்த எண்ணங்கள் அத்தருணத்தின் தீவிரத்தை தவிர்ப்பதற்காக தன் அகம்போடும் நாடகங்கள் என விதுரன் எண்ணினான். ஓர் உச்சதருணத்தில் எப்போதும் அகம் சிறியவற்றில் சிதறிப்பரவுகிறது. ஆனால் அந்த அகநாடகங்களினூடாக அது உண்மையிலேயே தன்னை சமநிலையில் மீட்டு வைத்துக்கொண்டது. உணர்வுகளை வென்று, உடலை அமைதியாக்கி, முகத்தை இயல்பாக்கி அவனைக் கொண்டுசென்றது. “அரசே, மன்னியுங்கள், அலுவல்கள் ஏராளம்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் அவனை நோக்கி செவி கூர்ந்து “நீ என்னிடம் எதையும் மறைக்கவேண்டியதில்லை. என்ன நிகழ்கிறது? யார் என் மணிமுடிசூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தது?” என்றான்.

விதுரன் அவன் அருகே அமர்ந்துகொண்டு “அரசே, இன்றுகாலை வடபுலத்திலிருந்து ஆயர்குலத்து குடிமூத்தார் சிலர் இங்கே வந்திருந்தார்கள். அவர்களின் நிலத்தில் புவிபிளந்து அனலெழுந்திருக்கிறது” என்றான். திருதராஷ்டிரன் கூர்ந்து செவியை முன்னால் நீட்டி “அதனாலென்ன?” என்றான். தீய செய்தியை முறித்து முறித்துக் கொடுப்பதன் வழியாக அதன் நேரடியான விசையை பெரிதும் குறைத்துவிடமுடியுமென விதுரன் கற்றிருந்தான். உடைந்த செய்தித்துண்டுகளை கற்பனையால் கோக்கமுயல்வதன் வழியாகவே எதிர்த்தரப்பு தன் சினத்தை இழந்து சமநிலை நோக்கி வரத்தொடங்கியிருக்கும்.

“அவர்கள் ஆயர்கள். ஆயர்களுக்கும் வேளிர்களுக்கும் நிலம் இறைவடிவேயாகும்” என்றான் விதுரன். “ஆம், அறிவேன்” என்றான் திருதராஷ்டிரன். “அரசே, நிலம்பிளப்பதென்பதை மாபெரும் அமங்கலமாகவே அவர்கள் எண்ணுகிறார்கள்.” திருதராஷ்டிரன் சொல்லின்றி மூச்செழுந்து நெஞ்சு விரிந்தமைய கேட்டிருந்தான். “முடிசூட்டுவிழாவன்று இத்தகைய அமங்கலம் நிகழ்ந்ததை அவர்கள் பெருங்குறையாக எண்ணுகிறார்கள்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “அவர்கள் இங்கே வந்திருக்கிறார்களா?” என்றான். “ஆம் அரசே, வந்திருக்கிறார்கள்.” திருதராஷ்டிரன் தலையைச் சுழற்றி கீழ்த்தாடையை நீட்டி பெரிய பற்களைக் கடித்தபடி “எப்போது?” என்றான்.

“காலையிலேயே வந்துவிட்டார்கள். அவர்களை நான் உடனே சிறையிட்டு அச்செய்தி எவரையும் எட்டாமல் பார்த்துக்கொண்டேன்” என்றான் விதுரன். “அப்படியென்றால் என்ன நிகழ்கிறது?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “ஆனால் அவர்கள் இங்கு வருவதற்குள்ளேயே தங்கள் குலக்குழுவினரைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் முடிசூட்டுவிழவுக்கென சிலநாட்கள் முன்னரே இங்கு வந்து தங்கியிருந்திருக்கிறார்கள்.”

விதுரன் எதிர்பார்த்ததுபோலவே திருதராஷ்டிரன் அச்செய்தித்துண்டுகளை மெதுவாக இணைத்து இணைத்து முழுமைசெய்துகொண்டான். அவ்வாறு முழுதாகப்புரிந்துகொண்டதுமே அவன் பதற்றம் விலகி அகம் எளிதாகியது. அது அவன் உடலசைவுகளில் தெரிந்தது. பெரிய கைகளை மடிமீது கோத்துக்கொண்டு “ஆகவே என் முடிசூடலை எதிர்க்கிறார்கள், இல்லையா?” என்றான்.

“ஆம் அரசே, அவர்கள் தங்களை ஏற்கவியலாதென்று சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் கோல்களை உங்கள் முன் தாழ்த்தி வணங்கினாலொழிய தாங்கள் முடிசூடமுடியாது.” திருதராஷ்டிரன் பற்களைக் கடித்தபடி “விதுரா, அவர்களில் ஒருவன் மட்டும் கோல்தாழ்த்தவில்லை என்றால் என்ன செய்யவேண்டுமென்கிறது நூல்நெறி?” என்றான். “அவன் குலத்தை தாங்கள் வெல்லவேண்டும். அவனைக் கொன்று அக்கோலை பிறிதொருவனிடம் அளிக்கவேண்டும்.”

தன் கைகளை படீரென ஓங்கியறைந்துகொண்டு திருதராஷ்டிரன் எழுந்தான். “என்னை எதிர்க்கும் அனைவரையும் நான் கொல்கிறேன். அது நூல்நெறிதானே?” என்றான். விதுரன் அவன் முகத்தில் தெரிந்த வெறியை அச்சத்துடன் நோக்கி அவனையறியாமலேயே சற்று பின்னகர்ந்தான். “அனைவரையும் கொல்கிறேன். அந்தக்குலங்களை கருவறுக்கிறேன். குருதிமீது நடந்துசென்று அரியணையில் அமர்கிறேன். அது ஷத்ரியர்களின் வழியல்ல என்றால் நான் அவுணன், அரக்கன், அவ்வளவுதானே? ஆகிறேன்…” என்றான் திருதராஷ்டிரன்.

“அரசே, தங்களை எதிர்ப்பவர்கள் அனைத்து ஜனபதங்களும்தான். அவர்கள் அனைவரையும் தாங்கள் அழிக்கமுடியாது. ஏனென்றால் நமது படைகளே அவர்களிடமிருந்துதான் வந்திருக்கின்றன. மேலும் அவர்களுடன் சேர்ந்து வைதிகர்களும் தங்களை எதிர்க்கிறார்கள்” என்றான் விதுரன். “அவர்கள் சிறிய இளவரசரை அரியணை அமர்த்தும்படி சொல்கிறார்கள்.”

திருதராஷ்டிரன் திகைத்து பின் எழுந்துவிட்டான். “அவனையா? என் அரியணையிலா?” பின்பு உரக்கச்சிரித்து “அந்த மூடனையா? அவன் கையில் நாட்டையா கொடுக்க நினைக்கிறார்கள்? விலைமதிப்புள்ள விளையாட்டுப்பாவையைக்கூட அவனை நம்பி கொடுக்கமுடியாது.” விதுரன் “ஆம் அரசே, அவர் விழியுடையவர் என்கிறார்கள். தங்களைப்போல அமங்கலர் அல்ல என்கிறார்கள். ஆகவே அவரை தெய்வங்கள் ஏற்கும். நிலமகள் ஒப்புவாள் என்கிறார்கள்” என்றான்.

திருதராஷ்டிரன் பாம்புசீறுவதுபோல மூச்சுவிட்டான். “இதற்குப்பின்னால் சூழ்ச்சி ஏதும் உள்ளதா?” என்றான். “இல்லை அரசே, அவ்வண்ணம் தோன்றவில்லை. சூழ்ச்சியால் எவரும் நிலப்பிளவை உருவாக்கிவிடமுடியாதல்லவா?” விதுரன் சொன்னான். “விதுரா, எனக்கு ஏதும் புரியவில்லை. நான் என்ன செய்யவேண்டுமென நினைக்கிறாய்? காந்தாரத்துப்படைகளைக்கொண்டு அஸ்தினபுரியை கைப்பற்றலாமா?”

விதுரன் “அரசே இந்நகரை மட்டும் கைப்பற்றி நாம் என்ன செய்யப்போகிறோம்? அயல்நாட்டுப்படைகளைக்கொண்டு நகரைக் கைப்பற்றினால் நம் மக்கள் நம்மை புறக்கணித்து நம் எதிரிகளிடம் சேர்ந்துகொள்வார்களல்லவா?” என்றான். “நம் எதிரிகள் குவிந்துகொண்டே இருக்கிறார்கள் அரசே. வெளியே தங்கள் முடிசூட்டுவிழாவுக்கு வந்து அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் உங்கள் குருதியைக்குடிக்க நினைக்கும் ஓநாய்கள். காந்தார இளவரசியை தாங்கள் அடைந்ததை எண்ணி துயில்நீத்தவர்கள். நம் அரசு சற்றேனும் வலுவிழக்குமெனில் நாம் அவர்களுக்கு இரையாவோம். ஒரு ஜனபதத்தின் அழிவைக்கூட நம்மால் தாங்கிக்கொள்ளமுடியாதென்பதே உண்மை.”

திருதராஷ்டிரனின் சிந்தையின் வழிகளெல்லாம் அடைபட்டன. அவன் தலையைச் சுழற்றினான். தன் தொடைமேல் கைகளை அடித்துக்கொண்டான். பற்களைக் கடித்துக்கொண்டு உறுமினான். எண்ணியிருக்காமல் பெருங்குரலில் “பிதாமகர் என்ன சொல்கிறார்? அவரை இங்கே வரச்சொல்” என்று கூவினான். உரக்க “நான் அவரை இப்போதே பார்க்கவேண்டும்” என்றான். விதுரன் “அரசே, பொறுங்கள்” என்றான்.

கைகளைத்தூக்கியபடி திருதராஷ்டிரன் “அவரை வரச்சொல்… உடனே வரச்சொல்” என்றான். “அரசே, பிதாமகருக்கு இந்த இக்கட்டு இன்னும் தெரியாது. அவரும் பேரரசியும் அவையில் இருக்கிறார்கள். இன்னமும்கூட அங்கிருக்கும் அயல்நாட்டரசர்களுக்கும் பிறருக்கும் ஏதும் தெரியாது. தெரியாமலிருப்பதே நமக்கு நல்லது” என்றான் விதுரன்.

“பிதாமகர் வந்து எனக்கு பதில் சொல்லட்டும். இந்த அரசு என்னுடையதென்று சொன்னவர் அவர். என்னை பாரதவர்ஷத்தின் தலைவனாக்குகிறேன் என்று அவர் என்னிடம் சொன்னார்…” என்று திருதராஷ்டிரன் கூவினான். விதுரன் “அரசே, இன்னும்கூட எதுவும் நம் பிடியிலிருந்து விலகவில்லை. குடித்தலைவர்கள் இளையமன்னரை மணிமுடியேற்கவேண்டுமென்று சொல்கிறார்கள். அவரிடம் அவர்கள் சென்று அரியணை அமரும்படி கோரியிருக்கிறார்கள்” என்றான்.

“அவன் என்ன சொன்னான்?” என்று திருதராஷ்டிரன் தாடையை முன்னால் நீட்டி பற்களைக் கடித்தபடி கேட்டான். “முடிவெடுக்கவேண்டியவர் தாங்கள் என்றார் இளையவர். தங்களிடம் கோரும்படி சொன்னார்.” திருதராஷ்டிரன் தன் கைகளை மேலே தூக்கினான். புதிய எண்ணமொன்று அகத்தில் எழும்போது அவன் காட்டும் அசைவு அது என விதுரன் அறிவான். “அவன் மறுக்கவில்லை இல்லையா? நான் என் தமையனுக்கு அளித்துவிட்ட நாடு இது என்று அவன் சொல்லவில்லை இல்லையா?”

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“அரசே, கடமை வந்து அழைக்கும்போது எந்த ஷத்ரியரும் அவ்வகைப் பேச்சுக்களை பேசமாட்டார். அரசகுலமென்பது நாட்டை ஆள்வதற்காகவே. நாடென்பது மக்கள். மக்களுக்கு எது நலம் பயக்குமோ அதைச்செய்யவே ஷத்ரியன் கடன்பட்டிருக்கிறான். அவர் தங்களுக்கு அளித்தது குலமுறை அவருக்களித்த மண்ணுரிமையை. இன்று மக்கள்மன்று அவருக்களிக்கும் மண்ணுரிமை வேறு. அது முழுமையானது. அதை ஏற்கவும் மறுக்கவும் அவருக்கு உரிமை உண்டு. அதை ஏற்று அம்மக்களை காப்பதே ஷத்ரியனின் கடமையாகும்” என்று விதுரன் சொன்னான்.

“அப்படியென்றால் அவன் மண்மீது ஆசைகொண்டிருக்கிறான். இந்த மணிமுடியை விரும்புகிறான்…” என்றான் திருதராஷ்டிரன். “சொல், அதுதானே உண்மை?” விதுரன் பேச்சை மாற்றி “ஆனால் அவர் உங்கள்மீது பேரன்பு கொண்டவர். உங்களை மீறி எதையும் அவர் செய்யவிரும்பவில்லை. ஆகவே அவர் ஒருபோதும் இந்நாட்டை ஆளப்போவதில்லை” என்றான். “ஆகவேதான் நான் ஒரு வழியை சிந்தித்தேன். அதை தங்களிடம் சொல்லவே இங்கே வந்தேன்.”

திருதராஷ்டிரன் தலையசைத்தான். “இளவரசர் பாண்டுவிடம் தங்களை வந்து சந்தித்து ஆசிபெறும்படிச் சொல்கிறேன். தாங்கள் அவர் நாடாள்வதற்கான ஒப்புதலை வழங்குவீர்கள் என்று அவர் எண்ணுவார். அதற்காகவே வந்து தங்கள் தாள்பணிவார். தாங்கள் அந்த ஒப்புதலை அளிக்கவேண்டியதில்லை. தாங்கள் ஒப்பாமல் ஆட்சியில் அமர்வதில்லை என்று அவர் முன்னரே சொல்லிவிட்டமையால் அவருக்கு வேறுவழியில்லை.”

திருதராஷ்டிரனின் தோள்கள் தசைதளர்ந்து தொய்ந்தன. இருக்கையில் நன்றாகச் சாய்ந்து தன் கைகளை மடித்து அதன்மேல் தலையை வைத்துக்கொண்டான். “அவர் இங்கே வரும்போது நீங்கள் உங்கள் எண்ணத்தை அவரிடம் தெரிவியுங்கள்.” திருதராஷ்டிரன் நிமிர்ந்து உருளும் செஞ்சதைவிழிகளால் பார்த்தான். “அவருக்கு உங்கள் ஒப்புதல் இல்லை என்றும் நீங்களே அரியணை அமரவிருப்பதாகவும் சொல்லுங்கள். அத்துடன் அவருக்கு அஸ்தினபுரியின் குடித்தலைவர்கள் அளித்த மண்ணுரிமையையும் உங்களுக்கே அளித்துவிடும்படி கோருங்கள். அது ஒன்றே இப்போது நம் முன் உள்ள வழி.”

திருதராஷ்டிரன் அதை புரிந்துகொள்ளாதவன் போல தலையை அசைத்தான். “அரசே, இளவரசர் அஸ்தினபுரியின் குடிகள் அளித்த மண்ணுரிமையையும் தங்களுக்கே அளித்துவிட்டால் குடித்தலைவர்களுக்கு வேறுவழியே இல்லை. அவர்கள் உங்களை ஏற்றாகவேண்டும். இல்லையேல் அரியணையை அப்படியே விட்டுவைக்கலாம். தாங்கள் இரு வேள்விகள் செய்து இப்பழியை நீக்கியபின் மீண்டும் அரியணை ஏறமுடியும்” என்றான் விதுரன்.

திருதராஷ்டிரன் தலைகுனிந்து அமர்ந்திருக்க விதுரன் எழுந்து வெளியே சென்றான். வாயிலைத் திறந்து வெளியே நின்றிருந்த சஞ்சயனிடம் “இளவரசர் பாண்டுவை அரசர் அழைக்கிறார் என்று சொல்லி அழைத்துவா” என்று ஆணையிட்டான். திரும்பி திருதராஷ்டிரனைப் பார்த்தான். கருங்கல்லில் வடித்த சிலைபோல அவன் அசைவில்லாமல் அமர்ந்திருந்தான். அவன் நகைகளில் மின்னிய நவமணிகள் அவன் உடலெங்கும் விழிகள் முளைத்து ஒளிவிடுவதைப்போலத் தோன்றின.

அப்பால் வேதநாதம் எழுந்துகொண்டிருந்தது. அக்னியை, இந்திரனை, வருணனை, சோமனை, மருத்துக்களை அசுவினிதேவர்களை அழைத்து அவையிலமரச் செய்கிறார்கள். மண்ணில் மானுடராடும் சிறுவிளையாட்டுக்கு தெய்வங்களின் ஒப்புதல். அவை சிறுவிளையாட்டுகளென அவர்கள் அறிந்திருப்பதனால்தான் தெய்வங்களை அழைக்கிறார்கள்.

‘மரத்தில் கூட்டில் குஞ்சுகளை வைத்தபின்
உவகையுடன் அதைச்சுற்றி பறக்கும் இணைப்பறவைகளைப்போல
எங்களைக் காப்பவர்களே, அசுவினிதேவர்களே,
உங்களை வாழ்த்துகிறேன்’

விதுரன் நிலைகொள்ளாமல் மறுபக்க வாயிலையே பார்த்துக்கொண்டிருந்தான். காலம் தேங்கி அசைவிழந்து நிற்க அதில் எண்ணங்கள் வட்டவட்டமான அலைகளைப்போல நிகழ்ந்துகொண்டிருந்தன.

‘இந்திரனே எங்கள் அவியை எப்போது ஏற்றுக்கொள்வாய்?
எந்த வேள்வியால் நீ மானிடரை உனக்கு ஒப்பாகச்செய்வாய்?’

விண்ணகத் தெய்வங்கள் குனிந்து நோக்கி புன்னகைக்கின்றன போலும். எளியவனாக இருப்பது எத்தனை பாதுகாப்பானது. அருளுக்குப் பாத்திரமாக இருப்பதற்கான பெருவாய்ப்பு அல்லவா அது!

பாண்டுவும் சஞ்சயனும் வருவதை விதுரன் கண்டான். பாண்டு அருகே நெருங்கி “தமையனார் என்னை அழைத்ததாகச் சொன்னான்” என்றான். “இளவரசே, தாங்கள் மூத்தவரை வணங்கி அருள் பெறவேண்டும்” என்றான் விதுரன். “ஏன்? அவர் முடிசூடியபின்னர்தானே அந்நிகழ்வு?” “ஆம், அது அஸ்தினபுரியின் அரசருக்கு நீங்கள் தலைவணங்குவது. இது தங்கள் தமையனை வணங்குவது. இன்னும் சற்று நேரத்தில் அவர் மன்னராகிவிடுவார். பிறகெப்போதும் உங்கள் தமையன் அல்ல.” பாண்டு புன்னகை செய்தபடி “ஆம், அதன்பின் அவரது உணவு அமுதமாகவும் ஆடை பீதாம்பரமாகவும் ஆகிவிடுமென சூதர்கள் பாடினர்” என்றான்.

“வாருங்கள்” என விதுரன் உள்ளே சென்றான். பாண்டு அவனுடன் வந்தான். அவனுடைய காலடியோசையைக் கேட்ட திருதராஷ்டிரனின் உடலில் கல் விழுந்த குளமென அலைகளெழுந்தன. “இளையவனா?” என்றான். “ஆம் மூத்தவரே, தங்கள் வாழ்த்துக்களைப் பெறுவதற்காக வந்திருக்கிறேன்” என்றான் பாண்டு. “இளையவரே, அருகே சென்று அவர் பாதங்களைப் பணியுங்கள்” என்றான் விதுரன். “அவர் தங்களிடம் சொல்லவேண்டிய சில உள்ளது. அவற்றையும் கேளுங்கள்.”

பாண்டு முன்னால் சென்று மண்டியிட்டு திருதராஷ்டிரனின் கால்களைத் தொட்டான். திருதராஷ்டிரனின் பெரிய கைகள் இருபக்கமும் செயலிழந்தவை போலத் தொங்கின. பின்பு அவன் பாண்டுவை இருகைகளாலும் அள்ளி தன் மார்புடன் அணைத்துக்கொண்டான். தலையைத் திருப்பியபடி “விதுரா, மூடா, என் இளவல் நாடாள விழைந்தான் என்றால் அவன் மண்ணைப் பிடுங்கி ஆளும் வீணனென்றா என்னை நினைத்தாய்? உடல், உயிர், நாடு, புகழ் என எனக்குரியதனைத்தும் இவனுக்குரியதேயாகும்” என்றான்.

பாண்டு திகைத்து திரும்பி விதுரனை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுக்க விதுரன் “அரசே, தங்கள் பெருங்கருணை என்றும் அவருடனிருக்கட்டும்” என்றான். தன் பரந்த பெரிய கைகளை பாண்டுவின் தலைமேல் வைத்து திருதராஷ்டிரன் சொன்னான் “நான் அஸ்தினபுரியின் அரசாட்சியை, ஹஸ்தியின் அரியணையை, குருவின் செங்கோலை உனக்கு அளிக்கிறேன். உன் புகழ்விளங்குவதாக. உன் குலம் நீள்வதாக. நீ விழைவதெல்லாம் கைகூடுவதாக. ஓம் ஓம் ஓம்!”

திகைத்து நின்ற பாண்டுவிடம் “இளவரசே, மூத்தவரை வணங்கி ஆம் என்று மும்முறை சொல்லுங்கள்” என்றான் விதுரன். பாண்டு “மூத்தவரே தங்கள் ஆணை”என்று சொன்னான். அவனை எழுந்துகொள்ளும்படி விதுரன் கண்களைக்காட்டினான். திருதராஷ்டிரன் “விதுரா மூடா, என் முடிவை நிமித்திகனைக்கொண்டு அவையில் கூவியறிவிக்கச் சொல். மாமன்னன் ஹஸ்தியின் கொடிவழிவந்தவன், விசித்திரவீரியரின் தலைமைந்தன் ஒருபோதும் கீழ்மைகொள்ளமாட்டான் என்று சொல்” என்றான்.

இருக்கையில் கையூன்றி எழுந்து திருதராஷ்டிரன் “இளையோன் அரசணிக்கோலம் பூண்டு அரியணைமேடை ஏறட்டும். வலப்பக்கத்தில் பிதாமகரின் அருகே என் பீடத்தை அமைக்கச்சொல்” என்றான். “ஆம் அரசே. தங்கள் ஆணை” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “சஞ்சயா, என் ஆடைகள் கலைந்திருக்கலாம். அவற்றைச் சீர்ப்படுத்து” என்றான். “ஆணை அரசே” என சஞ்சயன் அருகே வந்தான்.

திகைப்புடன் நின்ற பாண்டுவை கையசைவால் வெளியே கொண்டுசென்றான் விதுரன். பாண்டு “என்ன இது இளையவனே? என்ன நடக்கிறது?” என்றான். அக்கணம் வரை நெஞ்சில் ததும்பிய கண்ணீரெல்லாம் பொங்கி விதுரனின் கண்களை அடைந்தன. இமைகளைக்கொண்டு அவற்றைத் தடுத்து தொண்டையை அடைக்கும் உணர்வெழுச்சியை சிறிய செருமலால் வென்று நனைந்த குரலில் அவன் சொன்னான். “அரசே, கொலைவேழத்தின் பெருங்கருணையை ஒருவன் மட்டிலுமே அறிவான். ஒவ்வொருநாளும் அதன் காலடியில் வாழும் எளிய பாகன்.”

அவையில் வேள்வியின் இறுதி மந்திரங்கள் ஒலிக்கத்தொடங்கின.

இனிய பாடல்களைப் பாடுங்கள்
வாழ்த்துக்களை எங்கும் நிறையுங்கள்
துடுப்புகள் துழாவும் கலங்களை கட்டுங்கள்
உழுபடைகளை செப்பனிடுங்கள்!
தோழர்களே! மூதாதையும் வேள்விக்குரியவனுமாகிய
விண்நெருப்பை எழுப்புங்கள்!

ஏர்களை இணையுங்கள்,
நுகங்களைப் பூட்டுங்கள்,
உழுதமண்ணில் விதைகளை வீசுங்கள்!
எங்கள் பாடலால்
நூறுமேனி பொலியட்டும்!
விளைந்த கதிர்மணிகளை நோக்கி
எங்கள் அரிவாள்கள் செல்லட்டும்!

பாண்டு அந்த வேண்டுகோளை தன்னுள் நிறைத்து இருகைகளையும் தலைக்குமேல் கூப்பி வணங்கினான்.

தொடர்புடைய பதிவுகள்

22 Apr 08:21

சாம்பார் கிணறு – தயிர் குளம் – அன்னதான சிவன்

by BaalHanuman

கோயில் திருவிழாக்களில், அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள், கூட்டம் கூட்டமாகப் பங்கேற்கிறார்கள். பத்து நாட்கள் நடைபெறும் உத்ஸவங்களின்போது, உண்ண உணவும் தங்குவதற்கு வசதியான இடமும் ஏற்பாடு செய்து கொள்ளும் அளவுக்கு வசதி இல்லாதவர்களும்கூட, கவலைப்படாமல் வந்து குவிகிறார்கள்!   ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து நீர்மோர், பானகம், உணவுப் பொட்டலங்கள் என்று விநியோகம் தொடர்ந்து கொண்டிருக்கும்.   மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்ஸவத்தின்போது, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு, இப்போது பாதாம் பால், ரோஸ் மில்க் என்று ஏகதடபுடல்.   ஆங்காங்கே அன்னதானம் வேறு!

-

இதற்கெல்லாம் முன்னோடியாய் இருந்த ஒருவரை இந்த வேளையில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? கும்பகோணத்தை அடுத்துள்ள தேப்பெருமாநல்லூரில் (சென்ற சிவராத்திரியின் போது பாம்பு ஒன்று வந்து பூஜை செய்ததாக அமர்க்களப் பட்டதே, அதே தேப்பெருமாநல்லூர்தான்!)   19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றியவர் இராமசுவாமி.   இவர் நடத்திய அன்ன தானங்களினாலேயே இவருக்கு `அன்னதான சிவன்‘ என்னும் புகழ்ப் பெயர் உண்டாயிற்று!

காஞ்சி மடம் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த நாட்களில்,  மகாஸ்வாமிகளிடம் அன்புடனும், நெருக்கத்துடனும், ஏன்?  உரிமையுடனும் பழகிய பெருமகனார், அன்னதான சிவன்!   தமது வாழ்க்கையை  காஞ்சி மடத்துடன் பிணைத்துக் கொண்டவர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த மிராசுதார் கயத்தூர் சீனிவாச ஐயர்தான் அன்னதான சிவனுக்குஇன்ஸ்பிரேஷன். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோயில்களில் நடைபெறும் உத்ஸவங்களில் எல்லாம், சீனிவாசய்யர் செய்த அன்னதான வைபவங்களில் அவருக்கு உதவியாக, தம் சிறு வயதில் ஓடியாடி வேலை செய்தார் சிவன்.   பின்னாளில் தம் சொத்து, சுகம் அனைத்தையும் இதற்காகவே அர்ப்பணித்து விட்டார். பிரபலமான திருவிழாக்களுக்காகக் கூடும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவு படைப்பதைத் தம் வாழ்க்கையின் `மிஷன்’ என்று ஆக்கிக் கொண்டார் சிவன்.

திருச்செங்காட்டங்குடியின் அமுதுபடித் திருவிழா, அம்பர் மாகாணத்தின் சோமயாக விழா, காரைக்கால் மாம்பழத் திருவிழா, காவிரிப்பட்டணத்து ஆடி அமாவாசை, மாயூரம் துலா (ஐப்பசி) மாத உத்ஸவம், திருநாகேஸ்வரம் கார்த்திகை சோமவார விழா, நாச்சியார் கோயில் தெப்பம், திருவிடை மருதூர் தைப்பூசம், கும்பகோணத்து மாசி மகம், எட்டுக் குடி பங்குனி உத்திரம் என்று பெருந்திரளான மக்கள் கூடும் உத்ஸவங்களில் எல்லாம் அன்னதான சிவன் தன் தொண்டர் படையோடு களமிறங்கி விடுவார்!

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி உணவருந்தும் இடம் என்றாலும், சமைக்கும் இடம், சாப்பிடும் இடம் எல்லாம் படுசுத்தமாக இருக்குமாம்! ஏழைகள் தானே அன்னதானத்திற்கு மொய்க்கிறார்கள் என்கிற அலட்சிய பாவத்தில் சுத்தமும், சுகாதாரமும் இரண்டாம்பட்சமாகி விடும் இந்த நாட்களில், பலதரப்பட்ட மக்களும் வந்து உணவருந்திச் சென்ற அந்த நாளில் சிரத்தையோடு செயல்பட்டார் சிவன்!

இலை போட்டுப் பரிமாறும் இடத்தைச் சுத்தம் செய்வதற்காகவே துடைப்பம் வண்டி வண்டியாக வந்து இறங்கும் என்றால், உணவுப் பண்டங்களுக்குக் கேட்கவா வேண்டும்?   ஆயிரக்கணக்கில் அரிசி,  பருப்பு மூட்டைகள்,  மளிகைச் சாமான்கள், வண்டி வண்டியாகக் காய்கறிகள், இலைக்கட்டுகள்;  அடுப்பு எரிக்க விறகு நூறு வண்டிகளில்,  ஊறுகாய்க்கான நெல்லிக்காய் மட்டும் இரண்டு மூன்று வண்டிகளில்!   மலைப்பாக இருக்கிறதல்லவா?

அத்தனை பேருக்கு வேண்டிய தயிருக்கு என்ன செய்தார்களாம் தெரியுமா? அன்னதானம் நடைபெறும் ஊரில் சில வாரங்களுக்கு முன்னதாகவே தயிரை சேகரிக்கத் தொடங்கி, கிடைக்கும் தயிரை எல்லாம் மரப்பீப்பாய்களில் நிரப்பி மூடி, மெழுகினால் அடைத்து சீல் வைத்து, அந்த ஊர்க் குளத்தில் உருட்டி விடுவார்களாம்!   அன்னதானம் நடைபெறும் நாளில் பீப்பாய்களைத் திறந்தால் நேற்றுதான் தோய்த்த தயிர் போல், புளிப்பில்லாமல் சுவையாக இருக்குமாம்! ஆமாம்! திருக்குளங்கள்தான் அந்த நாளின் `கோல்ட் ஸ்டோரேஜ்.’

ஒரு ஊரில் அன்னதானம் என்றால், அதற்கு முன் நாள் இரவு வரை அதற்கான சுவடே தெரியாதாம். இரவோடு இரவாகப் பண்டங்கள் வந்து இறங்கி, பங்கீடு ஆகி, அதிகாலையில் அடுப்பு மூட்டி உலையேற்றினால், பசி வேளைக்கு அறுசுவை உணவு தயார். ஆளுயர அண்டாக்களில் சாம்பார், ரசம், பாயசம்! கொதிக்கும் போது உண்டாகும் வாசனையை வைத்தே உப்பு, புளி, காரம், வியஞ்சனங்கள் போதுமா போதாதா என்று தீர்மானம் செய்வார்களாம்.   முறத்தில் உப்பை வைத்துக் கொண்டு சிப்பந்தி ஒருவன் நிற்க,  ருசிக்கேற்ற வாசனை வரும் வரை உப்பைப் போடுவது வழக்கமாம்.  முறம் கணக்கில் கொத்துமல்லி விதையை அரைத்து ரசத்தில் சேர்ப்பார்களாம்!

மூங்கில் பரண் கட்டி,  ஏணி வைத்து ஏறி,  மரச்சட்டத்தில் ராட்டினம் கட்டி, சிறு வாளிகளில் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பது போலக் கொதிக்கும் குழம்பு,  ரசத்தை மொண்டு பரிமாறுவார்களாம்.   ஆறிப் போன சாதமாக இல்லாமல்,  அதே சமயத்தில் இலை போட்டு விட்டு மக்களைக் காக்க வைக்காமல், சுடச்சுட அரிசிச் சாதம் வடித்துப் போடத் தனி டெக்னிக் வைத்திருந்தாராம் அன்னதான சிவன்!

அன்னதானம் முடிந்ததும், “இந்த இடத்திலா அத்தனையும் நடந்தது!” என்று மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும் வகையில் இடத்தைச் சுத்தம் செய்யும் அளவுக்கு பெர்ஃபெக்ட் எக்ஸிகியூஷன்!    இத்தனையிலும் அன்னதான சிவனது ஆகாரம் என்னவோ நாலு கவளம் பழையதுதான்!.


21 Apr 13:04

காய்ந்த சருகு

by பதாகை

எஸ். சுரேஷ் -

““Our world, like a charnel-house, lies strewn with the detritus of dead epochs.” – Le Corbusier, Urbanisme

கிணற்றில் எட்டிப் பார்க்கிறேன்
நீல ஆகாசம்
பளிச்சென்ற சூரியன்
உள்ளிருந்து எட்டி பார்க்கும் என் பிம்பம்

ஏதோ தண்ணீரில் விழுகிறது

வானம், சூரியன், பிம்பம் கலைந்து
ஒன்றாகின்றன மெல்ல மெல்ல

ஆட்டம் தணிந்து பிரிகின்றன

ஒரு காய்ந்த சருகு, மெல்ல
ஆடிக்கொண்டு ஆடிக்கொண்டு
கண்ணை மறைத்து அமர்கிறது

நீல வானம்
தகிக்கும் சூரியன்
பாசி படிந்த பழைய கிணறு
என்னைத் தழுவிச்செல்லும்

சில்லென்ற காற்று
ஒலி எழுப்பும் பறவைகள்


Filed under: எழுத்து, எஸ். சுரேஷ், கவிதை Tagged: எஸ். சுரேஷ்
21 Apr 13:04

ஆபோகி

by பதாகை

 - விக்கி -

கர்நாடக இசை கற்றுக் கொள்வதில் வர்ணம் ஒரு முக்கியமான கட்டம். கீதங்களில் ‘ஸ்ரீ கண நாதா’வுக்குப் பிறகு, ஸ்வர ஜதியில் ‘ராரா வேணுகோபாலா’வுக்குப் பிறகு, வர்ணத்தில் நுழைவது பயிற்சிப் பிராயத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்ட மைல்கல்.

“எத்தன வர்ணம் போட்டுருக்கு?” என்பது இசை தெரிந்த பாட்டி, பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமா மாமிகள் தவறாமல் கேட்கும் கேள்வி. நீங்கள் கீர்த்தனைகள் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்னும் இந்தக் கேள்வியைத் தப்ப முடியாது.

ஐஐடியில் படிக்கும் மாணவனிடம், “உன் ப்ளஸ் டூ மார்க் என்ன?” என்று கேட்டு தெரிந்து கொள்வது போன்ற விஷயம் இது. வர்ணங்கள் அத்தனை முக்கியம். வித்வான்கள்கூட துவக்கத்தில் ஒரு வர்ணம் பாடிவிட்டுதான் கச்சேரியைத் துவக்குகிறார்கள். ஏனென்றால் மேளம் கட்ட இதுதான் உசிதம்.

வர்ணங்கள் வேறு வகையிலும் முக்கியமானவை. காரணம், இவற்றைக் கற்றுக்கொள்ளும் காலகட்டத்தில்தான் கர்நாடக சங்கீதத்துக்கு முழுக்கு போடுபவர்களின் எண்ணிக்கை வர்ணத்துக்கு இத்தனை என்று எக்ஸ்பொனன்ஷியல் ரேட்டில் உயர்கிறது. இத்தனை காலம் ரைம்ஸ் மாதிரியான சங்கதிகளைக் கற்றுக் கொண்டிருந்துவிட்டு, வர்ணங்களுக்கு வரும்போதுதான் ஒரு பாட்டுக்கு மூன்று நான்கு பக்க அளவில் ஸ்வரங்களை மெனக்கிட்டு பயிற்சி செய்ய வேண்டியதாகிறது. பலரை இந்த இடத்தில் பீதி கவ்வுகிறது.

வர்ணத்துக்கு வரும்போதுதான் பல்லவி, அனுபல்லவி, முக்தாயி ஸ்வரம், சரணம், சிட்டை ஸ்வரம் என்று ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பாடல் அமைப்பை நாம் அறிமுகப்படுத்திக் கொள்கிறோம்.

ஒரே வர்ணத்தை ரெண்டாம் காலம் மூணாம் காலம் என பல வேகங்களில் பாடிப் பழகச் சொல்கிறார்கள் என்பதுதான் பெற்றோர்கள் வற்புறுத்தல் பேரில் மட்டும் பாட்டு கற்றுக் கொள்ள வரும் மாணவர்கள் கர்நாடக சங்கீதத்தைவிட்டுத் தெறிக்க உண்மையான காரணமாக இருக்கும். ஆனால் அவர்கள் ஜகா வாங்க கைகொடுப்பது வர்ணங்களில் உள்ள நுட்பமான பேதங்கள்தான்.

சதிகார பாட்டு வாத்தியார்களும் இந்த இடத்தில்தான் வேண்டுமென்றே உங்களை ‘சிட்டா ஸ்வரம் பாடு,’ என்று கேட்டு சிக்க வைப்பார்கள். நீங்கள் சிட்டை ஸ்வரங்களில் ஒன்றை தைரியமாக எடுத்துவிட ஆரம்பிப்பீர்கள், அவர்கள் மண்டையில் ஒன்று வைத்து, ‘டா ஸ்வரம் பாடச் சொன்னால் டை ஸ்வரம் பாடுகிறாயே,’ என்று சந்தோஷப்படுவார்கள். அதையே சாக்காக வைத்து “வாத்தியார் என்னைப் படுத்தறார். சிட்ட ஸ்வரமானா என்ன சிட்டை ஸ்வரமானா என்ன? பாட்டு பாட்டுத்தானே” என்று வாத்தியார் மேல் பழி போட்டு பாட்டு கிளாஸ் போகாததற்கு வீட்டில் காரணம் சொல்பவர் பலர்.

எனவே இசை கற்றுக்கொள்ளும் மாணவப் பருவத்தில் வர்ணங்களிடம் பழகுவது ஆர்மியில் பழகுவது போல் ஸ்ட்ரிக்ட் டிசிப்ளினாக இருக்கும் காலகட்டத்தில், மேலே தொடரலாமா வேண்டாமா என மனதுக்குள் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது வரும் பாலைவனச் சோலைதான் இந்த – ‘எவ்வரி போதனா’ எனும் ஆபோகி வர்ணம். இந்த இடம் வரும்வரை தாக்குப் பிடிப்பவர்கள் கர்நாடக இசையையும்கூட சிக்கல்கள் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொள்கிறார்கள்.

அதுவரை மாய மாளவ கௌளை, மலஹரி, சாவேரி எனும் சீரியசான ராகங்களை உருட்டிக்கொண்டிருக்கும் உங்களுக்கு எடுத்த எடுப்பிலேயே இந்த வர்ணத்தில் தெரிவது, இதில் உண்டான ஜனரஞ்சகம். இந்த ராகம் மனதுக்கு இனிய ஒரு தனித்த ‘ஒலி’ தருவதை நீங்கள் கவனிக்காமல் இருக்க முடியாது.

இதில் ஒரு புதுமை இருப்பதையும் நீங்கள் உணரலாம். வரிசையாக நாலு ஸ்வரங்கள் ஒரே மாதிரி வருகின்றன, பின் ஒரு நீண்ட இடைவெளி. அதன்பின் சடாலென பஞ்சமத்தை ஹை ஜம்ப் செய்து தைவதம் செல்கிறது. அப்படியே மேலும் ஒரு குதி. மேல்ஸ்தாயி சட்ஜமத்தில் அமர்கிறது.

புதிய இடத்தில் நாய்க்குட்டி ஒன்று சந்தோஷமாக ஓடி விளையாடுவது போல் இந்த ஸ்வரங்களில் நீங்கள் ஆடிப் பாடுகிறீர்கள். ‘சாலேந்த்ர ஸ்ரீ வெங்கடேச’ என்ற இடத்தில்

‘த ஸ ரி ஸா…. ரி க ம
ரி கா மா -க க ரி ஸ’

என்று உயரங்களை நோக்கித் தாவியோடி,

‘ரி க ரி ஸ ரி த ரி ஸ
ஸ த ம த ம க ரி ஸ’

என்று இறங்கும்போது, ஒரு ஜயண்ட் வீலில் மேலே போய் கீழே இறங்குவது போன்ற ஒரு அட்ரினல் பரவசத்தை உணருகிறீர்கள்.

இங்குதான் உங்கள் இசை வாழ்க்கையில் நல்ல விதமான ஏதோ ஒன்றைச் சாதித்த திருப்தியும் உங்களுக்கு முதல் முறையாகக் கிடைக்கிறது.

ஆபோகியை இன்னும் மேலே பயிலும்போது, அது உங்களை புத்திசாலித்தனமாக சோதித்துப் பார்க்கிறது என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.

ஆபோகியில் வரும் பாடலில் பஞ்சமம் கிடையாது என்பது அடிக்கடி மறந்து போகும். நம்மை மறந்து, பழக்க தோஷத்தில் மத்யமத்துக்கு பதிலாக, வழக்கமாக தவிர்க்கக்கூடாத பஞ்சமத்தைப் பாடிவிடுவீர்கள் – அது சிவரஞ்சனியாக வந்து விழும், ஒரு கடூரமான அபஸ்வரமாக ஒலிக்கும்.

ஒரு ஸ்வரம் பிசகினாலும் ஒரு உலகே தவறி விடுவது போன்ற வேற்றுமை இப்போது புலப்படும்.

நான் இந்தத் தவற்றை இன்னமும் செய்கிறேன். இயற்கையும் இசையும் இரக்கமற்றவை என்பதற்கான ஆதாரம்!

ஆக, ஆபோகி ராகத்துக்கு இப்படிப்பட்ட ஒரு தனி இடம் என் இதயத்தில் இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, இந்த ராகத்துக்கு அறிமுகமான என்னைப் போன்ற பலருக்கும்.

அந்த தாக்கம் தூண்டிய ஒரு தனி முயற்சிதான், நம் வாழ்வின் முப்பது ஆண்டு காலமாக நமக்குக் கிடைத்த கொடுப்பினையில் மிகச் சிறந்த ஆபோகிதான் இன்றைய பாடல்.

oOo

ஒரிஜினாலிட்டி தனியாகத் தெரியும் பாடல் இது.

கர்நாடக சங்கீத ராகத்தில் ஒரு பாடலை இயற்றுவது ஒரு திறமை, ஆனால் அதே ராகத்தில் ஒரு திரைப்பாடலை அமைத்து, அதில் அந்த ராகத்தின் சாரத்தைக் கைப்பற்ற வேறு வகை ஆற்றல் வேண்டும்.

உதாரணம் சொன்னால் பஞ்சமம் இல்லாமல் ஒரு பாடலுக்கு இசையமைத்து அதில் மெல்லிசையின் சாயலும் கொடுப்பது மிகவும் கடினமான விஷயம் – காரணம் என்னவென்றால் பஞ்சமம் இல்லாமல் ரூட் கார்ட் அமைக்க முடியாது. ரூட் கார்ட் இல்லாமல் மெல்லிசை பாடல்களை அமைக்க முடியாது.

இந்த நிலையில் மேஜர் 4th-தான F மேஜருக்கும், மைனர் 2nd-ஆன D மைனருக்கும் காசு கட்டினால் கொஞ்சம் பிழைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. (அவை இரண்டும் ரிலேட்டிவாக மேஜர் – மைனர் என்று இருப்பதை இங்கே கவனிக்க வேண்டும்). இன்னும் மெனக்கெட்டால் C மைனர் 6th த்திலும் C மைனர் Added 9-த்திலும்ஒளிந்திருக்கும் பஞ்சமத்தை நீக்கி ஒரு புது வகையான வார்ப்பில் சேர்த்துக் கொள்ளலாம்

ஆனால் இதை கையாண்டு கார்டு அமைக்க தில் வேண்டும். அந்த துணிச்சல் இருப்பதால்தான் இந்தப் புது முயற்சி- ராஜா இதை எப்படி எதிர்கொள்கிறார் பாருங்கள்.

இப்படிப்பட்ட ஒரு பெரிய வேகத்தடை இருந்தாலும் பின்னால் ஒளிந்திருக்கும் கார்டுகளை தூசி தட்டி துலக்கி முன்னால் எடுத்து வந்து ரூட் கார்டை அமைக்கிறார். தன் முத்திரையான ரிதம் கிடார் பேக்கிங்கைக் கொடுத்து முட்டுக் கொடுக்கிறார்.

அவர் ஒரு முன்னோடியல்லவா, இப்படி கிடைக்கும் சிறு அவகாசத்தையும் சரியாகக் கையாண்டு, மாற்று திறனாளிகளுக்கான விசேஷ ஒலிம்பிக் பந்தயத்தில் ஓடுவது போல் தன்மீது திணிக்கப்பட்ட தடைகளையும் தூக்கிக்கொண்டு அவர் கடைசி மைல் வரை செல்வதால் கிடைப்பதுதான் இந்தப் பாடல்.

கேட்பவரைக் கட்டிப் போடுகிறது என்பது மட்டுமில்லை இந்த பாடலின் தனித்தன்மை. ஆபோகி ராக அடிப்படையில் இசையமைக்கப்பட்ட பிற பாடல்களை அடையாளம் கண்டு கொள்ளும் உரைகல்லையும் நமக்குத் தருகிறது இது. ஆபோகி ராகத்தைப் பிடிக்க ஆசைப்படுபவர்களுக்கு இது ஒரு லாக் புக் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ரெபரன்ஸ் பாடல் இது.

இந்தப் பாடலில் உள்ள இன்னொரு புதுமையைச் சொல்ல வேண்டும். இன்டர்லூடுகளில் ஒன்றில் முக்தாயி ஸ்வரத்தனமான அமைப்பு வருகிறது பாருங்கள். இரண்டாம் இடையிசை முழுக்க ஆபோகி ஸ்வரங்கள்தான், பாடகி பாடப் பாட அது அத்தனையும் வீணையில் மீண்டும் வாசிக்கப்படுகின்றன.

வீணையைப் பற்றிப் பேசும்போது அதன் தந்திகளில் ஆபோகி மேலும் கீழும் சஞ்சரிப்பதில் உள்ள அழகை என்னவென்று சொல்வது – எங்கே போனாலும் எப்போதும் ஷட்ஜத்தில் வந்து லாண்ட் ஆகிறது, உடனே ஒன்று விட்டு மறு தடவை என்று விட்டு விட்டு தன் மேல்ஸ்தாயி ஜோடியுடன் இழைகிறது.

பாச்சா என்று அன்போடு அழைக்கப்படும் வீணை பார்த்தசாரதிதான் ராஜாவின் பாடல்களில் பலவற்றுக்கு வீணை வாசித்தவர். இந்தப் பாடலுக்கு வாசிப்பது அவருக்கு ஒரு பெரிய சவாலாக இருந்திருக்கும், ஆனால் அதில் எவ்வளவு தெளிவாக வெற்றி பெற்றுவிடுகிறார் பாச்சா. உங்கள் மனதில் இந்தப் பாடல் மகிழ்ச்சியை நிறைக்கிறது என்றால் அதற்குக் காரணம் அவரது வீணையின் ஸ்வரங்கள்தான்.

ட்யூனின் ‘திஸ்ர’ நடையோடும், தாளத்தில் மேல்காலத்தோடும் சேர்ந்து ஒலிக்கும் இந்தப் பாடல் ஃபாரல் வில்லியம்ஸ் இசையை விட ஆனந்தமாக இருக்கிறது!

இது போன்ற ஒரு உன்னதமான கர்நாடக இசையைக் கேட்கும்போது இளையராஜா என்ற இந்த மனிதர் இரு கைகளையும் ஒரே வேகத்தில் கையாள்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியாது (ஏன், பன்னிரு கைகளாலும் இசையைக் கையாள்கிறார் என்றுகூடச் சொல்லலாம்!).

வெவ்வேறு இசை மரபுகளில் பாடல்களுக்கு இசையமைக்கும்போது அந்தந்த மரபுக்குத் தக்க அழகுணர்வு குலையாமல் நெருக்கமாக இசையமைப்பவர்களை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். பாபநாசம் சிவன் காலம் முதற்கொண்டு சி ஆர் சுப்பராமன் காலம் தாண்டி கே வி மகாதேவன் வரை முழுக்க முழுக்க கர்நாடக ராக அடிப்படையில் ஒரு பாடலுக்கு இசையமைப்பது திரை இசையில் பெருமைப்படக்கூடிய சாதனையாக இருந்து வந்திருக்கிறது.

இந்தச் சாதனையைச் செய்து காட்டியவர்களில் இளையராஜாவுக்குத்தான் இந்தப் பெருமை இன்றும் உண்டு. அவரால் மட்டுமே இது போன்ற முழுமையான செவ்வியல் தன்மை கொண்ட பாடல்களை இன்றும் இசையமைக்க முடிகிறது.

உங்களுக்கு இளையராஜாவை பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம். ஆனால் இதை மறுக்க முடியாது. இதுதான் உண்மை.

(ஆபோகி மட்டுமல்ல, இளையராஜாவின் இசையும் கொஞ்சம் அசந்தால் சாமர்த்தியமாக மண்ணைக் கவ்வச் செய்துவிடுகிறது என்று தன் வாசிப்பனுபவத்தைக் குறிப்பிடுகிறார்  விக்கி!)


Filed under: இசை, விக்கி, விக்கி Tagged: விக்கி
21 Apr 13:04

வாசிப்பும் விமரிசனமும்

by பதாகை

- - கதிர்பாலா -

“புனைவு வாசிப்பின் இடைவெளிகள் – சில அடிப்படை அணுகல் குறிப்புகள்” என்ற பதிவில் சில விஷயங்கள் விடுபட்டுப் போயிருக்கின்றன என்று நினைக்கிறேன்.

“பொதுவாக ஒரு கதையோ கவிதையோ படிக்கும்போது அதைப் பற்றி நாம என்ன நினைக்கிறோம் என்பது மூன்று விஷயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன: பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை, புரிகிறது/ புரியவில்லை, இதையெல்லாம் எழுதலாம்/ எழுதக்கூடாது,” என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

இது மூன்று தவிர மேலும் சில எண்ணங்கள் தோன்றும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். ஓப்பீட்டளவில் வேறொரு புனைவின் மற்றொரு பிரதியாக இருப்பது, அனுபவப்பூர்வமாக பிடித்திருந்தாலும், சுவையற்று, வரட்டுத்தன்மையுடன் மொழியப்பட்ட புனைவுகள், முழுவதும் பிடிக்காமல் ஏதோ ஒரு பகுதி அருமையான இலக்கிய நயத்துடன் அமைந்துவிடுவது என இன்னும் பல சொல்லலாம். குறிப்பாக பெரும்பாலான எழுத்தாளர்களின் ஒன்றிரண்டு நாவல்களுக்குப் பிறகு, படைப்பூக்கம் இருந்தாலும், பழைய சங்கதிகளே வேறு விதத்தில் சொல்லப்படுவது எரிச்சலூட்டும் அனுபவம். ஐன்ஸ்டைன் 1925 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீன் பிடிக்கச் சென்றிருக்கலாம் என்பார்கள்.

“எந்த ஒரு எழுத்தாளனும், அவன் எவ்வளவுதான் ‘மோசமாக’ எழுதியிருந்தாலும், அதைத் தன் அகத்திலிருந்து எடுத்துக் கொண்டுவந்து உங்களிடம் தருகிறான். நாம் நம் அகத்திலிருந்து கொஞ்சமாவது வெளியே போய் அதை ஏற்றுக்கொள்வதுதானே மனிதனுக்கு மனிதன் அளிக்கக்கூடிய மரியாதை? நம் விருப்பு வெறுப்புகள், சார்பு சார்பின்மைகளைப் பொருட்படுத்தாத புறவய கோட்பாடுகள் ஒரு பாலமாக இருக்கும்,” என்று எழுதுகிறார் பலவேசம்.

“அகத்திலிருந்து எடுத்துக் கொண்டு வந்து உங்களிடம் தருகிறான்,” என்று சொல்வது ஒரு சிலருக்குத்தான் பொருந்தும். எழுத்துத் திறமை இருப்பதாலேயே பலர் எழுதித் தள்ளுகிறார்கள். அதற்கெல்லாம் சம மதிப்பு இருக்க முடியுமா? இதில் ஒரு குழந்தைத்தனமான வழிபாட்டு மனப்பான்மை வெளிப்படுகிறது.

இது தவிர, “நம் விருப்பு வெறுப்புகள், சார்பு சார்பின்மைகளைப் பொருட்படுத்தாத புறவய கோட்பாடுகள் ஒரு பாலமாக இருக்கும்,” என்ற நம்பிக்கையிலும் இதே போன்ற ஒரு குழந்தைத்தனமான கற்பனை வெளிப்படுகிறது. நடுநிலை என்ற சொல் அகராதியில் மட்டும்தான் இருக்க முடியும், தராசில்கூட அதை மிக அபூர்வமாகவே பார்க்க முடிகிறது. எந்த ஒரு புறவயக் கோட்பாடும் மனிதர்களை விருப்பு வெறுப்புகளிலிருந்தும் சார்பு சார்ப்பின்மைகளிலிருந்தும் காப்பதில்லை என்பதுதான் வரலாறு.

மேலும், இத்தகைய ஒரு கொட்பாட்டுக்கான தேவை என்ன? ஒரு படைப்பை மனமார ஒத்துக் கொள்ள முடியவில்லை அல்லது அது பிடிக்கவில்லை என்றால், ஏன் அது குறித்து எழுத வேண்டும்? விமரிசகனுக்கு வேண்டுமானால் இது அவசியமாக இருக்கலாம். மற்றபடி, தான் விரும்பாத படைப்பை மௌனமாய் கடந்து செல்வதுதான் வாசகனுக்கு அழகு என நினைக்கிறேன். பலராலும், அதை எழுதிய எழுத்தாளராலும் மிகவும் சிலாகிக்கப்படும் படைப்பு எனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். மட்டம் என ஒரு விமர்சகன் எழுதுவதாலேயே வாசகனுக்கும் அப்படியெல்லாம் நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். தனது எல்லைகளுக்குள் அவன் தனது வாசிப்பை விரித்துச் சென்றால் போதுமானது. அவ்வகையில், ஆத்மார்த்தமாக எழுதத் தூண்டும் படைப்பிற்கு மட்டுமே வாசகனின் கருத்து பதியப்பட வேண்டும்.

ஒரு படைப்பு இலக்கியமா இல்லையா என்பது நிர்ணயிக்கப்பட பல காரணிகள் இருக்கலாம். அது முழுக்க முழுக்க அகாடெமிக் இண்டரஸ்ட்தான். இதைத் தீர்மானிப்பதில் வாசகனின் பங்களிப்பு என்ன என்ற கேள்விதான் முக்கியம்..


Filed under: எழுத்து, கதிர்பாலா, விமரிசனம் Tagged: கதிர்பாலா
21 Apr 13:04

கவிதைகள் வேண்டி…

by பதாகை

-அதிகாரநந்தி - 

எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை
அந்தப் பூனையைக் கூட
இன்று காணவில்லை

ஒன்றிரண்டு கரப்பான்பூச்சிகள்
சுற்றிக் கொண்டிருக்கின்றன
இவற்றை வைத்து கவிதை எழுத முடியும்?

துவைக்கும் இயந்திரம் கத்துகிறது
முறுக்கிப் பிழியப்பட்ட துணிகள்
ஒன்றை இழுத்தால் மொத்தமும் வருகிறது

சிக்கல்
வாழ்க்கை
நான்
மற்றவர்கள்

சில சமயங்களில் இப்படித்தான்
ஆகிறது


Filed under: அதிகாரநந்தி, எழுத்து, கவிதை Tagged: அதிகாரநந்தி
21 Apr 13:04

“என்ன எழுதுகிறேன் என்பது எழுதி முடித்த பின்தான் தெரிகிறது” – டெபோரா ஐஸன்பெர்க் பேட்டி

by பதாகை

பாரிஸ் ரிவ்யூ தளத்தில் டெபோரா ஐசன்பெர்க் அளித்த நேர்முகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு பகுதி:

நான் எதையும் நினைத்துக் கொண்டு எழுதத் துவங்குவதில்லை.

கதை பண்ண முடியும் என்பதால்தான் தனக்கு கதை எழுதப் பிடித்திருக்கிறது என்று கோல்சன் வைட்ஹெட் ஒருமுறை சொல்லக் கேட்டேன். எனக்கு கதை பண்ணுவது அறவே பிடிக்கவில்லை என்று அப்போது நினைத்துக் கொண்டேன்.

அல்லது, எனக்கும் கதை பண்ண பிடித்திருக்கலாம், ஆனால் இல்லாத ஒன்றைக் கதை பண்ணுவதாக ஒரு உணர்வு வருகிறதே அந்த உணர்வை நான் வெறுக்கிறேன் என்பதுதான் உண்மையாக இருக்கலாம். நான் எழுதுவது நினைவின் நிலையை அடையும்வரை அது எவ்வகையிலும் முடிவடைந்த உணர்வு எனக்கு கிடைப்பதில்லை.

என்னிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு முழுமை இப்போது வெளிப்படுகிறது என்ற உணர்வு வர வேண்டும், அப்போதுதான் அது எனக்கு கதையாகிறது. எல்லாமே ஒரே சமயத்தில் வேலை செய்தால்தான் உண்டு.

அப்படியானால், முடிவடையும் கட்டத்தில், அந்த ஒரு குறிப்பிட்ட கணத்தில்தான் கதையை அதன் முழுமையான வடிவில் நீங்கள் பார்க்கிறீர்களா?

கட்டக் கடைசியில்தான். கடைசி வரைவு வடிவின் கடைசி வரியின் கடைசி வார்த்தையை எழுதி முடிக்கும்வரை நான் எழுதுவதில் எதுவும் வேலைக்காகுமா ஆகாதா என்று எனக்குத் தெரிந்ததே இல்லை. சரியாகச் சொன்னால், அதுகூட கடைசி டிராப்ட் இல்லை. கதையின் இறுதி வரைவு வடிவம் என்று நான் அப்போது நினைத்துக் கொண்டிருப்பதுதான் அது.

பொதுவாகச் சொன்னால், எப்போதும் இறுதி வடிவம் என்று நான் நினைத்துக் கொண்டிருப்பதை எழுதி முடித்தபின் என் மனதில், எல்லாம் இருக்க இதை ஏன் எழுத வந்தேன் என்ற கேள்வி எழுகிறது. அதன்பின்தான் என்னால் கதையின் உண்மையான இறுதி வடிவை அடைய முடிகிறது.

ஆனால் அந்த இறுதி வடிவுக்கு முந்தைய வடிவை எழுதிக் கொண்டிருக்கும்போது அதன் முடிவுக்கு வரும்போது எல்லாமே ஏதோ ஒன்றை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்ற ஒரு உணர்வு வருகிறது – இலக்கை நோக்கிச் செல்லும் ஒரு அம்பாக மாறிக் கொண்டிருக்கிறது கதை என்ற உணர்வு அது.

அது ஒரு அற்புதமான உணர்வாக இருக்கும்.

ஆமாம், அது அப்படிதான் இருக்கிறது.

எப்போதும் ஒரு கதையை எழுத எனக்கு மிக மிக நீண்ட காலம் தேவைப்படுகிறது. என் கடைசி புத்தகத்துக்கும் அதற்கு அடுத்த கதைக்கும் இடையே மூன்று ஆண்டு கால இடைவெளி இருந்தது. அந்த சமயத்தில் என்னால் ஆர்வமாய் எதையுமே செய்ய முடியவில்லை. அப்போது பெரும்பாலான சமயம், வெறுமே உட்கார்ந்திருக்க பைத்தியம் பிடித்தது போலிருக்கும். ஆனால் கடைசியில் ஒவ்வொரு கதையின் முடிவிலும் இரண்டு மூன்று அருமையான வாரங்கள் அமைந்தன.

உங்களுக்கு கதை பண்ண பிடிக்காது, ஆனாலும் எங்கேயாவது துவங்கியாக வேண்டும், இல்லையா? அப்படியானால் எப்படி உங்களால் எழுத முடிகிறது?

எனக்கே இது கொஞ்சமும் புரியவில்லை. எப்படி என்று கேட்டால் என்னால் எதுவும் விளக்க முடியாது, காரண காரியங்கள் சொல்ல முடியாது.

கற்பனை என்று சொல்கிறார்கள் அல்லவா, அது எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், நீங்கள் தூங்கும்போது, “ஐயோ! என்ன கனவு காண்பது என்று எதுவும் தோன்றவில்லையே!” என்று தலையைச் சொறிந்துகொண்டு உங்கள் கனவு ஆரம்பிப்பதில்லை!

உங்கள் கதைகள் நீங்கள் கவனிக்கும் விஷயங்களில் துவங்குகின்றனவா?

புற விஷயங்களை நான் எந்த அளவுக்கு கவனிக்கத் தவறுகிறேன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது.

பல விஷயங்களையும் கவனித்து அவற்றைப் பற்றி கேள்வி கேட்பவர்களைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. நான் சில தகவல்களை உள்வாங்கிக் கொள்கிறேன் என்பது உண்மைதான், ஆனால் அதெல்லாம் எங்கே போகிறது என்று தெரியவில்லை. நிச்சயம் அவை என் மூளையில் ஏறுவதாய் இல்லை.

வார்த்தைகளைத் திருத்தித் திருத்தி எழுதும்போதுதான் கதை தன்னை இன்னதென்று உங்களிடம் வெளிப்படுத்திக் கொள்கிறதா?

மிகச் சரியாகச் சொன்னீர்கள். சில சமயம் நான் வாய் திறக்கும்போது அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதும் உண்மைதான்.

எப்படியாவது உங்களை வெளிக்காட்டிக் கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். நம் காலத்தின் குற்றங்களில் ஒன்று நாம் நம் ஆற்றல்களை தேவையில்லாத ஆட்களிடம் குவித்து வைக்கிறோம் என்பதுதான். அதைவிட மக்களுக்கு கல்வியறிவு அவசியமாக இருக்கிறது – அதற்காக நான் அவர்களை கோட்பாட்டுக் கைதிகளாக்க வேண்டுமென்று சொல்வதாக அர்த்தமில்லை. விழிப்புணர்வு தேவைப்படுகிறது, அப்போதுதான் அவர்கள் தங்கள் மானுடத்தைப் பிறரை நோக்கி விரித்து அணைத்துக் கொள்ள முடியும்.

உயிரோடிருப்பதன் சுகம் அதுதான்.

எழுதுவது குறித்து உங்களக்கு இருக்கும் மனத்தடையை எவ்வாறு வெற்றி கொள்கிறீர்கள்?

ஒன்று, ஒரேயடியாக விட்டொழிக்க வேண்டும். அல்லது இறுதி வரை போராடியாக வேண்டும். அதுதான் எனக்கு இருக்கும் ஒரே தேர்வு. பொறுமை தேவைப்படுகிறது.

சரி, பென்சிலை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள், அப்புறம்…

நீங்கள் எதையாவது எழுதுகிறீர்கள். அப்போது அதில் கொஞ்சம்கூட மெய்ம்மை இருப்பதில்லை. அந்த மாதிரி சமயத்தில் எந்த மெய்ம்மையையும் உங்களால் செயற்கையாகப் புகுத்த முடியாது. பொறுமையாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அப்புறம், ஒரு நாள் பார்த்தால் அதன் அந்தராழத்தில் உள்ள மறைவிடத்திலிருந்து ஏதோ ஒன்று உங்களை நோக்கி சமிக்ஞைகள் அளிப்பதை நீங்கள் உணர முடிகிறது. பூமி அதிர்ச்சியின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட ஒரு அற்ப மனிதனைப் போன்ற ஒன்று அது. மெல்ல, மெல்ல, மெல்ல, மிக மெல்ல நீங்கள் அந்த உயிர்த்துடிப்பை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டு முன் செல்கிறீர்கள். பல எழுத்தாளர்கள் இதைக் குறுகிய காலத்தில் செய்கிறார்கள்.

ஆனால் எழுதும்போது நிகழும் கோடிக்கணக்கான நனவிலி இயக்கங்களின் வழியாக விஷயங்கள் மெல்ல மெல்ல மெய்ம்மையின் திட்பம் பெறுகின்றன.

அந்த உயிர்ப்பின் சன்னமான மணம் பிடிபட்டபின் என்ன நடக்கிறது?

அதற்கப்புறம் கொஞ்ச காலத்துக்கு பயங்கரமாக குழப்பும் விஷயத்தை வைத்டுக்க் கொண்டு திண்டாடுகிறேன். இது என்ன, இது என்ன, இதெல்லாம் என்ன என்று என்னையே கேட்டுக் கொள்கிறேன். ஒரு ஹாம்ஸ்டரைப் போல் வேலை செய்கிறேன் – இது நன்றாக இருக்கிறது, இந்த வைக்கோலை எடுத்துக் கொள்ளலாம். இது சரியில்லை, கூட்டைவிட்டு தூக்கிப் போடு.

சில விஷயங்கள் சரியாக வரும் என்று ஒரு உணர்வு. இந்த உணர்வு இன்னதென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இது எப்படி என்று எனக்குத் தெரியாமல் இருக்கலாம், ஏன் என்று எனக்குத் தெரியாமல் இருக்கலாம் – ஆனால் மையத்தில் இருக்கும் ஏதோ ஒன்றோடு எப்படியோ தொடர்பு உள்ள ஒரு விஷயம் இங்கே இருக்கிறது என்று என்னால் சொல்ல முடிகிறது.

இதையெல்லாம் வார்த்தைகளில் சொல்கிறேன், ஆனால் எழுதி முடித்தபின் இதெல்லாம் எப்படி வந்தது என்று எந்த நினைவும் எனக்கு இருப்பதில்லை. இது ஒரு மாதிரியான எடுப்பு, ஒரு வகைப்பட்ட உயிர்த் துடிப்பு என்று சொல்லலாம்.

உங்கள் கதைகள் அவ்வளவு துல்லியமாய் இருக்கின்றன. ஆனால் அவற்றை எழுதும்போது எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை.

எந்த ஒரு சிறுகதையிலும் குறிப்பிட்ட சில கூறுகளை இறுக்கமான கட்டுக்குள் வைத்திருக்கும் உணர்வு எனக்கு உண்டு. மெய்ம்மை குறித்த தீர்மானமின்மை இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், ஆனால் மொழியிலோ அறிவார்ந்த பார்வையிலோ தெளிவின்மை இருப்பதை விரும்பவில்லை. காற்றைப்போல் ,மெலிதான மிக நுட்பமான அனுபவத்தை எவ்வளவு தெளிவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பது என் நோக்கமாக இருக்கிறது. இரு திசைகளிலும் முயற்சிப்பது.

எனவே ஒரு வாக்கியத்தில் ஏதாவது தெளிவில்லாமல் இருந்தால் நான் அதைச் சுத்திகரிக்கப் பார்க்கிறேன். தேவையில்லாத ஏதாவது இருக்கிறதா என்றும் என்னால் சொல்ல முடிகிறது.

உலகம் புரிந்து கொள்ள முடியாதது, நடப்பதெல்லாம் புரிந்து கொள்ள முடியாதவை. ஒரு படிகத்துக்கு உரிய முழுமையான தெளிவு இல்லாமல் என்னால் அதன் மர்மத்தை அணுகத் துவங்கவே முடியாது. எழுத்தின் வெளிப்பாடு தெளிவாக இருப்பதை என்னால் தீர்மானிக்க முடியும். சொற்கள் புரிந்து கொள்ளப்படக் கூடியவையாக இருக்க வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியும். இதை எவ்வளவு நன்றாகச் செய்ய முடியுமோ அவ்வளவு நன்றாகச் செய்கிறேன்.

அப்போதுதான் காகிதங்களை உண்மையான மர்மங்கள் நிறைக்க முடியும்.

காலம் செல்லச் செல்ல எழுதுவது சுலபமாக மாறியிருக்கிறதா?

எழுதத் துவங்கும்போது சிறுபிள்ளைத்தனமான, தேர்ச்சியற்ற, நயமில்லாத விஷயங்களை சந்தேகப்படாமல் நம்பிச் செய்தது இப்போதும் மனதைக் குலைப்பதாக இருக்கிறது.

எழுத்தாளராக அனுபவப்பட்டிருப்பதில் ஒரு சாதகமான விஷயம் உண்டு.

எந்த ஒரு எழுத்தாளனுக்கும் எழுத்து அனுபவத்தால் பெரிய பிரயோசனம் கிடையாதுதான், உண்மையைச் சொன்னால் இதைத் தவிர வேற எதையும் அனுபவத்தால் வந்த நன்மை என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை – எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதை மேம்படுத்த முடியும் என்ற புரிதல் இப்போது இருக்கிறது. அப்படி திருத்தி எழுதியதை இன்னும் மேம்படுத்தலாம், அப்புறம் மறுபடியும் மேம்படுத்தலாம்.

இப்படிச் செய்து மோசமான ஒரு கதையை நல்ல கதையாக மாற்ற முடியாமல் போகலாம், ஆனால் இப்போது இருபபது போல் கடைசியில் இருக்கப் போவதில்லை என்று தெரிகிறது.

முன்னிருந்ததற்கு இப்போது எழுதுவது எந்தவ வகைகளில் கடினமாக இருக்கிறது?

ஆமாம், பல்வகைகளில்.

ஆனால் இது வயது சம்பந்தப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. அனுபவத் தொடர்புடையது.

ஒன்று பார்த்தால், ஒரு விஷயத்தை சாதித்து முடித்தபின் அதை மீண்டும் செய்வதற்கு இடமில்லை – அதை முடித்தாயிற்று. அந்த வெற்றிடத்தில் வேறு லட்சியங்கள் இப்போது இருக்கின்றன, ஆனால் அவை இன்னமும் பெரிய லட்சியங்கள்.

உங்கள் லட்சியங்கள் என்ன?

அது என்னவென்று என்னால் முழுசாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் எனக்கு இது தெரிகிறது – சொற்களில் கொண்டு வர முடியாத அந்த ஏதோவொன்றை, நான் என் கதைகளைக் கொண்டு அளிக்க விரும்பும் அந்த உணர்வு சொற்களின் வழி வந்தாலும், வாசகர்கள் அதைச் சொற்களுக்கு அப்பால் கண்டுணர வேண்டும் என்று விரும்புகிறேன்,

வாசகருக்குத் தன் வாசிப்பு அனுபவத்தில் நேர்வதை நீங்கள் சொற்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? அல்லது வாசகர்கள் சொற்களுக்கு என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைச் சார்ந்த அனுபவமா இது?

ஒரு வகையில் பார்த்தால், வாசக அனுபவத்தை மிக இறுக்கமாக என் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவேன். ஆனால், என்னோடு வாச்காரும் இணைந்து அந்த அனுபவத்தை அடைய விரும்புகிறேன். எனக்கு மிகக் குறைவான வாசகர்களே இருப்பதற்கு இது ஒரு காரணம் என்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது.

பலரும் தங்கள் மனதை என்ன செய்வது என்று சரியாகச் சொல்வதற்கு ஒருத்தர் இருக்க வேண்டும் என்பதற்காகப் படிக்கிறார்கள். எனக்கு அப்படியெல்லாம் படிப்பது பிடிக்காது என்றில்லை. இப்போதுகூட ட்ரொல்லப்பின் The Way We Live Now வாசித்துக் கொண்டிருக்கிறேன், அதை கீழே வைக்க முடியவில்லை. ஆனால் கதை என்ன சொல்கிறதோ அதற்கு வெளியே அதில் எதுவுமில்லை. இதை வாசிக்கும்போது அருமையான கதைசொல்லலில் கிடைக்கும் ஆனந்தத்தை நான் அனுபவிக்கிறேன்.

ஆனால் ஒரு எழுத்தாளராக, எனக்கு கதை சொல்வதில் அந்த அளவுக்கு முனைப்பு இல்லை. கதையில் அக்கறை இருக்கிறது, அது இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதற்கு இரண்டாம்கட்ட முக்கியத்துவம் அளிக்கவே விரும்புகிறேன். ஏன், முடிந்தால் அதைக் காகிதத்திலிருந்து சுரண்டிக்கூட எடுத்துவிடுவேன். அது தன் தடத்தை விட்டுச் சென்றால் போதும் – அதன் உருவத்தை, அதன் அசைவை விட்டுச் சென்றால் போதும். எனக்கு கதை என்பது வாசகனை வேறொன்றுக்குச் கொண்டு செல்லும் கருவி.

வாசக பங்களிப்பைப் பற்றி இன்னும் விரிவாகச் சொல்லுங்களேன்.

ஒரு புனைவு என்பது தகவல் பரிமாற்றம். உங்கள் பாலைவனத் தீவிலிருந்து ஒரு பாட்டிலில் அவசரச் செய்தியை அனுப்புகிறீர்கள். யாராவது அந்த பாட்டிலை எடுத்து திறந்து பார்த்து, எஸ்…ஓ…எக்ஸ்? இல்லை. எஸ்… ஓ… என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.

ஆனால் அந்த வாசகன் கண்டெடுத்த செய்தி நீங்கள் அனுப்பிய செய்தியாக அப்படியே இருக்க முடியாது. ஒரு எழுத்தாளர் எழுதி அனுப்பும் சொற்தொகுப்புக்கு ஒரு ஆள் தேவைப்படுகிறது, மறுமுனையில் ஒரு பிரக்ஞை தேவைப்படுகிறது. அதைத் திரும்பச் சேர்த்து கூட்டி வாசிக்க யாராவது இருக்க வேண்டும்.

உங்கள் மூளையில் உள்ள, சீல் செய்யப்பட்ட அந்தச் சிறிய சன்னப் பையை பிரிக்கும் ஏதோ ஒன்றை வாசிக்கும்போது எப்படி இருக்கும், அது உங்களுக்கே தெரியும். இது உங்களுக்கு நீங்களே எழுதிக் கொள்ளும் கடிதம். ஆனால் அதைக் கொண்டு வந்து தருவது வேறொருத்தர், ஒரு எழுத்தாளர்.

உண்மையான ஒரு வாசகர், துல்லியமாகவும் சுறுசுறுப்பாகவும் உங்கள் படைப்புக்கு எதிர்வினையாற்றும் வாசகர் ஒருவர் உங்களுக்கு இருக்கிறார் என்று அறிவதைவிட தெம்பு அளிப்பது வேறு எதுவும் இல்லை. அது உங்களுக்குத் துணிச்சல் தருகிறது. இனி இந்தக் கிளையில் இன்னும் கொஞ்சம் மேலே போகலாம் என்று நீங்கள் நம்புகிறீர்கள். இது உடையாது.


Filed under: எழுத்து, பீட்டர் பொங்கல், பேட்டி Tagged: பீட்டர் பொங்கல்
21 Apr 13:04

தழுவல்

by பதாகை

- ஸ்ரீதர் நாராயணன்-

“எங்கிருந்து வருகிறாய் நீ?” என்று கேட்டாள் கேரன்.

சாதாரண ஃபார்மலான கேள்விதான். ஆனால் அதற்கு சட்டென பதில் சொல்ல முடியாத அடையாள சிக்கலில் மாட்டிக் கொண்டான் சரவணன்.

‘நான்…நான்.. கலிஃபோர்னியாவிலிருந்து வருகிறேன்… இல்லை.. அது இரண்டு வாரங்களாகத்தான். அதற்கு முன்னர் நான் பெங்களூர், இந்தியா. ஆங்.. இந்தி பேசும் இந்தியன் இல்லை. தென்னிந்தியன்…. சென்னைக்கு தெற்கே மதுரை. சான் ஹோசேவிற்கு புலம்பெயர்ந்து வந்தேறிகளுக்கான முறைமைகளை முடித்துக் கொண்டு நேற்றுத்தான் ஃபீனிக்ஸ், சார்லோட் வழியாக மயாமி பீச் வந்து, காலையுணவாக பழக்கமில்லாத சுட்ட ரொட்டியையும் சீரியலையும் சாப்பிட்டுவிட்டு, உன் முன் வந்து நிற்கிறேன் பெண்ணே…. ‘

என்றெல்லாம் சொல்ல நினைத்து, சுதாரித்துக் கொண்டு,

‘நான் கானா கம்பெனியிலிருந்து வருகிறேன். உங்கள் CRM மேம்படுத்த…’ என்றான்.

சிஆர்எம் (CRM) என்றால் வாடிக்கையாளர் சேவை மேலாண்மை செயலி என்றறிக. நீங்கள் தொழில் முனைவோராக இருந்தால் உங்கள் வாடிக்கையாளர்களின் குறைகளை பெற்று, முறைபடுத்தி அவர்களின் திருப்திக்கேற்ப தீர்த்து வைப்பதற்கு உதவும் செயலி.

அவள் விரிந்த புன்னகையுடன் சரவணனின் கையைப் பற்றிக் குலுக்கினாள். சட்டென அந்த சூழ்நிலையின் இளமை அவனுக்குப் புரிந்தது. கேரன், இலியா, அலெக்ஸ், அஷ்ரஃபுல், ஜங், ஜெஸிந்தோ என்று சுற்றியிருந்த எல்லோருக்கும் சராசரி இருபது வயதுதான் இருக்கும். கேரன்தான் மேனேஜர் என்பதால் சற்று மூத்தவளாக இருக்கலாம். அவ்வளவு சுதந்திரமான, அவ்வளவு இளமைகளை அவ்வளவு காலம் சரவணன் பார்த்ததில்லை.

‘இவர் கானா நிறுவனத்திலிருந்து வந்திருக்கிறார்.’ என்று கட்டியம் கூறிக்கொண்டே அந்தக் கட்டிடத்தின் மூன்று தளங்களுக்கும் கூட்டிக்கொண்டு போய் அறிமுகப்படுத்தி, ஐடி கார்டு, பார்க்கிங் கார்டு எல்லாம் எடுத்துக் கொடுத்ததும், முதல் தளத்தின் கோடியில் இருந்த பெரிய அறையின் ஜன்னல் பார்த்த இருக்கையைக் காட்டினாள். ‘இதுதான் உன் ஆஃபிஸ். இலியா அலெக்ஸ் எல்லோரும் அடுத்த அறையில்தான் இருக்கிறார்கள்’

சரவணன் தான் உட்கார்ந்திருந்த சீட்டிற்கு பின்னாலிருந்த பெரிய பலகையைப் பார்த்தான். வரிசையாக ‘மிஷனரி பொஸிஷன், லெக்ஸ் அப்….’ என்று ஒரு பட்டியல் எழுதி கீழே கடைசி வரியில் ‘அலெக்ஸ்! யூ ஆர் அ பாம்’ என்று எழுதி ஒரு வெடிகுண்டு படமும் போட்டிருந்தது. புகைந்து கொண்டிருந்த குண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பது போல…

சரவணனுக்கு சற்றே மூச்சடைத்தது போலிருந்தது. அலெக்ஸ்? சற்றுமுன் அறிமுகம் செய்துகொண்ட சிஸ்டம் அட்மின் அலெக்ஸ்தானா அந்த வெடிகுண்டு? அவனை அறிமுகம் செய்து வைத்தபோது அருகிலிர்ருந்த சூஸி அப்படியே அவனை விழுங்குவது போல் பார்த்தாளே… அவள்தான் இதை எழுதியிருப்பாளா..இந்த போர்டில் எழுதியிருப்பது எல்லாம் என்ன? ‘எங்கேயோ’ கேட்ட விஷயங்களாக இருக்கிறதே.

அவன் பார்வையைப் பார்த்த கேரன் ‘அஹ்… அது விஷுவலைசர்களுக்கான சில வேலைகள்’ அவனுடைய முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை தவிர்த்துவிட்டு, அந்த அறையின் மறு கோடியில், அவனுக்கு நேர் எதிரே உட்கார்ந்திருந்த மொட்டைத்தலையும், காக்கி நிஜாரும் போட்டிருந்தவரைக் காட்டி ‘இது ராபர்ட். இந்த நிறுவனத்தின் பிரதான சட்ட நிபுனர். வாடிக்கையாளர் புகார்களை கோர்ட்டுகளுக்கு போகாமல் தடுத்து எங்களுக்கு வேலை போகாமல் காப்பாற்றுபவர்’

மற்றொரு பக்கம் நாக்கை துருத்திக் கொண்டு கணிணித் திரையில் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணைக் காட்டி ‘இது மரியா தெரசா. விஷுவலைசர்’ என்று அறிமுகப்படுத்தினாள்.

‘இன்னும் ஓரிருவாரங்களுக்கு சரோ…’ எப்போதும் தனது அறிமுகத்தின் போது சரவணன் தன்னை இப்படி சுருக்கி சரோ-வென அழைக்கலாம் என்று சொல்லிவிடுவான். அப்படி சொல்வது நல்ல சம்பிரதாயமென அறிவுறுத்தப்பட்டிருந்தான். ‘…. இங்கேதான் அமர்ந்து வேலை செய்வார். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே’

உற்சாகமான முகமனுடன் எழுந்து வந்து கைகுலுக்கிய ராபர்ட் ‘தாராளமாக. நான் பேசும் தொலைபேசி உரையாடல்கள் உன்னை தொல்லை செய்வதாக இருந்தால் சொல். எனக்கு பேசிக்கொண்டே இருப்பதுதான் தொழில்’. மரியாவும் புன்னகையுடன் வந்து கைகுலுக்கிவிட்டுப் போனாள்.

சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்ததற்கு அறிகுறியாக கேரன் அவனை விட்டுவிட்டு அகன்றதும், சரவணன் தன்னுடைய லேப்டாப்பிற்குள் புகுந்து, நாசிர் எங்காவது அகப்படுகிறானா என்று மெசஞ்சரில் தேடினான்.

‘ஃப்ளோரிடா போயிருக்கிறாய் என்று சுதாம்ஷு சொன்னான். இங்கே டெட்ராய்ட்டில் வானம் எது பூமி எது என்று தெரியாத அளவுக்கு வெள்ளையாக பனிமூடிக் கிடக்கிறது. நீ கொடுத்து வைத்தவன்’ நாசிர் அவனே ஆன்லைன் உரையாடலுக்கு வந்தான்.

‘புதிராக இருக்கிறது நாசிர். இது என்ன மாதிரியான இடம் என்றே புரியவில்லை. யாரும் ஆங்கிலமே பேசுவதில்லை. இந்த போர்டில்…. ‘ போர்டை திரும்பிப் பார்த்துக்கொண்டான். இதையெல்லாம் உரையாடலில் எப்படி விளக்குவது.

‘ஹஹா… ஏன்? எந்த இம்ப்ளிமெண்டேஷன் பாஸ்?’

‘ஆன்ஸர் பாய்ண்ட், மையாமி பீச் என்றார்கள். சாதாரண அப்கிரேட் வேலை என்றுதான் சுதாம்ஷு சொன்னார். ஆனால்… இந்த கம்பெனியைப் பார்த்தால்….’

இங்கே வருமுன்பு பூடகமான புன்முறுவலுடன் சுதாம்ஷு மேலோட்டமாக சொன்னதை சாட்டில் நாசிர் விவரமாக விளக்கினான்.

சரவணன் மேம்படுத்த வேண்டிய சிஆர்எம் ஒரு இணைய பாலியல் சேவை மையத்திற்கானது. ஆம்! சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள். பாலியல் சேவை இணையதளத்திற்கான வாடிக்கையாளர் சேவை மேம்படுத்தல்… சட்! விளக்கமாக சொன்னால் தப்பர்த்தமாக வருகிறது.

உண்மையில் சரவணன் வேலை ஒரு நிரலி தொகுப்பை அப்கிரேட் செய்துவிட்டு டெட்ராய்ட்டுக்கு திரும்ப வேண்டியதுதான். ஓரிரு வார கால அவகாசம் தேவைப்படும்.

ஆனால் இலியா அப்படி நினைக்கவில்லை. ‘தோ பார். உனக்கான சர்வர் எல்லாம் அடுத்த வாரம்தான் கிடைக்கும். அதுவும் உத்தரவாதமாக சொல்லிவிட முடியாது. நியூயார்க் டேட்டா சென்டரில் ஏதோ பிரச்னை. எல்லாம் ரெடியானதும் சொல்கிறேன்’

என்று சொல்லிவிட்டு டேபிள் ஃபுட்பால் ஆடப் போய்விட்டான். மேஜை மேல் வைத்து விளையாடுவார்களே ஃபுஸ்பால் என்று. நேரம் காலம் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் யாராவது விளையாடிக்கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் அலுவலகம் நடப்பதற்கான தீவிர அறிகுறிகள் தென்படாத சூழலாக இருந்தது.

‘நாசிர்! சர்வர்கள் எல்லாம் அடுத்த வாரம்தான் வருமாம். சும்மா நெட்டிமுறித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்’ என்றான் சரவணன்.

‘நீ ஏன் கவலைப்படுகிறாய்? மீட்டர் போட்டாகிவிட்டதல்லவா. ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிரு. அங்கே இந்த மாதம் கரீபியர்களின் கார்னிவெல் ஒன்று நடைபெறும். யாரையாவது ஃப்ரெண்டு பிடித்துக் கொண்டு போய்வா’ ஏகப்பட்ட சிரிப்பான்களோடு பதிலளித்துவிட்டு போய்விட்டான்.

சரி. கொஞ்சம் பூர்வாங்க வேலைகள் செய்து வைக்கலாம் என்று சில பேக்கப் வேலைகளைத் தொடங்கினான். ஆன்ஸர் பாய்ண்ட்டின் பெரும்பாலான வாடிக்கையாளர் சேவை மெயிலில்தான் நடந்து வந்திருக்கிறது. பலரும் முக்காடு ஐடி-களில் இருந்து தான் பணம் செலுத்திய படங்கள் தனக்கு சரியாக வந்து சேரவில்லை என்றும், பணத்தை திருப்பவும் என்றும் புகார்களாக அனுப்பியிருந்தார்கள்.

‘வோக்ஸ்வேகன் டூரெக் கார் உங்களுடையதா?’ என்ற கேள்விக்கு தூக்கிவாரிப்போட்டு திரும்பினால் அலுவலக செக்யூரிட்டி. கீழ்த்தளத்தில் பார்க்கிங்கில் காரை விடும்போதே கவனித்த முகம் என்று தெளிந்ததும் சரவணன் புன்னகைத்தான்..

‘தவறான பார்க்கிங்கில் விட்டிருக்கிறீர்கள். சாவியை கொடுத்தீர்கள் என்றால் சரியாக நிறுத்திவிடுவேன்’

பதட்டத்தில் சாவியை கொடுத்தபிறகுதான் அவன் பெயர் கூடக் கேட்டுக்கொள்ளாமல் வாடகைக் கார் சாவியை தூக்கிக் கொடுத்துவிட்டோமே என்று உறைத்தது. சரவணனின் அதிர்ஷ்டம் ஏவிஸ் கார் ரென்டலில் பெரிய வண்டியாக பார்த்து சல்லிசான வாடகைக்கு கொடுத்துவிட்டார்கள்.

அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சாதாரண கார் பார்க்கிங்கிலே பஞ்சராக நின்றிருந்தது. உடனே பலமுறை வருத்தம் தெரிவித்துக் கொண்டு சொகுசு கார் ஒன்றைக் கொடுத்து விட்டார்கள்.

அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் ‘தொம்’ ‘தொம்’ என தளம் அதிர நடந்துவந்த செக்யூரிட்டி சாவியை திருப்பிக் கொடுத்துவிட்டு ‘மன்னிக்கவும். பார்க்கிங் கொஞ்சம் சிறியது என்பதால் கவனமாக செய்ய வேண்டியிருக்கிறது. நாளையிலிருந்து வெளியில் விட்டுவிட்டு சாவியை என்னிடம் கொடுத்து விடுங்கள். நானே பார்க்கிங் செய்துவிட்டு உங்களிடம் சாவியை கொண்டு வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு எதிர் இருக்கையில் இருந்த மரியாவைப் பார்த்து உற்சாகமாக கையை ஆட்டியபடிக்கு ‘கமோ எஸ்டாஸ்… கமோ லேவா… முய் பெய்ன்…’ என்று சொல்லிக் கொண்டே நடந்து போனார்.

மையாமி இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் காலடி வைத்ததிலிருந்து கேட்டுக் கொண்டேயிருந்த அதே ஸ்பானிஷ்தான். எங்கும் கூபர்களும், மெக்ஸிகர்களுமாக அஸ்டோஸ், முஸ்டோஸ் என்று பேசித் தீர்த்தார்கள். ஏதோ போனால் போகிறது என்று சரவணனிடம் அவனுக்கு சற்றும் புரியாத அக்சென்ட்டில் ஆங்கிலத்தில் பதிலிறுத்தார்கள்.

மரியா சொன்ன பதிலில் செக்யூரிட்டிக்காரரின் பெயர் ‘அலெஜான்ட்ரியோ’ என்பது மட்டும் புரிந்தது. ராபர்ட்டும் சரவணனும் இருப்பதைப் பற்றி சற்றும் சட்டை செய்யாமல் அவர்கள் இருவரும் உரையாட ஆரம்பித்தார்கள். மரியாவின் டேபிளை நெருங்கியதும் அலெஜான்ட்ரியோ குனிந்து ஒரு கையால் அவளை பாதி அணைத்தவாறே அவள் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டார்.

அதுவரை அலெக்ஜான்ட்ரியோவை தொடர்ந்து கொண்டிருந்த சரவணனின் பார்வை அந்த முத்தம் நிகழ்ந்த சமயம் தானாக திரும்பிக் கொண்டது. ‘பச்சக்’ என்ற சப்தம் மட்டும் அவன் காதில் தெளிவாகக் கேட்டது. அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு விஷயம் பளிச்சென உறைத்தது.

காலையிலிருந்து அவனுடன் அறிமுகப்படுத்திக்கொண்ட பலரும் கைகுலுக்கித்தான் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் முகமன் சொல்லிக் கொள்ளும்போது சுவாதீனமாக தோள்களைப் பற்றி அணைத்தும் அணைக்காமலும் முகமன் பரிமாறிக் கொண்டார்கள். சரவணனுக்கும் மெக்சிகர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றி ஓரளவுக்கு சொல்லப்பட்டு பரிச்சயம் ஆகியிருந்தது என்றாலும் அதுதான் நேரடியான அனுபவம்.

அலெக்ஜாண்ட்ரியா திரும்பிப்போன பல நிமிடங்கள்வரை சரவணன் காதுகளால் மட்டுமே அந்த அறையை உணர்ந்து கொண்டிருந்தான்.

‘நீ இந்தியாவைச் சேர்ந்தவனா’ மதிய உணவு இடைவேளையின் போது அஷ்ரஃபுல் விசாரித்தான். அவனுக்கும் மொட்டைத்தலைதான். நன்றாக விளைந்த நாட்டுக்கோழி முட்டை போல பளபளவென்றிருந்தது மண்டை. கையில் ஒரு வெங்கலச் சிலை இருந்தது.

‘ஆமாம். இன்றுதான்…. இந்த அப்கிரேட் வேலைக்காக வந்தெஎன்.’

‘பிரமாதம். நான் உங்கள் நாட்டுக்கு இருமுறை வந்திருக்கிறேன். ஸ்பிரிச்சுவாலிட்டியின் உச்ச நிலம் உங்கள் நாடு’

அவன் கையிலிருந்தது ஒரு பெண் சிலை. பஞ்சலோகத்தின் பளபளப்பில், மந்தகாச புன்னகையுடன், நான்கு கைகளும், விரித்த வார்க்குழலும், கனத்த தனங்களின் இடையே சிறிய மேலாடையும், நூல் போன்ற இடையுமாக ஒரு காலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்டபடிக்கு ஏதோ பெண் தெய்வமாக இருக்கவேண்டும். யாரோ கைப்பற்றி, யாருக்கோ கைமாற்றி, எங்கெங்கோ சுற்றி அஷ்ரஃபுல்லின் கலெக்‌ஷனில் வந்து சேர்ந்திருக்கலாம். சூரியக்கதிர்கள் சாய்வுகோணத்தில் சிலையின் வலது பக்கம் பட்டு தெறிக்க, மெல்லிய மேலாடையுடன், தகதகவெனெ மின்னும் பொன்னுடலை ‘சிக்’கென காமிராவில் சிறைப்பிடித்துக் கொண்டான்.

‘என்னவொரு அழகு பார்த்தாயா இந்த சிலை. இட்ஸ் டிவைன். இது போன்ற சீரிஸ் ஒன்று செய்கிறேன். ஏகப்பட்ட நேயர்களுக்கு பிடித்த படங்கள் இவை’ என்றான் ‘எல்லாம் உங்கள் தாந்த்ரீக பூமியின் மகிமைதான்’

‘ஓ! எனக்கு மந்திரம் தந்திரம் எதுவும் தெரியாது’ சிரித்தான் சரவணன்.

சரவணன் பதிலுக்கு காத்திருக்காமல் அஷ்ரஃபுல் போய்விட்டான்.

அடுத்து வந்த ஐந்து வாரங்களில் சரவணனுக்கு அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள் ஓரளவுக்கு விளங்கின. வாடிக்கையாளர் சேவை தவிர, கொஞ்சம் ஐடி, கொஞ்சம் படம் வரைபவர்கள் (விஷுவலைசர்கள்) என்று கலந்திருந்தார்கள். இது தவிர கலிபோர்னியா, நியூ மெக்சிகோ போன்ற இடங்களில் எல்லாம் அவர்களுக்கு கிளைகள் இருந்தன. மயாமி பீச் அலுவலகத்தில் கேரன்தான் ஆப்பரேஷன்ஸ் எல்லாம் பார்த்துக் கொள்ளும் மேனேஜர். அஷ்ரஃபுல் போன்றோர் எடுக்கும் புகைப்படங்களை மரியா போன்றோர் கணிணி மூலம் பல ஜாலக்குகள் செய்து இணையத்தில் போட, காசை அள்ளோ அள்ளு என்று அள்ளுகிறார்கள்.

சரவணனின் தினப்படி வாடிக்கைகளில் அவ்வப்போது இலியாவுடன் ஃபூஸ்பால் விளையாடுவது, ஜெசிந்தோவிற்கு சில சீக்வெல் கோரிக்கைகள் சந்தேகங்களை தீர்ப்பதும் சேர்ந்து கொண்டது. ஜெசிந்தோ கல்லூரியில் கணிணி படிப்பு படித்துக் கொண்டே இலியாவிற்கு துணையாக பார்ட்-டைம் வேலை செய்து கொண்டிருந்தான்.. அலெக்ஸை பார்க்கும்போது மட்டும் அடிக்கடி வெடிகுண்டு நினைவுக்கு வரும். அவன் விரல்நுனியில்தான் அந்த அலுவலகத்தின் மொத்த ஐடி நெட்வொர்க்கும் இயங்கிக் கொண்டிருந்தது.

‘இந்தாருங்கள் சரோ. உங்களுக்கான VPN சேவை எல்லாம் பக்காவாக ரெடி ஆகிவிட்டது. இவர்களின் தொந்தரவுகள் ஜாஸ்தி ஆகிவிட்டது என்றால் ஓட்டலிலிருந்தே சௌகரியமாக வேலை செய்யுங்கள்’ அலெக்ஸ் கொடுத்த VPN டோக்கனை அதிகம் உபயோகித்ததில்லை. அந்த அலுவலக சூழல் சரவணனுக்கு பிடித்தே இருந்தது. அதைவிட ஓட்டலிலிருந்து A1A ஹைவேயில் அகண்ட அட்லாண்டிக் சமுத்திரத்தைப் பார்த்துக்கொண்டே டூரெக் காரில் வரும் அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.

‘பிரமாதமான வண்டி இது’ என்று கண்கள் மின்ன அலெக்ஜாண்ட்ரியா காரின் சாவியை வாங்கிக் கொண்டு ஆசையாய் காரைப் பார்க்கும்போது சற்றுக் கூச்சமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் அலெஜாண்ட்ரியோ மெனக்கெட்டு ஒரு மாடி ஏறி வந்து சரவணனிடம் கார் சாவியைக் கொடுக்கும்போதும் ஏதும் டிப்ஸ் தரவேண்டுமா, இல்லை அது அவரை அவமதிக்கும் செயலாகுமா என்று சற்றே சஞ்சலமாக இருக்கும். அலெக்ஜான்ட்ரியாவும் அந்த சாவியைக் கொடுக்கும் சாக்கில் வந்துவிட்டு , அப்படியே மரியாவிடம் ‘குவா பசா… குவா ஹே…கமோ எஸ்டாஸ்…’ என்று சில நிமிடங்கள் பேசிவிட்டுப் போய்விடுவார்.

சொகுசுக்கார், சீனிக் ட்ரைவ், வேலட் பார்க்கிங், வேலை அழுத்தம் அறவே இல்லாதது என்று ராஜ வாழ்க்கையின் சிறு துளிகளை ஐந்து வாரங்களாக அனுபவித்து வந்தாலும், சரவணனுக்கு இரண்டு குறைகள்தான். ‘எங்கே என்ன பிராஜெக்ட்டில் போய்க்கொண்டிருக்கிறாய்’ என்று கேட்கும் நண்பர்களிடம் ‘பட்’டென பதில் சொல்ல முடியாது. சுற்றி வளைத்து, கூட்டிப் பெருக்கி ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கும். அடுத்து, அந்த அலுவலகத்தின் மொத்த சூழலுக்கும் தான் மிகவும் அந்நியமாக இருக்கிறோம் என்று உறுத்தலாக இருக்கும். அதனாலேயே எந்நேரமும் சாட்டில் நாசிர் வரமாட்டானா என்று தேடியவண்ணம் இருந்தான்.

‘சரவணா, உனக்கு விடிமோட்சம் கிடைத்துவிட்டது. மான்ஹாட்டனில் சர்வர்கள் நிறுவிவிட்டார்கள். அடுத்த வாரமே நீ மயாமியிலிருந்து புறப்பட்டு தம்பா போய்விடு. வெரிசோனில் ஒரு பிராஜெக்ட்டில் சுதாம்ஷு முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார். நீ போனால் மிகவும் சௌகரியம்.’ என்றான் நாசிர்.

வீணாகிப் போன நாட்களுக்கு எல்லாம் சேர்த்து வைத்து ஐந்தாள் பலத்தை திரட்டிக்கொண்டு வாரயிறுதியைக் கூட பொருட்படுத்தாமல் பேய் போல உழைத்தான் சரவணன். அவன் பொருட்படுத்தினாலும், அவனைப் பொருட்படுத்த வாரயிறுதிகளில் அங்கு ஆளில்லை என்பது வேறு விஷயம். வெள்ளிக்கிழமையன்று புறப்பட தயார் என்னும்போதுதான் கேரன் திடுமென சொன்னாள்.

‘சரோ, ஒரு சின்ன பார்ட்டி. உனக்காகத்தான். ஐடி ஆட்கள் மற்றும் கஸ்டமர் கேர் ஆட்கள் மட்டும். வெள்ளிக்கிழமை மாலை வைத்துக் கொள்ளலாம். பயணத்தை ஒருநாள் ஒத்திப்போடு’

அந்த ஐந்து வாரங்களில் ஆன்சர் பாய்ண்ட்டின் பார்ட்டி முறைகள் பற்றி சரவணனுக்கு ஏற்கெனவே பரிச்சயம் இருந்ததால் அவனுக்கு மகிழ்ச்சிதான். ஏகப்பட்ட சாப்பாடு ஐட்டங்கள், பான வகைகள், ஒயின்கள் என்று அசத்தி விடுவார்கள். ஆனால், இந்த இயல்பாக கட்டியணைத்து கன்னத்தோடு கன்னம் தொட்டாற்ப்போல வைத்து சொல்லும் முகமன் முறைதான் பெரும் குழப்பமாக இருந்தது. எப்படி அது… யார் முதலில் முன்னே வருவார்கள்… கூச்சமாக இருக்காதா… நாம் தழுவப் போகும் பெண் சட்டென நிமிர்ந்து நின்று ஓங்கி ஒரு அறை கொடுத்தால்? ஓரளவுக்கு அலெக்ஜான்ட்ரியோ மரியாவை தழுவிச்சொல்லும் முகமன் மனதில் பதிந்திருந்தது. மரியா வலது கையை உயர்த்தி அலெக்ஜாண்ட்ரியோவின் தோள்பக்கமாக கொண்டுவர… இவர் குனிந்து அவளை அணைத்தவாறு… ரொம்ப அதிகம் போக மாட்டார்… தாடை மரியாவின் தோளை உரசும்வரை சென்று நிறுத்தி சற்று திரும்பி கன்னத்தில் உரசியவாறு ஒரு முத்தம்.. பிறகு மீண்டும் ‘முய் பெய்ன்… ப்யூனோ டயாஸ்… என்று ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள். சில சமயம் மரியா முதலிலேயே கன்னத்தை திருப்பிக் காட்டிவிடுவார். சிலசமயம்… ஏதாவது சிரித்து பேசிக்கொண்டே இருப்பார்கள். பிறகு நினைவு வந்தாற்ப்போல முகமன் கூறிக்கொண்டு பிரிவார்கள்… இல்லை.. மீண்டும் அறைக்கு நடுவிலிருந்து ‘எஸ்பேரா தே….’ என்று பேச ஆரம்பிப்பார். அந்த ஐந்து வாரங்களில் ஒரு நாள் கூட தவறியது இல்லை.

நமக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்று எட்டி நின்று கைகொடுப்பதும் செயற்கையாக இருந்தது. இருபது முப்பதுக்கு மேலான ஸ்பானியர்கள் இடையே ஒற்றை ஆளாக இருந்து கொண்டு… கலாச்சாரத்தை புரிந்துகொள்ளாமல்… இல்லை புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான் தவறா?

அடுத்து தம்பா நகரத்திற்கு போக வேண்டிய வேலை. அதற்குள் கொஞ்சம் ஸ்பானிஷ்… கொஞ்சம் கலாச்சாரம்… கொஞ்சம் தழுவிச்சொல்லும் முகமன்.. அலெக்ஸாண்ட்ரியோ போல் முத்துவது சாத்தியமில்லை என்றாலும் சற்று திருகினாற்ப்போல ஒரு தழுவல்… எப்படி பழகுவது என்று சரவணனுக்கு பெரிய மண்டை குடைச்சலாக இருந்தது. மொத்த அலுவலகமும் காலியான அந்த வியாழன் மாலை, இணையத்தில் துழாவி துழாவி… ஒரு மேலோட்டமான மெக்ஸிகன் முகமன் முறையை தேர்ந்தெடுத்தான். முதல் பார்வையில் சற்றே புன்னகைக்க வேண்டும்… பரஸ்பர அறிமுகம் என்ற நிலையில் கைகளை நீட்டிக் குலுக்க முயல ஏற்படும் உத்வேகத்தில் லேசாக கையை வளைத்து… நெருங்க வேண்டும்… இதற்குள் எதிராளியும் அதே போல் முன்னே வருவார். இல்லையென்றால் சட்டென கையை இறக்கி குலுக்கிக் கொண்டுவிடலாம்.

க்வே தெஸ் லோ பெண்டிகா

சில இல்லஸ்ட்ரேஷன்களுடன் விளக்கமே போட்டிருந்தார்கள். படபடவென படங்களை ப்ரிண்டருக்கு தள்ளிவிட்டு, லாப்டாப் முதலிய சாமக்கிரியைகளை சேகரித்துக் கொண்டு புறப்பட ஆயத்தமானான். இன்றோடு வேலை முழுவதும் முடிந்துவிட்டது. நாளை மெதுவாக வந்துவிட்டு மாலை பார்ட்டியை முடித்துக்கொண்டு இரவு எட்டரைக்கு பிளேனைப் பிடித்து நடு நிசிக்குள் டெட்ராய்ட் போய்விடலாம்.

பையை தோளில் மாட்டிக்கொண்டு திரும்பியபோதுதான் கேரன் வருவதை கவனித்தான்.

‘சும்மா சொல்லவில்லை சரோ. எப்படித்தான் இந்த பிராஜெக்ட் நேரத்துக்குள் முடியும் என பயந்துகொண்டே இருந்தேன். நீ செய்த வேலை மகத்தானது’ இயல்பாக அவன் தோளைத் தொட்டு பாராட்டும் தொனியில் சொன்னவள் ‘இனி கானா சம்பந்தமான எந்த வேலையாக

இருந்தாலும் சரோதான் வேண்டும் எனத் தீர்மானமாக சுதாம்ஷுவிற்கு மெயில் எழுதிவிட்டேன்’ அவள் கண்களில் தெரிந்த கனிவு பிரத்யேகமானது போலிருந்தது சரவணனுக்கு.

‘ஙொய்ங்’ என்ற சத்தத்துடன் மூலையில் இருந்த ப்ரிண்டர் உயிர்பெற்று பதிப்பிக்க ஆரம்பித்தது.

அறைக்குள் வேகமாக உள்ளே வந்த அஷ்ரஃபுல், ‘அஹ், கேரன், இங்கேதான் இருக்கிறாயா, என்னுடைய தாந்த்ரிக் சீரிஸ்ஸில் அடுத்த படங்களை பார்க்கிறாயா? இப்போதுதான் முடித்தேன். சரோவிற்கும் பிடிக்குமாக இருக்கும்.’ என்றவாறே ப்ரிண்ட்ரை நோக்கி நடந்தான்.

மொத்தமாக அள்ளிய பேப்பர்களை கொண்டுவந்து அவள் பார்வைக்கு காட்டியாவாறே இருவரும் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

சரவணனுக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது. அலுவலகத்தில் யாரும் இல்லையென்று நினைத்து எசகுபிசகாக ப்ரிண்ட்-அவுட் கொடுத்து இப்பொழுது மானம் போகப்போகிறது. உங்கள் வழக்கப்படி எப்படி கட்டிப்பிடித்து கைகுலுக்குவது பற்றி கற்றுக் கொள்கிறேன் என்று விளக்க முடியுமா. விளக்கினால் புரியுமா…

புன்னகையுடன் ஓரிரு படங்களை புரட்டிப்பார்த்த கேரன் அவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு

‘இதை எல்லாமா மக்கள் ரசிக்கிறார்கள்? டிக் ஹெட்ஸ்’ என்று சொல்லிவிட்டு கிளம்பிச்சென்றாள். எப்போதும் போன்ற பலஜோலிக்காரரின் அவசரம் அவள் நடையில்.

அவள் செல்லும் திசையைப் பார்த்தவாறே அஷ்ரஃபுல், ‘சிலருக்கு தலையுள்ளேதான் கிளர்ச்சிக்கான உபகரணங்கள் இருக்கின்றன, கேரன்’ என்று சிரித்துவிட்டு, சரவணனைப் பார்த்து கண் சிமிட்டினான்.

‘பார். இந்த சிறிய ஆடையை நீக்கிவிட்டால் இதில் என்ன கிளர்ச்சி? நிர்வாணத்தை அடைய முடியாத மனதில்தான் உடல் பற்றிய கிளர்ச்சி, தடுமாற்றம் எல்லாம். உனக்கு தெரியாதா என்ன…’ மேலிருந்த இரண்டு பக்கங்களை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு மிச்ச பேப்பர்களை சரவணன் மேஜையில் போட்டுவிட்டு போனான்.

அஷ்ரஃபுல் வைத்துவிட்டுச் சென்ற படங்களை சரவணன் பார்த்ததும்தான் பெருமூச்சே வந்தது. மறைந்து ஒளிர்ந்த சூரியஒளி ஜாலத்தில், மரியாவின் கைவண்ணத்தில் கவர்ச்சி சேர்த்த பஞ்சலோக பெண் சிலையின் படங்கள் ஆறேழு இருந்தன. அதற்கு கீழே சரவணன் தேடியெடுத்த மெக்ஸிகன் முகமன் படங்கள் மறைந்து போயிருந்தன.

வெள்ளிக்கிழமையே தம்பாவிற்கு வாவென சுதாம்ஷு வலியுறுத்தியதால் சரவணனால் ஆன்ஸர் பாய்ண்ட் பார்ட்டியை தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. பார்ட்டிக்கு போயிருந்தாலும் எப்படி தழுவி முகமன் கூறுவது என குழப்பம் இருந்திருக்காது இப்போது.


Filed under: எழுத்து, சிறுகதை, ஸ்ரீதர் நாராயணன் Tagged: சிறுகதை, ஸ்ரீதர் நாராயணன்
21 Apr 13:04

ஐஸன்பெர்க், சாண்டர்ஸ் – கோட்பாட்டு வெளியில் மானுடத்தை விவரித்தல்

by பதாகை

மன்ஹாட்டனில் உள்ள ஸ்ட்ராண்ட் என்ற புத்தகக் கடையில் டெபோரா ஐஸன்பெர்க்கும் ஜார்ஜ் ஸாண்டர்ஸும் வாசிப்பு மற்றும் உரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்றனர். இது குறித்து ஸ்டோரி ப்ரைஸ் என்ற தளத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த கட்டுரை இது. சமகால அமெரிக்க எழுத்தாளர்களில் மிக முக்கியமான இரு படைப்பாளிகள் பங்கேற்ற நிகழ்வை விவரிப்பதால் இக்கட்டுரை பதாகையில் பதிப்பிக்கப்படுகிறது. இதை எழுதியவர் பாட்ரிக் தாமஸ் ஹென்றி.

சிறுகதைகளில் தனி கவனம் செலுத்தும் முதன்மை எழுத்தாளர்களின் வரிசையில் ஐஸன்பெர்க் மற்றும் சாண்டர்ஸ் இருவரையும் அவர்களது சாதனைப் படைப்புகள் இருத்துகின்றன. Guggenheim Fellowship, MacArthur Fellowship, The Collected Stories of Deborah Eisenberg என்ற தொகுப்புக்காக, 2011 PEN/Faulkner Award மற்றும் பல பரிசுகளையும் விருதுகளையும் ஐஸன்பெர்க் பெற்றிருக்கிறார். 1994 முதல் 2011 வரை அவர் University of Virginiaவின் MFA program வகுப்புகள் பயிற்றுவித்திருக்கிறார். தற்போது Columbia Universityயில் கல்வி கற்பிக்கிறார். MacArthur Fellowship பெற்ற சாண்டர்ஸின் முதல் புத்தகமான Civil War Land in Bad Decline PEN/Hemingway Awardக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. In Persuasion Nation என்ற அவரது தொகுப்பு The Story Prizeக்கான இறுதிச் சுற்றில் பரிசீலிக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு முதல் Syracuse Universityல் இளங்கலை எழுத்துப் பயிற்சிப் பட்டக்கல்வி பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கிறார் சாண்டர்ஸ்.

Tenth of December தொகுப்பில் இருந்த “Home,” என்ற சிறுகதையை முதலில் வாசித்தார் சாண்டர்ஸ். இந்தக் கதையில் போர் அனுபவங்கள் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஓய்வு பெற்ற போர் வீரன் ஒருவன் தன் ஊருக்குத் திரும்பி வரும்போது தன் குடும்பம் அதன் சுற்றுவட்டார மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள சீர்குலைவைப் பார்க்கிறான். கதைசொல்லியால் தன் ஊரிலும் தன் தனிப்பட்ட வாழ்விலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குப் பொருள் காண முடிவதில்லை. இறுதியில் அவன், வழக்கமான சாண்டர்ஸ் பாணியில், ““I started feeling like a chump, like I was being held down by a bunch of guys so another guy could come over and put his New Age fist up my ass while explaining that having his fist up my ass was far from his first choice and was actually making him feel conflicted,” என்று ஒப்புக் கொள்கிறான்.

அதன்பின் Twilight of the Superheroes என்ற தொகுப்பில் உள்ள “Revenge of the Dinosaurs,” என்ற கதையின் ஒரு பகுதியை வாசித்தார் ஐஸன்பெர்க். இந்தக் கதையின் நாயகி, லூலூ, அவளது பாட்டி நானா முடக்குவாதத்தால் பீடிக்கப்பட்டபின் ஈஸ்ட் கோஸ்ட் திரும்புகிறார். லூலூவுக்கும் அவளது சகோதரன் பில்லுக்கும் ஏற்படும் பிழைபுரிதல்கள் நானாவை யார் கவனித்துக் கொள்வது என்பது குறித்த உரத்த மோதல்களுக்குக் கொண்டு செல்கின்றன. இவர்கள் இருவருக்குமிடையே நிகழும் கசப்பான வாக்குவாதங்களின் பின்னணியில், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நானா ஊமையாக, தொலைகாட்சிப் பெட்டியின் நிலையற்ற துகள் உருவங்களைத் தொடர்ந்து பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள். நம் வாழ்வை நிர்வகிக்கும் குழப்பமான உரையாடல்களுக்கான வீரியமிக்க படிமமாக இது அமைகிறது.

இந்த வாசிப்புகளுக்கான எதிர்வினையாகப் பேசும்போது லூகாஸ் விட்மன் இந்த இரு எழுத்தாளர்களும் அன்றாட உரையாடலின் வெளிப்பாடற்ற, மொழிதலுக்கு அப்பாற்பட்ட இயல்புகளை மிக அழகிய வகையில் தங்கள் படைப்புகளில் கைப்பற்றியிருக்கின்றனர் என்று கூறினார். இவ்வாறு அவர் கூறியதும் எழுத்து மற்றும் சிறுகதையைக் கற்பித்தல் குறித்த ஒரு விவாதம் துவங்கியது.

ஐஸன்பெர்க் மற்றும் சாண்டர்ஸ் இருவரும் தங்கள் படைப்புகள் எவ்வாறு வாழ்வனுபவங்களை ஒட்டி அமைந்துள்ளவை என்பதை விவரித்தனர். மேலும், இவை எம்எஃப்ஏ மாணவர்களுக்கு தங்கள் சூழலை நேர்மையாக விவரிக்கும் பயிற்சி அளிக்கின்றன என்றனர். “Revenge of the Dinosaurs” கதையில் வரும் போருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களையும் ஹோம் கதையில் ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஊர் திரும்பும் போர் வீரன் இடம்பெறுவதையும் சுட்டி விட்மன், இருவரும் சமகால அரசியல் நிகழ்வுகளையொட்டிய உரையாடலில் தங்கள் கதைகளின் இடம் என்னவென்று சொல்ல முடியுமா என்று கேட்டார். அண்மையில் தவிர்க்கப்பட்ட பொருளாதார வீழ்ச்சியையும் அமெரிக்க மத்திய வர்க்கத்தின் நொறுங்கும் கனவுகளையும் குறித்து விட்மன் எழுப்பிய கேள்விக்கும் ஐஸன்பெர்க் பதிலளித்தார். “மத்திய வர்க்கம் என்று ஒன்று எப்போதும் இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது, அது கடுமையாக பாதிக்கப்பட்டு, நாம் எல்லா வகைகளிலும் புவியளவில் ஒரு பாதாள வீழ்ச்சியை எதிர்நோக்கி நிற்பது – இதை விட அச்சுறுத்துவதாகவும் கண்கொட்டாமல் கவனிக்க வைப்பதாகவும் வேறு எதுவும் இருக்க முடியாது,” என்றார் ஐஸன்பெர்க்.

எப்போதும் மாறிக் கொண்டேயிருக்கும் மெய்ம்மையின் ஏககால உள்ளார்ந்த அழகையும் பீதியையும் வெளிப்படுத்துவதுதான் எழுத்தாளனின் பொறுப்பு என்று சுட்டுவதாக ஐஸன்பெர்க்கின் பதில் இருந்தது. என்றாலும், கோட்பாடுகளுக்கு முதன்மை முக்கியத்துவம் அளிப்பதற்கு எதிராக அவரும் சாண்டர்ஸும் எச்சரித்தனர். அது கதையில் பாத்திரங்களுக்கும் நேர்மையான உணர்வுகளுக்கும் இடமில்லாமல் செய்து விடும், உணர்ச்சிகளே வாசகனை சிறுகதையின் புனையப்பட்ட உலகினுள் வரவேற்கின்றன என்று வாதத்தை முன்வைத்தனர் இருவரும். இந்தக் காரணத்தால்தான் ஐஸன்பெர்க் எழுதிய Twilight of the Superheroes கதைகளை தான் தன் எம்எஃப்ஏ மாணவர்களுக்குக் கற்பிப்பதாகச் சொன்னார் சாண்டர்ஸ், இந்தத் தொகுப்பின் “அறிவார்ந்த புறப்பரப்பும் முழுமுதல் வசீகரமும்” முக்கியமானவை என்றார் அவர்.

ஐஸன்பெர்க் கதைகளின் “வசீகரத் தாக்குதல்” வெற்றி பெறக் காரணம் அவரது கூறுமொழி பாத்திரங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் உள்ள நாடகீய முரண்களை விவாதிப்பதுதான் என்றார் சாண்டர்ஸ். இதனால் பாத்திரங்களின் நடத்தை தீவிரமான சிந்தனைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன என்றார் அவர். ஒரு எழுத்தாளர் இதுபோன்ற கதையை எழுதும்போது இயல்பாகத் தோற்றம் பெறும் குறியீடுகள், ட்ரோப்புகள், உவமான படிமங்கள் கதையின் கருத்தைக் கூறும்போது அது, “இன்னமும் நேர்மையாக, விசுவாசம் கொண்டதாக” இருக்கிறது என்றார் சாண்டர்ஸ். இந்த விமரிசன மதிப்பீட்டைத் திருப்பிப் பார்த்தால் அது சாண்டர்ஸின் கதைகளையே துல்லியமாக மதிப்பிட உதவும். உதாரணத்துக்கு ஹோம் போன்ற ஒரு கதை, குழப்பமான கோட்பாடுகளைக் கொண்டு கதைசொல்லியின் வீட்டில் நிலவும் சூழலைப் புரிந்து கொள்ள முடியாது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.

கருத்துருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த ஒரு புனைவையும் எழுத முயற்சிக்கக்கூடாது என்பதற்கான இன்னொரு காரணத்தை ஐஸன்பெர்க் கூறினார் – “விதிகளைக் கட்டாயமாக்கும் ஆபத்து”க்கு அது இடம் கொடுக்கிறது.

“வெள்ளித்தட்டில் தொழில் ரகசியங்கள்” எம்ஃப்ஏ மாணவர்களுக்குக் கிடைக்கின்றன என்ற பிழைபுரிதலை சாண்டர்ஸ் வேடிக்கையாக மறுத்தார். இருவரும் நிகழ்த்திய உரையாடலுக்குப்பின், விட்மன், எம்ஃப்ஏ வகுப்புகளின் நோக்கம் விதிமுறைகளை பிரகடனப்படுத்துவதற்கு மாறாய், தங்களையும் பிறரையும் வாசித்துக் கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக இருக்கிறது என்றார். இதை ஐஸன்பெர்க், சாண்டர்ஸ் இருவரும் ஏற்றுக் கொண்டனர்.

இருவருமே, சிறுகதையின் குறுகிய வடிவம் கூறுமொழியின் தெளிவையும் வேகத்தையும் பெரிதுபடுத்திக் காட்டும் கருவியாக இருக்கிறது என்றனர். இங்கு இவர்கள் இருவரும் மிக முக்கியமான, ஆனால் எளிதில் நாம் மறந்துவிடக்கூடிய ஒரு செய்தியைச் சொன்னார்கள் என்று நினைக்கிறேன். பழைய பழக்கங்களுக்கு மாறாக, எழுத்தாளனின் தொழில்நேர்த்தி உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் துல்லியமாக, நேர்மையாக, கண்முன் நிகழ்த்திக் காட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

ஐஸன்பெர்க் தன் எழுத்துப் பழக்கங்களைச் சொல்லும்போது இதைச் சொன்னார்: செப்டம்பர் 11க்கு அடுத்த நாட்களில் அவர் நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டார். “9/11 ஒரு பெருந்தடை. எல்லாம் உடனே மாறப் போகிறது என்று நினைத்தேன்… துல்லியமாக நினைவு வைத்துக் கொள்ள முடியாது என்று நினைத்தேன்” என்றார் அவர். அதனால் அவர் தன் எழுத்து முறைகளை இன்னமும் இறுக்கமாக மாற்றிக் கொண்டு, நாட்குறிப்புகள் எழுதினார். மானுடத்துக்கும் மேலான முக்கியத்துவத்தை கருத்துருவாக்கங்களுக்கு அளிக்கும் வகையில் தன் எழுத்தில் பேருரைகள் ஆற்றுவதை முனைந்து தவிர்த்தார் அவர்.

அந்த குளிர்மிகுந்த மழை இரவில் ஐசன்பெர்க், சாண்டர்ஸ் இருவரும் ஒரு வெம்மையான உணர்வை வழங்கினர்- நாம் ஏன் எழுதுகிறோம், யாருக்காக எழுதுகிறோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும் களங்கமற்ற படிகத்தன்மை கொண்ட பார்வை அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாய்க்கட்டும் என்றனர். அப்போது அன்றைய ஸ்ட்ராண்ட் புத்தகக் கடை வாசிப்பில் இருந்தது போலவே Eisenbergன் Collected Stories, Saundersன் Tenth of December, இரு தொகுப்புகளையும் இந்த எதிர்பார்ப்பே நிறைக்கிறது.


Filed under: எழுத்து, தமிழாக்கம், பீட்டர் பொங்கல், விமரிசனம் Tagged: பீட்டர் பொங்கல்
21 Apr 13:03

அதிநாயகர்களின் அந்திப்பொழுது – டெபோரா ஐஸன்பெர்க்

by பதாகை

அஜய் ஆர். - 

டெபோரா ஐஸன்பெர்க் கதைகள் சிறுகதைகள் என்று குறிப்பிடப்பட்டாலும், அவை கால/ பக்க அளவில் நெடுங்கதைகளே. 30-50 பக்கங்கள் நீளும் கதைகள் என்பதால், ஓர் புள்ளியில் இருந்து ஆரம்பித்து நேர்கோட்டில் சென்று கச்சிதமாக முடியும் கதைகள் அல்ல இவை. ஒரு கதையில் பல இழைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பல சித்திரங்கள் வாசகர் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு தமக்கான சித்திரத்தை வாசகர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

கதைகளில் பல இழைகள் இருந்தாலும் வாசிக்கத் துவங்கியதும் விரைவிலேயே பாத்திரங்களுடன் நமக்கு ஒரு ஒட்டுதல் ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் நம் வீட்டு சன்னல் வழியாக தினமும் நாம் பார்க்கும் அண்டை வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர் போல் பழகியவர்களாகி விடுகின்றனர். நமக்கு இவர்களை நன்றாகத் தெரியும், எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டு கொள்வோம். ஆனால் இந்த அறிமுகம் புகைமூட்டத்தின் ஊடே ஒருவரை பார்ப்பது போல்தான், இவர்கள் யார், என்ன வேலை செய்கிறார்கள் என்ன என்பது போன்ற விவரங்களை நம்மிடம் யாராவது கேட்டால் ஊகத்தால்தான் நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இது போல்தான் இவரது கதைகளும். வாசித்து முடிக்கும்போது நாம் கதாபாத்திரங்கள் பற்றி அறிந்திருந்தாலும், பல விஷயங்களை நம் கற்பனையைக் கொண்டுதான் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கதையின் முடிவைத் தாண்டி நம் எண்ணம் பயணித்து வாசகன் பார்வையில் கதை தொடர்கிறது. “அதிநாயகர்களின் அந்திப்பொழுது” (Twilight of the Superheroes), என்ற இவருடைய நான்காவது தொகுப்பில் உள்ள கதைகளுக்கும் இது பொருந்தும்.

“இதைவிட நல்ல, வேறொரு ஓட்டோ” (‘Some Other, Better Otto’) என்ற சிறுகதைதான் இந்தத் தொகுப்பின் சிறந்த கதையாக இருக்கிறது. வழமையான ஐஸன்பெர்க் மோஸ்தரில் இந்தக் கதை தன் துணைவனுடன் கடந்த 25-30 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தற்பாலின விழைவு கொண்ட ஓட்டோவின் வாழ்வில் சில நிகழ்வுகளை விவரிக்கிறது. இதில் கதை என்று சொல்ல எதுவுமில்லை.

பல சகோதர சகோதரிகள் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் ஓட்டோவும் ஒருவன். அவனது கதையைச் சொல்லும்போதே விளிம்பில் அவனது சகோதரிகளில் ஒருவரான ஷரோனின் கதையும் பேசப்படுகிறது. அவளுடைய அறிவே அவளுக்கு எதிரியாக இருக்கிறது – வெகு நாட்களாக யாருடனும் பழகாமல் அவள் ஒதுங்கி வாழ்வதாகத் தெரிகிறது. மூன்று முறை மணம் செய்து கொண்ட, இன்னும் இரண்டு மூன்றுக்கு அடி போடுகிற அவனது சகோதரன் குடும்பத்தில் மற்றவர்களால் சாதாரணமாகப் பார்க்கப்படுகிறான். ஆனால் வாழ்க்கை முழுவதும் ஒரே துணைவனுடன் வாழ்ந்து வரும் ஓட்டோவும் அநியாயத்துக்கு அறிவாளியாக இருக்கிற ஷரோனும்தான் மற்றவர்களால் ஒரு மாதிரி பார்க்கப்படுகிறார்கள்.

பெரும்பான்மையினருக்கு ஏற்ப வாழ்வதுதான் நல்லது, விளிம்புக்குப் போனால் பிரச்சினைதான். நீ எதுவும் தப்பு செய்திருக்க வேண்டும் என்றுகூட இல்லை, நீ சற்றே வேறுபட்டு இருந்தால் உன்னை உன் குடும்பத்தினரே ஒதுக்கி வைத்து விடுவார்கள். அல்லது ஓட்டோவுக்கு அவனது குடும்பத்தில் நிகழ்வது போல் நீயும் பரிதாபத்திற்குரியவனாக, பெரிய தவறு செய்யாதிருந்தாலும் மன்னிக்கப்பட வேண்டியவனாகப் பார்க்கப்படுவாய். ஏதோ அவர்கள் ஒரு உயர்ந்த பீடத்தில் இருந்துகொண்டு உன்னை சகித்துக்கொள்வதை போல் நடந்து கொள்வார்கள் (condescending attitude).

வேற்றுபாலின இல்லறத்தில் உள்ள தினப்படியான சராசரி பிரச்சினைகள் ஓட்டோவின் சுயபாலின இல்லறத்தில் சில காட்சிகளையும், (துணைவனுக்கும் அவனுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள், சிறு சிறு ஊடல்கள் போன்ற இரு பால் உறவில் நிகழும் சம்பவங்கள்), ஆசிரியர் நமக்கு அளிக்கிறார். பாலினத்தை தவிர இவர்களின் வாழ்க்கை இருபால் இல்லறத்தில் இருக்கும் மற்றவர்களைப் போன்றே உள்ளது, ஏன் இந்த ஒரு சிறு வேற்றுமைக்காக இவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று நம்மை எண்ண வைக்கும் கதை. இவரின் சிறந்த கதைகளின் தொகுப்பு ஒன்று வந்தால் இந்த கதை கண்டிப்பாக அதில் இருக்கும்.

உரையாடல்களை எவ்வளவு நன்றாக எழுதுகிறாரோ, அதே அளவுக்கு நன்றாக காட்சிகளையும் நுட்பமான உணர்த்துதல்களையும் நிகழ்த்திக் காட்டுகிறார். இவரது கதைகளில் உரையாடல்கள் எந்த பாவனையுமில்லாமல் வாழ்க்கையில் நாம் பார்த்துப் பழகியது போலவே இயல்பாய் இருக்கின்றன- இரண்டு பேர் பேசிக்கொள்ளும்போது ஏற்படும் இடைவெளிகள், பேசிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று ஒரு கணத்தில் மேலே எப்படி, என்ன பேசுவது என்று தெரியாமல் ஏற்படும் மௌனம், அதனால் உண்டாகும் சிறு சங்கடம், ஒன்றை சொல்ல ஆரம்பித்து பாதியில் நிறுத்துவது போன்ற பேச்சில் நமக்கு ஏற்படும் அத்தனை விஷயங்களும் இந்த கதைகளின் உரையாடல்களில் உள்ளன. ‘Ear for dialogue’ என்று சொல்வார்கள் அல்லவா, அது இவரிடம் மிக நுணுக்கமாக உள்ளது. இவரது கதைகள் அரசியலையும் பேசுகின்றன, இருந்தும் இந்த தொகுப்பில் உள்ள கதைகள் முந்திய தொகுப்புகளின் கதைகள் அளவுக்கு இதைச் செய்வதில்லை.

தலைப்பு கதை “அதிநாயகர்களின் அந்திப்பொழுது” (‘Twilight of the Superheroes’). 9/11 தாக்குதலுக்குப் பிந்தைய நிகழ்வுகளைப் பேசும் கதை. அதன் தாக்கம் மக்களிடமும் பொதுவாக ந்யூ யார்க் நகரத்திலும் எப்படி இருந்தது என்பதன் விவரணை.

Y2K நினைவிருக்கிறதா? எவ்வளவு பழைய காலம்! அப்போது ஏதோ ஒரு பேரழிவு ஏற்படும் என்ற ஆருடங்கள் மெய்ப்படுவதைப் பார்க்க நதானியல் 2000ஆம் ஆண்டையொட்டி ந்யூ யார்க் வந்தவன். அப்படி ஒன்றும் பிரமாதமாக நடக்கவில்லை என்ற நிலையில் அவனது மாமா ஒருத்தரின் சகல வசதிகளும் நிறைந்த அபார்ட்மெண்ட்டில் தன் நண்பர்களுடன் தங்கி விடுகிறான். அது இரட்டைக் கோபுரங்களுக்கு அருகில் இருக்கிறது (“உலகின் மிகச் சிறந்த வியூ”). பின்னர் 9/11 தாக்குதல் அவர்கள் அனைவரின் வாழ்வையும் பாதித்து விடுகிறது, ஏன் இப்படி ஒன்று நடந்திருக்க வேண்டும் என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. ஆர்மீனியாவைச் சேர்ந்த டெல்பைனின் மாற்றுப் பார்வைதான் இவனது புதிரை சமன் செய்கிறது – ஒரு உரையாடலின்போது அவள், “அங்கே உங்களைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா?” என்று கேட்கிறாள்.

அரசியல் பிரக்ஞை இல்லாத பெரும்பாலான அமெரிக்கர்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டவர்களாக இருப்பதைச் சுட்டும் கதை. அவர்களுக்கு தங்கள் தேசம் பிற தேசங்களில் எப்படி நடந்து கொள்கிறது என்று எந்த புரிதலும் இல்லை. தங்களைப் பற்றி பிற தேசத்தினர் என்ன நினைக்கிறார்கள் என்ற கவலையும் இல்லை.

நதானியலும்கூட பிறர் தன் தேசத்தைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியாதவன்தான். எல்லாரும் அமெரிக்க கனவை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அல்லது அதை அடைய போராடிக் கொண்டிருப்பவர்கள். நதானியலின் பெற்றோரும்கூட ஐம்பதுகளில் அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான், நல்ல வாழ்க்கை அமைந்தாலும் முழுசாக அமெரிக்கர்களாக தங்களை உணராதவர்கள் அவர்கள். .

கதையின் தலைப்பே பழைய நம்பிக்கைகள் உடைந்து நொறுங்குவதைச் சுட்டும் நேரடி படிமமாக இருக்கிறது. ஒரு அதிநாயகனாக அமெரிக்கா வீழ்ச்சியடையத் துவங்கிவிட்டது என்பதை உணர்த்தும் தலைப்பு. ஆனால் 9/11க்கு பிறகு இத்தனை ஆண்டுகளில் உலகெங்கும் என்ன நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது (வேறு வேறு காரணங்களைச் சொல்லி எத்தனை அமெரிக்க படையெடுப்புக்கள்) என்பதைப் பார்க்கும்போது, இந்தத் தாக்குதலை அமெரிக்க அதிநாயகனின் அந்திப் பொழுதாகப் பார்ப்பதற்கில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் சர்ச்சில் வேறொரு சந்தர்ப்பத்தில் சொன்னதுபோல் துவக்கத்தின் முடிவாக இதைக் காண முடியும் – (இரண்டாம் உலகப்போரில் நோர்மண்டி (Normandy) கடற்கரையை நேச நாடுகள் கைப்பற்றிய பின் ஜெர்மனியின் வீழ்ச்சி உறுதியா என்று சர்ச்சிலிடம் கேட்கப்பட்டபோது அவர், “Now this is not the end. It is not even the beginning of the end. But it is, perhaps, the end of the beginning,” என்று கூறினார்.)

“வடிவமைப்பில் உள்ள குறை” (‘The Flaw in the design’) என்ற கதை ஒரு மாலைப் பொழுது குடும்ப வாழ்க்கையின் விவரணை வழியாக நம்மை துணுக்குற செய்யும் ஒரு சித்திரத்தை தருகிறது. பெயர் குறிப்பிடப்படாத நாயகி, வேலை முடிந்து வீட்டுக்கு வந்து தன் கணவன் மற்றும் பதின்பருவ மகனுடன் இரவு உணவு நேரத்தில் பேசிக் கொண்டிருக்கிறாள். மற்றவர்களைவிட அதிக செல்வமும் வசதிகளும் தனக்கு இருப்பது குறித்து மகனுக்கு குற்ற உணர்ச்சி இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் அவனால் அவை இல்லாமல் இருக்க முடிவதும் இல்லை. இது அந்த வயசுக்குரிய மனநிலைதான், புரட்சி செய்ய வேண்டும் ஆனால் தன் சுகங்கள் விட்டுப் போகக்கூடாது என்ற அளவில்தான் பலரும் தங்கள் பதின்ம வயதில் புரட்சி பேசி இருப்பார்கள் அல்லவா?

இரவு உணவின்போது நம் வீடுகளில் சாதாரணமாக நடக்கும் உரையாடல்கள்தான் விவரிக்கப்படுகின்றன. ஆனால் இதில் என்ன விஷயம் என்றால் அந்தப் பெண் யாரோ ஒரு அன்னியனுடன் அந்த நாள் பொழுதைக் கழித்து விட்டு வீடு திரும்பியிருக்கிறாள். அதை ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாட வாழ்க்கையை எந்த சிக்கலும் இல்லாமல் அவள் கொண்டு செல்வது நம்மை துணுக்குற செய்கிறது. மனிதன் எப்படி மனதின் பல அடுக்குகளில் பல்வேறு மாறுபட்ட விஷயங்களை வைத்துக்கொண்டு ஒரு அடுக்குக்கும் இன்னொன்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல், அவை ஒன்றுக்கொன்று முரண்படாமல் இருக்க முடியும் என்ற புதிரை இந்த கதை சுட்டுகிறது. அந்த ஆணுடன் எப்படி சந்திப்பு நிகழ்ந்தது, பின் என்ன நடந்தது என்பதைக்கூட சில பத்திகளில் உரையாடல்களில் கூறி முடித்து விடுகிறார் ஆசிரியர்.

மேலோட்டாமாக எந்த பிரச்சனையும் இல்லாதது போல் தோன்றும் கணவன்-மனைவி உறவில்கூட எத்தனை சிக்கல்கள்… அந்தப் பெண் ஏன் இப்படி செய்தாள், இதுதான் முதல் தடவையா என்ற கேள்விகள் எழுந்து கதை முடிந்த பின்பும் தொடர்கின்றன. ரொம்ப சராசரியான அன்றாட வாழ்வின் ஆழத்தில் இப்படிப்பட்ட, நாம் எண்ணிப் பார்க்க முடியாத விஷயங்கள் இருக்கின்றன என்பதுடன் குடும்ப வாழ்க்கையின் கட்டமைப்பிலேயே இருக்கும் பிழையை கதையின் தலைப்பு சுட்டுகிறது (‘The Flaw in the design’)

இருபதுகளின் துவக்கங்களில் உள்ள, வேலை செய்கிற, ஆனால், எதிர்காலம் குறித்த சலனங்கள், என்ன முடிவெடுப்பது குறித்த தெளிவின்மை கொண்ட பெண்களை ஐஸன்பெர்க் கதைகளில் காண முடியும். இந்த வகை பாத்திரங்களைப் Alice Munro முதல் ‘Nell Freudenberger’ போன்ற இளம் எழுத்தாளர்கள் எழுத்துக்களில் காணலாம். ஆனால் கருப் பொருள் ஒன்றாக இருந்தாலும், இவர்களின் கதைகள் ஒரே வார்ப்பில் இல்லாமல், கதைக் களன்/சம்பவங்கள்,உரைநடை/உரையாடல், பாத்திரங்களின் குணாதிசயங்களில் உள்ள வேறுபாடு என தங்களுக்கே உரிய தனித்தன்மையுடன் உள்ளன.

“சன்னல்” (‘Window’) என்ற கதையில் கிறிஸ்டினா என்ற இத்தகைய ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். கிறிஸ்டினா ஒரு குழந்தைக்குத் தந்தையான, அவளைவிட கொஞ்சம் பெரியவனான ஏலி என்பவனுடன் உறவில் இருக்கிறாள். இந்தக் கதையில் இரண்டு இழைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் (control freak) ஏலிக்கும் அவளுக்கு உள்ள உறவு ஒரு இழை. அவனது மகனுக்கும் கிறிஸ்டினாவுக்கும் உள்ள உறவு மற்றொன்று. ஏலியுடனான உறவில் கிறிஸ்டினா எப்போதும் கொடுப்பவளாகவும் ஏலி பெற்றுக்கொள்பவனாகவும் இருக்கிறான்.

இறுதியில் அவள் எடுக்கும் முடிவு, விடுதலை அளிக்கக் கூடியது என்றாலும், அதுவரை ஏலியின் கட்டுப்பாடுகளை, குண மாற்றங்களை சகித்துக்கொண்டு, ‘வன்முறை உள்ள’ இப்படிப்பட்ட உறவில் (abusive relationship) கிறிஸ்டினா ஏன் இருக்க வேண்டும்? அதற்கு காரணம் ஏலி மேல் உள்ள காதலா அல்லது அவன் குழந்தை மேல் உள்ள அன்பா? மனித மனம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத பாதைகளில் செல்லக்கூடியதாக இருக்கிறது என்றும், அதன் போக்கைப் புரிந்து கொள்ள முயல்வதுவுமே கூட வியர்த்தம் என்றும்தான் கதை முடிவில் நமக்கு தோன்றுகிறது. இப்படிப்பட்ட உறவுகளில் சிக்கிக் கொண்டுள்ள கிறிஸ்டினாக்களை நாமும் அறிந்திருப்போம்.

இந்த தொகுப்பின் சாதாரண கதைகள் என்று இரண்டு கதைகளைச் சொல்லலாம் – “விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்’, ‘டைனோசார்களின் வெஞ்சினம்’ (‘Like it Or Not’ and ‘Revenge Of the Dinosaurs’). பிந்தைய கதையில் லூசில் உடல்நலம் சரியில்லாத பாட்டியை பார்க்கச் செல்கிறாள். அவளுடைய உடன் பிறந்தவர்களுடனான சந்திப்பும் நடக்கிறது. வழக்கமாக ஐஸன்பெர்க் கதைகளில் இருக்கும் பல பரிமாண பாத்திரப் படைப்பு இதில் இல்லை. உதாரணமாக பில்லும் அவனது மனைவியும் பணத்தாசை பிடித்தவர்கள் என்று மட்டையடியான ஒரு சித்திரம் மட்டுமே இந்த கதையில் உள்ளது.

நான்கு தனித் தொகுதிகளில் இவரது சிறுகதைகள் வெளி வந்துள்ளாலும், அனைத்தும் ‘The Collected Stories of Deborah Eisenberg’ என்று ஒரே தொகுப்பாகவும் கிடைக்கின்றன. காலக்கிரமமாக தொகுக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், இவரின் சிறுகதைகளை ஒருசேரப் படிப்பது, எழுத்தில் அவருடைய மாற்றங்களை எளிதில் அறிந்து கொள்ளவும் உதவும்.

நன்றி : ஆம்னிபஸ் தளம்


Filed under: அஜய். ஆர், எழுத்து, விமரிசனம் Tagged: அஜய். ஆர்
21 Apr 13:03

கவியின்கண் – 10 : “விலை, மதிப்பல்ல.”

by பதாகை

எஸ். சுரேஷ் -

‘தன்விபரக் குறிப்பு எழுதுதல்

என்ன செய்ய வேண்டும்?
விண்ணப்பப் படிவத்தை நிரப்பி
தன்விபரக் குறிப்பு இணைக்க வேண்டும்.

எத்தனை காலம் வாழ்ந்திருந்தாலும்
தன்விபரக் குறிப்பு சுருக்கமாய் இருத்தல் நலம்.

திட்டமான, தேர்ந்தெடுத்த தகவல்கள் அவசியம்.
நிலத்தோற்றத்தின் இடத்தில் முகவரிகள்,
தடுமாறும் நினைவுகளுக்கு, அசைக்க முடியாத தேதிகள்.

உன் அத்தனை காதல்களிலும் திருமணத்தை மட்டும் குறிப்பிடு.
உன் அத்தனை குழந்தைகளிலும், பிறந்தவை மட்டும்.

உனக்குத் தெரிந்தவர்களைவிட உன்னைத் தெரிந்தவர்கள் முக்கியம்.
வெளிநாடு போனால்தான் பயணம்.
எதில் நீ அங்கத்தினன், ஏன் என்பது வேண்டாம்.
பட்டங்கள், அவை பெறப்பட்ட விதம் வேண்டாம்.

உன்னுடன் நீ உரையாடிக்கொண்டதே கிடையாது போலும்.
உன்னை நீ கைக்கெட்டா தூரத்தில் நிறுத்தி வைத்தது போலும் எழுது

அமைதியாய் கடந்து செல், உன் நாய்கள், பூனைகள், பறவைகள்
தூசு படிந்த நினைவுப் பொருட்கள், நண்பர்கள், கனவுகளை.

விலை, மதிப்பல்ல,
பட்டம், உள்ளடக்கமல்ல
காலணியின் அளவு, போகுமிடம் அல்ல,
நீயாகக் காட்டிக்கொள்ளும் அவன்.

கூடுதலாக, ஒற்றைக் காதுடன் ஒரு புகைப்படம்.
அதில் என்ன விழுகிறது என்பதல்ல, அதன் உருவம்தான் முக்கியம்.
ஏன், கேட்பதற்குத்தான் அப்படி என்ன இருக்கிறது?
காகிதங்களைச் சிதைக்கும் எந்திரங்களின் ஓசை.

By Wislawa Szymborska
Translated by S. Baranczak & C. Cavanagh
Copyright © Wislawa Szymborska, S. Baranczak & C. Cavanagh

போலந்து மக்களுக்காக எழுதப்பட்ட இந்தக் கவிதை நம் நாட்டில் உள்ள நகர்ப்புறப் பகுதிகளில் வாழ்பவர்கள் பலரையும் இது நமக்காகவே எழுதப்பட்டது போலிருக்கிறதே என்று நினைக்கச் செய்யும், அதிலும் குறிப்பாக ஐடி மக்களை. இந்தக் கவிதையைப் பெரிய அளவில் விளக்க வேண்டிய தேவை எதுவுமில்லை, இதெல்லாம் நாம் அறிந்ததுதான். ஆனால் ரெஸ்யூம் ஏன் தேவைப்படுகிறது என்பது பற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அது நவீன வாழ்வின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

மார்க்கெட்டிங்கில் இருப்பவர்கள், “பர்சப்ஷன்தான் உண்மை” என்று திரும்பத் திரும்பச் சொல்வதை, நல்லதும் கெட்டதுமாகப் பல அனுபவப் படிப்பினைகளுக்கு அப்புறம்தான் சாதாரண மக்கள் புரிந்து கொள்கிறார்கள். ஒரு மனிதன் இப்படிப்பட்டவன் என்று நாம் எப்படி அறிகிறோம்? இது கொஞ்சம் சிக்கலான விஷயம். அவன் எப்படி பழகுகிறான், எப்படி நடந்து கொள்கிறான், பின்னணி என்ன, உள்ளரசியல் என்று இப்படி பல காரணிகள் போதாதென்று அவனது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களும் இதைத் தீர்மானிக்கின்றன.

காலம் செல்லச் செல்ல இது மேலும் சிக்கலாகிறது, நம்மோடு பழகுபவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது நம் மீது தாக்கம் செலுத்துகிறது. இதனால் நாம் நம்மைக் கொஞ்சம் மாற்றிக் கொள்கிறோம், இதைப் பார்த்து பிறர் தங்கள் எண்ணங்களைக் கொஞ்சம் மாற்றிக் கொள்கிறார்கள். இது இப்படியே தொடர்கிறது. சுருக்கமாகச் சொன்னால், குறிப்பிட்ட வயதுக்குப்பின், நாம் நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ, அதுவே நம் வாழ்வின் மையமாகிறது. இந்தக் காலத்தில் இந்தப் பிரக்ஞை மிக முக்கியமாக இருக்கிறது. இது ஏன் என்று பார்க்க நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த நம் பெற்றோரும் தாத்தாக்களும் அவர்கள் ஒரு அரசுப்பணியில் அமர வேண்டுமென்றோ பொது நிறுவனமொன்றில் புக வேண்டுமென்றோ ஆசைப்பட்டனர். அந்த வேலை கிடைத்ததும் ஒரு நிலையான குடும்பத்தை உருவாக்கி குழந்தைகளை நல்லபடி வளர்க்க வேண்டும் என்பது அவர்களது விருப்பமாக இருந்தது. ரொம்பவும் துணிச்சலாக ஆசைப்படுவதானால், அவர்கள் ஒரு வீடு கட்ட ஆசைப்பட்டனர். இதில் சில பேர் தங்கள் குழந்தைகள் வெளிநாட்டில் படித்து அங்கேயே வேலை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமென்று விரும்பினர். இதில் சில பேர்தான் வெற்றி பெற்றனர்.

தொண்ணூறுகளின் மத்திய ஆண்டுகளில் காலம் மாறியது, சம்பளம் விண்ணைத் தொட்டது. இரண்டாயிரமாவது ஆண்டுகளின் துவக்கத்தில் ஐடி புரட்சி வந்தேவிட்டது, அது அமோக வெற்றி பெற்றுத் தன்னிடத்தை நிறுவிக் கொண்டது. முப்பது ஆண்டுகள் ஒரே வேலையில் இருந்து அப்பாக்கள் சம்பாதித்த பணத்தை முப்பத்து ஐந்தாவது வயதில் பிள்ளைகள் தொட்டனர். வீடு கட்டுவது வாடிக்கையானது. ஒரு காலத்தில் கனவில் மட்டுமே கார் ஓட்டும் நிலைமை மாறி, அதுவும் ஒரு அத்தியாவசியத் தேவையானது. மனைவி வேலைக்குப் போனால் இரண்டு கார்கள் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாமல் போனது. மேற்படிப்புக்கு வெளிநாடு போன காலம் போய், வேலை செய்ய வெளிநாடு போன காலம் வந்து விடுமுறைகாலச் சுற்றுலாவுக்கு வெளிநாடு போகும் காலமும் வந்தது. மத்திய வர்க்கத்துக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே உலகம் தலைகீழானது. நியாயப்படி பார்த்தால் இதெல்லாம் நம் அனைவரையும் சந்தோஷப்பட வைத்திருக்க வேண்டும். ஆனால் வளம் கொழிக்கும் காலமும் வேதனைகளைக் கொண்டு வராமல் இல்லை – ஐடி புரட்சியில் துவக்ககால பங்கேற்பாளர்கள் இந்த உண்மையை இப்போதுதான் மெல்ல மெல்ல கற்கத் துவங்கியிருக்கின்றனர்.

ஐடி புரட்சியின் காரணமாக பணம் வெள்ளமாய் நம் பக்கம் புரண்டு வந்தாலும், பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பார்த்தால் நாளுக்கு நாள் இதயங்கள் வற்றிப் போவதைதான் பார்க்கிறோம். ஒரு காலத்தில், ஏதோ குடும்பம் என்று ஒன்று நடத்தி, பிள்ளைகளைப் படிக்க வைத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்தால் போதும், பெற்றோர்களின் கடமையை நல்லபடியாய் நிறைவேற்றிய திருப்தி இருந்தது. இதெல்லாம் போதாதென்று வீடு கட்டும்போது மற்றவர்கள் நம்மைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள். வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருந்த நாட்களில் இதுவே ஒரு மாபெரும் சாதனையாக இருந்தது. ஆனால் இப்போதுதான் எல்லாம் கிடைக்கிறதே, இது எதற்கும் யாரும் அலட்டிக் கொள்வதில்லை. இன்று வெற்றியின் அடையாளங்கள் இவையல்ல. இதெல்லாம் சின்னச் சின்ன மைல்கற்கள், மாபெரும் சாதனைகளை நோக்கிச் செல்லும் பாதையில் நாம் கடந்தாக வேண்டிய நினைவூட்டல்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக. இந்தச் சாலை எங்கு செல்கிறது என்று யாருக்கும் தெரியாது. இந்த நிலைமையில், எல்லாருக்கும் எல்லாம் இருக்கும்போது உன் கூடையில் பாதிதான் இருக்கிறது என்றால் உன்னை மற்றவர்கள் தோற்றுப் போனவன் என்றுதானே பார்க்கிறார்கள்?

ஒரு பக்கம் பார்த்தால் வேலை செய்யும் இடத்தில் உயரே செல்வதற்குத் தேவையான தோற்றத்தை உருவாக்கிக் கொள்ள நீங்கள் கடுமையாக உழைத்தாக வேண்டும். மறுபக்கம் சமுதாய அழுத்தம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி உங்கள் சமூக அந்தஸ்தையும் தீர்மானிக்கிறது. தொழிலில் ஒரு குறிப்பிட்ட உயரமாவது போக வேண்டும், இல்லாவிட்டால்நாம் தோற்றுப் போய் விட்டதாக பிறர் நினைத்துக் கொள்வார்கள் என்ற ஒரு அச்சம் நமக்கு எப்போதும் இருக்கிறது. இதனால் தங்கள் வேலை விஷயத்தில் பலரும் முக்கியமான திருப்புமுனை முடிவுகளை எடுக்கிறோம். ஏதோ கொஞ்ச தூரம் ஓடினோம், சிலரைத் தாண்டினோம் என்று வெற்றிக் கோட்டைத் தொட்டதும் நின்றுவிடக் கூடிய ஓட்டமல்ல இது. எத்தனை பேரைத் தாண்டிச் சென்றாலும் இன்னும் சில பேர் முன்னால் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இந்தச் சிக்கலை நாம் வெவ்வேறு வகைகளில் எதிர்கொள்கிறோம். ஓட்டப்பந்தயத்தைவிட்டு விலகுவதாக முடிவெடுப்பது ஒன்று. இருப்பதே போதும். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. ஆனால் இவர்களுடன் பேசும்போது இவர்களில் பலருக்கும் மனவருத்தம் இருப்பதை இவர்கள் குரல்கள் காட்டிக் கொடுக்கின்றன. வாழ்க்கையை ஏற்றுக் கொண்டேன் என்பதை என்னவோ எல்லாம் பறிகொடுத்தது போன்ற ஒரு விரக்தியோடு சொல்கின்றனர். ஏதோ பரபரப்பாக கொஞ்சம் தூரம் ஓடினால் போதும் என்று நினைத்துக் கொண்டு களத்தில் குதித்தவர்கள் இவர்கள். இது தொலை தூர ஓட்டம் என்று புரிந்து, போதும் என்று நின்றுவிட்ட போதும், வெளியேறும் வாசல்கள் மிகக் குறைவு என்றும் அந்தப் பக்கம் போவதே பயங்கரமாக இருக்கிறது என்றும் இப்போதுதான் புரிகிறது. எனவே நாம் ஓடும் வேகத்துக்கு நம்மைப் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள் என்று பயந்துகொண்டே ஓட்டத்தைத் தொடர்கின்றோம். ஈகில்ஸ் இசைக் குழுவினர் ஹோட்டல் கலிஃபோர்னியாவில் சொன்னது போல், “You can check out any time you want but you can never leave”. சில பேருக்குதான் தங்கள் அச்சங்களை மீறி வெளியேறும் துணிச்சல் இருக்கிறது.

வேறொன்றும் செய்யலாம். என் வேலையை வைத்து என்னை எடை போட வேண்டாம் என்று சொல்லலாம்: நான் ஒரு போட்டோகிராபர், கலைஞன், பாடகன், நடிகன், என்று இப்படி. இது நமக்கு இன்னொரு பரிமாணம் சேர்க்கிறது என்பது மட்டுமல்ல, ஐயோ பாவம் இவ்வளவு திறமையை வைத்துக் கொண்டு இந்த வேலையில் சிக்கிக் கொண்டு விட்டானே இவன் என்ற இரக்கத்தையும் இது போன்ற ஒரு பாவனை பெற்றுத் தரலாம். ஏதோ நான் விரும்புவதைச் செய்ய மட்டும்தான் என் சம்பாத்தியம் என்னை அனுமதிப்பது போலவும், என் வேலையை வைத்து என்னை எடை போடாமல் அதைத் தாண்டி எல்லாரும் பார்க்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றத்தை என்னால் ஏற்படுத்த முடிகிறது.

திறமைசாலிகள் சிலருக்கு இதெல்லாம் சரியாக இருக்கும், ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இதெல்லாம் வேலைக்காகாது. வேலையிலும் சராசரி, ஆர்வம் காட்டும் விஷயத்திலும் சராசரி என்பது அவ்வளவு நல்ல நிலையல்ல. எந்த ஒரு விஷயத்தையும் நேசிப்பது என்றால் அதற்கு ஏராளமான நேரமும் ஆற்றலும் செலவு செய்யத் தயாராக இருக்க வேண்டும். என்னதான் ஆர்வம் இருந்தாலும் வேலையை விட்டுவிட்டு பிடித்த காரியத்தில் முழுமூச்சாக இறங்குவது எல்லாராலும் முடியாது. அதே சமயத்தில் ஒரு வேலையைச் செய்துகொண்டே இன்னொரு விஷயத்தில் கவனம் செலுத்துவதும் எளிதல்ல – முழு கவனத்துடன் அதில் ஈடுபட முடியாததால் ஏதோ ஒரு கட்டத்தில் சராசரித்தன்மை வந்துவிடுகிறது. நவீன மனிதன். எத்தனை பணம் இருந்தாலும், திரிசங்கு சொர்கத்தில்தான் இருக்கிறான்.

இந்தக் கவிதையில், எதெல்லாம் உங்கள் தன்விபரப் பட்டியலில் இருக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறதோ, அதெல்லாம்தான் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது. சென்ற பதிவில் சொன்னதைதான் சொல்கிறேன், விஸ்லாவா சாதாரண கவிஞரல்ல. அவர் எளிய சொற்களைப் பயன்படுத்துகிறார், ஆனால் ஒவ்வொரு சொல்லையும் துல்லியமாகப் பயன்படுத்துகிறார். எளிய சந்தோஷங்களைத் தன் வாழ்விலிருந்து நீக்கி, தன்னை வெற்றி பெறத் தகுந்தவனாகக் காட்டிக்கொள்ளச் சொல்கிறது கவிதை. இதில் எவையெல்லாம் இழக்கப்படுகின்றனவோ, அவற்றைச் சுட்டிக் காட்டி இப்படிப்பட்ட அணுகுமுறையில் உள்ள குறையை உணர்த்தி எச்சரிக்கிறார். அவருக்குத் தெரியும், நமக்கும் தெரியும், காலம் அனைத்தையும் சிதைக்கிறது.

இந்தப் புரிதல் ஏற்பட்டால், நாம் நம்மைக் குறித்து எழுதக்கூடிய தன்விபரக் குறிப்பு இதுபோல் இருக்காது.​

தமிழாக்க உதவி : பீட்டர் பொங்கல்


Filed under: எழுத்து, எஸ். சுரேஷ், கவிதை Tagged: எஸ். சுரேஷ், கவியின்கண்
21 Apr 13:03

க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக

by admin

க.பஞ்சாங்கம், புதுச்சேரி.

விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது; இலக்கிய விமர்சனம் ஒரு கல்வித்துறையாக முன்னேறுவதற்காக இலக்கியத்தைத் தியாகம் செய்து விட முடியாது. விமர்சகன், பிரதிக்குள் நுழைந்து வாசகரைத் தரிசிக்க விடாமல் நிற்கும் நந்தியாக விடக் கூடாது. படைப்பாளியை நோக்க விமர்சகன் என்பவன் இரண்டாம் தரமானவனே என்றெல்லாம் விமர்சன வேலைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்களையே பேசிக் கொண்டு, ஆனால் தொடர்ந்து தெளிவான ரசனை அனுபவம் கொண்ட ஒரு விமர்சகராகவும் இயங்கியவர் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம். ஏறத்தாழ அவருடைய விமர்சனக் கட்டுரைகள் – பலரும் கருதுவதைப் போல அபிப்ராயக் கட்டுரைகள் – அடங்கிய 19 தொகுப்பு நூல்களைப் பட்டியலிட்டுள்ளார் நவீனகால இலக்கிய ஆராய்ச்சியாளர் பழ.அதியமான்(1). இந்த நூல்களைத் தமிழின் முதல் விமர்சனப் பிரக்ஞையைத் தூண்டிய புத்தகங்கள் எனக் கொண்டாடுகிறார் தஞ்சை பிரகாஷ்; (தஞ்சை பிரகாஷ்; கட்டுரைகள். ப.237). மேலும் இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984) என்ற விமர்சன நூலிற்காகவே சாகித்திய அகாதெமி பரிசும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. பத்திரிக்கையாளர், புனைகதை எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பத்தி எழுத்தாளர், இருமொழி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் தளத்தில் செயல்பட்டுக் குறிப்பிடத்தக்க அளவிற்குச் சாதனை செய்திருந்தாலும் காலமும் நவீனத் தமிழ் இலக்கியச் சூழலும் அவர் மேல் நிலைநிறுத்திய அடையாள முத்திரை விமர்சகர் என்பதுதான். அவர் விரும்பாத ஒரு பெயரினாலேயே அவர் அறியப்படுகிறார் என்பதே அவரது சிக்கலான வாழ்வின் புதிரைப் புலப்படுத்தக்கூடிய ஒன்றாகப் படுகிறது.

வாழ்வது என்பது வாசிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் கலை இலக்கியம் குறித்து உரையாடல் நிகழ்த்துவதற்காகவும்தான் என்று முழு வாழ்க்கையையுமே பணையம் வைத்து ஆடிய அரிய ஓர் ஆளுமைப் பண்புதான் அவருடைய இந்த நூற்றாண்டு விழா நிகழ்வுகளைப் பெரிதும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது எனக் கருதுகிறேன். இப்படியான ஒரு வாழ்வுதான் தமிழ்ச் சூழலில் அவர் என்ன சொல்லுகிறார் என்கிற ஒரு கவனிப்பை ஏற்படுத்தி அவர் சொல்லும் அபிப்பிராயங்களுக்கு ஒரு விதமான விமர்சன அந்தஸ்தையும் அமைத்துக் கொடுத்தது எனலாம். மேலும் ‘அவர் ஆதாரங்களை வைத்துத் தமது தீர்க்கத்தரிசனங்களைக் கட்டுரைகள் ஆக்கவில்லை. அவருக்கு அவரே ஆதாரம். தன் சுயதேடலும் ரசனையுமே மூலம்’ (தஞ்சை பிரகாஷ்;, ப.257) என்கிற முறையில் எல்லாவற்றிலும் ஆதாரங்களைத் தேடும் மனித மூளை, அவரது ஆதாரங்களற்ற அபிப்பிராயங்களை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஏற்கக்கூடிய சூழல் தமிழில் உருவானது.

க.நா.சு விமர்சனத்தின் அடிப்படை அலகாக இயங்குவது எது என்று பார்த்தால் நல்ல இலக்கியங்களை அடையாளங்காட்டுவது; பிரதிக்கு அணுக்கமான வாசகர்களை உற்பத்தி செய்வது. இதை அவரே ஓரிடத்தில் இவ்வாறு பதிவு செய்கிறார்:-

நான் விமர்சனம் செய்வதன் நோக்கமே ஒரு சில நூல்களாவது ஒரு சில வாசகர்களை எட்ட வேண்டும் என்ற நோக்கில்தான். தமிழில் இன்னமும் நல்ல வாசகர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் அதிகம் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய வி~யம். நல்ல வாசகப் பரம்பரை இரண்டாயிரம், மூவாயிரம் என்று பெருக வேண்டும். இது மிகமிக அவசியம். (இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், முன்னுரை)

எனவேதான் சுந்தர ராமசாமி ‘க.நா.சு ஒரு இலக்கிய சிபாரிசுக்காரர்தான்’ (சுவடு, தொ, ப.17) என்கிறார். இவ்வாறு நல்ல வாசகரை, நல்ல படைப்பாளியை உருவாக்குவதற்குத் தடையாக இருப்பவைகளாக அவர் கண்டவற்றில் முதன்மையானது வெகுஜன பத்திரிக்கை ஆகும். இவர்கள்தான் எழுத்தை விற்கின்றவர்களாக மாறிய சூழலில், வாசகர்களின் பலவீனங்களைக் குறிவைத்து அவற்றைத் தங்களின் மூலதனங்களாக மாற்றிக் கொள்கிறார்கள். கல்கியையும், தொடர் கதைகளையும் இந்த நோக்கிலேயே விமர்சித்தார்.

சிரமப்படுவதைத் தவிர்க்கவே படிப்பிலும் எல்லோரும் விரும்புகிறார்கள். சிரமப்பட்டுப் படித்த தலைமுறைகளின் காலம் தீர்ந்து விட்டதா? இனி சினிமா, ரேடியோ, டெலிவிஷன் காலத்தில் உறங்கிக் கொண்டே பார்க்கலாம், கேட்கலாம் என்கிற நிலைதானா. (மேலது, ப.19)

இவ்வாறு வெகுஜன பத்திரிக்கை, வாசகர்களை எப்படி மாற்றி விட்டது என்று வருத்தப்படுவதைப் பார்க்கிறோம். பத்திரிக்கைகளின் அளவு மீறிய இலக்கிய ஆதிக்கமும், பிரசுரக் கருத்தர்களின் நாணயமற்ற போக்கும்தான் வாசகர்களின் தரத்தைக் கீழ்நோக்கித் தள்ளிவிட்டது என்று பதிப்பாளர்களையும் விமர்சன வட்டத்திற்குள் இழுத்து வருகிறார்.

எந்தப் புஸ்தகத்தையும் வேண்டுமானாலும், புஸ்தகம் என்று எதை வேண்டுமானாலும் போட்டு எங்களால் லைப்ரரிக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்தே மற்ற எந்த வழிகளிலோ லாபம் தருகிற வகையில் விற்க முடியும் என்று பெருமை பேசுகிற பிரசுரக்கர்த்தர்கள் தமிழில் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். (மேலது, ப.9)

எனவேதான் நேரப் போக்கிற்காகப் பயன்படும் எழுத்துக்களையும் பிரசுரங்களையும் பத்திரிக்கை எழுத்துக்கள் என்று தனியாக அடையாளப்படுத்திவிட வேண்டும் என்றும் அவைகளை இலக்கியத்தோடு போட்டுக் குழப்பக்கூடாது என்றும் கூர்மையான வாதத்தைத் தொடர்ந்து முன்வைத்தார்.

2

இலக்கியத்தின் தர வீழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணியாக விளங்குபவர்கள் தமிழ்ப் பண்டிதர்கள் என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். முறையாகக் கற்பவர்களுக்கு அவ்வளவாக ரசனை இருப்பதில்லை. (இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், பக்.154-155) என்று பேசும் க.நா.சு பண்டிதர்களின் ரசனைக் குறைவு மட்டுமல்ல அவர்களின் பழமை குறித்த மோகமும் தனித்தமிழ் என்பது போன்ற மொழி குறித்த பார்வையும் நல்ல இலக்கிய ஆக்கத்திற்குத் தீங்கு விளைவிக்கின்றன என்று தமிழ்த் துரோகி என்ற வசவுச் சொற்களையும் பொருட்படுத்தாமல் விடாமல் சுட்டிக்காட்டினார்.

…தமிழர்களுடைய பகுத்தறிவின்றிப் பழமை போற்றும் மனப்பான்மை, சமுதாய இனவெறிச் சூழ்நிலை, பார்ப்பனர்கள்தான் இனவெறிக்காரர்கள் என்பதில்லை. மற்ற இனத்தவரும் அதே வெறிக்குள்ளாவதை நாம் காண்கிறோமே… இன்னொன்று தூய தமிழ்வாதம். பண்டிதப் பேராசிரியர்கள் தமிழ் பற்றிப் பிரத்யேகமாகப் போற்றி வளர்த்து வரும் பொய்க் கதைகள். இந்த இரண்டு காரணங்களாலேதான் தமிழ் வளராது இருந்து விட்டது என்று எனக்குத் தோன்றுகிறது (மேலது, ப.11)

இவ்வாறு நவீனத் தமிழ் இலக்கியத்திற்குத் தமிழ்ப் பண்டிதர்கள் எவ்வாறு தடையாக அமைந்தார்கள் என்பதைப் பல இடங்களில் எழுதிக் கொண்டே போகிறார்.

3

க.நா.சு முன்மொழிந்த மற்றொரு முக்கியமான போக்கு விமர்சனத்தில் ஆங்கில, அமெரிக்கப் பாணிகளைப் பின்பற்றுவது ‘ஓர் அசட்டுத்தனமான மோஹம்’ என்ற கருத்தாகும். ஒரு மொழி இலக்கியத்தில் விமர்சனத்திற்கான வார்த்தைகள் அந்த மொழி மரபில், சிந்தனை மரபில் வந்தவையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவற்றிற்கு அர்த்தம் இல்லை என்றார். இதற்காக அவர் வைக்கிற வாதங்கள் மிகவும் ஆர்வம்தரத்தக்கனவாக இருக்கின்றன.

1.    ஏற்கெனவே சிரு~;டி தத்துவம் சற்று சிக்கலானது. புரியாத விஷயங்களைக் கொண்டு (அதாவது மேலைநாட்டு விமர்சன வார்த்தைகளைக் கொண்டு) அதை விளக்க முற்பட்டு மீண்டும் சிக்கிக் கொண்டு அவஸ்தைப் படுவானேன்.
2.    ஆங்கில, அமெரிக்கப் பாணிகளின் மேல் மட்டும் மோஹம் கொள்கிற இந்தத் தமிழர்கள் மற்ற ஐரோப்பிய மொழிகள் மற்றும் உலக மொழிகளிலும் விமர்சன நூல்கள் உண்டு தானே. அவற்றையும் ஏன் அறிய முயல்வதில்லை என்று கேட்கிறார்.
3.    எந்த விமர்சகனும் ஓரளவுக்கு முதல் நூல் அனுபவத்திற்கும் வாசகனுக்கும் குறுக்கே நிற்பவன்தான்.
4.    ஆங்கில, ஐரோப்பிய விமர்சன வார்த்தைகளை (அர்த்தம் தெரியாமலேயே முக்கால்வாசியும்) உபயோகிக்கும் விமரிசகன் வீணன்.

இதிலுள்ள அழகான முரண் என்னவென்றால் மேலைநாட்டு விமர்சனத்தை இங்கே கொண்டுவரல் ஆகாது; உள்நாட்டு மரபில் விமர்சன முறையை உருவாக்க வேண்டும் என வாதாடும் க.நா.சு அத்தகைய ஒரு அரிய முயற்சியை முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதற்குத் தேவையான பழமரபான இலக்கிய இலக்கணம் சார்ந்த முறையான கல்வி அவருக்குள் எந்த அளவிற்குக் கூடி வந்திருந்தது என்பது விவாதத்திற்குரியது. சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்றாலும் முறையான தமிழ்க் கல்வி குறித்து அதுவும் தொல்காப்பியம் போன்ற பொருளிலக்கண நூல்கள், சங்க இலக்கியம் குறித்தெல்லாம் அவர் பெற்றிருந்த கல்வியறிவு விவாதத்திற்குரியதுதான். ஏனென்றால் க.நா.சு மட்டுமல்ல, மறுமலர்ச்சிக் கால நவீன எழுத்தாளர்கள் பலரும் ஆங்கில இலக்கியக் கல்வி மட்டுமே பெற்று வந்தவர்கள்தான்.(தஞ்சை பிரகா~;, ப.253) மேலும் பெரும்பாலும் பிராமண இனத்தைச் சார்ந்த  இந்த எழுத்தாளர்கள் அந்த இலக்கியங்களை நோக்கி நகரத் தேவையில்லாதபடியான ஒரு மனோபாவத்தை அறிந்தோ அறியாமலோ அவர்களே வளர்த்துக் கொள்ளும்படியாக அவர்களுக்கு எதிராகப் பண்பாட்டுத் தளத்தில் இங்கே மிகவும் தீவிரமாக இயங்கிய திராவிட இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் அந்த இலக்கியங்களைக் கைப்பற்றித் தங்கள் அரசியல் அதிகார ஆதாயத்திற்கான கருவிகளாகவே மாற்றிவிட்டன. அதனால்தான் க.நா.சு இப்படி எழுதுகிறார்:-

சரி. இந்தப் பழசைத்தான் இப்படிப் பேசுகிறார்களே. அதைப் பற்றி இந்தத் தமிழ்ப் பெரியார்கள் என்ன செய்திருக்கிறார்கள்?  திரும்பத் திரும்ப முச்சங்கம், தொல்காப்பியம், திருக்குறள், சேக்கிழார்  என இல்லாததையும் இருப்பதையும் ஒரே மாதிரியாகப் பாடிக் கொண்டு தரம் தெரியாதவர்களாகக் குருடர்களாய்ச், செவிடர்களாய், ஊமையர்களாய் வாழ்கிறார்கள். (மேலது, ப.10)

க.நா.சு மட்டும் இன்றைக்குப் பார்க்க வாய்த்திருப்பது போலத் தமிழ்ப் பொருளிலக்கண நூல்களைத் தமிழ்க் கவிதையியலாக வாசித்துப் பழகி இருப்பாரேயானால் (அவருடைய பரந்த வாசிப்பிற்கு இது சாத்தியம்தான்) அவர் முன்வைத்த மரபார்ந்த தமிழ் விமர்சன முறைமை ஒன்று அந்தத் தொடக்க காலத்திலேயே உருவானாலும் உருவாகியிருக்கலாம். ஆனால் எல்லோரும் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். க.நா.சுவிற்கும் அதுதான் விதி. அவர் விமர்சன எழுத்து மூலம் சாதித்தது எல்லாம் தனது உலக இலக்கியம் என்னும் பரந்த வாசிப்பு மூலமாகவும் மொழிபெயர்ப்பு வேலைப்பாடு மூலமாகவும் இலக்கியத் தரம், உலகத் தரம் என்ற ஒரு பிரக்ஞையைத் தமிழர்கள் மனத்தில் விதைத்துக் கொண்டே இருந்ததுதான்.

இலக்கியத்தில் சராசரி பார்த்துப் பயனில்லை. அது சர்க்கார் இலாகா புள்ளிவிவர நிபுணர் பிறரைத் திருப்தி செய்வதற்காகச் செய்ய வேண்டிய வேலை. நமது சிகரங்கள் என்னவென்று கவனிப்பதே ரசிகனாக, வாசகனாக, விமர்சகனாக என் வேலை. (மேலது, ப.180)

இவ்வாறு இலக்கியத்தில் தரம் என்று ஒற்றைப் புள்ளியில் நின்று கொண்டு அமைப்பு, நிறுவனம், அரசியல் என்றெல்லாம் சாராமல் ஒற்றை மனிதராகவே ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் சலிக்காமல் நவீனத் தமிழ் இலக்கியக் களத்தில் இயங்கிய க.நா.சு.வின் முயற்சிகளைச் சோ~லிசத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் எதிரான எழுத்துக்களின் ஓர் அம்சமாகவே கண்டார் கைலாசபதி. திறனாய்வுப் பிரச்சனைகள், (க.நா.சு குழு பற்றி ஓர் ஆய்வு) 1980. என்று அவரை விமர்சிப்பதற்காக ஒரு சிறு நூலையே தயாரிக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார் கைலாசபதி. அந்த அளவிற்கு எப்பொழுதுமே ஒரு அமைப்புரீதியாக இயங்குகிறவர்களுக்கு அமைப்பிற்கு வெளியே இயங்குகிறவர்களின் செயல்பாடு பெரிதும் எரிச்சல் ஊட்டுவதாக அமைவதும் அமைப்பு தரும் பலத்தில், விளம்பரத்தில் அமைப்பில் இருப்பவர்கள் ஆர்ப்பரிப்பது வெளியே இருப்பவர்களுக்கு அமைப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதும் இன்றும் தொடரத்தான் செய்கிறது. இதனாலேயே க.நா.சு.வின் எழுத்தில் சமூகப் பார்வை என்ற ஒன்று அறவே இல்லாது போயிற்றோ? மதமாய், சாதியாய், அதிகார மையங்களாய், குடும்பமாய், பொருளாதார அமைப்பாய், குற்றம் தண்டனை என விளையாடும் நீதிமன்றமாய்த் தன்னைச் சுற்றிச் சமூகம் என ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வே அற்ற எழுத்தாய் நீள்கிறது க.நா.சு.வின் கட்டுரைகள். ப+ரணச்சந்திரன் இதை இப்படிச் சுட்டிக் காட்டுகிறார்:-

க.நா.சு.வின் சமூக அக்கறை இலக்கிய விமர்சன வாயிலாக வெளிப்படவில்லை. விமர்சனம் என்னும் செயல்முறையே இலக்கியத்தைச் சமூக நிகழ்வாகக் காண்பதன் அடிப்படையில் உருவாகிறது. இது க.நா.சு ஒரு விமர்சகராக உயர முடியாமல் போன காரணம். (க.நா.சு.வின் விமர்சன ஆளுமை)

இப்படிச் சமூக வரலாறு, சமூகச் சிந்தனை வரலாறு என்பனவற்றைக் குறித்தெல்லாம் பெரிதும் கவனம் கொள்ளாது இலக்கியத்தின் தரத்தை, எல்லாம் கடந்த ஒரு புனிதப் பொருளாக அணுகியதால்தான் அவரது விமர்சனம் அபிப்பிராயம் என்ற நிலையிலேயே நின்று விட்டது. தரமான இலக்கியத்திற்கு எதிரான சக்திகளாக அவர் அடையாளம் கண்ட வெகுஜன பத்திரிக்கை, பண்டிதர்கள், மேலைநாட்டு மோகம், பழமைப்பற்று, சந்தைத்தனம் முதலியவற்றிற்குப் பின்னால் இயங்கும் அதிகார மையங்கள், சாதியச் செயல்பாடுகள், மூலதனத்தின் மூர்க்கம், மத நிறுவனங்களின் குறுகிய மனம் முதலியவற்றைக் குறித்தெல்லாம் அவர் மௌனம் காத்ததுதான் “அவரது விமர்சனம் எழுத்துலகில் எதிர்ப்புக்களை உண்டாக்கினவே தவிர, உரிய நியாயமான பலன்களை விளைவிக்கவில்லை” (சுவடு (தொ), ப.10) என்று வல்லிக்கண்ணன் போன்றோர் வைக்கிற மதிப்பீடு வலுப்பெற காரணமாகி விடுகிறது.
க.நா.சுக்குள் இவ்வாறு சமூகம் கடந்த ஒரு புனிதப் பொருளாக இலக்கியத்தை அணுகுகிற மன அமைப்பை, தமிழ்ச் சூழலில் அவர் காலத்தில் பின்காலனித்துவத்தின் ஒரு கூறாக வீச்சுடன் பரவிய நவீனத்துவத்தின் மூலமாகவே பெற்றார் எனக் கருதலாம். படைப்பாளியைத் தூக்கி வைத்துக் கொண்டாடிய கற்பனாவாதத் திறனாய்வின் போக்கை விமர்சித்துப் பிரதியை மட்டும் முன்னிறுத்தியது நவீனத்துவம். கருத்துக்களால் ஆனது இலக்கியம் என்ற மரபார்ந்த பார்வைக்குப் பதிலாக வார்த்தையால் புனையப்படும் ஓர் அமைப்புதான் இலக்கியம் என்றது நவீனத்துவம். மேலும் உலகப் போரின் பின் விளைவுகள், தொழிற்புரட்சியின் தீய விளைவுகள் (நகரமயமாதல், வணிகமயமாதல், மதிப்பீடுகளின் சரிவு) முதலியன மனத்தை அலைகழித்தன. இந்நிலையில் ஒருவிதமான தப்பித்தல் உணர்வை வளர்க்கும் வணிக இலக்கியங்கள் பல உருவெடுத்தன. இச்சூழலில் தரமான தளத்தில் தப்பித்தல் உணர்வை அடைவதற்குப் பிரதியின் ஒவ்வொரு உறுப்புக்குள்ளேயும் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியது நவீனத்துவம். இவ்வாறு மனத்திற்கு ஒவ்வாத சமூகச் சூழல் நிலவியது நவீனத்துவம் வேகமாக வளர வாய்ப்பாக அமைந்தது. உலக இலக்கியங்களைப் பரந்த அளவில் ஆங்கிலம் வழி கற்ற க.நா.சு.வுக்குள்ளும் மேற்கண்ட இந்த நவீனத்துவம் உள்ளுணர்வாய்க் கலந்து கரைந்ததன் வெளிப்பாடுதான் க.நா.சு.வின் எழுத்து. எழுத்து மட்டுமல்ல வாழ்வும்தான். ஆனால் விமர்சனம் என்ற முறைமையில் எந்தத் தீமைகளுக்கு எதிராக எழுதினாரோ அதே தீமைகள் தமிழ் இலக்கிய வெளியில் இன்றும் பன்மடங்கு பெருகித் தொடர்வதுதான் நமது இருப்பின் பெரிய அவலம். எனவேதான் க.நா.சு இன்றும் தேவைப்படுகிறார்.

அடிக்குறிப்புகள்

1.    இந்திய இலக்கியம் (1984)
2.    இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் (2002)
3.    இலக்கிய வளர்ச்சி க.நா.சு பார்வையில் (1986)
4.    இலக்கிய விசாரம் (ஒரு சம்பா~ணை) (1959)
5.    இலக்கியச் சாதனையாளர்கள் (1985)
6.    இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984)
7.    உலக இலக்கியம் (1989)
8.    உலகத்தின் சிறந்த நாவல்கள் (1960)
9.    கலை நுட்பங்கள் (1988)
10.    கவி ரவீந்திரநாத் தாகுர் (1941)
11.    சிறந்த பத்து இந்திய நாவல்கள் (1985)
12.    தமிழ் இலக்கிய விமர்சகர்கள் (1979)
13.    படித்திருக்கிறீர்களா? (1957)
14.    புகழ்பெற்ற நாவல்கள் (இரண்டு தொகுதிகள்) (1955)
15.    புதுமையும் பித்தமும் (2006)
16.    மனித குல சிந்தனைகள் (1966)
17.    மனித சிந்தனை வளம் (1988)
18.    முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (1957)
19.    விமரிசனக் கலை (1959)

(சாகித்திய அகாதெமி 01.08.2012 அன்று சென்னையில் நடத்திய க.நா.சு நூற்றாண்டு விழா கருத்தரங்கில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரை)

21 Apr 13:02

இதுதாண்டா மோதி-யின் நீதி பரிபாலனம்!

by வெ. ராமசாமி

(அல்லது) மோதி-யின் ஆட்சியில் ஜொலிக்கும் நீதிபரிபாலனமும் நீதிமன்றங்களும் – சில குறிப்புகள்.

ஊழலும் கையூட்டு பெறுதலும் இந்திய நடைமுறைவிதியாக ஆகிவிட்ட சூழலில் – நீதித் துறையிலும் அது எதிரொலிப்பது என்பதை மிகுந்த தயக்கத்துடன் ஒப்புக்கொள்வது சரியே; ஆனால், இது அத்தனையளவு, முதலுக்கே மோசமில்லை என்கிற அளவில் இருக்கிறது என்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; கருணைமிக்க, நேர்மையான, தைரியசாலிகளான, செயலூக்கமுள்ள நீதிபதிகள் இன்னமும் இருக்கிறார்கள்தான் – சென்னை உயர் நீதிமன்றத்திலேயே, என்னால் குறைந்த பட்சம், ஒரு நீதிபதியை அப்படிச் சொல்ல முடியும் – அவர்தான் ஆர் மகாதேவன் அவர்கள்; இவரைப் பற்றி முன்னமே சிலதடவை எழுதியிருக்கிறேன்.

ஆனால் – இச்சமயம், தமிழக நீதித் துறை ஊழல்களிலும், தொழில்முறை வழக்காடிகள் (இவர்கள் வழக்குரைஞர்கள் அல்லர்; மிக முக்கியமாக,  வழக்கறிஞர்கள் அல்லவேயல்லர்! வழக்கின் துட்டுசம்பாதிக்கும் திறனுக்கேற்ப ஆடுபவர்கள்தான், அவ்வளவே!) படு கேவலமாக ஜாதி வாரியாக அணிகளில் பிரிந்து அடிதடிகளிலும், மழபுலவஞ்சித்தனமாகக் கல்லெறிவதிலும், சுவரொட்டிகளை கண்டமேனிக்கும் ஒட்டுவதிலும் தமிழகம்தான் புள்ளியியல் ரீதியாக,  முன்னே நிற்கிறது என்பதிலும் நாம் பெருமைப்படவேண்டியது நம் திராவிட இயல்பே!

அய்யய்யோ!  நான் இந்தத் தமிழக திராவிட அரசியலானது அதற்கேயுரித்த, ஜாதி அமைப்புகளின் எதிர்மறை விளைவுகளை மட்டுமே மேம்படுத்தும் தன்மையைப் பற்றி, அதன் புள்ளியியல்ரீதியான மகாமகோ மேன்மையைப் பற்றிச் சொல்லவரவில்லை இப்பதிவில்… மன்னிக்கவும்.

-0-0-0-0-0-0-0-

சரி. பொதுவாக, இந்திய நீதி பரிபாலனத்தின், அதன் நிர்வாகத்தின் சில அடிப்படை நிதர்சன, நடைமுறை உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்:

  • இந்த நீதி பரிபாலன அமைப்புமுறை – காலனியாதிக்க வெள்ளைக்காரர்களால் அவர்கள் தேவைக்காகக் கட்டமைக்கப் பட்டது; அதுவரை (சில சமயங்களில், இன்னமும் தொடரும்) இருந்த பாரம்பரிய நீதி பரிபாலன முறைகள் – அநியாயத்துக்கு அடம் ஜோன்ஸ் போன்ற அரைகுறைகளால், நூற்றுக்கணக்கில் இருந்த நீதி நூல்களில், தர்ம ஸாஸ்திரங்களில், பரவலாக அறியப்படாத, உபயோகப் படுத்தப்படாத ஒன்றான மனு நீதியாகச் சுருக்கப் பட்டன; மிகப்பல உரைகள், பிராந்திய, ஜாதி சார்ந்த பழக்கவழக்கங்கள், பஞ்சாயத்துகள் இருந்த அகண்ட  பாரதத்தில் – ஏதோ இரு அணியினருடைய ஹிந்து சட்டம் குறித்த உரைகள் (=மீதாக்‌ஷரா, தாயபாக) பரவலாக்கப் பட்டன; ஏனெனில் இவைதான் வெள்ளைக்காரர்களுக்குப் புரிந்துகொள்ளக் கூடிய அளவில், எளிமையாக இருந்தன – அவற்றின் நீர்த்துப்போன மேலதிக எளிமையாக்கங்கள், ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டன.  அக்காலத்திய இன்னாட்டு  அறிவுஜீவிகளும் இந்தத் திரிப்புகளை  ஒப்புக் கொண்டனர். ஒப்புக் கொள்கின்றனர். தொடர்ந்து தாளம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
  • மலைபோலத் தேங்கி நிற்கும் வழக்குகளும், குமாஸ்தாமுதல்வாதமும், வேலைப் பளுவினால் ஏற்படும் ஊழல்களும், தேவைப்பட்ட  நிர்வாகமுறைகள்/ஆதரவுகள் இல்லாமையும், எல்லாவகை வழக்குகளுக்கும் ஒரேவிதமான அணுகுமுறைகளும், நீதிக்காக நாயாக அலைய வைக்கப்படும் பொதுஜனங்களும் ஒருபுறமிருக்க — தொழில்முறை பொய்சொல்லிகள் உலவும் இடமாகவும் நீதிமன்றங்கள் மாறியுள்ளன
  • ஆனாலும், பல மகாமகோ இடர்களுக்கிடையில், இடியாப்பச் சிக்கல்களுக்கிடையில், பல அற்பப் பதர்களுக்கிடையில் – தொடர்ந்து ஓரளவுக்குச் செம்மையாகவே பணி புரிந்து கொண்டிருக்கும் ஜனநாயக அமைப்புகளில் – இன்னமும் இந்த நீதித் துறை முதன்மையாகத்தான்  இருக்கிறது என்பதற்கு, கடவுள் நம்பிக்கையுடையவர்கள், அவளுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
  • நீதித் துறையில், காலத்துக்கேற்றபடி தேவையான மாற்றங்கள் செய்யப்படவேண்டும், அதன் குறிக்கோள்களை, செயல்பாடுகளைச் செம்மைப் படுத்தி, நடைமுறை மேன்மைகளுக்கு இட்டுச் செல்லப்படவேண்டும் – ஆனால், அதற்கெல்லாம் அரசியல் அறிவும், துணிவும், மேற்கொண்ட செயல்களைச் செய்துமுடிக்கும் செயலூக்கமும் வேண்டும்.

இப்பதிவில், நான் எழுத வருவது: மோதி அவர்கள் – குஜராத்தில், முடிந்தவரை, முட்டிமோதி  மூன்றாவதைச் செய்து காட்டியிருக்கிறார் என்பதை!

-0-0-0-0-0-0-0-

தேங்கியிருக்கும் வழக்குக் குவியல்களை எதிர்கொள்ள குஜராத் அரசு 2006-ஆம் வருடத்தில் கீழ்கண்ட மூன்று நடவடிக்கைகளை எடுத்தது – அதுவும் ஏதேச்சாதிகாரத்துடன் அல்ல, நீதிமன்றங்களை, நீதிபதிகளை, தொழிற்சங்கங்களைக் கலந்தாலோசித்துதான், அவைகளுக்கு வெறுப்பேற்றாத, தொய்வு விளைவிக்காத வகையில்தான்!  இதுதாண்டா தொலை நோக்குப் பார்வை – விஷன்!

  1. நீதிமன்றங்களின் தினசரிப் பணிநேரம் 30 நிமிடங்களுக்கு நீடிக்கப் பட்டது. (அதிகம் இல்லை; சிறுதுளி பெருவெள்ளம்!)
  2. நீதி மன்றங்களின் கோடை விடுமுறை நாட்கள் (இது அக்கால வெள்ளைத் துரைமார்களால் விரும்பப்பட்ட ஒன்று – ஆகவே நம் தேங்காய்முதல்வாதிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று!) ஒரு வாரத்திற்குக் குறைக்கப்பட்டன. (அதிகம் இல்லை, ஒருவாரம்தான்; ஆனால் ஒரு மிக முக்கிய நிர்வாக முடிவு!)
  3. மாலை/இரவு நீதிமன்றங்கள்  செயல்பட ஆரம்பித்தன. (அன்றாட வேலைகளில் இருக்கும் ஆனால் வழக்கு வியாஜ்ஜியங்களில் மாட்டிக்கொண்டு முழிக்கும் பொது மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்; அவர்களுடைய தினசரி வேலைகளுக்குக் குந்தகமில்லாமல் வழக்கில் ஈடுபடலாம்; வருடக் கணக்காக ‘தள்ளி வைப்பு’ வாங்கி மட்டுமே பணம் சேர்க்கும் வழக்காடிகளிலிருந்து விடுதலை பெற்று, செலவினங்கள் குறைந்து தீர்ப்புகளை எட்டலாம்.)

முதலிரண்டு நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

மூன்றாம் நடவடிக்கை 2006 நவம்பெர் வாக்கில் மோதியின் அரசினால் தொடங்கப் பட்டது – இரவு/மாலை நீதிமன்றங்கள் எனும் திட்டம் ஆரம்பித்தது. இதன்படி இரட்டை-ஷிஃப்ட் முறையில், தினமும் இருகாலப் பிரிவுகளில்  நீதிமன்றங்கள் பணிபுரிய ஆரம்பித்தன. இரவுப் பிரிவு: மாலை ஆறு மணிமுதல், இரவு பத்து மணிவரை; நீதிபதிகளுக்கு, முக்கியஸ்தர்களுக்கு இது 6:15 முதல் 8:15 வரை. குஜராத் முழுவதும் பெரியதும் சிறியதுமாக இப்படி நூற்றிச் சொச்சம் இரவு நீதி மன்றங்கள்.

குஜராத் அரசானது, இதற்காக, மேலதிகப் பணியாளர்களை நியமிக்கவில்லை. இருக்கும் அலுவலர்களை,  நீதிபதிகளை வைத்துக் கொண்டு, இரவுப் பணிக்கு மேலதிக சம்பளத்தைக் கொடுத்து (=அவர்கள் மாதச் சம்பளத்தில் 25%) மட்டுமே, இதனை நிர்வாகம் செய்து வருகிறது.

வழக்காடுபொருட்களாக – எட்டுவகையான வழக்குகள் (மோட்டார் வாகனத் தொடர்பு வழக்குகள், ஒரு லட்சத்திற்குக் குறைவான மதிப்புடைய ஸிவில் வழக்குகள், அதிகபட்சம் மூன்று வருட சிறைத்தண்டனை பெறக்கூடிய க்ரிமினல் வழக்குகள், தொழில் தொடர்பான, தொழிலாளிகள் தொடர்பான வழக்குகள் போன்றவை) மட்டும் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. இதனால், மற்ற நீதிமன்றங்கள் முக்கியமான வழக்குகளை மேலும் திறம்படத் தீர்க்கவும் முடிகிறது.

ஆக, ஆரம்பித்த நான்கு வருடங்களில் – ஆறு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளை விசாரித்து மேல்முறையீட்டுக்கு அவசியமில்லாமல் ஒப்புக்கொள்ளப்பட்ட நீதிகளை வழங்கியிருக்கின்றன இந்த இரவு நீதி மன்றங்கள். கடந்த சுமார் ஏழு வருடங்களில் இவை மொத்தமாக, சுமார் 11 லட்சம் வழக்குகளை ஃபைஸல் செய்திருக்கின்றன, தீர்த்திருக்கின்றன.

… மத்திய அரசிடம், இந்த விசேஷத் திட்டம் தொடர்பாக குஜராத் அரசு கேட்ட ரூபாய் ஐந்து கோடியைக் கூட, மத்திய அரசு தரமறுத்துவிட்டது; காரணங்கள்: 1) நீதித்துறை நிர்வாகம் பெரும்பாலும் மாநில அரசுகளின் செலவில்தான் நடத்தப்படவேண்டும், அது கன்கர்ரென்ட் ஜாபிதாவில் இருந்தாலும்கூட  2) மாலை நீதிமன்றங்களுக்கென ஒரு விசேஷ திட்டமோ நிதி ஒதுக்கீடோ மத்திய அரசிடம் இல்லை; மன்னிக்கவும்.

ஒரு தொலை நோக்குள்ள, மக்களின் மேல், நீதி பரிபாலனத்தின் மேல் கரிசனமுள்ள அரசானது – வெற்றிகரமான, உபயோககரமான இத்திட்டத்தை ஒரு ‘உதாரண/மாதிரித் திட்டமாகக்’ கருதி, நிதியொதுக்கி, மற்ற மாநிலங்களிலும் இதனைப் பரவச் செய்ய வேண்டாமோ?

ஆனால் நம்முடைய மத்திய ஸோனியா அரசானது ஒரு இத்தாலிய ராணியின் அரசு என்பதைப் புரிந்து கொள்கிறேன்.

எது எப்படியோ, இத்தாலியில் மாஃபியா அட்டூழியங்களை, வழக்குகளை துரிதமாக எதிர்கொள்ள இந்தத் திட்டத்தை உபயோகப் படுத்தினால் சரி. யாதும் கருவூலமே, யாவரும் கொள்ளைக்காரர்களே. ஆமென்.

ஆக, இன்னொரு முறை குஜராத் அரசு, இந்த விஷயமாக மத்திய ஸோனியா அரசை விண்ணப்பிக்கவோ கேட்கவோ இல்லை!

நிற்க, நம் தமிழகத்தில் கூட இம்மாதிரி இரவு நீதிமன்றங்கள் இயங்கச் செய்ய ஜெயலலிதா அவர்களிடம் திட்டம் ஒன்று இருப்பதாக, மூன்று வருடங்கள் முன் கள்ளக்குறிச்சி அஇஅதிமுக வக்கீல் ஒருவர் பேச்சுவாக்கில் சொன்னார். மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. (யாருக்காவது இதைப் பற்றி மேலதிக விவரங்கள் தெரிந்தால், அம்மையாருக்கு நினைவு படுத்தவும்; அவருக்குப் பாவம், திமுக அரசின் கந்தறகோளங்களை நிமிர்த்தவே நேரம் சரியில்லை என்று ஆதூரமாக நினைத்துக் கொள்கிறேன்! ;-))

இன்னொன்று: என் குஜராத்தி நண்பர் ஜெனாப் ஆரிஃப் ஸையத் ஹுஸ்ஸைய்ன் அவர்கள் என்ன சொல்கிறார் என்றால்: இந்த ஒரு விஷயத்துக்காகவேகூட (=இரவு நீதி மன்றங்களை இயங்க வைத்துள்ளதற்காகவே) மோதி அவர்கள் போற்றப் பட வேண்டியவர். இந்தியா முழுவதும் நகலெடுக்கப் படவேண்டியவர்.

-0-0-0-0-0-0-0-0-0-

இன்னமும் சந்தோஷம் தரும் செய்திகள் இருக்கின்றன: (இவைகளையும், மேற்கண்டவைகளையும், நான் மூன்று முறை தனித்தனியாக சரிபார்த்துத்தான் தரவேற்றியிருக்கிறேன்)

  • கடந்த பத்து வருடங்களில், இருநூற்றுக்கும் மேலான, புதிய, சகல வசதிகளும்  கொண்ட விஸ்தாரமான கட்டிடங்கள், சுத்தமான கழிப்பறைகளுடன் – நீதிமன்றங்களுக்காக ஏற்படுத்தப் பட்டுள்ளன. இவை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப் படுகின்றன. மோதியின் கருத்து என்னவென்றால், ஒரு பொதுமனிதனுக்கு தன் இருப்பிடத்திலிருந்து பத்திருபது கிலோமீட்டர் தூரத்திற்குள் துரிதமாக நீதியும் நியாயமும் கிடைக்கும் வழிவகைவேண்டும் என்பதே.
  • நீதி பரிபாலனத்துக்கும், ஆய்வுகளுக்கும், புலன்விசாரணையாளர்களுக்கும் சரியான பயிற்சிகளைக் கொடுப்பதற்கு ஏதுவாக, குஜராத் அரசு, ஒரு தடயவியல் (=ஃபோரென்ஸிக்) பல்கலைக் கழகத்தையும், பாதுகாப்பியல் பல்கலைக் கழகத்தையும் தொடங்கி நடத்தி வருகிறது.
  • லோக் அதாலத்கள் சுமுகமாக இயங்கி (சுமார் 12000) ஏழு லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளை ஃபைய்ஸல் செய்திருக்கின்றன; பெண் சுயவுதவிக் குழுக்களால் அமைப்பு சாரா முறையில் நடத்தப்படும் நீதிமன்றங்கள் (நாரி அதாலத்), ஜனநாயக முறையில் தங்கள் பகுதிகளிலுள்ள சச்சரவுகளை – இணக்கமாகவும், உரையாடல்கள் மூலமாகவும் தீர்க்கின்றன
  • நீதி மன்றங்கள், அவற்றின் ஆவணங்கள் ஒருங்கிணைக்கப் பட்டு – அனைத்து முக்கிய ஆவணங்களும் செயல்பாடுகளும் கணினி வலைப் பின்னல்களால் இணைக்கப் பட்டுள்ளன. மேலதிகமாக வழக்காடிகளுக்கும், நீதிபதிகளுக்கும் உதவ ஏதுவாக, சட்டப் புத்தகங்களும், நீதி ஆணைகளின் தொகுப்புகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பேணப்படுகின்றன. ஒரு சிறு தாலுக்காவிலிருந்து பெரிய நகர நீதிமன்றம் வரை – இந்த வசதிகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.
  • மார்ச் 21, 2011 முதல், மத்திய அரசு, தான் ‘துரித கதி’ நீதிமன்றங்களுக்கு (= ஃபாஸ்ட் ட்ரேக் கோர்ட்ஸ்) என மாநிலங்களுக்குக் கொடுத்த திட்ட உதவியை நிறுத்தி விட்டது. ஏனென்றால் – வழக்குகள் துரித கதியில் நடத்தப் பட்டால், தீர்ப்புகள் வந்தால் காங்க்ரெஸ் காரர்களுக்கும் கொள்ளைக் (கொள்கை அல்ல) கூட்டாளிகளான திமுககாரர்களுக்கும் பிரச்சினைகள் வந்துவிடும் என்கிற பயமோ என்ன எழவோ!  ஆனால், இந்தியாவிலேயே குஜராத் மட்டும் தான் நாற்பதுக்கும் மேலான ‘துரித கதி’ நீதிமன்றங்களை, தன் அரசுச் செலவில் தொடர்ந்து நடத்தி வருகிறது. வழக்குகளை முடிக்கிறது. (இவ்வளவு பெரிய எண்ணிக்கையில்லாவிட்டாலும், தமிழகத்திலும் இந்த முயற்சி இருக்கிறது எனக் கேள்விப்பட்டேன்; விவரங்கள் எனக்குக் கிடைக்கவில்லை)
  • நீதிமன்ற மேலாண்மை வேறு, நீதிபரிபாலனம் வேறு என்று குஜராத் அரசு, தனிப்பட்ட முறையில் நீதிமன்ற மேலாளர்களை நியமித்திருக்கிறது. இதனால், பல தினசரி மேலாண்மை விஷயங்கள், மற்ற சங்கதிகள் போன்றவற்றைப் பற்றிக் கவலைப் படாமல் – நீதிபரிபாலனம் என்பது சரியாகவே நடக்கிறது. இதுவும் எனக்குத் தெரிந்து இந்தியாவில் (தமிழகத்தைத் தவிர; இதிலும் கேவலமான ஜாதி சச்சரவுகள்)  வேறெங்குமில்லை.

-0-0-0-0-0-0-

… ஆக, சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு – வரலாற்று ரீதியான (=மோசமான காங்க்ரெஸ் அரசு) காரணங்களால் குஜராத்தில் சுமார் 45 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அப்படியே விட்டிருந்தால், இந்த எண்ணிக்கையானது இப்போது சுமார் 140 லட்சத்தை எட்டியிருக்கும். ஆனால், தற்போது நிலுவையில் உள்ள வழக்குகள் சுமார் 16 லட்சம் மட்டுமே!

தமிழகத்தில் ஒரு காலத்தில் நீதிபரிபாலனம் ஒழுங்காகத்தான் இருந்தது. ஆனால் நமக்கும் வரலாற்று ரீதியாக காரணங்கள் (= விடா மல் தொடரும் திரா விட அரசுகள்) இருக்கின்றன, நம்முடைய சமகால நிலைமையை நினைத்துத் தலையில் அடித்துக் கொள்வதற்கு…

-0-0-0-0-0-0-0-0-

பல்வேறு விஷயங்களுக்காக மோதி போன்றவொருவர் பிரதமராக வரவேண்டிய அவசியத்தின் காரணமாக – ஒரு சில விஷயங்களை வெளிக் கொணருவதில் பெருமைப் படுகிறேன்.

… நம் தேசத்தில்,  நல்ல விஷயங்கள், எனக்கு மாளாஆச்சரியம் தரும் வகையில், இன்னமும்  நடந்து கொண்டிருக்கின்றன. இவை தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதும் என்னுடைய அவா.

ஆகவே, மோதி!

நரேந்த்ர மோதி! பதிவுகள்…


21 Apr 08:15

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 57

by jeyamohan

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 4 ]

விதுரன் சத்யவதியிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டதுமே சகுனி என்ன நடக்கிறதென்பதை உய்த்தறிந்து கொண்டான். தன்னருகே அமர்ந்திருக்கும் பீஷ்மரும் அதை உணர்ந்துகொண்டுவிட்டார் என்பதை அவன் அறிந்தான். ஆனால் முகத்திலும் உடலிலும் எந்த மாறுதலையும் காட்டாதவனாக அமர்ந்திருந்தான். விதுரன் மெல்ல வந்து பீஷ்மரிடம் “பிதாமகரே, தாங்கள் சற்று அகத்தளத்துக்கு வரவேண்டும்” என்றான். பீஷ்மர் மலர்ந்த முகத்துடன் எழுந்து சகுனியிடம் “பொறுத்தருள்க” என்று சொல்லி உள்ளே சென்றார்.

அவரது முழுமையான இயல்புத்தன்மை சகுனிக்கு வியப்பளிக்கவில்லை. ஆனால் பீஷ்மரின் பதற்றம் அவனையும் பதற்றத்துக்குள்ளாக்கியது. பீஷ்மரில் முதல்முறையாக நிலைகொள்ளாமையைக் காண்கிறோம் என நினைத்துக்கொண்டான். ஆம், இது முடிசூட்டுவிழாவுக்கான எதிர்ப்பேதான். வேறேதும் பீஷ்மரை கவலைகொள்ளச்செய்யப்போவதில்லை. ஆனால் யார்? இங்கிருக்கும் ஷத்ரிய அரசர்களா? வைதிகர்களா? குலக்குழுவினரா? இங்கே அத்தனை அதிகாரம் கொண்டவர்கள் யார்? அவன் தன் சிறிய விழிகளால் அவையை சுற்றி நோக்கினான். உண்மையில் இங்கே என்ன நிகழ்கிறது? முற்றிலும் வெளியே அயலவனாக அமர்ந்திருக்கிறேனா என்ன?

ஆம், இது மக்களின் எதிர்ப்பேதான் என சகுனி எண்ணிக்கொண்டான். மூத்தகுடிகளுக்கான முன்வரிசையிலும் வைதிகர் வரிசையிலும் பல இருக்கைகளில் எவருமில்லை. அதை எப்படி முன்னரே அவன் கவனிக்காமலிருந்தான் என வியந்துகொண்டான். அவர்களின் எதிர்ப்பு என்ன? அரசன் விழியிழந்தவன் என்பதா? ஆனால் அது முன்னரே அறிந்ததுதான். முற்றிலும் நெறிவிளக்கமும் நூல்விளக்கமும் அளிக்கப்பட்டதுதான். அப்படியென்றால் புதியது என்ன?

எவ்வளவு நேரம்! என்னதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது? அமைச்சர்கள் மட்டுமே அவையில் இருக்கிறார்கள். ஷத்ரியர்களிடம் மெல்ல அச்செய்தி ஒரு இளங்காற்றுபோல கடந்துசெல்வதை சகுனி கண்டான். அனைவர் முகங்களும் சிரிப்பழிந்து பேச்சொலிகள் அணைந்தன. அக்கணமே அவர்கள் முகங்களில் இருந்து செய்தி அரங்கிலிருந்த குடிகள் அனைவரையும் அடைந்தது. குளிர்போல, நிழல்போல அச்செய்தி உருவாக்கிய அமைதி கூட்டத்தின்மேல் பரவிச்செல்வதை சகுனி கண்டான். சற்றுநேரத்தில் மகாமண்டபமே சித்திரம்போலச் சமைந்து அமர்ந்திருந்தது.

எங்கோ ஓரத்தில் கைபட்ட முரசுத்தோற்பரப்பு அதிர்வதுபோல ஒரு மெல்லிய பேச்சொலி கேட்டது. அதனுடன் பேச்சொலிகள் இணைந்து இணைந்து முழக்கமாயின. அம்முழக்கம் எழுந்தோறும் அதில் தங்கள் குரல்மறையுமென்றெண்ணி ஒவ்வொருவரும் பேசத்தொடங்க அது வலுத்து வலுத்து வந்து செவிகளை நிறைத்தது. கூடத்தின் குவைமாடக்குழிவில் அந்த இரைச்சல் மோதி கீழே பொழிந்தது. அங்கிருந்து பார்க்கையில் அசையும் உதடுகளால் மின்னும் விழிகளால் அலையடிக்கும் கைகளால் ஆனதாக இருந்தது கூட்டம்.

முதியவரான பேரமைச்சர் யக்ஞசர்மர் குனிந்து தள்ளாடி தன்னை நோக்கி வருவதை சகுனி கண்டான். அவரைநோக்கியபடி எவ்வுணர்ச்சியும் வெளித்தெரியாமல் அமர்ந்திருந்தான். யக்ஞசர்மர் அவனருகே வந்து “காந்தார இளவரசர் சௌபாலரை வணங்குகிறேன். உடனடி உரையாடல் ஒன்றுக்காக தங்களை பீஷ்மபிதாமகர் அழைக்கிறார்” என்றார். அவர் சகுனியை அணுகும்போதே அனைத்துக்கண்களும் அவர்மேல் பதிந்து அவை அமைதிகொண்டிருந்தது. சகுனி எழுந்ததும் அவையிலிருந்து பேச்சொலி முழங்கி எழுந்தது. சகுனி தன் மேலாடையை மெல்ல சுழற்றி தோளிலிட்டபடி உள்ளே நடந்தான்.

அணியறையை ஒட்டி இருந்த சிறிய மந்தண அறையில் பேரரசி சத்யவதியும் பீஷ்மரும் அமர்ந்திருந்தனர். அருகே விதுரன் நின்றிருந்தான். உள்ளே நுழைந்ததுமே அங்கு நிகழ்ந்த உரையாடலை ஒவ்வொருசொல்லையும் கேட்டவன் போல சகுனி உணர்ந்தான். அவர்கள் சொல்லப்போவதை முன்னரே அறிந்திருந்தான் என்று தோன்றியது. “சௌபாலரே அமருங்கள்” என்றார் பீஷ்மர். சகுனி அமர்ந்துகொண்டதும் சத்யவதி பீஷ்மரை ஏறிட்டு நோக்கினாள். பீஷ்மர் “சௌபாலர் காந்தாரநாட்டுக்காக என்னை மன்னித்தாகவேண்டிய இடத்தில் இப்போது இருக்கிறார்” என்றார். எத்தனை சரியான சொல்லாட்சி என அப்போதுகூட சகுனி ஒருகணம் வியந்துகொண்டான்.

“பிதாமகரின் நீதியுணர்ச்சியை நம்பி வாழ்பவர்களில் நானும் ஒருவன்” என்றான் சகுனி. அந்தச் சொற்றொடர் அத்தனை சரியானதல்ல என்று தோன்றியது. ‘அறம்’ என்று சொல்லியிருக்கவேண்டும். சிந்திக்காமல் சிந்தனையின் கடைசித்துளியை பேசமுடியுமென்றால்தான் நான் அரசியலாளன். பீஷ்மர் “இன்றுகாலை புதியதோர் இக்கட்டு தோன்றியிருக்கிறது. அஸ்தினபுரியின் வடபுலத்து ஜனபதம் ஒன்றில் புவியதிர்வு நிகழ்ந்துள்ளது. அங்கிருந்து வந்த ஆயர்கள் சிலர் அதைகாலையில் ஊர்மன்றில் நின்று கூவியறிவித்திருக்கிறார்கள்.”

அவர் மேலே சொல்வதற்குள்ளாகவே சகுனி அனைத்தையும் புரிந்துகொண்டான். மூச்சுசீறி நெஞ்சு எழுந்தமர “குலத்தலைவர்களைக் கொண்டு இந்த நாடகத்தை நடத்துவது யார்?” என்று கூவியபடி அவன் எழுந்தான். “அஸ்தினபுரி காந்தாரத்துக்கு பெண்கேட்டு வருவதற்குள்ளாகவே இந்நாடகம் முடிவாகிவிட்டதா என்ன?” அது உண்மையில்லை என அவனறிந்திருந்தான். ஆனால் அந்த நிலைப்பாடே அவனுக்கு அப்போது உரிய சினத்தை உருவாக்குவதாக இருந்தது. அச்சினம் உருவானதுமே அது அவ்வெண்ணத்தை உறுதியாக நிலைநாட்டியது. அடுத்த சொற்றொடர் அவன் நாவில் எழுவதற்குள் அவன் அகம் அதையே நம்பிவிட்டது “அஸ்தினபுரியின் பேரரசியும் அவரது சிறு அமைச்சனும் அரசியல்சூழ்ச்சிகளில் வல்லவர்கள் என நான் அறிவேன். ஆனால் இது சூழ்ச்சி அல்ல, நயவஞ்சகம்”

“சௌபாலரே, தாங்கள் சொற்களை சிதறவிடவேண்டியதில்லை” என்று சத்யவதி சொன்னாள். “இந்நிலையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மனிதவல்லமையால் ஆவதனைத்தையும் செய்து முடித்துவிட்டிருந்தோம். இது இறைவிளையாட்டு” சகுனி கையை ஆட்டி அவளைத் தடுத்தான். “இறைவிளையாட்டல்ல இது. இது மானுடக்கீழ்மை இந்நகருக்கு என் தமக்கை மங்கலநாண்சூடி வரும்போது ஒரு வாக்குறுதியளிக்கப்பட்டது. பிதாமகர் பீஷ்மர் அளித்த வாக்கு அது. என் தமக்கை இங்கே மணிமுடிசூடி தேவயானி அமர்ந்த சிம்மாசனத்தில் அமர்வாள் என்று. அந்த வாக்குறுதி எங்கே? அதற்கு மட்டும்தான் நான் விடைதேடுகிறேன்.”

“சௌபாலரே, அந்த வாக்குறுதி இப்போதும் அப்படியே உள்ளது. அதை நிறைவேற்றமுடியாததனால் நான் உயிர்துறக்கவேண்டுமென்றால் அதைச்செய்கிறேன்” என்றார் பீஷ்மர். “அப்படியென்றால் அதைச் செய்யுங்கள். வாருங்கள். வெளியே கூடியிருக்கும் ஷத்ரிய மன்னர்கள் நடுவே வந்து நில்லுங்கள். உங்கள் குடிகளின் முன்னால் நின்று சொல்லுங்கள் உங்கள் வாக்கு வீணாக விரும்பவில்லை என்பதனால் நீங்கள் உங்கள் கழுத்தைவெட்டிக்கொள்வதாக. அதைக்கேட்டபின்னரும் உங்கள் குடிகள் ஒப்பவில்லை என்றால் அதை நானும் ஏற்கிறேன்.”

“காந்தார இளவரசே, தாங்கள் பிழையாகப் புரிதுகொண்டுவிட்டீர்கள். இது அதிகாரப்போர் அல்ல. வைதிகர்களுக்கும் குலமூதாதையருக்கும் இப்புவியதிர்ச்சி என்பது இறையாணை. அதை அவர்கள் ஒருபோதும் மீறமாட்டார்கள். பிதாமகர் அல்ல, இங்குள்ள அரசகுலத்தவர் அனைவரும் சொன்னாலும் சரி” என்றான் விதுரன். “இன்றுகாலையிலேயே என்னிடம் ஆயர்கள் வந்துவிட்டனர். அவர்களனைவரையும் நான் சிறையிட்டேன். ஆனால் அதற்குள் அச்செய்தி நகரமெங்கும் பரவிவிட்டிருந்தது. காலையில் வைதிகரும் குலமூதாதையரும் மன்றுகூடி இறுதி முடிவுசெய்தபின்னர்தான் என்னிடம் வந்தனர்.”

யக்ஞசர்மர் “இளவரசே, அஸ்தினபுரியின் வரலாற்றில் இது புதியதுமல்ல. முன்பு தேவாபி மணிமுடிசூடுவதற்கு எதிராக இதேபோன்ற குரல் எழுந்துள்ளது” என்றார். “விழியிழந்தவன் மன்னனானால் நாடு அழியும் என்ற ஐயம் முன்னரே இருந்தது. மரபு அளித்த அச்சம் அது. அதை பிறநாட்டு ஒற்றர்களும் வளர்த்திருக்கலாம். அதை இந்நிகழ்வும் உறுதிசெய்திருக்கிறது…”

“புவியதிர்வு ஒரு காரணம். அவர்களுக்கல்ல, உங்களுக்காகவேகூட இருக்கலாம்” என்றான் சகுனி. “இளவரசே, இங்குள்ள வேளிர்களுக்கும் ஆயர்களுக்கும் மண் என்பவள் அன்னை. எல்லையில்லா பொறை கொண்டவள். அவளை பிரித்வி என்றும் தரித்ரி என்றும் சூதர்கள் துதிக்கிறார்கள். வேளாண்குடிகளுக்கு பூமி என்றால் என்ன பொருள் என நீங்கள் புரிந்துகொள்ளமுடியாது. புவிபிளப்பதென்பது அவர்களின் தெய்வம் வந்து நின்று வாய்திறப்பதுபோன்றதே” என்றான் விதுரன்.

சகுனி பொறுமையிழந்து கையமர்த்தினான். “இந்த மக்களா இங்கே அனைத்தையும் முடிவெடுப்பது? இங்கே குலமுறைகள் இல்லையா? முனிவர்கள் இல்லையா?” என்றான். “சௌபாலரே இங்குள்ள அரசு நூற்றெட்டு ஜனபதங்களின் தலைவர்களால் தேர்வுசெய்யப்படுவதாகவே இருந்தது” என்று யக்ஞசர்மர் சொன்னார். “மாமன்னர் யயாதியின் காலம் வரை ஒவ்வொரு வருடமும் மன்னர் குடிகளால் தேர்வுசெய்யப்பட்டுவந்தார். யயாதியின் செங்கோல்மீதான நம்பிக்கையே அவ்வழக்கத்தை அகற்றியது. ஆயினும் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பத்தாம் உதயத்தன்று குடித்தலைவர்கள் தங்கள் கோல்களுடன் கூடி மன்னரை வாழ்த்தி அவரை அரியணையமர்த்தும் சடங்கு நீடிக்கிறது. அவர்கள் மறுத்தார்களென்றால் இங்கே அரசமைய முடியாது.”

“அவர்களை வெல்லும் படைபலத்துடன்தான் நான் இங்குவந்திருக்கிறேன்” என்று சகுனி கூவினான். “எதிர்க்குரல்களைக் கழுவேற்றிவிட்டு அரியணையில் என் தமக்கையை அமைக்கிறேன்…” பீஷ்மர் தணிந்த குரலில் “சௌபாலரே, அது நானிருக்கும் வரை நிகழாது. என் கையில் வில்லிருக்கும்வரை பேரரசியின் சொல்லே இங்கு அரசாளும்” என்றார். சகுனி திகைத்தபின் மேலும் உரத்த குரலில் “அப்படியென்றால் போர் நிகழட்டும். போரில் முடிவெடுப்போம், இந்த மண் எவருக்கென. ஒன்று இம்மண்ணை என் தமக்கைக்கென வென்றெடுக்கிறேன். இல்லை நானும் என் வீரர்களும் இங்கு மடிகிறோம்…” என்றான்.

“சௌபாலரே, ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். வெளியே ஷத்ரிய மன்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நம் நிலத்தை வெல்லவிழைபவர்கள்தான். இங்கொரு அரியணைப்பூசலிருப்பது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை. என் குடிமக்கள் அரியணையை விலக்குகிறார்கள் என அவர்கள் அறிந்துகொள்ளவும் நான் வாய்ப்பளிக்க மாட்டேன்” என்றாள் சத்யவதி. “நாம் எடுக்கும் முடிவு எதுவானாலும் இந்த அறைக்குள்தான்.”

“முடிவு ஒன்றே… என் தமக்கை அரியணை ஏறவேண்டும். அவள் இந்த நாட்டுக்குள் கால்வைத்தது சக்ரவர்த்தினியாக. விழியிழந்த இளவரசனுக்கு பணிவிடைசெய்யும் தாதியாக அல்ல” என்றான் சகுனி. “நான் அரசுமுறையை கற்றது ஷத்ரியர்களிடம். மீனவப்பெண்கள் எனக்கு அதை கற்றுத்தரவேண்டியதில்லை” என்று அவன் சொல்லிமுடிப்பதற்குள் பீஷ்மர் அவனை ஓங்கி அறைந்தார். அவன் அந்த அறையின் விசையில் நிலத்தில் மல்லாந்துவிழ அந்த ஒலி அனைவரையும் திடுக்கிடச்செய்தது. “தேவவிரதா!” என கூவியபடி சத்யவதி எழுந்துவிட்டாள்.

சகுனி சினத்துடன் தன் வாளை உருவியபடி பாய்ந்தெழ பீஷ்மர் அந்த வாள்வீச்சை மிக இயல்பாக தவிர்த்து அவனை மீண்டும் அறைந்தார். வாள் உலோக ஒலியுடன் தெறிக்க அவன் சுவரில் மோதிச் சரிந்து அமர்ந்தபின் வலதுகண்ணையும் கன்னத்தையும் பொத்தியபடி தடுமாறி எழுந்தான். பீஷ்மர் “என் முன் எவரும் பேரரசியை இழிவுபடுத்த நான் அனுமதிப்பதில்லை. இதோ நீ அவமதிக்கப்பட்டிருக்கிறாய். அதை எதிர்க்கிறாய் என்றால் என்னுடன் தனிப்போருக்கு வா” என்றார். “பிதாமகரே, உங்கள் சொல்லை தாதைவாக்கென நம்பியதா என் பிழை?” என்று கன்னத்தைப்பொத்தியபடி உடைந்த குரலில் சகுனி கூவினான்.

பீஷ்மர் ஒருகணம் திகைத்தபின் முன்னால் சென்று அவனை அள்ளிப்பற்றி தன் மார்புடன் சேர்த்துக்கொண்டார். “மகனே, உன் அன்பின் வேகம் எனக்குத்தெரிகிறது. அத்தகைய உணர்ச்சிகளை என்னளவுக்குப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் இங்கில்லை. என் மூத்தமைந்தன் அரசேற்கமுடியாதென்று கேட்டபோது என் நெஞ்சில் எழுந்த அனல் உன் அனலைவிட அதிகம்… ஆனால் இன்று வேறுவழியில்லை. அஸ்தினபுரியின் நலனுக்காக நாம் நம் உணர்வுகளனைத்தையும் துறக்கவேண்டியிருக்கிறது. இது இறைவிளையாட்டு” என்றார். சகுனி அவரது விரிந்த மார்பின் வெம்மையை தன் உடலில் உணர்ந்தான். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை அறிந்தான். அவர் தொட்டதும் இறுக்கமாக எதிர்கொண்ட அவன் உடல் மெல்ல நெகிழ்ந்து அவரது பிடியில் அமைந்தது.

VENMURASU_EPI_107

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“நான் என் தமக்கையின் மணிமுடியைக் காணாமல் நாடு திரும்புவதில்லை என்று சூளுரைத்து வந்தவன் பிதாமகரே” என்று சகுனி தலைகுனிந்து சொன்னான். அச்சொற்களை அவனே கேட்டதும் அகமுருகி கண்ணீர் விட்டான். அதை மறைக்க இரு கைகளாலும் கண்களை மூடிக்கொண்டான். கைகளை மீறி கண்ணீர் வழிந்தது. நானா அழுகிறேன் என அவன் அகம் ஒன்று வியந்தது. ஆம், நானேதான் என அவன் அகம் ஒன்று திகைத்தது. அவன் தோள்கள் குறுகி மெல்ல அசைந்தன. அழுகையை அடக்கி மீளப்போகும்போது நீலத்துணியால் விழிகள் மூடிய காந்தாரியின் முகத்தை அவன் கண்டான். மீண்டும் ஒருவிம்மலுடன் கண்ணீர் பெருகியது.

“அந்த வஞ்சினம் அவ்வாறே இருக்கட்டும் மகனே. இங்கே நீ பதினெட்டு வருடம் காத்திரு. வெறும் பதினெட்டே வருடங்கள். உன் தமக்கையின் வயிற்றில்பிறந்த மைந்தன் முடிசூடியதும் நீ நாடு திரும்பலாம். இது என் வாக்கு” என்றார் பீஷ்மர். சகுனி தன் அகத்தை இறுக்கும்பொருட்டு உடலை இறுக்கிக்கொண்டான். அது அவன் கண்ணீரை நிறுத்தியது. சால்வையால் முகத்தைத் துடைத்தபின் தலைகுனிந்து அசையாமல் நின்றான். “சௌபாலரே, இந்த நாட்டில் என் மைந்தனின் வாக்கு என்பது ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்துவது. அது அஸ்தினபுரியின் தெய்வங்களின் வாக்குறுதி” என்றாள் சத்யவதி.

“காந்தார இளவரசே, மூத்த இளவரசரின் அரசு எங்கும் செல்லவில்லை. அது கடனாக இளையவருக்கு அளிக்கப்படுகிறது. பதினெட்டாண்டுகாலத்துக்கு மட்டும். மூத்தவரின் முதல்மகன் அதற்கு இயல்பாகவே உரிமையாளனாகிறான். அவனுடைய அன்னையாக பேரரசியின் சிம்மாசனத்தில் தங்கள் தமக்கை அமர்வார்” என்றான் விதுரன். “தாங்கள் இங்கு வந்தது தங்கள் தமக்கையை அரியணை அமர்த்துவதற்காக மட்டும் அல்ல. அவரை பாரதவர்ஷத்தின் பேரரசியாக ஆக்குவதற்காக அல்லவா? களம்நின்று போர்புரிய என் இரு தமையன்களாலும் இயலாது. உங்கள் தமக்கை வயிற்றில் பிறக்கும் பெருவீரனை உங்கள் கரங்களில் அளிக்கிறோம். அவனை நீங்கள் பயிற்றுவித்து உங்களுடையவனாக ஆக்குங்கள். உங்கள் இலக்குகளை அவனுக்குப் புகட்டுங்கள். இந்த நாட்டின் படைகளையும் கருவூலத்தையும் நீங்கள் கனவுகாணும் பெரும்போருக்காக ஆயத்தப்படுத்துங்கள். பதினெட்டாண்டுகளில் அஸ்வமேதத்துக்கான குதிரை என இந்நாடு உங்கள் முன் வந்து நிற்கும்…”

“ஆம், இளவரசே. நிமித்திகரின் வாக்கும் அதுவே. பாரதவர்ஷத்தை வெற்றிகொள்ளும் சக்ரவர்த்தி பிறக்கவிருப்பது உங்கள் தமக்கையின் கருவில்தான்” என்றார் யக்ஞசர்மர். “இப்போது நிகழ்வனவற்றுக்கெல்லாம் அவனுக்காகவே இவ்வரியணை காத்திருக்கிறது என்றே பொருள். இளவரசர் பாண்டு அதிலமர்ந்து ஆளமுடியாது. இப்போது அவரை அரியணையில் அமர்த்துவது நம் முன் கூடியிருக்கும் இந்தக்கூட்டத்தை நிறைவுசெய்வதற்காக மட்டுமே. ஹஸ்தியின் அரியணையிலமரும் ஆற்றல் அவருக்கில்லை என்பதை நாடே அறியும்.”

சகுனி பற்களை இறுகக் கடித்துக்கொண்டு குனிந்தே நின்றான். அவனுடைய ஒரு கால் மட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது. பொருளற்ற உதிரிக்காட்சிகள் அவன் அகம் வழியாகக் கடந்துசென்றன. முதுநாகனின் இமையாவிழிகள். நெளியும் கரிய சவுக்கின் நாக்கு. அனல்காற்றுகள் கடந்துசெல்லும் செம்பாலை. மென்மணல் வெளி. பொருளறியா இரட்டை வரி போல அதில் பதிந்து செல்லும் பசித்த ஓநாயின் பாதத்தடம். அதன் அனலெரியும் விழிகள். பசியேயான வாய்க்குள் தழலெனத் தவிக்கும் நாக்கு.

சகுனி பெருமூச்சுவிட்டான். குருதி கலங்கிச்சிவந்த ஒற்றைவிழியுடன் ஏறிட்டு நோக்கி “பிதாமகரே, நான் வாங்கிய முதல் தண்டனை உங்கள் கைகளால் என்பது எனக்குப் பெருமையே” என்றான். “இந்த அருளுக்கு பதிலாக நான் செய்யவிருப்பது ஒன்றே. உங்களுக்குப்பின் நான் வாழ்வேன் என்றால் ஒவ்வொரு முறை மூதாதையருக்கு நீர்ப்பலி கொடுக்கையிலும் தந்தையென உங்கள் பெயரையும் சேர்த்துக்கொள்வேன்.” பீஷ்மர் கைநீட்டி அவன் தலையைத் தொட்டு “ஆம், இனி என் மைந்தர்கள் என நான் சொல்லும் ஒவ்வொருமுறையும் அதில் உன் பெயருமிருக்கும்” என்றார்.

சகுனி தலைநிமிராமல் அப்படியே சிலகணங்கள் நின்றான். அங்கிருந்து ஓடி மீண்டும் காய்ந்து அனல்பரவி திசைதொட்டுக் கிடக்கும் வெம்பாலையை அடைந்துவிடவேண்டுமென அவன் அகம் எழுந்தது. ஏதோ சொல்லவருவதுபோல மனம் முட்டியதும் அது ஒரு சொல்லல்ல என்று உணர்ந்து ஒரு கணம் தவித்தபின் குனிந்து தரையில் கிடந்த தன் வாளை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

பீஷ்மர் தளர்ந்து தன் பீடத்தில் தலைகுனிந்து அமர்ந்தார். சத்யவதி விதுரனைப் பார்த்தபின்னர் “தேவவிரதா, இத்தருணத்தில் நாங்களனைவரும் உன்னை நம்பியிருக்கிறோம்” என்றாள். பீஷ்மர் தலையை அசைத்தபடி “இல்லை… இனிமேலும் இப்படி வீணனாக விதியின் முன் தருக்கி நிற்க என்னால் இயலாது. கங்கையின் திசை மாற்ற கங்கைமீன் முயல்வதுபோன்ற அறிவின்மை இது என எப்போதும் அறிவேன். ஆயினும் ஒவ்வொரு தருணத்திலும் என் மேல் பிறர் சுமத்தும் பொறுப்பை ஏற்று அதையே செய்யமுயல்கிறேன்.”

“தேவவிரதா, ஒரு ஷத்ரியனின் கடமையை நீ என்றுமே செய்துகொண்டிருக்கிறாய். அதை எண்ணி வருந்துவதற்கேதுமில்லை. மரணமும் மரணத்துக்கப்பாலுள்ள பேரிழப்புகளும்கூட ஷத்ரியனின் பொறுப்புகளே” என்றாள் சத்யவதி. “உன்னை பிறர் இயக்கவில்லை. உன்னுள் உறையும் ஷாத்ரகுணமே இயக்குகிறது. அது இல்லையேல் நீ இல்லை.”

“ஆம், பிறரல்ல, நானே முழுமுதல் குற்றவாளி” என்றார் பீஷ்மர். “என் ஆணவம். நானே முடிவெடுக்கவேண்டும் என ஒருவர் சொல்லும்போதே நான் என்னை முடிவெடுப்பவனாக நிறுத்திக்கொள்கிறேன். நான் காப்பவன் என்றும் வழிகாட்டுபவன் என்றும் என்னை கருதிக்கொள்கிறேன். மீண்டும் மீண்டும் பெருவல்லமைகள் என்னை கூழாங்கல்லாகத் தூக்கிவிளையாடுகின்றன. அதன்பின்னரும் நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. இனி இந்த கீழ்வேடத்தை நான் அணியப்போவதில்லை.”’

சத்யவதி “தேவவிரதா, இனிமேல்தான் நாம் மிகப்பெரிய பணியைச் செய்யவேண்டியிருக்கிறது. நாம் திருதராஷ்டிரனிடம் இச்செய்தியைச் சொல்லவேண்டும்” என்றாள். “உன் சொல்லுக்கு மட்டுமே அவன் கட்டுப்படுவான்.” பீஷ்மர் தலையை அசைத்து “இல்லை பேரரசி, அருள்கூர்ந்து என்னை நீங்கள் அதற்காக செலுத்தலாகாது. நான் அதைசெய்யப்போவதில்லை” என்றார். “அவனை என் மார்புறத்தழுவி அவன் கூந்தல் வாசத்தை உணர்ந்து, நாவில் ஆன்மா வந்தமர நான் சொன்ன வாக்கு அது.”

“தேவவிரதா, இத்தருணத்தில் இதைச்செய்ய உன்னைத்தவிர எவராலும் இயலாது. திருதராஷ்டிரன் எப்படி இருக்கிறான் என்பதை நான் அறிந்துகொண்டுதான் இருந்தேன். ஒவ்வொரு கணமும் அவன் கொந்தளித்துக்கொண்டிருந்தான். மணிமுடி சூடவே பிறந்தவன் போலிருந்தான். அவனிடம் இதைச் சொல்வது என்பது…” என்றாள். பீஷ்மர் இடைமறித்து “பழங்குலக் கதைகளில் பெற்ற மைந்தன் நெஞ்சில் வாள்பாய்ச்சி பலிகொடுக்கச் சொல்லி கோரிய காட்டுதெய்வங்களைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது அன்னையே. நீங்கள் அதை என்னிடம் கோரலாகாது” என்றார்.

“இன்று நம் முன் வேறு வழி என்ன இருக்கிறது? தேவவிரதா, இந்த நாட்டுக்காக உன் வாழ்வனைத்தையும் இழந்தவன் நீ. பழிசுமந்தவன். புறக்கணிக்கப்பட்டவன். இது நீ நீரூற்றி வளர்த்த மரம். உன் கண்ணெதிரே இது சாய்வதை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறாயா?” “ஆம். அதுவே இறையாணை எனில் அவ்வண்ணமே நிகழட்டும். இதை நான் செய்யப்போவதில்லை. என் காலடியோசை கேட்டதும் நான் அவனை மணிமுடி சூட அழைத்துச்செல்லவிருப்பதாக எண்ணி அவன் புன்னகையுடன் எழுவான். அந்த முகத்தை நோக்கி நான் இதைச் சொல்வேன் என்றால்…”

“நீ செய்தாகவேண்டும்… இது என்…” என உரத்த குரலில் சத்யவதி சொல்ல அதே கணத்தில் பீஷ்மர் எழுந்து தன் வாளை உருவினார். சத்யவதி திகைத்து வாய்திறந்து நிற்க விதுரன் “பிதாமகரே, நான் செய்கிறேன்” என்றான். பீஷ்மர் உருவிய வாளுடன் திகைத்து நோக்கினார். “நான் தமையனிடம் சொல்கிறேன் பிதாமகரே… என்னிடம் விட்டுவிடுங்கள்” என்று விதுரன் மீண்டும் சொன்னான்.

“நீ அதை அவனிடம் சொல்லும்போது பிதாமகர் என்ன சொன்னார் என்றுதான் அவன் கேட்பான். அதற்கு நீ என்ன பதில் சொன்னாலும் அவன் நெஞ்சில் நான் இறப்பேன். அதற்கு முன் நான் இறந்துவிட்டிருந்தாலொழிய அந்தச் சாவிலிருந்து நான் தப்பவியலாது” என்றார் பீஷ்மர். “பிதாமகரே, அவ்வண்ணம் நிகழாமல் அதை முடிப்பேன். என் சொல்மேல் ஆணை” என்றான் விதுரன். “என் முன்னால் நின்று தாங்கள் இறப்பைப்பற்றிச் சொல்லலாமா? தந்தைப்பழி ஏற்றபின் நாங்கள் இங்கே உயிர்வாழ்வோமா?” என்றபோது அவன் குரல் உடைந்தது.

அவனை சிலகணங்கள் உற்றுநோக்கியபின் பீஷ்மர் மீண்டும் பீடத்தில் அமர்ந்துகொண்டார். விதுரன் கண்களை துடைத்தபின் “பேரரசி, தாங்களும் பிதாமகரும் அவைமண்டபம் செல்லுங்கள். மணிமுடிசூட்டும் நிகழ்வுகள் நடக்கட்டும்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

21 Apr 08:15

ந.பிச்சமூர்த்தி கதைகளின் இடம்

by jeyamohan

அன்புள்ள ஜெயமோகன்,

கந்தர்வன் பற்றிய உங்களது கட்டுரையை ( பழைய இடுகை) படித்தேன்.நெகிழ்ச்சியாக இருந்தது. கந்த‌ர்வன் எனது ஆதர்ச எழுத்தாளர்.

ஒரு கதையை படித்தவுடன் நம் ரசனையுடன் ஒத்த நண்பர்களிடம் படிக்கச்சொல்வதும், பகிர்ந்துகொள்வதும் ஒரு உன்னதமான மனநிலை. சு.ரா வின் விகாசம், கந்தர்வனின் கதைகள்தேசம்,பெருமாள் முருகனின் பெருவழி படித்தபோது எனக்கு அந்த மனநிலை இருந்தது . மிகச்சமீபமாக உங்களுடைய‌ “உச்சவழு” படித்துவிட்டு அப்படிதான் கடலூர் சீனுவிடம் பகிர்ந்துகொண்டேன்.அவர் கண்,சந்திப்பு போன்ற கதைகள் இதுபோல் மாறுபட்ட வடிவம் கொண்டவை என்றார்.

அறம் தொகுதியில்அனைத்து கதைகளையும் படித்துவிட்டேன்.ஓலைச்சிலுவை,வணங்கான்,நூறுநாற்காலி கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.ஓலைச்சிலுவை,வணங்கான் இரண்டையும் தனித்தனி நாவலாகவே எழுதியிருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.நான் சமீபமாக உங்களது வலைதளத்தை படித்து

வருகிறேன். இலக்கியம் குறித்த உங்க‌ளுடைய பெரும்பாண்மையான கருத்துக்கள் சரியாக எனக்கு மிகச்சரியாகவே தெரிகிறது.

அப்படியே உங்க‌ளிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும். நீங்கள் சொன்னால் சரியாகஇருக்கும். ந.பிச்சமூத்தி கதைகள் பற்றி உங்கள் மதிப்பீடு என்ன ? நான் கேட்டவரை எல்லோரும் ந.பிச்சமூத்தி ஒரு நல்ல கவிஞர் மட்டுமே,கதைகள் சுமார்தான் என்பதுபோல் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன ?

(இது என் முத‌ல் கடிதம், எதுவும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்)

ஆர்.சரவணன்,புதுக்கோட்டை

அன்புள்ள சரவணன்

ஒருமொழியில் செவ்விலக்கியம் என்பது அதன் ஆரம்பகாலத்தில் உருவாவதும், அதில் பிறகுவளர்ந்து வரக்கூடிய அதன் அனைத்து வழிகளுக்கும் தொடக்கமாக அமைவதுமாகும். நவீனத்தமிழ் செவ்விலக்கியத்தின் தொடக்ககால நாயகர்கள் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி, எம்.எஸ்.கல்யாணசுந்தரம் ஆகியோர். அவர்களின் படைப்புகள் ஆரம்பகாலத்தையவை. ஆகவே அவர்களின் ஆக்கங்கள் பிற மொழி படைப்புகளின் முன்னுதாரணங்களைக் கொண்டிருக்கலாம். பல படைப்புகள் இயல்பான புனைவொருமை கலைவெற்றி கைகூடாதவையாக இருக்கலாம். அந்த மதிப்பீடுகளை நாம் தெளிவாகவே முன்வைக்கவேண்டும். ஆனாலும் அவர்கள் முன்னோடிகள், செவ்விலக்கியத்தை அளித்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

புதுமைப்பித்தனை மட்டுமே நான் இவர்களில் முதன்மையான படைப்பாளி, மேதை என நினைக்கிறேன். பிறர் முன்னோடிகள், அவ்வளவுதான். இன்றைய வாசிப்பில் காலம் கடந்து நிற்கும் முதன்மையான ஆக்கங்கள் என சிலவற்றையே அவர்களில் நாம் கண்டடைய முடிகிறது. ஆனால் அவர்கள் அவர்களை விடமேலான படைப்பாளிகளுக்கு தொடக்கமாக அமைந்திருக்கிறார்கள்.

உதாரணமாக கு.ப.ராஜகோபாலன் தி.ஜானகிராமனுக்கு முன்னோடி. வண்ணதாசன் வரை வந்து மேலும் நீளும் ஒரு மெல்லிலக்கிய மரபின் தொடக்கப்புள்ளி. மௌனி அதேபோல நகுலன் வழியாக கோணங்கி வழியாக நீளும் ஒரு மரபின் தொடக்கம். ப.சிங்காரம், கோபிகிருஷ்ணன் வழியாக வளரும் ஒரு மரபின் முளையை நாம் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தில் காணலாம். புதுமைப்பித்தன் அதற்குப்பின் வந்த அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என்னும் நான்கு வெவ்வேறு வகை எழுத்துமரபுகளின் தொடக்கம்.

அவ்வகையில் பார்த்தால் ந.பிச்சமூர்த்தி ஒரு முக்கியமான தொடக்கப்புள்ளி. அவரது கதைகள் மேலோட்டமான எளிமை கொண்டவை. நேரடியாக வாசகனிடம் பேசமுற்படுபவை. ஆன்மீகமான , உணர்ச்சிகரமான தருணங்களை அழுத்தாமல் சொல்லி கடந்துசெல்லக்கூடியவை. அவ்வகைப்பட்ட நல்ல கதைகளை எழுதக்கூடிய படைப்பாளிகளின் ஒரு மரபு அவரில் இருந்து ஆரம்பிக்கிறது. கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி போன்றவர்களில் ந பிச்சமூர்த்தியின் பாதிப்பு அதிகம். அடுத்த தலைமுறையில் கந்தர்வனிடம். நீங்கள் சரியாகவே அடையாளம் கண்டிருக்கிறீர்கள்

ந.பிச்சமூர்த்தி தமிழ் நவீனக்கவிதைக்கும் தொடக்கம் மட்டுமே, உச்சம் அல்ல. அவரது கவிதைகள் பெரும்பாலும் பாரதி வழி வந்த உருவகக் கவிதைகள். நவீனக்கவிதைக்குரிய உள் அமைதி கொண்டவை அல்ல. ‘கூண்டிலிகுருக்கும் கிளிக்குஞ்சே கண்மூடி ஏங்காதே’ என்று நேரடியாக பேசும் கவிதைகள் அவை. ஆனால் நவீனக்கவிதைக்குரிய படிம மொழி அவரிடமிருந்தே ஆரம்பிக்கிறது.

ந.பிச்சமூர்த்தியின் பலகதைகள் முக்கியமானவை. அடித்தள மக்களின் வாழ்க்கையை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லக்கூடியவை, உதாரணம் காவல், ஆன்மீகமான கதைகள் , உதாரணம் ஞானப்பால். இன்றைய தலித் இலக்கியத்துக்கே அடிப்படையாக அமையும் சில கதைகள்கூட அவரது புனைவுலகில் உள்ளன. அவரது அழகியல்மரபுக்கு என்றுமே தமிழில் வாரிசுகள் இருப்பார்கள்.

ஜெ

ந.பிச்சமூர்த்தி கதைகள் அழியாச்சுடர்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
20 Apr 18:57

குழந்தை ஏற்கனவே புலியைப் பார்த்திருக்கிறது

by ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ்


தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் 

                            ஒரு சின்னஞ்சிறு குழந்தை முதல்முறையாக மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. அந்தக் குழந்தை நம்மில் ஒருவராய் இருக்கலாம், இன்னொரு வகையில் பார்த்தால் அது நாமாகவே இருந்து நாம் அதை மறந்துபோயிருக்கலாம். இந்தப் பின்னணியில் - இந்த வினோதமான பின்னணியில்- அந்தக் குழந்தை இதுவரை பார்த்திராத விலங்குகளைப் பார்க்கிறது.  சிறுத்தைப் புலிகள், ராஜாளி, காட்டெருமைகள்… இன்னும் வினோதமாக, ஒட்டகச்சிவிங்கிகளையும் பார்க்கிறது. திகைக்கச் செய்யும் அளவுக்கு வகைமை கொண்ட விலங்குகளின் ராஜ்ஜியத்தை பார்க்கும் வாய்ப்பு முதல் முறையாக அந்தக் குழந்தைக்குக் கிடைக்கிறது. இந்தக் காட்சி எச்சரிக்கையூட்டவோ அச்சமூட்டவோ செய்தாலும் அந்தக் குழந்தை அதை ரசிக்கிறது. விலங்குக் காட்சி சாலைக்குப் போவதைக் குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகளில் ஒன்று என்று குதூகலம் அடைகிறது. அன்றாடம் நிகழ்ந்தாலும் புதிராகவே இருக்கும் இந்த நிகழ்வை நாம் எப்படி விளக்க முடியும்?

நாம் அதை மறுக்கலாம். மிருகக்காட்சிச் சாலைக்கு திடீரென்று அவசரமாக அழைத்துச் செல்லப்படும் குழந்தைகள், சிறிது காலத்தில், நரம்பியல் நோயுள்ளவர்களாக மாறக்கூடும் என்று நாம் நினைக்கலாம். உண்மை என்னவென்றால், மிருகக்காட்சிச் சாலைக்கே செல்லாத குழந்தை ஒன்று இருக்க முடியாது. அதுபோலவே, நரம்பியல் கோளாறு இல்லாத பெரியவரும் யாரும் இல்லை. எல்லாக் குழந்தைகளும் அறிய விழைபவர்கள் என்று வரையறுக்கலாம். ஒரு கண்ணாடி அல்லது தண்ணீர் அல்லது மாடிப்படிகளைத் தெரிந்துகொள்வதைப் போன்றே மர்மமானதுதான் ஒட்டகத்தைக் கண்டறிவதும். மிருகங்கள் சூழ்ந்த இந்த இடத்துக்கு அழைத்துப் போகும் பெற்றோரைக் குழந்தை நம்புகிறது என்றும் சொல்லலாம். தவிர, அந்தக் குழந்தையிடம் உள்ள பொம்மைப் புலியும், கலைக்களஞ்சியத்தில் உள்ள புலிகளின் படங்களும் ஏதோ ஒருவகையில் ரத்தமும் சதையுமான புலியை அச்சமின்றிப் பார்க்க அந்தக் குழந்தைக்குக் கற்றுத்தந்திருக்கும். தனது தொல்படிம நினைவில் குழந்தை ஏற்கனவே புலியை பார்த்திருக்கிறது என்று ப்ளேட்டோ (இந்த உரையாடலில் பங்கேற்க அவர் அழைக்கப்பட்டிருப்பாரெனில்) நம்மிடம் சொல்லக்கூடும். ஒரு குழந்தை புலிகளை அச்சம் இன்றி பார்க்க இயல்வது எப்படி என்பதற்கான காரணத்தை  இன்னும் ஆச்சரியமூட்டும் வகையில் ஷோபன்ஹர் சொல்லக்கூடும். தானே அந்தப் புலி என்றும் அந்தப் புலிதான் நான் என்றும் அந்தக் குழந்தை அறிந்திருக்கும். அந்தக் குழந்தையும் புலிகளும் ஆசை என்ற ஒற்றை சாராம்சத்தின் மாறுபட்ட வடிவங்களே தவிர வேறோன்றுமில்லை என்பதையும் அது அறிந்திருக்கும்.

நாம் இப்போது நிஜ மிருகக்காட்சி சாலையிலிருந்து புராணிகங்களின் காட்சியகத்துக்குச் செல்வோம். அது சிங்கங்கள் உள்ள மிருகக்காட்சி சாலை அல்ல, ஸ்பிங்ஸ்சஸ், கிரிஃபான்கள் மற்றும் மனித முகமுள்ள குதிரைகள் வசிக்கும் இடம். இரண்டாவதில் உள்ள மிருகங்களின் தொகை முதலாவதைத் தாண்டியிருக்கும். உண்மையான உயிர்களின் கலவையாகவே கற்பனை மிருகங்கள் இருப்பதால் வேறு வேறு கலப்புகளின் சாத்தியங்கள் முடிவற்றவை. சென்டார் மிருகத்தில் குதிரையும் மனிதனும் சேர்ந்திருக்கிறார்கள். மினோடாரில் காளையும் மனிதனும் (மனித முகமும் காளையின் உடலுமாக தாந்தே அதை கற்பனை செய்திருக்கிறார்); இந்த ரீதியில் முடிவில்லாத வகையில் பல விதமான மிருகங்களை உருவாக்க முடியும் - மீன்கள், பறவைகள், ஊர்வன என்று பல சேர்க்கைகளுடன். நமக்கு ஏற்படும் அலுப்பு அல்லது எரிச்சலே அதன் எல்லை. இருப்பினும் அது நடக்கவில்லை; கடவுளுக்கு நன்றி, இன்னும் அவை பிறப்பெடுத்துக்கொண்டே இருக்கும். டெம்ப்டேஷன் ஆப் செய்ண்ட் அந்தோணியின் கடைசிப் பக்கங்களில் மத்திய காலச் செவ்வியல் கால மிருகங்களின் எண்ணிக்கையைத் திட்டவட்டமாகச் சொல்ல முயன்றிருப்பார். சில புதிய மிருகங்களையும் சேர்க்க முயன்றிருப்பார்; அவர் சொல்லும் தொகை அந்த அளவுக்கு ஏற்கத்தக்கதல்ல. ஆனாலும் அவற்றில் சில நமது கற்பனையைத் தூண்டுபவை. தற்போதைய கையேட்டின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் ஒருவர், கனவுகளின் விலங்கியல், சிருஷ்டிகர்த்தாவின் விலங்கியலை விட எவ்வளவு தூரம் மோசமாக இருக்கிறது என்பதை விரைவிலேயே அறிந்துகொள்வார்.

பிரபஞ்சத்தின் அர்த்தம் குறித்து நமக்குள்ள அறியாமை அளவுக்கு டிராகனைக் குறித்தும் அறியாமை இருக்கிறது. ஆனால் மனிதக் கற்பனையை டிராகனின் உருவம் ஏதோ ஒரு வகையில் ஈர்க்கிறது. அதனால்தான் முற்றிலும் மாறுபட்ட இடங்களிலும் காலங்களிலும் டிராகனைக் காண்கிறோம். அதனால்தான், அவசியமான மிருகமாக - நிலையற்ற, தற்காலிகமான ஒன்றாக இல்லாத - மூன்று தலை சிமரா அல்லது கட்டோப்ளபாஸ் ஆகியவை குறித்துப் பேச வேண்டியுள்ளது.

இந்தப் புத்தகம் குறித்து நாங்கள் அறிந்தே இருக்கிறோம். ஒருவேளை இந்த வகைமையில் இதுவே முதல் நூலாகவும் இருக்கலாம். கற்பனை மிருகங்கள் மொத்தமும் தொகுக்கப்படாமல் போயிருக்கலாம். நாங்கள் செவ்வியல் மற்றும் கீழைத்தேயப் படைப்புகளுக்குள் ஆழ்ந்திருக்கிறோம், இதைப் பொருத்தவரை தேடலுக்கு முடிவே இல்லை என்பதை உணர்கிறோம்.

ஓநாய் மனிதன் போல மிருக வடிவங்களை எடுக்கும் மனிதன் குறித்துப் பேசும் பல கதைகளை வேண்டுமேன்றே விலக்கிவிட்டோம்.

(போர்ஹெஸ் தொகுத்த தி புக் ஆப் இமேஜினரி பீயிங்ஸ் நூலின் 1957 இல் வெளியான பதிப்புக்கு எழுதப்பட்ட முன்னுரையின் மொழியாக்கம்)

20 Apr 18:56

கந்தகம் எரியா வயிறு

by Krishnakumar Aadhavan
காற்றசைவில்லை வயோதிகப் பூ
மரத்து 
விழா கயற்றுப் படுக்கையில்
உச்சம்புழுதி
அன்றும் 
கந்தகம் எரியா வயிறு
வலுத்துக் 
கொணரும் சலைவா மாரியின் பருத்த இருட்டில் 
நொண்டிக் கிழவியின் தொங்கு 
முலைக்குள் பால் சுரக்கக் 
கண்ட குழந்தையின் கனவு ஒன்று 
நீடிப்பது என்றால் எவ்வளவு 
சுகமானது 
அது கடலையே கசப்பழித்து
எடுத்து வருவது

20 Apr 11:27

ஜோ- அம்பை- விளக்கம்

by jeyamohan

ஜோ டி குரூஸ் பற்றி நான் எழுதிய குறிப்பில் அம்பை பற்றி ஒரு குறிப்பு இருந்தது. அம்பை ஜோ டி குரூஸுக்கு அவர் இந்துத்துவா என்று தெரியாமல் விருதளித்தமைக்கு வருந்துவதாக சொல்லியிருக்கிறார் என்றும், அரசு விருதுகளைக் கைப்பற்றியிருக்கும் இடதுசாரிகள் இலக்கியத்தை அரசியலால் அளவிட்டு எழுத்தாளர்களை அணிசேர்க்க விருதுகளைப் பயன்படுத்துவதற்கு அதுவே ஆதாரம் என்றும் சொல்லியிருந்தேன்.

நான் ஃபேஸ்புக் பார்ப்பதில்லை. அதை நான் எழுத நான் நம்பும் ஒரு நண்பர் சொன்னதுதான் ஆதாரம். ஆனால் என்னை வேறு சிலர் கூப்பிட்டு அம்பை அவ்வாறு சொல்லவில்லை என்றும் ஜோ டி குரூஸுக்கு விருது கொடுத்ததைப்பற்றி மாற்றுக்கருத்து இல்லை என சொல்லியிருப்பதாகவும் குறிப்பிட்டனர். ஆகவே அம்பை பற்றிய என் வரிகளை திரும்பப்பெற்றுக்கொண்டு வருத்தமும் தெரிவித்தேன்

ஆனால் அந்த நண்பரிடம் அவர் சொன்னதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டேன். ஸ்கிரீன் ஷாட் எடுத்து அம்பை சொன்னதை அவர் எனக்கு அனுப்பியிருந்தார். அம்பை மிகத்தெளிவாகவே சொல்கிறார்.ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி விருது அளித்த நடுவர் குழுவில் அவர் இருந்ததாகவும், ஜோ டி குரூஸ் ஓர் இந்துத்துவா ஆதரவாளர் என்று கேள்விப்பட்டதால் அவரிடமே தொலைபேசியில் அழைத்துப்பேசியதாகவும், ஜோ அவர் இந்துத்துவ அமைப்பு எதிலும் இல்லை என உறுதியளித்தார் என்றும் சொல்கிறார்.இப்போது அவர் மோடிக்கு ஆதரவு அளித்ததைக் கண்டு வருத்தம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்

அதாவது நான் சொன்னதைத்தான் அம்பை சொல்லியிருக்கிறார். விருதுக்கு நூலின் தரம் அல்ல அளவுகோல். அந்த ஆசிரியன் இடதுசாரிக் கருத்துக்களுக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக இருக்கிறான் என்பது மட்டும்தான். அதை அவனிடமே கூப்பிட்டு கேட்டபின்னரே பரிந்துரைசெய்திருக்கிறார். அவன் ‘விசுவாசத்துடன்’ இல்லை என்பதனால் வருத்தமும் தெரிவிக்கிறார்

சாகித்ய அக்காதமி என்பது அம்பை சொந்தப்பணத்தில் அளிக்கும் விருது என்றால் இதை ஏற்கலாம். இலக்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் அளிக்கப்படும் ஒரு விருது அது. மத்திய அரசின் நிதியால் அளிக்கப்ப்டுவது. அதில் தங்கள் சொந்த அரசியல் ‘அஜெண்டா’க்களை இடதுசாரிகள் கலக்கிறார்கள், விருதுக்குழுக்களைக் கைப்பற்றிவைத்து பேரம்பேசுகிறார்கள், அவற்றுக்குப்பதிலாக விசுவாசத்தைக் கோருகிறார்கள் என்பதே நான் சொன்னது. அம்பை ஃபேஸ்புக்கில் சொல்லியிருப்பதற்கு மேலாக எந்த ஆதாரமும் அதற்குத்தேவை இல்லை. ஆம், நான் முன்னால் சொன்னதே சரியானது

அம்பை என் குறிப்பைக் கண்டபின்னர் விருது கொடுத்ததற்கு தான் வருந்தவில்லை, அது தரமான படைப்புதான் என்று தன் நிலைபாட்டை கொஞ்சம் சாதுரியமாக மாற்றிக்கொண்டிருக்கிறார், அவவளவுதான். அதைத்தான் நண்பர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் அம்பை சொன்ன முதல் கூற்றை வாசிக்கவில்லை

ஆகவே என் வருத்தத்துக்கு காரணம் இல்லை. அம்பை பற்றி நான் சொன்னதே சரியானது.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
19 Apr 23:50

காப்ரியல் மார்க்கேஸ்

by Charu Nivedita

டியர் சாரு,

நல்லது…

பெரும் துக்கம் சாரு. நீங்கள் அறிமுகப்படுத்தியவர்தான் காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ். என் முதல் கடித்ததைப் பார்த்தால் ருசு இருக்கும்…

நான் மார்க்கேஸை  புவனோஸ் அய்ரஸில் அளப்பரிய கூட்டத்தில் எளியவனாய் நின்று பார்த்திருக்கிறேன் சாரு.  அவரைப் பார்த்த போது மனதுக்குள் சொன்னேன், “தகப்பனே, உன் அந்திமக் காலத்தில் நான் உன்னுடன் இருப்பேன்…” வாழ்க்கை பார்த்த்தீர்களா, என்னால் போக முடியவில்லை….

எனக்கு உங்கள் மேல்தான்

Continue reading காப்ரியல் மார்க்கேஸ்

19 Apr 23:50

குஜராத் பாஜக-வின் ஆஸிஃபா கான்: ஆஹா! என்ன திறமைவாய்ந்த அரசியல் மேடைப் பேச்சாளர்!

by வெ. ராமசாமி

(அல்லது) இதுதாண்டா ஸ்த்ரீஷக்தி! :-)

ஆஸிஃபா கான் அவர்களின் ட்விட்டர் பக்கத்திலிருந்து...

ஆஸிஃபா கான் அவர்களின் ட்விட்டர் பக்கத்திலிருந்து…

… அத்தனை செய்திகளை நகைச்சுவையுணர்ச்சியுடன், எளிமையான ஹிந்தியில், வசைகள் இல்லாமல் தொடர்ந்து சொல்கிறார்! தெளிவான, ஸ்பஷ்டமான உச்சரிப்புகள். செதுக்கியெடுக்கப் பட்ட கிண்டல்கள்.  நைச்சியமான நையாண்டிகள். தேவையானபோது சரியான ஆங்கிலப் பதங்கள். கூட்டத் திரள்கள் மயங்கிக் கேட்கின்றன, ஆரவாரம் செய்கின்றன! காங்க்ரெஸ் கட்சிக்கும், தீஸ்தா செதல்வாத் தர அழுகுணி ஆட்டம் ஆடும் புளுகுணி மாங்கொட்டைகளுக்கும், தொழில்முறை கஞ்சிக் கலய மனிதவுரிமைவாதிகளுக்கும் திருப்பித் திருப்பிச் சவுக்கடி.

குஜராத்தின் வளர்ச்சியைப் பற்றிய அங்குள்ள மனிதர்களால் புரிந்து கொள்ளக் கூடிய – எளிதில் சரிபார்த்துவிடக் கூடிய விவரங்களைப் பற்றிப் பேசுகிறார். கொள்கைகளைப் பற்றிப் பேசும்போது எளிமையாக்கி அவற்றைச் சாமானியர்களின் வாழ்க்கைகளோடு பொருத்திச் சரியாகப் புரிந்துகொள்ள வைக்கிறார்.  நரேந்த்ரமோதிக்காக வாக்குச் சேகரிக்கிறார். குஜராத்திய கிராம/ நகர ஜனங்களிடம் ‘அர்ரே பாயீ  ’ என்று இழுத்துப் பேசி (என் மனதையும்) கொள்ளை கொள்கிறார்.

இவர் கூட்டங்களில் பல சமயங்களில் (பைசா கொடுத்து உட்காரவைக்கப் படாத) பெண்களும் அதிகம். அவர்களிடம் மோதி ஆரம்பித்த ‘சக்தி மண்டல்’ (= நம்மூர் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போன்றது; ஆனால் வீரியமும், வீச்சும் அதிகம்!) பற்றிப் பேசுகிறார். விவசாயிகளுடன் பேசும்போது, மோதியின் அரசின்கீழ் நீர் மேலாண்மை சரியாகப் பணிசெய்வது பற்றியும், பாரம்பரிய விவசாயம் பற்றியும், அதனை மீட்டெடுத்து, தொழில் நுட்பங்களினூடே வளர்த்தி செம்மையாக்க வேண்டிய அவசியம் பற்றியும் பேசுகிறார். முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் – பொய் வதந்திகளைப் பற்றியும், ஸெக்யூலரிஸ்ம் என்கிற பெயரில் முஸ்லீம்கள் தனிமைப் படுத்தப் படல் பற்றியும் பேசுகிறார்; மோதியின் ஆட்சியில் முஸ்லீம்கள், குஜராத்தி சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினூடே, கண்டுள்ள வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறார்.

புத்தி கூர்மையும், நாக்கில் ஸரஸ்வதி நடனமாடும் வரமும் பெற்றுள்ள இவர் – அண்மைக் காலங்களில் நான் கேட்டுள்ள மேடை அரசியல் பேச்சாளர்களில் முதன்மையானவர்; எனக்குத் தெரிந்து, இவர் தான் குஜராத் மேடைப்பேச்சாளர் எவரையும் ஆழத்திலும் வீச்சிலும் விஞ்சியிருக்கிறார்!

ஏப்ரல் 24 அன்று தேர்தல் நடக்கப்போகும் நம் தமிழகத்தில் – கடந்த ஒரு மாதத்தில் விழுப்புரம்/புதுச்சேரி எனச் சுமார் 15 விதம்விதமான ழ்சிறியபெரிய கட்சிக் கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். என் குருவிமூளைக்கு எட்டியவரை  நம்மிடையே ஒரு ஆஸிஃபா கான் கூட இல்லை.

நம்மவர்கள், திராவிடத் தமிழ் ஏச்சாளர்கள் – ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி – இவர்கள் அரைகுறைக் கத்தல் வாதிகள்;  பேச்சில் நுணுக்கமோ,  பிரச்சினைகளை அலசுவதில் திறமையோ இல்லாதவர்கள். ஆபாசமாகப் பேசுவதில், சவால் விடுவதில், வாய்ச்சவடால்களில் மட்டுமே திறமையுள்ளவர்கள். இதில் பெருந்தலைவர்களும் அடக்கம். (தமிழக் கலாச்சாரம் திடம் வாய்ந்ததல்ல, அது வெறும் உரக்கக் கத்தப்படுவதான ஒன்று மட்டுமே!)

-0-0-0-0-0-0-0-

குஜராத்தின் பாரூச் பகுதியில் பிறந்து வளர்ந்த அம்மணி ஆஸிஃபா கான், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்று, ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். பத்திரிக்கையாளராகவும்  இருந்த இவருக்கு அரசியலில் ஈடுபாடு இளம்வயதில் ஏற்பட்டு, பின்னர் அஹ்மெத் படேல் (இவர் ஸோனியா காந்தியின் ஆஸ்தான நிரந்தர  எடுபிடிகளில் ஒருவர்) அவர்களால் கண்டெடுக்கப் பட்டு 2008லிருந்து 2012வரை காங்க்ரெஸ் கட்சியில் இருந்திருக்கிறார்; அஹ்மெத் படேலின் செயலாளர்களில் ஒருவராகவும், ராஹுல் காந்திக்கு குறிப்புகள் எழுதிக் கொடுப்பவராகவும் இருந்திருக்கிறார்.

ஆங்கிலத்திலும் நல்ல புலமை. குஜராத்தி, ஹிந்தி, உர்துவிலும் நல்ல திறம். 2012ல் மோதி அவர்களால் கவரப்பட்டு  என பாஜகவில் இணைந்த இவர் – பல தொலைக்காட்சி உரையாடல்களில் பாஜகவின் அதிகாரபூர்வ பிரதிநிதியாகக் கலந்து கொண்டிருக்கிறார். அண்மையில் கூட, ஒரு உரையாடலில் ராஜ்தீப் ஸர்தேசாய் போன்ற பரப்புரை அரைகுறைகளை, தன் வாக்குச் சாதுர்யத்தால் வாயடைக்கச் செய்திருக்கிறார். (எனக்கும் தொலைக்காட்சிக்கும் ரொம்ப தூரம் என்பதால் நண்பர் ஆரிஃப் ஸையத் ஹூஸ்ஸைய்ன் அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்ட மேற்கண்ட விஷயங்களை, நானும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.)

-0-0-0-0-0-0-0-0-

இவருடைய பேச்சுகளின் பல வீடியோக்கள் யூட்யூப்-தளத்தில் தரவேற்றப் பட்டுள்ளன. மது பூர்ணிமா கிஷ்வர் அவர்களின் அயரா உழைப்பின் காரணமாகத் தான் இந்த விஷயம் நடைபெற்றிருக்கிறது. அவருக்கு நன்றி.

கீழ்கண்ட வீடியோவின் வலது பக்க சட்டகத்தில் (அதாவது இதனை நீங்கள் யூட்யூப் தளத்திலே சென்று பார்த்தால்)  – மது கிஷ்வர் அவர்களின் உபயத்தில், ஆஸிஃபா கான் பேச்சுகள் பல கிடைக்கின்றன.  பொறுமையாக அல்ல, சந்தோஷப் பட்டுக்கொண்டே பார்த்தால்கூட  பல திறப்புகள் கிடைக்கலாம்.

உங்களில் பலருக்கு ஹிந்தி தெரியாது என்பது உங்களுக்கு நஷ்டம்தான்! :-(

ஆனாலும் இவற்றை அவசியம் பார்க்கலாம். :-) பேச்சுகளின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளலாம். கடைந்தேறலாம்.

மோதியைப் பற்றிய அற்ப எதிர்மறைப் ப்ரொபகன்டாக்களை, பரப்புரைகளை இனம் கண்டுகொள்ளக் கற்றுக் கொண்டு நம் தேசத்துக்கு எது நன்மை பயக்கும் எனச் சிந்திக்கலாம்.

மதுகிஷ்வர், ஆஸிஃபா கான் அவர்களை எடுத்த ஆங்கில பேட்டியின் வடிவம் ஒன்று இங்கே இருக்கிறது; இதில் ஆஸிஃபா அவர்கள், ஏன் அதிக அளவில் முஸ்லீம்கள் மோதி-யின் மீது நம்பிக்கை வைத்து அவருடைய ஆதரவாளர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறார்.

-0-0-0-0-0-0-0-0-0-

 நரேந்த்ர மோதி! பதிவுகள்


19 Apr 23:49

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 56

by jeyamohan

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 3 ]

இரண்டு அடுக்குகளாக இருப்பது திருதராஷ்டிரனின் உலகம். அவனருகே அவன் உளம்சேர்க்கும் ஒலிகளின் ஓர் உலகம். அதற்கு அடியில் அத்தருணமாக விளையாத ஒலிகளின் இன்னொரு பேருலகம். அவன் அதற்கேற்ப தன் அகமும் இரண்டாகப்பிரிந்திருப்பதை அறிந்திருந்தான். அறிந்த எண்ணங்களாலான அகத்துக்கு அடியில் அறிந்தவற்றாலும் அறியாதவற்றாலுமான ஆழ் உலகம். அனைத்தும் வற்றி அந்த ஆழத்து உள்ளத்தில்தான் சென்று தேங்குகின்றன. அங்கிருந்து தனிமையிலும் கனவுகளிலும் அவை ஊறி மேலே வருகின்றன. இசைகேட்கும்போது அவ்விசையின் அடித்தளமாக அப்பால் ஒலித்துக்கொண்டிருக்கும் தூரத்து ஒலிப்பரப்பை அவன் ஆழத்து அகம் எண்ணிப்பற்றிக்கொண்டிருக்கிறது. இசை ஓடிக்கொண்டிருக்கும் முதல் அகத்தின் இடைவெளிகளில் அந்த ஆழத்தைப்படரவிடுகிறது.

“என் உலகம் தெய்வத்தையும் பீடத்தையும் போல இரண்டாக இருக்கிறது விதுரா” என அவன் ஒருமுறை சொன்னான. “மானுடர் அனைவருக்கும் அப்படித்தான் அரசே” என்றான் விதுரன். “அது எப்படி? நான் இங்கிருந்து அசையமுடியாது. உங்களுக்கு விழிகளிருக்கின்றன. நீங்கள் ஏன் முழுதுலகையும் பார்க்கலாகாது?” விதுரன் அவன் கைகளைத் தொட்டு “ஏனென்றால் பார்க்கும் கருவி நம் அகம். அது இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது அரசே” என்றான். சிலகணங்கள் திகைத்தபின் திருதராஷ்டிரன் தலையசைத்தான்.

முடிசூட்டுவிழவுக்கான நாள் குறிக்கப்பட்டபின்னர் தன் இரு உலகங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து எல்லையழிந்துவிட்டன என்பதை அவன் அறிந்தான். உளமறியும் ஒலிகளில் எவை அண்மையவை எவை சேய்மையவை என அவனால் அறியமுடியவில்லை. அறைக்குள் ஒலிக்கும் இசையுடனும் குரல்களுடனும் நகரத்தின் பேரோசை பரவிக்கலந்துவிட்டிருந்தது. கனத்த சங்கிலிகள் ஒலிக்க அவன் அறைக்குள் யானைகள் நடந்தன. ரதசக்கரங்கள் தலைக்குமேல் கடகடத்தோடிச் சென்றன. திரைச்சீலை படபடக்கும் ஒலியுடன் கலந்தது தீப்பந்தங்களின் சுடரோசை. பெருமுரசம் அவன் கையெட்டும் தொலைவிலிருந்து முழங்கியது.

நிலைகுலைந்தவனாக அவன் “விதுரா மூடா, என்ன ஒலி அது…? மூடா என்னருகே வா!” என்று கூவிக்கொண்டிருந்தான். விதுரன் “அரசே இன்னும் சிலநாட்கள் அஸ்தினபுரியே விழவுக்கோலத்திலிருக்கும். ஒலிகளை என்னாலேயே அறிந்துவிடமுடியாது. அனைத்தும் விழாக்களியாட்ட ஒலியே என எண்ணிக்கொள்ளுங்கள்” என்றான். “என் அறைக்குள் எப்படி படைகள் நுழைந்தன? ஏன் படைவீரர்கள் துள்ளிக்குதிக்கிறார்கள்? அவர்கள் கையில் மணிபோல ஓசையிடுவது என்ன?” விதுரன் “அரசே, அதை நான் காணமுடியாது… அது நெடுந்தொலைவில் நிகழ்கிறது” என்றான். திருதராஷ்டிரன் தலையை ஆட்டியபடி “பெண்கள் கூச்சலிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சேடிகள் இப்படிச் சிரிக்கலாகாது” என்றான்.

விதுரன் மறுநாளே ஒரு சூதச்சிறுவனுடன் வந்தான். “அரசே, கவல்கணத்தைச் சேர்ந்த இவன்பெயர் சஞ்சயன். நம் குதிரைக்கொட்டிலில் பிறந்து வளர்ந்தவன். இவன் தந்தை புகழ்பெற்ற பாடகனாக இருந்தவர். இங்கே நம் சேடி ஒருத்தியை கருவுறச்செய்துவிட்டு அகன்றவர் மீளவில்லை. அவளும் மகப்பேறிலேயே மாண்டாள். இவன் முறைப்படி மொழிக்கல்வியும் வேதப்பயிற்சியும் பெற்றவன். தேர்க்கலையும் பயில்கிறான். இவனுடைய ஆசிரியரான சுமந்தர் அவரது மாணவர்களில் இவனே பேரறிஞன் என்று சொல்கிறார். இவன் இனிமேல் இரவும்பகலும் தாங்கள் விரும்பும் நேரம் முழுக்க தங்களுடன் இருப்பான்” என்றான்.

“எனக்கு எவர் உதவியும் தேவையில்லை. அந்தச்சிறுவனை இப்போதே போகச்சொல். அருகே நின்றால் அவனை நான் அறைந்தே கொன்றுவிடுவேன்” என்று திருதராஷ்டிரன் கூச்சலிட்டான். தன் இருகைகளையும் ஓங்கி அறைந்து “சிறுவன் கையைப்பற்றிக்கொண்டு நான் நடக்கவேண்டும் என்கிறாயா? நான் அஸ்தினபுரியின் அரசன். நீ என் அமைச்சன் என்றால் என்னருகே நில். உனக்கென்ன வேலை?” என்றான். “அரசே, சிறுவர்களின் கண்களைப்போல கூரியவை வேறில்லை. அவர்களின் செவிகள் கேட்பதை பிறர் கேட்பதுமில்லை” என்றான். “நீ ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. நீ வளர்ந்துவிட்டாய். விழியிழந்தவன் அருகே நிற்பதை அவமதிப்பாக எண்ணுகிறாய்” என்றான் திருதராஷ்டிரன்.

சஞ்சயன் தன் இனிய குரலில் “அரசே, தாங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று சொல்லி கைகூப்பியபடி அருகே சென்றான். “அருகே வராதே. ஒரே அடியில் உன் தலை சிதறிவிடும்!” என்று திருதராஷ்டிரன் கூவினான். “தங்களிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன். கொல்லவேண்டுமென விரும்பினால் அதைச்செய்யுங்கள்” என்றபடி சஞ்சயன் திருதராஷ்டிரனின் அருகே வந்து குனிந்து அவனது பாதங்களைத் தொட்டான். திருதராஷ்டிரன் திகைத்தவன் போல சிலகணங்கள் இருந்துவிட்டு “நீள்வாழ்வுடன் இரு!” என வாழ்த்தினான்.

சஞ்சயனின் தோள்களைத்தொட்டு வருடி மேலே சென்று அவன் காதுகளையும் குழலையும் கன்னங்களையும் மூக்கையும் தொட்டபின் திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் “நீ இன்னமும் சிறுவன். விழியிழந்தவன் அருகே வாழ்ந்தால் உன் உடல் வற்றும். அறிவும் உணர்வும் வளர்ச்சியடையாது. ஆகவே நீ இங்கிருக்கவேண்டியதில்லை” என்றான். இருகைகளையும் விரித்தபடி திருதராஷ்டிரன் சொன்னான் “அவன் என் தம்பி. என்னருகே அவன் இருந்தால் அவன் குறுகமாட்டான். நான் வளர்வேன்.”

“அரசே, எந்நிலையிலும் வளர்ச்சிநிலைக்காத ஒருவனைத்தேடித்தான் இத்தனைநாள் நானும் காத்திருந்தேன். தன்முன் வரும் அனைத்தையும் அறிவாக மாற்றிக்கொள்ளும் ஒருவனை இதோ கொண்டுவந்துள்ளேன். இவன் என்னுடைய சிறுவடிவம். உங்கள் ஒலிகளின் உலகம் இவனுக்கு புதிய அறிவின் வழிகளையே திறந்துகாட்டும். தாங்கள் விழியில்லாமல் வளர்ந்தது போல் இவன் அன்பிலாது வளர்ந்திருக்கிறான். தங்கள் பேரன்பு இவனை வான்மழைபோலத் தழைக்கச்செய்யும்” என்றான் விதுரன்.

திருதராஷ்டிரன் புன்னகையுடன் மீண்டும் சஞ்சயன் தோள்களைத் தொட்டான். “உன் பெயர் சஞ்சயன் அல்லவா?” என்றான். “ஆம் அரசே” என்றான் சஞ்சயன். “நல்லவெற்றிகளை அடைபவன் என்று பொருள். உண்மையான வெற்றி எதுவோ அதை நீ அடைவாய்” என அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினான். “அங்கே யானையின் ஒலிகள் கேட்கின்றன. யானைகள் இங்கே எங்கு வந்தன?” சஞ்சயன் “அரசே, யானைகள் தொலைவில் அரண்மனை முற்றத்தில்தான் நிற்கின்றன. நீங்கள் உங்களுக்குள் யானையின் ஆற்றலை உணரும்போது அவற்றின் ஒலிகளைக் கேட்கிறீர்கள்” என்றான். திருதராஷ்டிரன் “ஆம். அதுவே உண்மை…” என்று முகம் மலர்ந்தான்.

மங்கலச்சேவகர் திருதராஷ்டிரனை அணிசெய்து முடித்தபின் மெல்ல “அரசே அணிகள் முடிந்துவிட்டன” என்றார்கள். “யார், யார் அதைச் சொன்னது? மூடா, நான் அந்த நீலமணிவைரத்தை என் தோள்களில் கட்டச்சொன்னேன்…” என்றான் திருதராஷ்டிரன். “அதை அப்போதே கட்டிவிட்டோம் அரசே” என்றான் சேவகன். திருதராஷ்டிரன் தன் கைகளால் துழாவி அந்த வைரத்தைத் தொட்டபின் “என் செவ்வைரம் எங்கே? அதை என் கையில் கட்டச்சொன்னேனே?” என்றான். “அரசே அனைத்து அணிகளையும் முறைப்படி பூட்டிவிட்டோம்” என்ற சேவகன் “வெளியே அனைவரும் காத்திருக்கிறார்கள். முடிசூட்டு விழவுக்கான மங்கலத்தருணம் அணுகிக்கொண்டிருக்கிறது” என்றான். திருதராஷ்டிரன் சினத்துடன் “நான் அணிகளை முழுமைசெய்யவேண்டாமா? முதலில் என் பதக்கமாலையை எடு” என்றான்.

சேவகர்களில் ஒருவன் மெல்ல வெளியே சென்று காத்துநின்றிருந்த சஞ்சயனை நோக்கி கைகாட்டி முடிந்துவிட்டது என்றான். சஞ்சயன் உள்ளே வந்து “அரசே, நாம் கிளம்புவோம். அங்கே பாரதவர்ஷமே தங்களுக்காகக் காத்திருக்கிறது” என்றான். “இதோ சற்று நேரம், என் அணிகளை முடித்துவிடுகிறேன்” என்றான் திருதராஷ்டிரன். சஞ்சயன் அருகே வந்து அவன் கைகளைத் தொட்டு “அரசே, இசை அதன் உச்சத்தை அடைவதுபோல தங்கள் அணிவரிசை முடிவடைந்துவிட்டது. இனிமேல் ஒரு சுவரம் சேர்ந்தாலும் அது அபசுதியே ஆகும். ஆகவேதான் நான் உள்ளே வந்தேன்” என்றான். திருதராஷ்டிரன் மலர்ந்து “உண்மையாகவா?” என்றான். “அரசே வேங்கைமரம் பூத்ததுபோலிருக்கிறீர்கள்” என்றான் சஞ்சயன்.

“மூடா மூடா” என்று திருதராஷ்டிரன் நகைத்தான். “இதற்குள் அரசனுக்கு முகத்துதி செய்வதெப்படி என்று கற்றுக்கொண்டிருக்கிறாய்…” அவன் தோள்களைப்பற்றியபடி எழுந்து “தேவியர் அணிமங்கலம் முடிந்துவிட்டதா?” என்றான். “அனைத்தும் முடிந்துவிட்டது. அனைவரும் அணியறைக்குச் சென்று தங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.” “ஆம் ஒலிகள் கேட்கின்றன. நான் இப்போது சபை நடுவிலா இருக்கிறேன்?” “அரசே சபை நெடுந்தொலைவில் இருக்கிறது. தங்கள் உள்ளம் அங்கு சென்றுவிட்டது.” “பல்லக்குகளின் மணிகள் ஒலிக்கின்றன. பாவட்டாக்கள் சிறகோசை எழுப்புகின்றன.” “ஆம் அரசே அவை அங்கே மண்டபத்தில். நாம் இங்கு அரண்மனை அணிக்கூடத்தில்தான் இன்னமும் இருக்கிறோம்.”

அவர்கள் வெளியே வந்தபோது சேவகர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். “அஸ்தினபுரியின் இளவரசர் வாழ்க! ஹஸ்தியின் அரியணை வாழ்க! குருகுலம் வாழ்க! சந்திரமரபு வாழ்க!” திருதராஷ்டிரன் “அவர்கள் ஏன் இளவரசர் என்கிறார்கள்?” என்றான். “அரசே இன்னும் தாங்கள் அரியணையில் ஏறவில்லை.” திருதராஷ்டிரன் சஞ்சயனின் தோள்களைப்பற்றியபடி நடந்தான். சஞ்சயன் அவனுக்கு அதற்குள் நன்கு பழகியிருந்தபடி தன்னியல்பாக காட்சிகளை சொல்லிக்கொண்டு வந்தான். “அரண்மனை மங்கலத்தோற்றம் கொண்டிருக்கிறது. மலர்மாலைகள் தெரியாத இடமே இல்லை. மலர்தேடும் வண்டுகள் சுற்றிலும் பறக்கின்றன. தூண்களும் கதவுகளும் செவ்வரக்கு மீது எழுதப்பட்ட அணிக்கோலங்களால் பொலிவுகொண்டிருக்கிறன. அரசே தங்களை எதிரேற்றுக் கொண்டு செல்ல சோமர் வந்திருக்கிறார்.”

“விதுரன் எங்கே?” என்றான் திருதராஷ்டிரன். “அவர் இங்கில்லை. அவரது பணிகள் இப்போது உச்சம் கொண்டிருக்கும்.” “சோமர் மட்டுமா வந்திருக்கிறார்?” என்றான் திருதராஷ்டிரன். “ஆம் அரசே, பிற அனைவரும் அங்கிருந்தாகவேண்டும். ஐம்பத்தைந்து ஷத்ரியர்களும் வந்திருக்கிறார்கள். சான்றோரும் குடிமூத்தாரும் வைதிகரும் வந்திருக்கிறார்கள். ஏற்புமுறையில் சிறுபிழைகூட நிகழலாகாது” என்றான் சஞ்சயன். “ஆம் சிறுபிழை நிகழ்ந்தாலும் அதற்குரிய தண்டனையை நான் வழங்குவேன்” என்றான் திருதராஷ்டிரன் .

சோமர் வந்து வணங்கி “அரசே, தாங்கள் மகாமண்டபம் செல்வதற்காக தனியான பாதை ஒன்று ஒருங்கியிருக்கிறது. அதன்வழியாகச் சென்று மண்டபத்தின் அணியறைக்குள் நுழையலாம். அங்கிருந்து குடையும் கவரியும் மங்கலமும் அகம்படியுமாக அவைநுழையலாம்” என்றார். திருதராஷ்டிரன் அவரை நோக்கி கையசைத்துவிட்டு தலையை ஒலிகளுக்காக சற்றே சாய்த்துக்கொண்டு நடந்தான். சஞ்சயன் அவன் கைகளைப்பற்றிக்கொண்டு அங்கே தெரியும் காட்சியை சொல்லிக்கொண்டே சென்றான். “மரவுரி விரிக்கப்பட்ட பாதை. தலைகுனியவேண்டியதில்லை, வாயில்கள் உயரமானவை. இருபக்கமும் நெய்விளக்குகளின் சுடர்கள் அசைகின்றன. பாவட்டாக்களும் பட்டுத்தூண்களும் காற்றிலாடுகின்றன. வேல் ஏந்திய வீரர்கள் அவற்றின் மறைவில் நின்றுகொண்டிருக்கிறார்கள்…”

VENMURASU_EPI_106_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“சோமா மூடா” என்றான் திருதராஷ்டிரன். “அங்கே அவையில் என்னருகே பிரகதியும் இருக்கவேண்டும்.” சோமர் “அரசே அவர் வைசியப்பெண். அவருக்கு அதற்கான நூல்நெறி ஒப்புகை இருக்காதென எண்ணுகிறேன்” என்றார். “அப்படியென்றால் அவள் எங்கிருப்பாள்?” “அரசகுலப் பெண்டிர் அமர்வதற்கான சபை வலப்பக்க நீட்சியில் உள்ளது. இடப்பக்க நீட்சியில் அரண்மனைப்பெண்டிர் அமர்வார்கள். அங்கே அவர்களும் இருப்பார்கள்.” திருதராஷ்டிரன் “அங்கே அவளை முதன்மையாகக் கொண்டு அமரச்செய். அவள் தலையில் ஒரு வைர அணி இருந்தாகவேண்டும். அவள் என் விருப்புக்குரியவள் என அவையில் அனைவரும் அறிந்தாகவேண்டும்.” சோமர் தலைவணங்கி “ஆணை” என்றார்.

அவையின் ஒலிகளால் தன் அகத்தின் இரு அடுக்குகளும் நிறைவதை திருதராஷ்டிரன் உணர்ந்தான். காற்றுவீசும்போது கவரிகள் குழைந்தாடும் ஒலி. சாளரத்திரைச்சீலைகள் படபடக்கும் ஒலி. நூற்றுக்கணக்கான தொண்டைச்செருமல்களையும் தும்மல்களையும் தனித்தனியாகக் கேட்டான். ஷத்ரியர்கள் தங்கள் அமைச்சர்களிடமும் ஏவலர்களிடமும் மெல்லியகுரலில் பேசுவதை அவர்களின் அணிகள் ஒலிப்பதை வாளுறைகள் இடையில் முட்டுவதை கங்கணங்கள் இருக்கையின் கைகளில் அமைவதை. மண்டபத்தின் முரசுக்கோபுரத்தில் இருந்த பெருமுரசின் தோல்பரப்பில் பட்ட காற்று விம்மியது. யானைகளின் காதசைவின் காற்றொலிகள். கால்களைத் தூக்கிவைத்து சங்கிலிகளை ஆட்டுகின்றன அவை. ரதசக்கரங்களின் குடங்களில் ஆரங்கள் உரசிச்செல்கின்றன.

நான்கு கோட்டைவாயில் முற்றங்களிலும் கூடிநின்ற பல்லாயிரம் மக்கள் வெயிலில் வழியும் வியர்வையுடன் கிளர்ச்சிகொண்டு பேசியதை முழுக்க கேட்கமுடியுமென்று எண்ணினான். பல்லாயிரம் வாள்கள் கவசங்களில் உரசிக்கொள்கின்றன. பல்லாயிரம் வாய்கள் தாம்பூலச்சாற்றை உமிழ்கின்றன. பல்லாயிரம் கால்கள் மண்ணை மிதிக்கின்றன. பெண்களின் சிரிப்புகள். குழந்தைகளின் சில்லோசைகள். எங்கிருக்கிறேன் நான்! நான் எங்கிருக்கிறேன்? “சஞ்சயா மூடா, நான் எங்கிருக்கிறேன்?” “அரசே நீங்கள் இன்னும் அணியறையை அடையவில்லை. முடிசூட்டுவேளை அணுகிவருகிறது.”

விப்ரர் வந்து வணங்கி “அரசே தாங்கள் அணியறைக்குள் இவ்வாசனத்தில் அமருங்கள். வெளியே வைதிகர் ஹஸ்திமன்னரின் அரியணைக்கு பூசனைசெய்கிறார்கள்” என்றார். “என்ன பூசை?” என்றான் திருதராஷ்டிரன். “அரசே, நேற்று நம் தொல்குடி மூத்தார் அதற்கு உயிர்ப்பலி கொடுத்து பூசனை செய்தனர். அப்போது அதிலிருந்த நகர்த்தெய்வங்களை விலக்கி கானகத்தெய்வங்களைக் குடியமர்த்தினர். இப்போது அரியணையை தூய்மைசெய்து மீண்டும் நகர்த்தெய்வங்களை நிறுவிக்கொண்டிருக்கிறார்கள்.” “அதை முன்னரே செய்யவேண்டியதுதானே?” என்றான் திருதராஷ்டிரன். “அரசே காலைமுதல் தொடர்ந்து பூசனைச்சடங்குகள்தான் நடந்துகொண்டிருக்கின்றன.”

ஒரு வீரன் வந்து பணிய, சோமர் “அரசே நான் உடனே சென்றாகவேண்டியிருக்கிறது” என்று பணிந்துவிட்டு விலகிச்சென்றார். “சஞ்சயா என்ன நடக்கிறது?” என்றான் திருதராஷ்டிரன். சஞ்சயன் அரங்குக்குள் சாளர இடைவெளி வழியாக எட்டிப்பார்த்து “அரங்கு நிறைந்திருக்கிறது அரசே. நீள்வட்ட வடிவமான விரிந்த கூடம். அதன் வலப்பக்கம் ஷத்ரிய மன்னர்களும் இடப்பக்கம் பிறகுறுநிலமன்னர்களும் பட்டுவிரிப்பிட்ட பீடங்களில் அரைச்சந்திர வடிவில் அமர்ந்திருக்கின்றனர். மகதத்தில் இருந்தும் காசிநாட்டில் இருந்தும் அரசப்பிரதிநிதிகளாக இளவரசர்கள்தான் வந்திருக்கின்றனர். பிறமன்னர்களில் தொலைதூரத்து காமரூபத்தில் இருந்தும் வேசர திருவிட தமிழ்நிலங்களில் இருந்தும் மன்னர்கள் அரசகுடிப்பிறந்த தூதுவர்களை அனுப்பியிருக்கின்றனர்” என்றான்.

“அனைத்து மன்னர்களும் தங்கள் அணித்தோற்றத்தில் இருக்கிறார்கள். சபையின் அப்பகுதியெங்கும் காலைவானம் பொன்னுருகி வழிந்துகிடப்பதுபோலத் தோன்றுகிறது. அதில் பல்லாயிரம் விண்மீன்கள் என வைரங்கள் ஒளிவிடுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவர் முக்கியத்துவத்துக்கு ஏற்ப பீடங்கள் அமைந்திருக்கின்றன. எவருக்கும் தங்கள் பீடம் சரியானபடி இருக்கிறதென்ற எண்ணமிருப்பதாக முகங்கள் காட்டவில்லை. ஒவ்வொரு மன்னனுக்குப் பின்னாலும் அகம்படி செய்யும் சேவகன் ஒருவனும் அமைச்சர் ஒருவரும் நின்றிருக்கின்றனர். அவர்களின் தலைக்குமேல் தொங்கவிடப்பட்ட வெண்கவரித்தொகைகளை செம்பட்டுக்கயிறுகள் இழுபட்டு அசைத்துக்கொண்டிருக்கின்றன. அவை அவர்களை அடுமனையில் இறக்கிவைக்கப்பட்ட பாத்திரங்கள்போல வீசிக்குளிர்விக்கின்றன.”

திருதராஷ்டிரன் சிரித்தபடி “மூடா, உன் இளமைத்துடுக்கை காட்டாதே. எதைக் காண்கிறாயோ அதைச் சொல்” என்றான். “என் இளைய கண்களால் மட்டும்தானே நான் பார்க்கமுடியும்?” என்றான் சஞ்சயன். “மக்கள் இருக்கிறார்களா? மக்கள் எவ்வகைப்பட்டவர்கள்?” என்றான் திருதராஷ்டிரன். சஞ்சயன் “அரங்கின் முகப்பில் வலப்பக்கம் கம்பளங்களில் நூற்றெட்டு வைதிககுலங்களின் முதுவைதிகரும் அருகே உதவிக்கு ஒரு மாணவருடன் அமர்ந்திருக்கின்றனர். இடப்பக்கம் அஸ்தினபுரியின் நூற்றெட்டு பெருங்குடித்தலைவர்களும் தங்கள் குலச்சின்னங்களைச் சூடிய தலையணிகளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப்பின்னால் அஸ்தினபுரியின் அனைத்து குலத்தலைவர்களும் அவரவர் வருணப்பகுப்புக்கு ஏற்ப பிரிந்து அமர்ந்திருக்க அவர்கள் முன்னால் நறுஞ்சுண்ணமும் தாம்பூலமும் மங்கலமலர்களும் மஞ்சளரிசியும் பரப்பப்பட்ட தாலங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஊடே சேவகர்கள் நடமாடுவதற்கான பாதை நெளிந்து நெளிந்து செல்கிறது. தேன்தட்டில் தேனீக்கள் போல சேவகர் இன்னீரும் தாம்பூலமும் கொண்டு நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.”

“அவர்கள் என்ன உண்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கெதற்கு? பிதாமகர் என்ன செய்கிறார்?”என்றான் திருதராஷ்டிரன். “அவர் வலப்பக்கம் மரவுரி விரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்திருக்கிறார். கைகளை மார்பின்மீது கட்டி அரியணைமேடையையே நோக்குகிறார். அவர் அருகே காந்தார இளவரசரான சௌபாலர் அமர்ந்திருக்கிறார். அவர் இருக்குமிடத்தையே மறந்தவர் போல சிம்மாசனத்தை மட்டும் நோக்கிக் கொண்டிருக்கிறார்…” என்றான் சஞ்சயன். “சிம்மாசனமா?” என்றான் திருதராஷ்டிரன் முகம் விரிய. “ஆம் அரசே. மண்டபத்தின் மேற்குமுனையில் கிழக்குநோக்கியதாக அரியணைபீடம் அமைக்கப்பட்டு அதன்மீது கருவூலக்காப்பகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஹஸ்தியின் சிம்மாசனம் நிறுவப்பட்டிருக்கிறது. இந்நகரின் ஒவ்வொருவரும் அதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். முடிசூட்டுச்சடங்கின்போது மட்டுமே அதை வெளியே எடுக்கிறார்கள். விசித்திரவீரிய மன்னர் முடிசூடியபோது முதியவர் சிலர் அதைப்பார்த்திருக்கலாம்.”

கிளர்ச்சியுடன் எழுந்தபடி “பெரியதா?” என்றான் திருதராஷ்டிரன். “மிகப்பெரியது. தங்கள் உடலுக்கேகூட அது பெரியதாக இருக்கலாம். சிறிய இளவரசர் என்றால் படிபோட்டு ஏறிப்போய்த்தான் அமரமுடியும்” என்றான் சஞ்சயன். “பொன்னாலானது. பழைமையானபொன். இப்போதுள்ள பொன்னைவிடவும் மஞ்சள்நிறமாக இருக்கிறது. அதன் சிற்பவேலைகளெல்லாம் மழுங்கிப்போயிருக்கின்றன. அதன் சிம்மங்களின் விழிகளிலும் வாயிலும் செவ்வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரன் பொறுமையிழந்து தலையை அசைத்தபடி “இளவரசியர் எங்கே?” என்றான். “அவர்கள் அணியறையின் மறுபகுதியில் இருக்கிறார்கள் அரசே. ஓசைகள் கேட்கின்றன.”

“ஆம்… நகைகளும் ஆடைகளும் ஒலிக்கின்றன. எனக்கு மிக அருகே ஒலிப்பவை கேட்கவில்லை. தொலைவிலுள்ளவை செவிகளை அறைகின்றன…” என்றான் திருதராஷ்டிரன் மீண்டும் அமர்ந்தபடி. “பேரரசி என்ன செய்கிறார்?” சஞ்சயன் “அவர் வெளியேதான் அரியணைமேடை அருகே அமர்ந்திருக்கிறார். விதுரர் அவர் அருகே நின்றுகொண்டிருக்கிறார்” என்றான். “அவர்கள் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” திருதராஷ்டிரன் முகம் மாறியது. “தீவிரமாகவா? எங்கே?” என்றான். சஞ்சயன் மீண்டும் எட்டிப்பார்த்து “வெளியே” என்றான். திருதராஷ்டிரன் சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் “இன்னுமா பேசிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான். “ஆம் அரசே” என்றான் சஞ்சயன்.

“அவர்கள் முகம் எப்படி இருக்கிறது?” என்றான் திருதராஷ்டிரன். “இயல்பாகத்தான் இருக்கிறது.” “அவர்கள் கண்களில் சிரிப்பு இருக்கிறதா?” என்று திருதராஷ்டிரன் மீண்டும் கேட்டான். “இல்லை அரசே, இயல்பாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” திருதராஷ்டிரன் தன் கைகளை பிணைத்துக்கொண்டு “ஏதோ பெரும் இக்கட்டு எழுந்துள்ளது” என்றான். “அவர்கள் ஒருபோதும் பொதுஇடத்தில் அப்படி பேசிக்கொள்ளமாட்டார்கள். புன்னகையின்றிப் பேசுகிறார்கள் என்றாலே அது இக்கட்டானது என்றுதான் பொருள்.” சஞ்சயன் மீண்டும் நோக்கி “ஆனால் பிதாமகரும் சௌபாலரும் அங்குதான் இருக்கிறார்கள். அவர்கள் ஏதும் பேசுவதுபோலத் தெரியவில்லை” என்றான். “அவர்கள் வரை இன்னும் அந்த இக்கட்டு சென்றுசேரவில்லை…” என்றபின் எழுந்து நின்று “சகுனி அமைதியாகவா இருக்கிறார்?” என்றான் திருதராஷ்டிரன்.

“ஆம் அரசே” என்றான் சஞ்சயன். “அப்படியென்றால் அது என் முடிசூட்டுவிழாவுக்கான இக்கட்டுதான். அவர்கள் அதை சகுனியிடமிருந்து மறைக்கிறார்கள்” என்றான் திருதராஷ்டிரன். தலையை ஆட்டியபடி கைகளை ஒன்றுடன் ஒன்று உரசியபடி “நீ அதை அறியமுடியாது. அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஒருவேளை அமைச்சர்கள்கூட அறிந்திருக்க மாட்டார்கள்” என்றான். மீண்டும் அமர்ந்துகொண்டான். “சஞ்சயா, அங்கே வைதிகர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார். குடிமூத்தாரும் குலத்தலைவர்களும் என்ன செய்கிறார்கள் என்று சொல்!”

“அரசே அவர்கள் அனைவரும் அங்குதான் இருக்கிறார்கள். அவர்கள் முடிசூட்டுவிழாவை எதிர்நோக்கியிருப்பதாகவே படுகிறது.” திருதராஷ்டிரன் “இல்லை, அது விழித்தோற்றம். அவர்களின் மூத்ததலைவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்றான். “அரசே மூத்த தலைவர்கள் சிலர் அவர்களின் இருப்பிடங்களில் இல்லை. வைதிகர்களிலும் முதியவர்கள் இல்லை.” திருதராஷ்டிரன் எழுந்துநின்று தன் கைகளை ஓங்கி அறைந்துகொண்டான். “அவர்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். ஆம், அதுதான் நடக்கிறது!” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

19 Apr 23:49

நேருக்குநேராக பேசும்போது

by jeyamohan

வேதசகாயகுமார்

சாதிப்பிரச்சினை பற்றி விவாதிக்கப்படாத ஓர் உரையாடல் தமிழில் அனேகமாக நிகழ்வதில்லை. ஆனால் சாதிகளின் உருவாக்கம், சாதிகள் நீடிக்கும் விதம், சாதிகளின் இணைவு மற்றும் பிரிவு பற்றிய இயக்கவியல் சார்ந்து ஓர் எளிய அறிதல்கொண்டவர்கள் தமிழகத்தில் மிகமிகக்குறைவு.பெரும்பாலானவர்களின் சாதி சார்ந்த அறிதல் என்பது தங்கள் சாதியின் உட்பிரிவுகள் மற்றும் சமூக இடம் பற்றி ஒரு மதிப்பீடு. தங்களுக்கு மேலான சாதி எப்படி தங்கள் சாதியை ஒடுக்கியது என்பது பற்றிய ஒரு மனப்பதிவு- அவ்வளவுதான்.

கூடவே தமிழ்ச்சமூகத்தில் முற்போக்காகக் கருதப்பட சாதிகளைப்பற்றி என்ன சொல்லவேண்டும் என்ற எளிமையான மனவரைபடம் அனைவரிடமும் உண்டு. அனைத்துச்சாதியினரும் கூடிய அவையில் அதைச் சொல்வார்கள். அதாவது சாதியை உருவாக்கியவர்கள் பிராமணர்கள். அது மக்களை ஒடுக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு சதி. அது ஒழியவேண்டும். தலித் மற்றும் பழங்குடிகள் கொடுமைக்குள்ளானவர்கள். அவர்களுக்கு மற்றவர்கள் உதவவேண்டும்.

ஆனால் அவர்களின் சொந்தச்சாதியினர் அல்லது சமானமான சாதியினர் மட்டும் கூடிய அவையில் பேச்சு வேறாக இருக்கும். சாதியின் விளிம்புகளை விட்டு மீறிச்சென்றால் உருவாகும் சிக்கல்கள் மற்றும் அழிவுகள், சாதியின் அடையாளமாக விளங்கும் ஆளுமைகள் பற்றிய வழிபாடுகள், தங்கள் சாதியின் ஒற்றுமையின்மை அல்லது வீழ்ச்சி பற்றிய அங்கலாய்ப்புகள், நேற்றுவரை கீழே இருந்தவர்கள் மேலே சென்றுவிட்டது பற்றிய கசப்பு — இவைதான் பகிரப்படும்.

இவற்றுக்கு அப்பால் தமிழில் சாதிகளைப்பற்றிய கறாரான உரையாடல்கள் அறிஞர் மத்தியில்கூட மிகமிகக்குறைவு. அதற்கு பலகாரணங்கள். ஒன்று, சுயசாதிப்பெருமிதம். பெரும்பாலும் இடைநிலைச் சாதியினர் இந்தப்பெருமிதத்தை விட்டு வெளியே வருவதேயில்லை. இடைநிலைச்சாதியினர் சொல்லிக்கொள்ளும் பெருமிதவரலாறுகளில் பெரும்பகுதி சென்ற நூற்றாண்டுகளில் கட்டமைக்கப்பட்டது என்பதையும் இடைநிலைச்சாதியினர் இன்று முன்வைக்கும் ஒட்டுமொத்த அடையாளமேகூட அக்காலகட்டத்தில் உருவானதே என்பதையும் அவர்களில் எந்த அறிஞரும் சொல்லமாட்டார்கள், சொல்லிவிட்டு நிம்மதியாக் வாழவும் முடியாது.

சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் சாதிகளின் உருவாக்கம், செயல்பாட்டுமுறைமை குறித்து மிகமுக்கியமான திறப்புகள் கருத்துலகில் உருவாகிவந்துவிட்டன. அதற்கு முன்புவரை சாதிகளைப்பற்றிய பொதுவான நேரடி அறிதல்களும், பிரிட்டிஷார் எடுத்த மக்கள்தொகைல்க் கணக்கெடுப்பு அளிக்கும் பொதுவான தரவுகளும் மட்டுமே சாதிகளைப்பற்றி அறிவதற்கான ஆதாரங்களாக அமைந்தன. ஆகவே பெரும்பாலான கருத்துக்கள் பொத்தாம்பொதுவான ஊகங்களே. நாம் சொல்லிக்கொண்டிருக்கும் பொதுக்கருத்துக்கள் பல அவ்வாறு உருவான ஊகங்கள் மட்டுமே. அவை அரசியல்காரணங்களுக்காக பிரச்சாரம் செய்து நிலைநாட்டப்பட்டன. அரசியல்சரிகளாக நீடித்து அரட்டைகளில் தொடர்ந்து ஒலிக்கின்றன

அக்கருத்துக்களை பெரும்பாலும் காலாவதியாக்கும் கொள்கைகள் இன்று வந்துவிட்டன. தொடர்ந்து இந்தியச்சாதிகளைப்பற்றிய நேரடி ஆய்வுத்தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. உலகம் முழுக்க சாதியமைப்புக்கு நிகராக உள்ள அமைப்புகளைப்பற்றிய ஆய்வுகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்கிடையேயான ஒப்பாய்வு மூலம் சாதியமைப்பின் பண்பாட்டு அடிப்படையும் பொருளியல் அடிப்படையும் தெளிவடைந்தபடியே வருகின்றன. அவற்றை நம் அரசியல்சிந்தனையாளர்கள் அறிவதில்லை. காரணம் அவர்களுக்கு வாசிக்கும்பழக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை

ஆகவே பெரும்பாலான விவாதங்களில் நாம் கேட்பது ‘ஆமாங்க சாதி ஒழியணுங்க.அதெல்லாம் பார்ப்பான் உருவாக்கி நம்ம மேல திணிச்சதுங்க’ என்ற ஒற்றைவரி. ‘சரி அப்படியென்றால் உங்கள் சாதியை நீங்கள் துறப்பீர்களா?’ என்று கேட்டால் ‘அதெப்டீங்க? நாங்களும் அவுங்களும் ஒண்ணா?’ என்ற மாய்மாலம். அரங்கில் ஒன்று அந்தரங்கத்தில் ஒன்று. இப்போது இணையம் வந்தபின் அந்தரங்கம் நேரடியாக அரங்கேறும் வாய்ப்பு வந்துள்ளது. ஆகவே நாம் ‘இதென்ன திடீர்னு தமிழ்ல சாதிவெறு ஜாஸ்தியா கண்ணுல படுது?’ என திகைக்கிறோம்.

இக்காரணத்தால் இன்று சாதிச்சங்கங்கள் மட்டுமே சாதியைப்பற்றிப் பேசமுடியுமென்ற நிலை மெல்ல உருவாகிவிட்டிருக்கிறது. வேறு எவர் சாதியைப்பற்றி எந்தக் கருத்தை சொன்னாலும் ஏதேனும் சாதிச்சங்கங்கள் அதை எதிர்க்கும். வன்முறைமிரட்டல் கிளம்பிவரும். ஒருவர் இன்று பிராமணர் அல்லாத எந்தச் சாதியைப்பற்றியும் வாய் திறக்கமுடியாது. சொந்தச்சாதியைப்பற்றி மட்டுமே பேசமுடியும். அச்சாதிச்சங்கம் முன்வைக்கும் ஒற்றைவரிகளையே தானும் சொல்லமுடியும். ஆகவே பெரும்பாலான அறிஞர்கள் இன்று இதைப்பற்றி வாயே திறப்பதில்லை.

எம்.வேதசகாயகுமார் எப்போதுமே துணிச்சலான நேரடியான கருத்துக்களுக்காக அறியப்படுபவர். நேரடியான களஆய்வுப்பின்னணியும் துல்லியமான வாசிப்பும் கொண்டவர். அவரது கருத்துக்களை மறுக்கலாம், ஆனால் புறக்கணிக்கமுடியாது. ‘எக்கர்’ என்றபேரில் வேதசகாயகுமார் மீனவர்களைப்பற்றி பேசிய உரைகளின் தொகுப்பு வறீதையா கன்ஸ்தண்டீன் அவர்களால் தொகுக்கப்பட்டு உயிர் எழுத்து வெளியீடாக வந்துள்ளது

இந்நூலின் முக்கியமான சிறப்பு இதன் நேரடித்தன்மை. வேதசகாயகுமார் நாடார் சாதியைச் சேர்ந்தவர். சீர்திருத்தக் கிறித்தவசபை பின்னணி கொண்டவர். அவர்களுக்கும் கத்தோலிக்கர்களான மீனவர்களுக்கும் இடையே உள்ள பூசல் புகழ்பெற்றது. முந்நூறாண்டுக்காலமாக அவர்கள் போட்டிச்சாதிகள். இந்நிலையில் பேசவரும் ஓர் அறிஞர் கொள்ளவேண்டிய எச்சரிக்கைகள், தாஜா செய்தல்கள் ஏதுமில்லாமல் நேரடியாகவே வேதசகாயகுமார் பேசிச்செல்கிறார். இரு சாதிகளின் செயலபாடுகளையும் மனநிலைகளையும் விமர்சிக்கிறார், நுணுக்கமாக உள்ளே புகுந்து ஆராய்கிறார்.

அவ்வகையில் நெய்தல்மக்களை அறிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, நெய்தல் மக்களுக்கும் பிறருக்குமான உறவின் சிக்கலைப்புரிந்துகொள்ளவும் இந்நூல் முக்கியமானது. இன்று இவ்வுரையாடல் எந்தத் தளத்தில் நிகழ்வேண்டுமெ என்பதற்கும் முன்னுதாரணமானது.

வேதசமாயகுமாரின் அணுகுமுறையை காட்ட சில அவதானிப்புகளை எடுத்துக்காட்டலாம்.’விளிம்புநிலைச் சமூகம்’ என்ற வரையரையை உருவாக்கும்போது ‘விளிம்புநிலைச் சமூகத்துக்கு அதிகாரத்தில் எந்தப்பங்கும் இல்லை. வாய்ப்புகள் கிடைப்பதில்லை’ என வகுப்பவர் ‘ஆனால் விளிம்புநிலைச் சமூகத்திலேயே அனைவருக்கும் அந்நிலை இல்லை. மீனவ சமூகம் விளிம்புநிலைச் சமூகம். ஆனல ஜேப்பியார் அப்படி அல்ல. ஒரு சமூகத்தின் பெரும்பாலான மக்களின் நிலையே அளவுகோல்’ என மேலும் சொல்கிறார். இந்த யதார்த்தவுணர்ச்சியே அவரது அடிப்படை வலிமை

’விளிம்புநிலைச் சமூகங்கள் காலாகாலமாக அப்படியே இருந்தவையா? விளிம்புநிலைச் சமூகம் மேலே வரமுடியுமா?’ என்ற வினாவை தொடர்ந்து எழுப்பும் வேதசகாயகுமார் ’மள்ளர்கள் [தேவேந்திரகுலவேளாளர் அல்லது பள்ளர்கள்] பதினாறாம்நூற்றாண்டின் இறுதிவரை நிலவுடைமைகொண்ட உயர்குடியினராக இருந்தவர்கள் என்பதற்குச் சான்றுகள் ஏராளமாக உள்ளன .வெண்கொற்றக்குடை பிடிக்கும் உரிமை பல்லக்கிலேறும் உரிமை திருமணங்களில் வெண்பட்டுக்கம்பளம் விரிக்கும் உரிமை என பல உரிமைகள் அவர்களுக்கிருந்தன. சில சோழமன்னர்கள் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என ஊகிக்க இடமிருக்கிறது.அவர்களின் நிலைபற்றிச் சொல்லும் பல கல்வெட்டுகள் பொதுவிவாதத்துக்குக் கொண்டுவரப்படவே இல்லை’ என்கிறார்

அதற்கு மாறாக விளிம்புநிலையில் இருந்த் சமூகம் மேலே வந்தமைக்கும் சான்றுகள் உண்டு என்கிறார் வேதசகாயகுமார். நாடார்சமூகம் வணிகச்சமூகமாக இருந்தத். சாணார்கள் விளிம்புநிலையில் இருந்தனர். 1910ல் முதல் அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பில் அவர்கள் இணைந்து நாடார் சாதியாக அறிவித்துக்கொண்டனர். அதிகராத்துக்கான போட்டியில் இறங்கினர். கல்வியை ஆயுதமாகக் கொண்டனர். வணிகத்தை முன்னெடுத்து இன்று ஆதிக்கசாதியாக உள்ளனர், ஆதிக்கசாதிக்குரிய ஒடுக்குமுறைகளிலும் ஈடுபடுகின்றனர் என்கிறார்

நெய்தல் நில மக்களின் வரலாற்றை அவர்கள் இழந்தமை குறித்து மீண்டும் மீண்டும் பேசிச்செல்கிறார் வேதசகாயகுமார். ‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமணர்களும் வேளாளர்களும் தமிழ் மொழியின் மீதான ஆதிக்கத்துக்காக மோதிக்கொண்டனர்.மொழிமீதான ஆதிக்கம் ஏன் இந்த அளவுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது? ஏனென்றால் மொழியின்மீதான ஆதிக்கம் என்பது நிலத்தின் மீதான , உற்பத்திசக்திகளின் மீதான ஆதிக்கத்திற்கு அடுத்தபடியாக முக்கியமானது.

நேரடியாக உற்பத்தியில் ஈடுபடும் சாதிகள் பெரும்பாலும் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுவதில்லை என்று சொல்லும் வேதசகாயகுமார் மீனவர்கள் தங்கள் உற்பத்திச்சாதனம் மீதான கட்ட்டுப்பாட்டை இழந்தமைதான் அவர்கள் விளிம்புநிலைக்குச் சென்றமைக்கு முக்கியமான காரணம் என்கிறார். அவ்வாறு இழந்தமைக்குக் காரணம் மொழியை இழந்தமைதான். மொழி ஒருங்கிணைவுக்கான கருத்தியலை உருவாக்கி அளிக்கிறது என வாதிடுகிறார். ஆகவே நெய்தல்சார்ந்த படைப்பாளிகள் உருவாவதும், அவர்கள் விவாதிக்க ஆரம்பிப்பதுமே முக்கியமான அரசியல் செயல்பாடுகள் என்று வாதிடுகிறார்.

வேதசகாயகுமார் சீராக இரு விவாதத்தரப்பை உருவாக்குபவர். கூடவே தெறிப்புகளாக சிந்தனையைத் தூண்டும் வரிகள் அவரது உரைநடையில் வெளிவந்தபடியே உள்ளன. ‘இருபதாம் நூற்றாண்டில்நமக்கு ஒரு பெரும் விபத்து நிகழ்ந்துவிட்டது. நம் சிந்தனைகள் இரு குவியங்களாக ஆகிவிட்ட்னா- பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார். இவ்விருசாராரின் போராட்ட்த்துக்கு வெளியே உள்ளவர்களின் இடம் குறித்து எந்தவிவாதமும் நிகழாதுபோய்விட்டது’ என்று அவர் சொல்லும் வரி ஒருவகை சீண்டலாகத் தெரியும். ஆனால் நம் சிந்தனையைச் சீண்டாத ஒருவர் எதையும் புதியதாகச் சொல்லவில்லை என்றே பொருள். அவ்வரியில் இருந்து அவர் சமகாலச் சமூகவியல் சூழலை விரித்துக்கொண்டு செல்லும் விதமே முக்கியமானது.

பலகோணங்களில் திறந்துகொண்டே இருக்கக்கூடிய, நேர்மையான சமூகவியல்விவாதம் நிகழும் நூல்கள் தமிழில் அரிதிலும் அரிது. தான் சார்ந்திருக்கும் அரசியல், தன் சுயநலன்கள், தன்னுடைய முற்போக்குப் பாவனைகள் சார்ந்து சொல்லப்படும் இடக்கரடக்கல்களையே நாம் வாசிக்கநேர்கிறது. அப்பட்டமாகப் பேசும் கூரிய நூல் என வேதசகாயகுமாரின் எக்கரைச் சொல்லலாம்

[எக்கர் வேதசகாயகுமார். தொகுப்பு வறீதையா கன்ஸ்தண்டீன்/ உயிர் எழுத்து பதிப்பகம். திருச்சி]

வேதசகாயகுமார் விழா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
18 Apr 23:29

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 55

by jeyamohan

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 2 ]

முரசுக்கோபுரம் சபைமண்டபத்தின் வடக்குமூலையில் தூக்கப்பட்ட கைபோல நின்றது. அதன் முட்டி சுருட்டப்பட்டதுபோன்ற மேடையில் இரண்டாளுயர விட்டத்துடன் பெருமுரசம் அமர்ந்திருந்தது. அதன் இருபக்கமும் எண்ணை எரிந்த பந்தங்கள் குழியாடியின் முன் நின்றுசுடர அந்த ஒளியில் அதன் தோல்பரப்பு உயிருள்ளதுபோலத் தெரிந்தது. கீழே மகாமுற்றத்தின் அனைத்து ஒலிகளையும் அது உள்வாங்கி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. அதன் பரப்பை தன் கைவிரல்களால் தொட்ட முரசறைவோனாகிய கச்சன் உறுமும் யானையின் வயிற்றைத் தொட்டதுபோல உணர்ந்தான்.

கீழே மகாமுற்றத்தில் மாலைமுதலே அனைத்துச்செயல்களும் விரைவுகொண்டிருந்தன. பெரிய எண்ணைப்பந்தங்கள் அமைக்கப்பட்ட தூண்கள் அருகே எண்ணைக்காப்பாளர்கள் நின்றிருந்தனர். குழியாடிகள் பிரதிபலித்த வெளிச்சங்கள் மகாமுற்றத்தின் மண்பரப்பில் செங்குருதிவட்டங்கள் போல விழுந்துகிடந்தன. அதைக் கடந்துசென்ற சேவகர்கள் நெருப்பென எரிந்து அணைந்தனர். அதன்முன் பறந்த சிறுபூச்சிகள் கனல்துளிகள் போலச் சுழன்றுகொண்டிருந்தன. வந்து நின்ற பல்லக்குகளின் வெண்கலப்பூண்களிலும் கூரைக்குவையின் வளைவுகளிலும் செவ்வொளி குருதிப்பூச்சு போல மின்னியது.

குளம்போசையும் சகடஓசையும் எழ குதிரைகள் இழுத்த ரதங்கள் வந்து நின்றன. செவ்வொளி மின்னிய படைக்கலங்களுடன் வீரர்கள் ரதங்களை நோக்கி ஓடினர். ரதங்களில் வந்தவர்கள் விரைந்து நடந்து மண்டபத்துக்குள் செல்ல ரதங்களை சாரதிகள் கடிவாளம்பற்றி திருப்பிக்கொண்டுசென்று இருண்ட மறுமூலையில் வரிசையாக நிறுத்தினர். இருளுக்குள் காற்றில் ரதங்களின் கொடிகள் பறவைகள் சிறகடிப்பதுபோல பறந்தன. மேலும் மேலும் ரதங்கள் வந்தபடியிருந்தன. பல்லக்குகள் வந்தன, கிளம்பிச்சென்றன, மீண்டும் வந்தன. கச்சன் மேலிருந்து அவற்றை விழிவிரித்து நோக்கிக்கொண்டிருந்தான். அவனருகே முரசு மெல்ல விம்மிக்கொண்டிருந்ததை அவன் மட்டுமே கேட்டான்.

இரவின் குளிர் ஏறி வந்தபோது அவன் நெய்விளக்குகளின் அருகே நெருங்கி நின்றுகொண்டான். காற்றில் அதன் பொறிகள் எழுந்து பறந்து வடதிசை நோக்கிச் சென்றன. எண்ணைக்குடுவையுடன் வந்த சேவகர்கள் மீண்டும் எண்ணை நிறைத்துச்சென்றார்கள். “எப்போது கோல்விழும்?” என்று ஒருவன் கச்சனிடம் கேட்டான். “தெரியவில்லை. ஆணை வரவேண்டும்” என்றான் கச்சன். “அதைவிட அந்த முரசிடமே கேட்கலாம்” என்றான் எண்ணையை அகப்பையால் அள்ளி விளக்கில் விட்ட துருமன். எண்ணை சொட்டாமல் கலத்தைத் தூக்கியபடி அவர்கள் இருவரும் படியிறங்கினர்.

கீழே அவர்களைப்போல நூறு பணியாளர்கள் விளக்குகளுக்கு எண்ணைவிடும் பணியில் இருந்தனர். அவர்களில் ஒருவன் அவனை நோக்கி “மண்டபத்துக்குள் சக்கரன் இருக்கிறானா துருமா?” என்றான். “இல்லையே, நான் அவனை மடியில் அல்லவா கட்டி வைத்திருந்தேன். எங்கே விழுந்தானென்றே தெரியவில்லை” என்றான் துருமன். எண்ணை அண்டாவை ஒரு சிறிய மரவண்டியில் வைத்து மெதுவாகத் தள்ளியபடி அவர்கள் மண்டபத்துக்குள் நுழைந்தனர். செல்லும் வழியில் திரிகருகத் தொடங்கியிருந்த விளக்குகளை நோக்கி எண்ணை ஊற்றியபடியே சென்றார்கள்.

விரிந்த மகாமண்டபம் நீள்வட்ட வடிவில் ஆயிரம் மரத்தூண்கள் மேல் குவைவடிவக் கூரையுடன் அமைந்திருந்தது. வானம்போல உயரத்தில் வளைந்திருந்த வெண்சுண்ணம்பூசப்பட்ட கூரையில் இருந்து அலங்காரப்பாவட்டாக்கள் பூத்த கொன்றை வேங்கை மரங்கள் போல தொங்கி மெல்ல ஆடிக்கொண்டிருந்தன. ஆயிரம் தூண்களிலும் குழியாடியின் முன் ஏழுதிரிகளில் சுடர்கள் அசையாமல் நின்ற நெய்விளக்குகள் அமைந்திருந்தன. ஆடிப்பாவைகளுடன் இணைந்து அவை பெரிய மலர்க்கொத்துக்கள் பூத்த அரளிச்செடிகள் போலத் தோன்றின. தேன்மெழுகும் கொம்பரக்கும் வெண்களிமண்ணுடன் கலந்து அரைத்துப்பூசப்பட்டு பளபளத்த மண்டபத்தின் விரிந்த மரத்தரையில் விளக்குகளின் ஒளி நீரில் என பிரதிபலித்தது.

நூற்றுக்கணக்கான சேவகர்கள் மண்டபத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். ஒளியை உள்ளனுப்பும் தாமரைச்சாளரங்களுக்கு வெளியே வெயிலை குளிர்வித்தனுப்பும் வெட்டிவேர்த்தட்டிகள் கட்டப்பட்டன. காற்றை மட்டும் அனுப்பும் மான்விழிச் சாளரங்கள் பெரிய பெட்டி ஒன்றுக்குள் திறந்தன. அந்தப்பெட்டிக்குள் ஈரமான நறுமணவேர்களைப் போட்டு மூடிக்கொண்டிருந்தனர். மண்டபத்தின் பன்னிரு காவல்மாடங்களிலும் ஒளிரும் வேல்களுடன் ஆமையோட்டுக் கவசம் அணிந்த வீரர்களை காவல் நிறுத்தி கட்டளைகளை போட்டுக்கொண்டிருந்தார் விப்ரர்.

உள்ளிருந்து வந்த ஜம்புகன் “துருமா, உன்னை நூற்றுக்குடையோர் தேடினார்” என்றபடி பெரியமலர்க்கூடையைச் சுமந்து சென்றான். அதிலிருந்து நீர் சொட்டிக்கொண்டு சென்றது. “அதென்ன வேட்டையாடிய பன்றியா? சிறுநீர் விட்டுக்கொண்டு செல்கிறது?” என்றான் துருமன். ஜம்புகன் திடுக்கிட்டு “உனக்கு நாவிலே சனி” என்றபடி சென்றான். “அவன் அடிபட்டுச் சாகும்போது நீயும்தான் அருகே சாவாய்” என்றான் கூடையின் இன்னொரு முனையைப்பற்றியவன். “ஆனால் அவனிருந்தால் வேலை சுமுகமாக நடக்கிறது” என்று ஜம்புகன் சொன்னான்.

அவர்கள் மலர்மூட்டையைக் கொண்டுசென்று மண்டபத்தின் முகப்பில் இறக்கி பிரித்தனர். அதற்குள் யானைத்துதிக்கை கனத்துக்கு தாமரைமலர்களைக்கொண்டு கட்டப்பட்ட பெரிய மலர்மாலைகள் இருந்தன. “இதென்ன யானைவடமா?” என்றான் ஜம்புகன். “பார்த்தாயா, உனக்கும் நாக்கிலே சனி” என்றான் துணைவன். இருளுக்கு அப்பால் இருள்குவைகள் அசைவது தெரிந்தது. ஜம்புகன் நோக்கியபோது அந்தரத்தில் கந்தர்வர்கள் போல இருவர் இருளில் நீந்தி வருவதைக் கண்டான். அவர்கள் மேல் பட்ட முரசுமேடையின் செவ்வொளி அவர்களை குளிர்கால நிலவின் செம்மையுடன் ஒளிரச்செய்தது. அவர்களுக்குக் கீழே அலையடித்து வந்த யானை உடல்களை அவன் அதன்பின்னரே கண்டான்.

“விடியப்போகிறது. யானைகளை கொண்டுவந்துவிட்டார்கள்” என்றான் துணைவன். யானைகள் அப்போதுதான் குளித்துவிட்டு மேற்குத்தடாகங்களில் இருந்து வந்திருந்தன. அவற்றின் அடிப்பகுதியில் தோலில் வழிந்த நீர் ஊறிச் சொட்டிக்கொண்டிருந்தது. இருண்ட நதியொன்று பெருகி வருவதுபோல மேலும் மேலும் யானைகள் வந்தபடியே இருந்தன. முதல்யானைகளை மகாமுற்றத்தின் இருபக்கமும் வரிசையாக ஆணையிட்டு நிறுத்தினர். அடுத்துவந்த யானைகள் அவையே புரிந்துகொண்டு அணிவகுத்தன. சிறுகுழந்தைகள் போல அவை தங்கள் இடங்களுக்காக முந்தி இடம் பிடித்ததும் சரியாக நின்றபின் ஆடியபடி ஓரக்கண்ணால் அருகே நின்ற யானைகளை நோக்கின. ஒரு யானை பாங் என ஓசையெழுப்பியது. அதன் பாகன் அதன் காதில் கையால் தட்டினான்.

VENMURASU_EPI_105

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

பெரிய மரவண்டிகளில் ஏற்றப்பட்ட மரப்பெட்டிகளைக் கொண்டுவந்து யானைகளுக்கு முன்னால் வைத்து திறந்தனர். அவற்றிலிருந்து கனத்த முகபடாம்களை யானையைக்கொண்டே எடுக்கச்செய்து மத்தகத்தில் வைத்தனர். யானைகள் துதிக்கையால் முகபடாம்களை பற்றிக்கொள்ள அவற்றின் சரடுகளை யானைக்காதுகளிலும் கழுத்துப்பட்டைகளிலும் சேர்த்துக்கட்டினர். யானைகளால் தூக்கப்பட்டு சுருளவிழ்ந்து மேலேறிய முகபடாம்கள் பொன்னிறப்பெருநாகம் படமெடுத்தது போல பிரமையெழுப்பின. முகபடாமில் இருந்த பொன்னிறப் பொய்விழிகளால் யானைகளின் தெய்வவிழிகள் மகாமுற்றத்தை வெறித்து நோக்க அவற்றின் குழந்தைவிழிகள் ஒன்றை ஒன்று நோக்கி துதிக்கையை நீட்டி மூச்சு சீறிக்கொண்டன.

யானைகளே தங்கள் அணிகளைத் தூக்கி பாகர்களுக்களித்தன. பாகர்கள் நின்று அவற்றைக் கட்டுவதற்கு தந்தங்களையும் கால்களையும் தூக்கிக் காட்டின. யானை உடலின் வெம்மையால் ஆவியெழ அப்பகுதி செடிகளுக்கு நடுவே நிற்கும் உணர்வை எழுப்பியது. ஜம்புகன் சிறிய மூங்கிலேணிகளை தூண்கள் மேல் சாய்த்து அதிலேறி தூண்களில் தொற்றி மேலேறிச்சென்றான். உத்தரத்தில் அமர்ந்தபடி தாமரைமாலையுடன் சேர்த்துக்கட்டப்பட்ட கயிறை அவன் துணைவன் வீசியெறிய பிடித்துக்கொண்டான். அந்தச்சரடைப் பிடித்து இழுத்து தாமரை மாலையை மேலே தூக்கினான். மலர்த்தூண் போல அது கூரையிலிருந்து தொங்கியது. அதன் கீழே பெரிய மலர்க்கொத்து கனத்து ஆடியது.

“வண்டுகள் விருந்தினரை கடிக்காமலிருந்தால்போதும்” என்றான் ஜம்புகன். “உன் சனிவாயை மூடமாட்டாயா?” என்றான் துணைவன். ஜம்புகன் அங்கிருந்து நோக்கியபோது நூற்றுக்கணக்கான மலர்த்தூண்கள் மண்டபத்தின் முகப்பு முழுக்க மேலேறியிருப்பதைக் கண்டான். “காலையில் இப்பகுதியே பூத்த வனம் போலிருக்கும்” என்றான். “காலையில் நம்மை இப்பகுதியில் நிற்கவிடுவார்களா என்ன?” என்றான் துணைவன். யானைகளின் முகபடாம்கள் செவ்வொளியில் சுடர்ந்தன. யானைகள் ஆடியபோது பொன்னிற அசைவுகளாலான மெல்லிய நடனம் ஒன்று அங்கே நிறைந்தது.

மண்டபத்தின் உள்ளிருந்தே பெரிய கனத்த மரவுரிச்சுருளை விரித்துக்கொண்டு வந்தனர் எழுவர். ‘விலகு விலகு’ என ஓசையிட்டபடி அவர்கள் அதை விரித்துக்கொண்டே சென்றார்கள். ஜம்புகன் “காலகன் அண்ணா, எத்தனைபேர் படுக்கப்போகிறீர்கள்?” என்றான். மரவுரியைத் தள்ளிச்சென்றவன் மேலே நோக்கி “நீ என்ன அங்கே காய்பறிக்கிறாயா? இறங்கு” என்றான். “கைமறதியாக மலர்மாலையைப் பிடித்து இறங்கிவிடப்போகிறான்” என்றான் இன்னொருவன்.

அந்த மரவுரிப்பாதையை அவர்கள் மகாமுற்றத்தின் முகப்புவரை கொண்டுசென்று நிறுத்தினர். “ஆளும் மண்ணில் மன்னர்களின் கால்கள் படக்கூடாதென்று நெறி” என்றான் காலகன். “நீ இப்படி இன்னொரு சொல் பேசினால் கழுதான்” என்றான் துணைவன். “நீங்களெல்லாம் ஒரே கூட்டம். நாக்காலேயே சாகப்போகிறவர்கள்” என்றான். “நாங்கள் ஒரேமூங்கில் மதுவை பகிர்ந்துண்பவர்கள்” என்றான் காலகன். “ஜம்புகனும் நானும் ஒரே ஊர் தெரியுமல்லவா?” “விடியத்தொடங்கிவிட்டது” என்று துணைவன் கிழக்கில் எழுந்த மெல்லிய சிவப்புத்தீற்றலை நோக்கியபடி சொன்னான்.

அதைக் கேட்டதுபோல அரண்மனையின் கோட்டைமுகப்பில் காஞ்சனம் முழங்கத்தொடங்கியது. காலகன் கன்னத்தில் போட்டுக்கொண்டு கும்பிட்டான். அவர்களைத் தாண்டிச்சென்ற நூற்றுவர் தலைவன் “இன்னுமா இதைச்செய்கிறீர்கள் மூடர்களே? அங்கே ஆளில்லாமல் கன்னன் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறான். ஓடுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். “ஆளில்லாமல் கூச்சலிட அவனுக்கென்ன பைத்தியமா?” என்றபடி காலகன் உள்ளே சென்றான்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சேர்ந்து விரிந்த மண்டபத்தரையில் ஈச்சையோலைப்பாய்களை விரித்துக்கொண்டிருந்தனர். அனைத்துத் தூண்களிலும் மலர்மாலைகளை தொங்கவிட்டுக்கொண்டிருந்தனர் சிலர். பாய்களுக்குமேல் கனத்த மரவுரிக்கம்பளங்கள் விரிக்கப்பட்டன. அவற்றின் மீது கம்பிளிக்கம்பளங்கள் பரப்பப்பட்டன. மண்டபத்தின் சாளரங்கள் ஒளிபெற்றன. அப்பால் தொங்கிய வெட்டிவேர்த்தட்டிகளின் வழியாக வரிவரியாக வந்த மெல்லிய ஒளி உள்ளே நீண்டு சரிந்து சதுரமாகக் கிடந்தது. “கம்பளங்கள் மேல் கால்கள் படக்கூடாது!” என்று நூற்றுவர்தலைவன் ஒருவன் ஆணையிட்டான்.

“எத்தனைபேர் இங்கே அமரமுடியும்?” என்று ஒரு கரிய இளைஞன் காலகனிடம் கேட்டான். “வசதியாகவா வசதிக்குறைவாகவா?” என்றான் காலகன். அவன் வெண்ணிற விழிகள் திகைத்து உருள விழித்தான். “யார் அமர்ந்தால் உனக்கென்ன?” என்றான் காலகன். “நீ புதியவனா?” அவன் “ஆம், பணியில் சேர்ந்து எட்டுமாதமே ஆகிறது” என்றான். “இன்னும் எட்டுமாதத்தில் நீ வாயாடியாகவோ மௌனியாகவோ ஆகிவிடுவாய். உன் பேரென்ன?” “பரிகன்” “பரிகனாக இருந்தால் சேவகனாக இருக்காதே. சேவகனாக இருந்தால் பரிகனாக இருக்கமுடியாது.” அவன் மீண்டும் விழித்தான்.

வெளியே ஓசைகள் பெருகிக்கொண்டிருந்தன. விரிந்த முகவாயிலுக்கு அப்பால் அசையும் மனித உருவங்களின் நிழலாட்டம் மண்டபத்தின் உள்ளே நிறைந்திருந்தது. மணியோசைகள். குதிரைகளின் குளம்போசைகள். கட்டளைகள். விடியும்தோறும் ஓசைகள் பெருகிக்கொண்டிருந்தன. பரிகன் மெல்ல நடந்து வெளியே வந்து நோக்கினான். கண்ணைச் சுருங்கவைக்காத காலையிளவெயிலில் மகாமுற்றம் வண்ணங்கள் நிறைந்து ததும்பியது. மலர்வடங்கள், முகபடாம்கள், கொடிகள், பாவட்டாக்கள், சுட்டிகள்… பிரமித்துப்போய் அவன் பார்த்தபடியே நின்றான்.

இருபக்கமும் கரிய கோட்டையாக, பொன்னிறநடனமாக நீண்டிருந்த யானைவரிசைக்கு அப்பால் நூற்றெட்டு பெரிய மலர்மாலைகள் தொங்கிய முகப்பில் ஏழெட்டுபேர் ஓடிவந்ததை பரிகன் கண்டான். அவர்களின் உடையும் தோற்றமும் அவனுடைய குலத்தைச்சேர்ந்த ஆயர்கள் என்று தோற்றமளித்தன. புழுதிபடிந்த உடையும் பதற்றமான முகங்களுமாக அவர்கள் அந்த அலங்கார முற்றத்தை நோக்கி திகைத்து செயலிழந்து நின்றனர். காவலர்தலைவன் அவர்களை நோக்கி ஓடிச்சென்று “நில்லுங்கள்… யார் உங்களை இங்கே அனுமதித்தது? யார் நீங்கள்?” என்றான்.

பரிகன் முற்றத்தைக் கடந்து யானைகளின் நூற்றுக்கணக்கான துதிக்கை நெளிவுகள் வழியாக ஓடி அவர்களை அடைந்தான். அவர்கள் பேசும் மொழி காவலர் தலைவனுக்குப் புரியவில்லை என்று தோன்றியது. அவர்கள் அனைவரும் ஒரே சமயம் பதற்றமாக கைகளை வீசி முகத்தை விதவிதமாகச் சுழித்து மிகவிரைவாகப் பேசினார்கள். “யார்? யார் நீங்கள்?” என்றான் காவலர்தலைவன். “இறையோரே, அவர்கள் எங்கள் ஊரைச்சேர்ந்தவர்கள். ஆயர்மக்கள்” என்றான் பரிகன். “என்ன சொல்கிறார்கள்?” என்று காவலர்தலைவன் கேட்டான்.

அவர்கள் அனைவரும் மீண்டும் ஒரே காலத்தில் கலைந்த குரல்கலவையாக பேசத்தொடங்கினர். பரிகன் மூத்தவரிடம் “மூத்தாரே நீங்கள் மட்டும் பேசுங்கள். நீங்கள் மட்டும் பேசுங்கள். மூத்தார் பேசட்டும் மற்றவர்கள் அமைதியாக இருங்கள்” என்று கூவினான். அவர்கள் ஒவ்வொருவராக நிறுத்திக்கொள்ள மூத்தவர் இருகைகளையும் விரித்து “புவிநடுக்கம்!” என்றார். நடுங்கும் கைகளை நீட்டி முகச்சுருக்கங்கள் சிலந்திவலை காற்றிலாடுவதுபோல சுருங்கி விரிய “அங்கே… அங்கே எங்களூரில் புவிநடுக்கம் வந்திருக்கிறது… மலைகள் சரிந்தன… மண்பிளந்து நதி திசைமாறி…” என்று சொல்லமுடியாமல் திணறினார்.

பரிகன் சொல்லத்தொடங்குவதற்குள்ளாகவே காவலர்தலைவன் “புரிந்துவிட்டது. இவர்களை இப்படியே அமைச்சர் விதுரரிடம் அழைத்துச்செல்” என்றான். “இது மங்கலநிகழ்வுக்கான இடம். இங்கே இச்செய்தி ஒலிக்கலாகாது.” பரிகன் “ஆம்” என்றான். “சாதாரணமாக அமைச்சரை பார்க்கப்போவதுபோலச் செல். எவரும் ஏதென்று கேட்கலாகாது. அதற்காகவே உன்னை அனுப்புகிறேன்” என்றான். “புரிகிறது இறையோரே” என்றான் பரிகன்.

அவன் அவர்களிடம் “மூத்தாரே, வருக. அமைச்சரைச் சென்று பார்த்து நிகழ்ந்ததைச் சொல்வோம்” என்றான். அவர்கள் மீண்டும் ஒரேசமயம் பேசத்தொடங்கினர். கலைந்த பறவைகள் போல பேசியபடி அவனுடன் ஓட்டமும் நடையுமாக வந்தனர். “புவி பிளந்துவிட்டது. உலகம் அழியப்போகிறது…” என்றான் ஒருவன். “பூமியின் வாய்க்குள் தீ இருக்கிறது. தீதான் பூமாதேவியின் நாக்கு” என்றான் இன்னொருவன். “புகை வந்ததை நான் கண்டேன். மலையுச்சியில் இருந்த பாறை அசைந்து யானைபோல கீழிறங்கி ஓடிவந்தது. வந்த வழியிலிருந்த அனைத்துப்பாறைகளையும் அது உடைத்து உருட்டியது. பாறைகள் மழைவெள்ளம்போல காட்டுக்குள் புகுந்தன.”

அவர்களின் கன்றுகள் நூற்றுக்கணக்கில் பாறைகள் விழுந்து இறந்திருந்தன. புவிபிளந்த இடத்திலிருந்த காடே அழிந்துவிட்டிருந்தது. புவிபிளந்த தடம் பெரிய மீன்வாய் போல திறந்திருக்கிறது; அதற்குள் நெருப்பு கொதித்து ஆவியெழுகிறது என்றார்கள். “கந்தக வாடை!” என்று கிழவர் சொன்னார். “கந்தகச்சுனைகள் அங்கே மலைகளுக்கு அப்பால் உள்ளன. அவற்றில் இருந்து வரும் அதே வாடை.”

அவர்கள் கூவியபடியே வந்தனர். உள்ளே கொந்தளித்த எண்ணங்களால் உடல் நிலைகொள்ளாதவர்களாக எம்பி எம்பி குதித்தபடியும் கைகளில் இருந்த வளைதடிகளை சுழற்றியபடியும் வந்தனர். அச்சத்தை விடவும் கிளர்ச்சிதான் அவர்களிடமிருந்தது என்று பரிகன் நினைத்தான். விதுரனின் மாளிகை முற்றத்தில் நின்ற காவலனிடம் அவர்களை அமைச்சரைப்பார்க்கும்படி மகாமண்டபத்துக் காவலர்தலைவன் அனுப்பியதாகச் சொல்லி உள்ளே அழைத்துச்சென்றான்.

விதுரன் இரவு துயிலவில்லை என்றார் மாளிகை ஸ்தானிகர். அவன் காலைநீராடிக்கொண்டிருப்பதாகவும் காத்திருக்கும்படியும் சொன்னார். விதுரனுக்காக அந்தக்கூடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓலைநாயகங்களும் ஸ்தானிகர்களும் ஸ்ரீகாரியக்காரர்களும் அதிகாரிகளும் நின்றிருந்தனர். அனைவருமே தங்கள் அலுவல்களின் அவசரத்துடன் வாயிலையே எட்டி நோக்கிக்கொண்டிருந்தனர். அனைவரும் நீராடி புத்தாடையும் நகைகளும் படைக்கலங்களும் அணிந்திருந்தனர். அனைவர் கண்களிலும் இரவு துயிலாத சிவப்பும் தசைத்தொய்வும் இருந்தன.

கதவு திறந்து வெளியே வந்த விதுரன் முதலில் அவர்களைத்தான் நோக்கினான். கைசுட்டி அவர்களை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றபின் கதவை மூடினான். அவனுடன் சோமரும் உள்ளே நுழைந்தார். அவர்கள் விதுரன் கேட்பதற்குள்ளாகவே சொல்லத்தொடங்கினர். சிலசொற்களிலேயே அவர்கள் சொல்வதென்ன என்று விதுரன் புரிந்துகொண்டான். அவர்கள் சொல்லச்சொல்ல செவிகூர்ந்து கேட்பதுபோல அவன் தலையசைத்தாலும் அவன் அடுத்து செய்யவேண்டியவற்றைத்தான் சிந்திக்கிறான் என பரிகன் உணர்ந்தான்.

அவர்களை அமைதிப்படுத்திவிட்டு விலகி வந்து சோமரிடம் “இமயத்தின் அடிவாரத்தில் புவியதிர்வும் பிளப்பும் இயல்பாக நிகழ்வனதான். இவர்களின் ஊரில் இப்போதுதான் நிகழ்கின்றன போலும்” என்றான். “ஆனால் இச்செய்தியுடன் இவர்கள் வந்த வேளை…” எனத் தொடங்கிய சோமரை கையமர்த்தி “ஆம், இவர்களை விழவு முடிவதுவரை எவரும் பார்க்கலாகாது. சிறைவைத்தலும் நன்றே. இவர்கள் வந்தபோது மண்டபமுகப்பில் இருந்த காவலர்கள் அனைவரையும் விழாமுடிவுவரை சிறைவைத்துவிடுங்கள். ஒரு சொல்கூட எங்கும் ஒலிக்கலாகாது” என்றான்.

“ஆம்” என்று சோமர் தலைவணங்கினார். விதுரன் வெளியே வந்து அங்கே அவனுக்காகக் காத்து நின்றவர்களை இருவர் இருவராக வரச்சொல்லி ஓரிரு வரிகளில் அவர்களின் தரப்பைக் கேட்டு ஆணைகளும் பரிந்துரைகளும் அளித்தபின் வெளியே வந்து தன் ரதத்தில் ஏறிக்கொண்டான். “மகாமண்டபத்துக்கு” என்று அவன் ஆணையிட்டதும் குதிரை நகரச்சாலை வழியாக விரைந்தோடத் தொடங்கியது.

மகாமண்டபத்தின் முற்றத்தை அவன் அடைந்து இறங்கி அலங்காரங்களை நோக்கினான். விப்ரர் அவனிடம் வந்து “முறையறிவிப்பு அளிக்கப்படலாமே. அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன” என்றார். அவன் நான்குபக்கமும் நோக்கியபின் தலையை அசைத்தான். விப்ரர் தனக்குப்பின்னால் நின்ற காவலர்தலைவனிடம் மெல்ல ஆணையைச் சொன்னார். அவன் திரும்பி முரசுக்கோபுரத்தை நோக்கி கையை அசைத்தான்.

மேடைமேல் நின்றிருந்த கச்சன் தன் முரசுக்கோல்களைக் கையிலெடுத்தான். அவற்றின் மரஉருளை முனைகளைச் சுழற்றி தோல்பரப்பில் அறைந்தான். அக்கணம் வரை முரசுக்குள் தேங்கி சுழன்றுகொண்டிருந்த ஒலியனைத்தும் பெருமுழக்கமாக மாறி எழுந்து காற்றை மோதின.

தொடர்புடைய பதிவுகள்

18 Apr 10:54

அம்பை – ஜோ ஒரு விளக்கம்

by jeyamohan

ஜோ டி குரூஸ் பற்றி நான் எழுதிய குறிப்பில் அம்பை பற்றி ஒரு குறிப்பு இருந்தது. அம்பை ஜோ டி குரூஸுக்கு அவர் இந்துத்துவா என்று தெரியாமல் விருதளித்தமைக்கு வருந்துவதாக சொல்லியிருக்கிறார் என்றும், அரசு விருதுகளைக் கைப்பற்றியிருக்கும் இடதுசாரிகள் இலக்கியத்தை அரசியலால் அளவிட்டு எழுத்தாளர்களை அணிசேர்க்க விருதுகளைப் பயன்படுத்துவதற்கு அதுவே ஆதாரம் என்றும் சொல்லியிருந்தேன்.

நான் ஃபேஸ்புக் பார்ப்பதில்லை. அதை நான் எழுத நான் நம்பும் ஒரு நண்பர் சொன்னதுதான் ஆதாரம். ஆனால் என்னை வேறு சிலர் கூப்பிட்டு அம்பை அவ்வாறு சொல்லவில்லை என்றும் ஜோ டி குரூஸுக்கு விருது கொடுத்ததைப்பற்றி மாற்றுக்கருத்து இல்லை என சொல்லியிருப்பதாகவும் குறிப்பிட்டனர். ஆகவே அம்பை பற்றிய என் வரிகளை திரும்பப்பெற்றுக்கொண்டு வருத்தமும் தெரிவித்தேன்

ஆனால் அந்த நண்பரிடம் அவர் சொன்னதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டேன். ஸ்கிரீன் ஷாட் எடுத்து அம்பை சொன்னதை அவர் எனக்கு அனுப்பியிருந்தார். அம்பை மிகத்தெளிவாகவே சொல்கிறார்.ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி விருது அளித்த நடுவர் குழுவில் அவர் இருந்ததாகவும், ஜோ டி குரூஸ் ஓர் இந்துத்துவா ஆதரவாளர் என்று கேள்விப்பட்டதால் அவரிடமே தொலைபேசியில் அழைத்துப்பேசியதாகவும், ஜோ அவர் இந்துத்துவ அமைப்பு எதிலும் இல்லை என உறுதியளித்தார் என்றும் சொல்கிறார்.இப்போது அவர் மோடிக்கு ஆதரவு அளித்ததைக் கண்டு வருத்தம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்

அதாவது நான் சொன்னதைத்தான் அம்பை சொல்லியிருக்கிறார். விருதுக்கு நூலின் தரம் அல்ல அளவுகோல். அந்த ஆசிரியன் இடதுசாரிக் கருத்துக்களுக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக இருக்கிறான் என்பது மட்டும்தான். அதை அவனிடமே கூப்பிட்டு கேட்டபின்னர் அவன் ‘விசுவாசத்துடன்’ இல்லை என்பதனால் வருத்தம் தெரிவிக்கிறார்

சாகித்ய அக்காதமி என்பது அம்பை சொந்தப்பணத்தில் அளிக்கும் விருது என்றால் இதை ஏற்கலாம். இலக்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் அளிக்கப்படும் ஒரு விருது அது. மத்திய அரசின் நிதியால் அளிக்கப்ப்டுவது. அதில் தங்கள் சொந்த அரசியல் ‘அஜெண்டா’க்களை இடதுசாரிகள் கலக்கிறார்கள், விருதுக்குழுக்களைக் கைப்பற்றிவைத்து பேரம்பேசுகிறார்கள், அவற்றுக்குப்பதிலாக விசுவாசத்தைக் கோருகிறார்கள் என்பதே நான் சொன்னது. அம்பை ஃபேஸ்புக்கில் சொல்லியிருப்பதற்கு மேலாக எந்த ஆதாரமும் அதற்குத்தேவை இல்லை. ஆம், நான் முன்னால் சொன்னதே சரியானது

அம்பை என் குறிப்பைக் கண்டபின்னர் விருது கொடுத்ததற்கு தான் வருந்தவில்லை, அது தரமான படைப்புதான் என்று தன் நிலைபாட்டை கொஞ்சம் சாதுரியமாக மாற்றிக்கொண்டிருக்கிறார், அவவளவுதான். அதைத்தான் நண்பர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் அம்பை சொன்ன முதல் கூற்றை வாசிக்கவில்லை

ஆகவே என் வருத்தத்துக்கு காரணம் இல்லை. அம்பை பற்றி நான் சொன்னதே சரியானது.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
18 Apr 10:53

நம்மாழ்வாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி

by S i Sulthan
February 24, 2014  “சுற்றுச்சூழலுக்கும், குழந்தைகளுக்கும் உள்ள தொடர்பை அறுந்து விடாமல் பாதுகாப்பது நாம் நம்மாழ்வாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்” என எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு புகழஞ்சலி கருத்தரங்கம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  நம்மாழ்வாரின் படத்தை திறந்து வைத்து எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பேசியதாவது: நவீன விஞ்ஞான கல்வியைக் கற்று தொழில் … Continue reading →
18 Apr 10:53

குஜராத்தின் ரயிஸ்கான் அஸீஸ்கான் பதான்: சில குறிப்புகள்

by வெ. ராமசாமி

(அல்லது) இதுதாண்டா தீஸ்தா செதல்வாத்! :-(

“என்னுடைய வாழ்க்கையின் ஒரே கோஷம் – நான் இந்தியனாகப் பிறந்தவன், ஒரு உண்மையான இந்தியனாக இருப்பதில் பெருமைப் படுபவன்”

– ரயிஸ்கான் பதான்

ரயிஸ்கான் அவர்களை – போராளிப் பெண்மணி, நிரந்தர மனிதவுரிமை மாதர் திலகம், குஜராத்தின் புரட்டுத்தலைவி அம்மணி மகாமகோ தீஸ்தா செதல்வாத் (Teesta Setalvad) அவர்களின் செல்லக் கைத்தடியாகத் தான் அறிந்திருந்தேன் – அதுவும் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு என நினைவு.

இப்போதிருப்பதை விட மிக மும்முரமாக, அமெரிக்க அரசிடமிருந்தும், தன்னார்வ நிறுவனங்களுக்குப் பிச்சை போடும் கனவானிய ஸ்தாபனங்களிலிருந்தும் பணம் வாங்கிக் கொண்டு – ஒரு மோதி எதிர்ப்பு நிலையையும், ஆகவே ‘ஸெக்யூலரிஸ’  காதலுணர்ச்சியை ஏற்றிக் கொண்டு, தீஸ்தா அம்மணி பவனி வந்து கொண்டிருந்த கால கட்டங்கள் அவை… இந்த அம்மணியைப் பற்றி ஒரு பதிவை முன்னமே எழுதியிருக்கிறேன். (பிச்சை போடுபவர்களும், பிச்சைக்காரர்களும்…)

ரயிஸ்கான் அவர்களும் தீஸ்தா சொல் கேட்டு, மோதிக்கு எதிராக, குஜராத் அரசுக்கு, காவல்துறைக்கு எதிராகச் சாட்சிகளை ஜோடிப்பதையும், பொய்வதந்திகளைப் பரப்புவதையும், பொய் ஆவணங்களைத் தயாரிப்பதையும் — கொஞ்சம் வெள்ளந்தியாகவே செய்திருக்கிறார்; ஏனெனில் ரயிஸ்கான் உண்மையாகவே, தான் தன்னுடைய சக முஸ்லீம்களுக்கு உதவுவதாகவும், தீஸ்தா ஒரு ‘மாறாது போல வந்த மாமணி’ போலவுமெல்லாம் ஒரு மனப் பிரமையில் இருந்திருக்கிறார்.   

நரேந்த்ர மோதியும் பாஜக-வும் தான் முஸ்லீம்களின் எதிரி #1 என தீஸ்தா போன்ற, அயோக்கியத்துக்கு விலைபோன  அற்பர்கள் பரப்பிய வதந்திகளை நம்பி – எப்படியாவது மோதியை அகற்றவேண்டும், சிறையில் தள்ள வேண்டும் என விரும்பித்தான் இம்மாதிரி சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். அதாவது 2008 வரை – அவர் அம்மணியார் கூடவேதான் இருந்தார்…  ஏனெனில் தீஸ்தா அம்மணியானவர் இச்சமயங்களில் கொஞ்சம் வேலைப்பளு அதிகத்தால் தள்ளாடிக்கொண்டிருந்தார் -  அவர் பொய்க் கணக்கு எழுதுவதிலும்,  நன்கொடைகளைக் கையாடுவதிலும் கொஞ்சம் மும்முரமாக இருந்த காலம் அது.

ரெயீஸ்கான் பதான் அவர்களின் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்...

ரயிஸ்கான் பதான் அவர்களின் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்…

… இச்சமயம், இந்த தீஸ்தா அம்மணி குறித்த ஒரு ஆஹா-ஓஹோ குறிப்பு, அவருடைய புகைப்படத்துடன் – என்னுடைய  செல்ல-அலக்கிய-அரைகுறை-அயோக்கிய இன்னபிற போராளிப் பத்திரிகையான உயிர்மையில் பல வருடங்களுக்கு முன் வந்திருந்தது, நினைவுக்கு வருகிறது; தேடிப் படித்து இறும்பூதடையவும்; இம்மாதிரியே பல இட்டுக்கட்டப்பட்ட, காப்பியடித்த செய்திகளையுடைய கட்டுரைகள், இன்னமும் இந்த உயிர்பொய் பத்திரிகையில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

… ஆக…  கடந்த ஆறு வருடங்களாக, ரெயீஸ்கானின் சக்தியில் பெரும்பங்கு தீஸ்தாவின் அற்பத்தனங்களையும் கயமையையும் எதிர்கொள்வதிலேயே செலவழிந்திருக்கிறது.

சரி, நம் ரயிஸ்கான் அவர்கள் பக்கம் வருவோம்…

-0-0-0-0-0-0-0-0-

… ஆக, மிகப்பின்னர், சில வருடங்கள் முன்பு, என் இந்தியகுஜராத்தி நண்பர் ஆரிஃப் ஸையத் ஹுஸ்ஸெய்ன் அவர்கள் மூலமாகத் தான், இந்த ரயிஸ்கான் அவர்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் அறிந்து கொண்டேன். அதற்குள் உலகத்தை, தன் கருத்துருவாக்கங்களை ஒரு சுற்றுச் சுற்றி, தன்னை மறுபரிசீலனை செய்துகொண்டு  – ரயிஸ்கான் அவர்களால் உண்மைகளை உணர முடிந்திருக்கிறது.  காலத்துக்கு நன்றி.

இச்சமயம், ஒரு எச்சரிக்கை: ஒற்றியெழுத்தனார்™ போன்றவர்களைப் போல லீனஸ் பாலிங் அவர்களை அறிந்துகொள்ள அந்தக் கேடுகெட்ட அமெரிக்காவுக்கு நேரே போய் எல்லாம் பல வருடங்களாக அவதானித்து, கிட்டேயிருந்து பார்த்தது போலெல்லாம் எழுதப் போவதில்லை.

நான் ஐந்தாறு முறை குஜராத் சென்றிருக்கிறேன். எல்லாம் மோடியின் ஆட்சிக்கு முன்னர்தான். ராஜ்கோட், அஹ்மெதாபாத், ஆலங், ஆனந்த் என்றுதான் என் பயணங்கள் – அதுவும் தொழில் நிமித்தம் அல்லது பாழாய்ப் போன நேர்காணல்கள் / அளவளாவல்கள், NIDயில், IIMல், IRMAவில் – அவ்வளவே. ஸபர்மதி கூடச் சென்றதில்லை. மோசம் தான். ஆனால், எனக்கு அங்கே, சில ‘தொடர்புகள் மிகுந்த’ நண்பர்கள் இருக்கிறார்கள். – இவர்களில் சிலரிடம் தொடர்ந்த உரையாடலில் இருக்கிறேன். இதைத் தவிர, எனக்கு இந்தத் தொழில்முறை மனிதவுரிமைப் போராளிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஒரு ஆபாசமான ஈடுபாடும் குயுக்தி ஆர்வமும் வேறு. அவ்வளவே.

… பொதுவாக, இந்தியாவில் தொழில்முறை மனிதவுரிமைப் போராளிகளின் கூத்தும், அலட்டலும், பிலுக்கலும் அதிகம். ஆனால், அதன் சிற்சில மாநிலங்களில் இவர்களில் கிடுக்கிப் பிடியானது பீதிகொள்ள வைக்குமளவு அதிகம். இந்த மாநிலங்களில், நம் புகழ்பெற்ற தமிழமும், குஜராத்தும் அடக்கம். இந்த குஜராத் தொடர்பான அடக்கத்தில் தீஸ்தா போன்றவர்களின், எஜமானர்களின் எலும்புத்  துண்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டு, அவர்கள் ஏவுவதற்கேற்பக் குரைக்கும் தன்மையும் அதிகம்… இம்மாதிரி, பர்காதத் போன்ற பணம்வாங்கிச் செய்தியாளர்களால் இந்தியாவுக்கு ஏற்படும் கேவலங்கள், வெட்கக் கேடுகள் ஏராளம். இவர்களால் கட்டமைக்கப் பட்ட பிம்பம்தான் இடதுசாரிய_அறிவுஜீவிய_படிப்பாளி அரைகுறைகளால் ஊதி ஊதிப் பெரிதாக்கப் படுகிறது. இதுதான் மோதியை ஒரு படுகோர மதவெறியனாக உருவகம் செய்கிறது… தொடர்ந்து பொய்மைகளை நிறுவுகிறது.

-0-0-0-0-0-0-0-

இப்போது சில சுட்டிகள்.

கீழ்கண்ட யூட்யூப் சுட்டிகளில் – இந்த ரயிஸ்கான் அவர்கள், தீஸ்தா, 2002 கலவரங்கள், பர்காதத், செய்தித் திரித்தல்கள் முதலானவைகள் பற்றி விலாவாரியாகப் பேசுவதைக் காணலாம். உங்களுக்கு, ஓரளவுக்கு ஹிந்தி தெரிந்தாலே போதுமானது

  • ரயிஸ்கான் பதான் – குஜராத் 2002 கலவங்கள்: உண்மை… பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4.
  • ரயிஸ்கான் பதான் – தீஸ்தா செதல்வாtதின் உண்மைமுகம்: வீடியோ (நானாவதி கமிஷன் முன் தான் அளித்த அஃப்ஃபிடவிட் – தன்னிலை வாக்குமூலம் பற்றி ரயிஸ்கான் இதில் பேசுகிறார்.)

சில ஆவணங்கள், கீழே:

  • தீஸ்தா அம்மணி, ரயிஸ்கான் மூலம் சாட்சிகளுக்குப் பணம் அளித்து மோதியின் அரசுக்கு எதிராக சாட்சியம் ஜோடித்ததன் சில விவரங்கள் – வங்கிக் கணக்குக் குறிப்புகளுடன்.
  •  நீதிபதி ஸாவந்த் அவர்களுக்கு ரயிஸ்கான் எழுதிய கடிதம்; இதில் தீஸ்தாவின் பல சட்டத்திற்கும் நேர்மைக்கும் புறம்பான பல செயல்பாடுகள் / விஷயங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • பெஸ்ட் பேக்கரி வழக்கின் பிரதம சாட்சியான யாஸ்மீன் பானு ஷேக் அவர்கள் – தீஸ்தா தன்னைப் பொய் சாட்சியம் அளிக்க வற்புறுத்தினார் எனும் குற்றச்சாட்டை வைக்கும் – தன்னிலை விளக்க வாக்குமூலம்.
  • பெஸ்ட் பேக்கரி வழக்கில் – எப்படிப் பலவிதமான ஜோடிப்புகள் நடந்தன என்பதை விலாவாரியாக விளக்கும் ரயிஸ்கான் அவர்களின் வாக்குமூலம்; இதுவும் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. விஷயம் என்னவென்றால் -இந்த ஜோடிப்பை வைத்துத்தான் பரவலாக, மேன்மேலும் பொய்களை பவனி வரச் செய்துகொண்டிருக்கிறார்கள், இந்த தொழில்முறை மோதி எதிர்ப்பாளர்கள்!
  • குல்பர்க் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் – ஃபெப்ருவரி 2013ல் தீஸ்தாவுக்கு அனுப்பிய நோட்டீஸ் – இதில் சங்கத்திற்காகவென்று தீஸ்தாவும் அவர் கணவரும் பெற்ற ரூபாய் 151.00 லட்சத்தில் – ஒரு பைசாவைக் கூட சங்கத்திற்குக் கொடுக்காமை பற்றியது; இது தொடர்பாகத்தான் தற்போது அம்மணி மாட்டிக் கொண்டிருக்கிறார்.
  • தீஸ்தா பரப்பிய பொய்ச் செய்தியான பண்டர்வாடா பிணப் புதைப்புகள் (mass graves at Pandawada) பற்றி – ராஹுல் சிங் எனும் ஹெட்லைன்ஸ் டுடே நிருபர் பொலீஸுக்கு அளித்துள்ள வாக்குமூலம்/பிரமாணம்; இதில் தீஸ்தாவின் அண்டப் புளுகுகளை அம்பலப் படுத்தியிருக்கிறார்.

இம்மாதிரியான இன்னமும் சில சுட்டிகள்; இப்பக்கத்திலிருந்துதான் மேற்கண்டவற்றில் பல சுட்டிகளை எடுத்தேன்.

-0-0-0-0-0-0-

பல முஸ்லீம்கள் மற்ற சமுதாயத்தினரைப் போலவேதான். அவர்களும் மற்றவர்களைப் போன்ற சாதாரண, விருப்பு/வெறுப்புகள் கொண்ட மனிதர்கள் தாம் – நம்மெல்லாரையும் போல, ஆனாலும் வளர்ச்சியையும், மேன்மையையும் விழைபவர்கள் தான்.

மனிதவுரிமை முதலாளிகள், தொழில்முறையாளர்கள், மதத் தலைவர்கள் போன்றவர்களெல்லாம் கண்டமேனிக்கும் கயமைப் பரப்புரைகள் செய்வதற்கு மாறாக — அவர்கள் பிச்சைகளுக்கும், சலுகைகளுக்கும், இலவசங்களுக்கும் ஏங்கிக் கொண்டிருக்கவில்லை.

அவர்களும் மற்றவர்களுக்கு இருக்கும் உரிமைகளை, சுயமரியாதையை, சுபிட்சத்தைத் தான் நாடுகிறார்கள். பயபீதி கலந்த தனிமைப் படுத்தலை அல்ல.

ஆகவே, மோதி!

ஆமென்.

குறிப்பு: சில மாதங்கள் முன்பு இந்த தீஸ்தா அம்மையார், சென்னை வந்து பேச்செல்லாம் பேசினாராமே? ஒத்திசைவை தலையில் அடித்துக்கொண்டு படிக்கும் சென்னைவாசிகளான 1½ பேர்களில் யாராவது அதற்குப் போனீர்களா?? ;-)

நரேந்த்ர மோதி!


18 Apr 10:53

பாரன்ஹீட் 451-இரண்டு

by bogan
அவர்களிடம் இந்த இயந்திரம் இருந்தது.உண்மையில் இரண்டு இயந்திரங்கள்.ஒன்று உள்ளுக்குள்  தூர்ந்துபோன பழைய கிணற்றுக்குள் தேங்கிக் கிடக்கும் பாசி படிந்த நீரையும் காலத்தையும் தேடி இறங்கும் நாகம் போல உடலுக்குள் இறங்கியது.அது அங்கே  மிதக்கும் அத்தனை பாசியையும்   அங்கிருக்கும் இருட்டையும்  காலகாலமாக அங்கே சேர்ந்து கிடக்கும்  நச்சையும் விழுங்கியதா? இயந்திரம்  சத்தமே போடாமல்  மௌனமாய் எல்லாவற்றையும்  விழுங்கியது.அதற்கொரு கண் இருந்தது .அதை இயக்கிக் கொண்டிருந்தவன், விசேடமாகத் தயாரிக்கப் பட்ட லென்சுடன்  கூடிய தலைக் கவசத்தை  அணிந்துகொள்வதன் மூலமாகத்  தான் யாரைத் தோண்டிக் கொண்டிருக்கிறானோ அவர்களது ஆன்மாவின் ஆழம் வரைப் பார்க்கமுடிந்தது.அந்தக் கண் என்ன பார்த்தது?அவன் சொல்லவில்லை.அந்தக் லென்ஸ் மூலமாக அவன் பார்த்தான்.ஆனால் பார்க்கவில்லை.மொத்த விவகாரமும் ஒருவர் தன்வீட்டின் பின்புறம் ஒரு அகழி  தோண்டுவதைப் போலத்தான் இருந்தது. படுக்கையில் கிடக்கும் பெண்மணி அந்த முயற்சியில் எதிர்ப்பட்ட மார்பிள் படுகை  போலத்தான் இருந்தாள் .நாகமே  இன்னும் போ.இன்னும் இன்னும் துளைத்து அங்கிருக்கும் வெறுமையையும் முடிந்தால் உறிஞ்சி வெளியேற்று.

இயக்குகிறவன் ஒரு சிகரட்டைப் பிடித்தவாறே அங்கேயே நின்றிருந்தான்.

மற்ற இயந்திரமும் இப்போது வேலை செய்துகொண்டிருந்தன்தது.அதை இயக்குகிறவனும்  முந்தியவனைப் போலவே கறைபடியாத ஒரு பழுப்பு அங்கியில் முற்றிலும் மனிதச் சாயல் இல்லாமல்தான் இருந்தான். அந்த இயந்திரம் உடலிலிருந்து கெட்ட  ரத்தம் முழுவதையும் வெளியேற்றி புதிய தூய ரத்தத்தால் நிரப்பிக் கொண்டிருந்தது.

''இரண்டையுமே செய்யவேண்டும் வயிற்றை  மட்டும் சுத்தப் படுத்தினால் போதாது.இல்லை எனில் உடம்பில் தேங்கியிருக்கும் நச்சு ரத்தம் மூளையை சுத்தியலால் அடிப்பது போல அடித்து அடித்து ஒரு மாமிசக் கூழ் போல ஆக்கிவிடும்''

மண்டேக்''போதும்!''என்றான்.

அவன் ''சும்மா சொன்னேன்''

''உங்கள் வேலை முடிந்துவிட்டதா?''

அவர்கள் இயந்திரங்களை நிறுத்தி மூடி வைத்தார்கள்.அவனுடைய கோபம் அவர்களைத் தொடக் கூட இல்லை.தங்களது சிகரெட் புகை சூழ கண்கள் மீது சுழல அசையாது நின்றிருந்தார்கள்.

''ஐம்பது டாலர்கள் ''என்றார்கள் 

''முதலில் அவள் நன்றாக இருக்கிறாளா என்பதைச் சொல்லுங்கள்''

''நன்றாகிவிடுவார்.நாங்கள் அவர் உடலிலிருந்து கெட்ட விஷயங்களை எல்லாம் எடுத்துவிட்டு புதிய விசயங்களை வைத்திருக்கிறோம்.எல்லாம் சரியாகிவிடும்''


''நீங்கள் இரண்டு பேருமே எம் டி படித்தவர் இல்லை.அவசரசிகிச்சைப் பிரிவிலிருந்து ஒரு எம் டி மருத்துவரை  அழைத்து வந்திருக்கக் கூடாதா?""

''தேவை இல்லை.நாங்கள் இதுபோல நிறைய கேஸ்களை கடந்த இரண்டு வருடங்களாக பார்க்கிறோம்.இவை இதற்காகவே  தயாரிக்கப் பட்ட இயந்திரங்கள்.,அதன் சிறப்பு லென்ஸ் மூலமாக மிக எளிதாக இதைக் கையாள முடியும்..இதற்கு இந்த இயந்திரத்தைக் கையாளும் இரண்டு மனிதர்கள் போதும்.அரைமணி நேரத்தில் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட முடியும் ''என்றான் அவன்.பிறகு ''நாங்கள் போக வேண்டியிருக்கிறது .புதிதாய் ஒரு அழைப்பு ஹெட்போன்கள் மூலம் வந்திருக்கிறது.இன்னொரு நபர் எங்கோ தனது தூக்க மாத்திரைப் புட்டியின் மூடியைத் தொலைத்திருக்கிறார்.தேவை எனில் கூப்பிடுங்கள் .தூக்கத்திலிருந்து எழுப்பும் மருந்து அவருக்குக் கொடுத்திருக்கிறது.பசியோடு எழுந்திருப்பார்.பார்க்கலாம்''

பிறகு அவர்கள் தங்களது சிகரெட் புகையோடு விஷப் பாம்புக் கண்களோடு தங்களது இயந்திரங்களோடு குழாய்களோடு பாட்டில்களில் தளும்பும் துக்க திரவங்களோடு  வெளியே போனார்கள் 


மாண்டேக் அவள் அருகில் அமர்ந்தான்.புறங்கையால் அவளது மூச்சை உணர முயற்சித்தான்.

''மில்டரெட் !''என்றழைத்தான் 
பிறகு நாம் நிறைய பேர் இருக்கிறோம் என்று  நினைத்தான்.மிக நிறைய பேர்.ஒருவரை ஒருவர் அறியாமல்.கோடிக் கணக்கில்.அந்நியர்களாய்.நாம் முற்றிலும் அறியாத அன்னியர்கள் திடீரென்று உங்கள்  வாழ்வுக்குள் வருகிறார்கள்.உங்கள் இதயத்தை வெட்டி எடுக்கிறார்கள் .உங்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள் கடவுளே!யார் இந்த மனிதர்கள் ?நான் இதுவரை இவர்களைப் பார்த்ததே இல்லை 

அரைமணிநேரம் போனது.

இந்தப் பெண்மணியின் உடலில் இப்போது புது ரத்தம் ஓடுகிறது.அது அவளுக்குப் புதிய விசயங்களைச் செய்திருக்கிறது.அவள் கன்னங்கள் மிகச் சிகப்பாகவும் உதடுகள் மிருதுவாகவும் புதிதாகவும் இப்போது மாறிவிட்டன.வேறொருவரின் ரத்தம்.இதேபோல வேறு ஒருவரின் தசைகளையும் மூளையையும் இவ்வாறு பொருத்த முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் !அவளுடைய மனத்தையும் கூடக் கழற்றிச் சுத்தம் செய்து தூசு தட்டி துளைகளை அடைத்து  புத்தம் புதிதாய் மறுநாள் காலை  கொண்டுவர முடிந்தால்.....

முடிந்தால்...

அவன் எழுந்து திரைகளை இழுத்துவிட்டு ஜன்னலைத் திறந்து இரவுக் காற்றை அறைக்குள் அனுமதித்தான்.நேரம் அதிகாலை இரண்டு மணி.இதோ அவனும் க்ளாரிசும்  வெள்ளி நிலவின் கீழ் நடந்து வந்து ஒருமணிநேரம் ஆகியிருக்குமா என்ன?அதற்குள் அவனது அந்த வண்ண உலகம் உருகி விழுந்து மீண்டும் தனது சாம்பல் நிறத்துக்குத் திரும்பிவிட்டது.

க்ளாரிசின் வீட்டிலிருந்து சிரிப்புச் சத்தம்  மிதந்து வந்தது.மிகத் தளர்வான இயல்பான சிரிப்புச் சத்தங்கள்.உற்சாகமான பேச்சொலிகள்..கொஞ்சம் கூட அவற்றில் செயற்கை இல்லை .சுற்றிலும் இருளால் பொதியப்  பட்ட வீடுகள் நடுவே தான்மட்டும் தனியாக அந்த நள்ளிரவிலும் ஒளிரும் அந்த வீட்டிலிருந்து  அவர்களது  பேச்சுக் குரல்கள் சிரிப்புகள்   காற்றில் ஒரு வசியவலையை நெய்து பிரித்து மீண்டும்  நெய்து கொண்டிருந்தன 

மாண்டேக் சட்டென்று வெளியே வந்து புல் தரையைக் கடந்து அவர்கள் வீட்டின் முன்னால் போய்  நின்றான்.கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.கொஞ்சநேரம் அப்படியே நிழலில் நின்றுகொண்டிருந்தான்.கதவைத் தட்டி உள்ளே போகலாமா என்று கூட யோசித்தான்.''நான் உள்ளே வருகிறேன்.வந்து எதுவும் செய்யாமல் பேசாமல் நீங்கள் பேசுவதை மட்டும் சும்மா கேட்டுக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?''என்று சொல்லலாமா என்று...

ஆனால் மாண்டேக் உள்ளே செல்லவில்லை.அவன் முகத்தின் மீது  ஒரு பனிப்பாளம்  போன்று படர்ந்த  பாவனையுடன் உள்ளே அந்த மனிதர்(அவளது மாமா?) பேசுவதை மட்டும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தான்.


அந்த மனிதர் சொல்லிக்  கொண்டிருந்தார் 

''இது உண்மையில் பயன்படுத்து -தூர எறி  உலகம்.யார் மேலாவது நம் நமது மூக்கைச் சிந்துகிறோம்.பிறகு துடைத்துத் தூர எறிந்துவிடுகிறோம்.ஒவ்வொருவரும் இவ்விதமே அடுத்தவரைச் செய்கிறோம்.இதில் எனது விளையாட்டு அணி என்று எதைச் சொல்வது ?அவர்களுக்குப் பெயர்களே இல்லாதபோது ?இருக்கட்டும் .இப்போது அரங்கத்துக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறவர்கள்  என்ன நிறச சட்டை அணிந்துகொண்டிருக்கிறார்கள் ?""


மாண்டேக் வீட்டுக்குத் திரும்பினான்.ஜன்னலை அடைக்கவில்லை,மில்ட்ரெட் நன்றாக இருக்கிறாளா என்று பார்த்தான்.அவளைச் சுற்றி கவனமாகப் போர்த்திவிட்டு பிறகு நிலவொளி தனது கன்னங்களில் படியக்  கண்மூடிக் கிடந்தான்.


ஒரே ஒரு மழைத் துளி .க்ளாரிஸ்.
இன்னொன்று மழைத்துளி -மில்டெரெட் .இன்னொன்று இன்று இட்ட தீ.தூக்க மாத்திரைகள்.தூர எறியும் திசுக் காகிதங்கள் .மாமா.கிளாரிஸ்  மில்ட்ரெட் மாமா சிரிப்பு 
மழை.புயல்.இடிமுழக்கம் .கொடும் மழை.வெடித்துச் சிதறும் எரிமலை.எல்லாம் சேர்ந்து பெரிய இரைச்சலுடன் காலையை  நோக்கிச் செல்லும் ஒரு பிரவாகம்.

''இனி முடியாது''என்று சொல்லிக் கொண்டே  அவன் ஒரு தூக்க மாத்திரையை  நாக்கில் கரைத்துக் கொண்டான் 




காலை.மணி ஒன்பது.மில்ட்ரெடின்  படுக்கை காலியாக இருந்தது.

அவன் சட்டென்று இதயம் துடிக்க எழுந்து கீழே ஓடி அடுக்களைக் கதவருகே நின்றான்.
டோஸ்டரின்  வாயிலிருந்து வெளியே வந்ததை இயந்திரச் சிலந்திக் கைகள் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டிருக்க அவள்  அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் காதுகளில் வழக்கமான ஹெட்போன்கள் காலத்தைக் கரைத்துக் கொண்டிருந்தன 

''நீ நலமாக இருக்கிறாயா''என்று அவன் கேட்டான்.


அவள் நிமிர்ந்துபார்த்து அவன் உதடுகளை வாசித்து ஆம் என்று தலை அசைத்தாள்.பிறகு டோஸ்டரை இன்னொரு டோஸ்டுக்காக  அமைத்து வைத்தாள்.

அவன் உட்கார்ந்தான்.அவள் ''ஏனென்றே தெரியவில்லை.ரொம்ப பசிக்கிறது ''


அவன் ''நேற்று இரவு ...''என்று ஆரம்பித்தான் 


''நேற்றிரவு தூக்கமே இல்லை.கடவுளே ரொம்ப பசிக்கிறது இன்று ''என்றாள்  

அவன் மறுபடியும் ''நேற்றிரவு...''என்று ஆரம்பித்தான் 

''நேற்றிரவு என்ன??''

''உனக்கு ஒன்றும் நினைவில்லையா?""

''என்ன?எனக்கு ஒன்றும் நினைவில்லை,நேற்று இங்கு பார்ட்டி எதுவும் நடத்தினோமா? கடுமையான ஹாங் ஓவர்   போல உணர்கிறேன்.கொடும் பசி வேறு.நேற்று இரவு இங்கு யார் எல்லாம் வந்தார்கள்''

அவன் ''சிலர்''என்றான் 

''அப்போ அதுதான். பார்ட்டி!வயிறு வலிக்கிறது .பார்ட்டியில் நான் ரொம்ப ஒன்றும் முட்டாள்த் தனமாக நடந்துகொள்ளவில்லையே ?"


அவன் அமைதியாக ''இல்லை''என்றான் 

டோஸ்டர் இன்னொரு டோஸ ட்டை அவனிடம் வெண்ணெய்   தடவி தள்ளியது.அவன் அதை நன்றியுடன் பெற்றுக் கொண்டான்.

''உனது முகம் கூட சரியில்லை ''என்றாள்  அவள்.




மாலையில் மழை பெய்தது.மொத்த உலகமும் சாம்பலாக மாறியது.அவன் கூடத்தின் நடுவில் நின்றுகொண்டு தனது உடலின் மீது  அந்த ஆரஞ்சு நிற நெருப்புப் பல்லியின் சின்னத்தை அணிந்துகொண்டான் .பிறகு குளிர்சாதனக் கருவியின்  காற்றுத் துளையைப் பார்த்தவண்ணமே கொஞ்சநேரம் நின்றுகொண்டிருந்தான்.மில்ட்ரெட் தனது டிவி சுவர்  அறையில் வாசித்துக்  கொண்டிருந்த ஸ்க்ரிப்டில் இருந்து ஒருகணம் விடுபட்டு ''ஒரு மனிதன் சிந்திக்கிறான்!''என்றாள்  


அவன் ''ஆம்.உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.மில்ட்ரெட் ,நீ நேற்றிரவு எல்லா தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டுவிட்டாய் ''என்றான் 

அவள்ஒருகணம் தயங்கி  ''ச்ச்சே.இருக்காது''என்றாள்  பிறகு ''நான் ஏ னப்படி செய்யவேண்டும்?''


''ஒருவேளை நீ முதல் இரண்டு தூக்க மாத்திரைகளை எடுத்ததும் அதை மறந்து இன்னும் இரண்டு தூக்க மாத்திரைகளை எடுத்திருக்கலாம்.அப்புறம் அதையும் மறந்து இன்னும் இரண்டு.அப்புறம் இன்னும் இரண்டு.இப்படியே முப்பது மாத்திரைகளையும்..'

அவள் மறுபடியும் ''நான் ஏனப்படி  செய்யவேண்டும்??"'என்றாள் பிறகு ''நான் அப்படி செய்யவில்லை.செய்யவே மாட்டேன் ஒருபோதும்  ''என்றாள்.

அவன் ''நீ  சொன்னால் சரிதான்''என்றான்.பிறகு ''இன்று என்ன புதிதாக ?""

''இது இன்னும் பத்து நிமிடத்தில் நமது டிவி சுவரில்  வரபோகிற ஒரு நாடகம்.என் பக்க  ஸ்க்ரிப்ட் காலையில்தான் வந்தது .இது ஒரு புதுமையான இன்டராக்டிவ் நாடகம் ,இதில் ஒரு காரக்டர் நான்.இல்லத்தரசி ஹெலன்.எனது வசனங்கள் மட்டும் இதில் முன்கூட்டியே தயாரிக்கப் படாமல் இருக்கும்.நாடகம்  நிகழும்போது அதல் வரும் மற்ற காரக்டர்   நீ என்ன நினைக்கிறாய்  ஹெலன்?என்று என்னைப் பார்த்துக் கேட்பார்.நான் சூழலுக்குத் தகுந்தாற்போல யோசித்து எதையாவது சொல்லவேண்டும்.ஜாலியாக இல்லை?""



அவன் ''நிச்சயமாக''என்றான் ''எது பற்றிய நாடகம் இது??''
''அதான் சொன்னேனே.இது மூன்று மனிதர்கள் பற்றியது பாப்.ரூத்.ஹெலன்.நான்தான் ஹெலன்''

'ரொம்ப ஜாலியான நாடகம் மாண்டேக்.நாம் நமது நான்காவது சுவரையும் ஒரு டிவி சுவராக மாற்றிவிட்டால் இன்னும் ஜாலியாக இருக்கும்.வெறும் இரண்டாயிரம் டாலர்கள் தானே ?எப்போது நம்மால்முடியும் மாண்டேக்??""

''அது எனது வருடச் சம்பளத்தில் மூன்றில் ஒருபங்கு''

''வெறும் இரண்டாயிரம் டாலர்கள்''என்றால் அவள்.''நீ என்னைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கவேண்டும் மாண்டேக்.நான்காவது டிவி சுவர் மட்டும் கிடைத்துவிட்டால் நமது அறையும்  பெரிய பணக்கார்கள் அறை  போல ஆகிவவிடும் இல்லையா?வேண்டுமெனில் நாம் சில விசயங்களை தியாகம் செய்துவிடலாம் ''


''சில விசயங்களை தியாகம் செய்துதான் நாம் இந்த மூன்றாவது டிவி சுவரையே வாங்கினோம் நினைவில்லையா மில்ட்ரெட் ?இரண்டு மாதங்கள்தான் ஆயிற்று ''

அவள் அவனையே உற்றப் பார்த்துவிட்டு 'அப்படியா?நல்லது மாண்டேக்.குட்பை''

''குட்பை''என்றவன் திரும்பி ''உனது நாடகம் சந்தோசமாக முடிகிறதா ?"என்று கேட்டான் 

''நான் அதுவரை இன்னும்  படிக்கவில்லை''


அவன் குனிந்து அவளது ஸ்க்ரிப்டின் கடைசிப் பகுதியைப் படித்துவிட்டுத் திரும்ப  அவள் கையிலேயே  கொடுத்துவிட்டு வெளியே மழைக்குள் நடந்தான்.


மழை  குறைந்து கொண்டிருக்க க்ளாரிஸ்  பாதையின்  நடுவில் நின்றுகொண்டு வானோக்கி தன்  முகத்தை உயர்த்திக் கொண்டிருந்தாள் அவள் முகத்திலிருந்து சில மழைத்துளிகள் சிதறின அவள் அவனைக் கண்டுகொண்டு புன்னகைத்தாள். 

''ஹல்லோ??

''அவன் ஹலோ''என்றான்''இப்போது புதிதாய் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய் க்ளரிஸ்?""

இன்னும் பைத்தியமாய்த்தான்  இருக்கிறேன்.மாண்டேக்.மழை நன்றாக இருக்கிறது எனக்கு மழையில் நடக்கப் பிடிக்கும்''


''எனக்குப் பிடிக்காது''

''ஒருதடவை செய்துபார்த்தால் உங்களுக்கும்  பிடிக்கலாம்''

''செய்ததே இல்லை''என்றான் அவன். 
அவள் தனது உதடுகளை சப்பிக் கொண்டு ''மழை ருசியாகக் கூட இருக்கிறது''

''நீ என்ன செய்கிறாய்?இப்படி எல்லாவற்றையும் ஒருமுறை செய்துபார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர?'

''சிலவற்றை  இரண்டாவது முறையும் செய்து  பார்ப்பதுண்டு ''என்றாள்  அவள்.தனது கைகளைப் பார்த்துக் கொண்டே.

''உன் கைகளில் என்ன வைத்திருக்கிறாய் க்லாரிஸ்?""

''டான்டலியன் மலர்கள்!.இந்தப் பருவத்தின் கடைசி மலர்கள்.கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.டான்டலியன் மலர்களை நாடியின் கீழ் தேய்க்கும் வழக்கத்தைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா மாண்டேக்?""அவள் சிரித்தவண்ணம் அந்த மலர்களை தனது நாடிக்குக் கீழ்த்  தேய்த்தாள். ''இதன் நிறம் நம் மேல் பற்றிக் கொண்டால் நாம் காதலில் இருக்கிறோம்  என்று அர்த்தம் .நான் காதலில் இருக்கிறேனா மாண்டேக்?"'

அவனால் அவளை விட்டுக் கண்களை எடுக்கவே முடியவில்லை.

''அங்கே மஞ்சளாக இருக்கிறது ''

'ரொம்ப நல்லது,இப்போது நீங்கள் முயற்சி  செய்யுங்கள்''


அவன் தயங்கி ''எனக்கு அது வேலை செய்யாது''

ஆனா ல் அவன் வேண்டாம் என்று சொல்லும்முன்பு அவள் அந்த மலர்களை அவன் நாடிக்குக் கீழ்த் தேய்த்தாள்  ''அசையதிருங்கள் மாண்டேக் ''

பிறகு குனிந்து பார்த்தாள் அவள் புருவங்கள் இடுங்கின.

அவன் ''என்ன?"" என்றான் 

''ப்ச்.நீங்கள் யாருடனும் காதலில் இல்லை''

''இல்லை!நான்  காதலில் இருக்கிறேன்!""

'ஆனால்  இது காட்ட மாட்டேன் என்கிறதே ''

''இல்லை.நான்  ரொம்பக் காதலில் இருக்கிறேன்''என்றான் அவன்.பிறகு  ரொம்பக் காதலில் இருப்பதுபோன்ற ஒரு முகத்தைக்  கொண்டுவர முயன்றான் .ஆனால் அப்படியொரு முகமே அவனிடம் இல்லை.


அவள் ''தயவு செய்து அப்படிப் பார்க்காதீர்கள் ''

அவன் ''அது இந்த மலர்களின் தவறுதான்.நீ  முதலில் அவற்றை உன்மீது பயன்படுத்தினாய்.அதனால்தான் அவை என்னிடம் பற்ற மாட்டேன் என்கின்றன''

அவள் அவனது கையைத் தொட்டு ''அப்படியாகத்தான் இருக்கவேண்டும்.விடுங்கள் நான் உங்களை கவலைப் படுத்திவிட்டேன் போலிருக்கிறது மன்னியுங்கள்''


''அதெல்லாம் ஒன்றுமில்லை ''என்றான் அவன் ''நான் நன்றாகத்தான் இருக்கிறேன்''

''நல்லது நான் போகவேண்டும் .உங்களைக் கோபப் படுத்தவில்லை என்று நம்புகிறேன் ''

''கோபமில்லை.கொஞ்சம் தடுமாறிவிட்டேன் உண்மைதான்''

''நான் சென்று எனது மனநல மருத்துவரைப் பார்க்கவேண்டும் அவர்கள் என்னைப் பார்க்கவேண்டும் என்று  வற்புறுத்துகிறார்கள்..நான் எப்போதும் அவரிடம் என்ன சொல்வதென்று தீர்மானித்து விட்டே செல்வேன்.எப்போதும்  அவர் நான் ஒரு வழக்கமான வெங்காயம்தான் என்று சொல்வார்.பிறகு அவர் அந்த வெங்காயத்தின் அடுக்குகளை உரிக்க விட்டுவிட்டு வந்துவிடுவேன்''


''உனக்கு ஒரு மனநல மருத்துவர் தேவைப்படுகிறார் எ ன்றே நானும்  நினைக்கிறேன்''

''உண்மையாகவா?"'

அவன் தயங்கி  ''இல்லை''என்றான் 

''அவருக்கு நான்ஏ ன் காடுகளில் தனியாக அலைகிறேன் பறவைகளைத்  துரத்திக் கொண்டு பட்டாம்பூச்சிகளைத் சேர்த்துக் கொண்டு அலைகிறேன் என்று தெரியவேண்டும்.எனது பட்டாம்பூச்சிகள் சேகரிப்பை ஒருநாள் உங்களிடம் காட்டுகிறேன்''

''நல்லது''
''அவர்களுக்கு நான் நாள் முழுவதும் என்ன செய்கிறேன் என்று தெரியவேண்டும்.நான் சொல்வேன்.சிலநேரம் நான்  சும்மா அமர்ந்து எதையாவது யோசனை பண்ணிக் கொண்டிருப்பேன் என்று.ஆனால் என்ன சிந்திக்கிறேன் என்று சொல்லமாட்டேன்.சிலநேரங்களில் இதுபோல மழையில் முகத்தைக் காட்டிக் கொண்டு நிற்பேன் என்றும்  சொல்வேன்.மழைக்கு வைனின் ருசி உண்டு.தெரியுமா?"'

அவன் ''தெரியாது''என்றான் 

''நீங்கள் என்னை மன்னித்துவிட்டீர்கள் தானே??''

அவன் ''ஆமாம் ''என்றான் ''ஏனென்று தெரியவில்லை. நீ ஒரு வினோதமான பெண்.பலநேரங்களில் எரிச்சலும் படுத்துகிறாய் எனினும் உன்னை மன்னிப்பது எளிதாக இருக்கிறது.உன் வயதென்ன சொன்னாய்?பதினேழு?""

''அடுத்த மாதம்''

''வினோதம் எனது மனைவியின்  வயது முப்பது.ஆனால் நீதான் மிக முதிர்ந்த பெண் போல எனக்கு சிலநேரங்களில்  தோன்றுகிறாய்  ''

''நீங்களும் ஒரு வினோதமான மனிதர்தான்.மாண்டேக்.சமயங்களில் நீங்கள் ஒரு தீத்துறை  வீரர் என்பதையே மறந்துவிடுகிறேன்.ஓ  ..மறுபடி உங்களை எரிச்சல் படுத்திவிட்டேனா ?""

''பரவாயில்லை''

.''இதில் நீங்கள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்?உங்களது இந்த  வேலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?நீங்கள் நிச்சயமாக   மற்றவர்களைப் போல அல்ல.எனக்கு அவர்களில் சிலரைத் தெரியும்.அவர்கள் உங்கள் முகத்தைப் பார்த்தே பேச மாட்டார்கள்.ஆனால் நீங்கள் நான் பேசுவதைக் கேட்டீர்கள்.நிலவைப்  பற்றி ஏ தோ சொன்னபோது நீங்கள் நிலவைப் பார்த்தீர்கள்.மற்றவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள்.நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.அல்லது உங்களை மிரட்ட ஆரம்பிப்பார்கள் .ஆம்  வினோதம்.நீங்கள் இந்த  தீத்துறை வேலையில்  இருப்பது  .இது உங்களுக்குப் பொருந்தாதது போல எனக்குத்  தோன்றுகிறது''


மாண்டேக் தனது உடல் இரண்டாகப் பிளப்பது போல உணர்ந்தான்.ஒருபக்கம் வெப்பமாக  மறுபக்கம் குளிராக .ஒருபக்கம் மிருதுவாக மறுபக்கம் கடினமாக ஒருபக்கம் நடுங்கிக் கொண்டு ஒருபக்கம் நடுங்காமல் ...இரண்டு உடல்கள்.இரண்டு உடல்களும்  ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு...  


''உன்னுடைய அப்பாய்ண்ட்மெண்டுக்கு  நேரமாகிவிட்டது க்ள
ரிஸ்''

அவள்  எதுவும் பேசாமல் அவனை அந்த மழையில் விட்டுவிட்டு ஓடி மறைந்தாள் .

அவள் போய்  நெடுநேரம் ஆனபின்பே மாண்டேக்  அந்த இடத்தைவிட்டு அசைந்தான் 


பிறகு மெதுவாக மிக மெதுவாக தலையை உயர்த்தி  சில கணங்களுக்கு மட்டும்  ........வாய் திறந்து மழையை ருசித்தான் 

18 Apr 10:53

அஞ்சலி :மார்க்வெஸ்

by admin
லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற நாவலாசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்  இன்று காலமானார், மார்க்வெஸ் எனது ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர், அவரது கதைகளை எழுத்து எண்ணிப் படித்திருக்கிறேன் எண்பதுகளின் துவக்கத்தில் மார்க்வெஸின் புத்தகங்கள் கிடைக்காமல் அதை வாங்குவதற்காகவே சென்னை, திருவனந்தபுரம், மும்பை, எனச் சுற்றியலைந்திருக்கிறேன் கோணங்கி மார்க்வெஸின் படைப்புகளுக்காக கல்குதிரையில் சிறப்பிதழ் ஒன்று கொண்டுவந்திருக்கிறார், அந்தப் பணியில் அவர் கூடவே அலைந்த போது பகலும் இரவுமாக மார்க்வெஸ் பற்றிப் பேசியிருக்கிறோம், The Fragrance of [...]